15 ஆண்டுகளாக 65,000 விலங்குகளை மீட்டுள்ள கோவை ஆர்வலர் மினி வாசுதேவன்!
அமெரிக்காவில் இருந்து கோவை திரும்பிய மினி வாசுதேவன் விலங்குகள் கஷ்டப்படுவதைக் கண்டு அவற்றிற்கு சிகிச்சையளித்து பராமரிப்பதற்காக Humane Animal Society தொடங்கியுள்ளார்.
மினி வாசுதேவன் பொறியியல் பட்டதார். கிட்டத்தட்ட 13 ஆண்டுகள் தனது கணவர் மது கணேஷுடன் அமெரிக்காவில் வசித்து வந்தார். 2004-ம் ஆண்டு இவர்கள் கோவை திரும்பியுள்ளனர்.
சாலையில் நாய்கள் அதிகளவில் சுற்றித் திரிவதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். நாய்களைப் பராமரிக்க விரும்பினார். சிறியளவில் இதற்கான முயற்சியில் ஈடுபட நினைத்தார். இதில் ஆர்வமுள்ளவர்களை ஒரு குழுவாக ஒன்றிணைத்தார். காயம்பட்ட நாய்களுக்கு உதவவும் பசியில் தவிக்கும் நாய்களுக்கு உணவளிக்கவும் திட்டமிட்டார்.
”எனக்கு விலங்குகளைப் பிடிக்கும். அவை கஷ்டப்படுவதைப் பார்த்துக்கொண்டு அமைதியாக இருக்க முடியவில்லை. என்னால் முயன்ற வகையில் உதவ நினைத்தேன்,” என்கிறார் மினி.
2006-ம் ஆண்டு மினி, தன் கணவருடன் சேர்ந்து Humane Animal Society (HAS) என்கிற என்ஜிஓ தொடங்கினார். கடந்த 15 ஆண்டுகளில் 65,000-க்கும் மேற்பட்ட விலங்குகளை மீட்டு, தடுப்பூசி போட்டு மறுவாழ்வு அளித்துள்ளார். நாய்கள், பூனைகள், குதிரைகள், மாடுகள் போன்றவை இதில் அடங்கும்.
விலங்குகள் மீதான அன்பு
மினிக்கு சிறு வயதிலிருந்தே விலங்குகள் என்றால் பிடிக்கும். இவரது குடும்பத்தில் இருப்பவர்கள் விலங்குகளிடம் பரிவுடன் நடந்துகொள்வார்கள். இதைப் பார்த்து வளர்ந்த மினிக்கும் விலங்குகள் மீது பிணைப்பு ஏற்பட்டது.
மினிக்கு 11 வயதிருக்கும். ஒருமுறை பண்ணையில் உறவினர்களுடன் விளையாடிக் கொண்டிருந்தார். கோழிக்குஞ்சு ஒன்று கொல்லப்படுவதைப் பார்த்தார். அப்போதிருந்து அவர் சைவ உணவிற்கு மாறிவிட்டார்.
”நான் அமெரிக்காவில் இருந்தபோதுதான் விலங்குகளை எப்படி நடத்தவேண்டும் என்பதைத் தெரிந்துகொண்டேன். அதேசமயம் ஒரு குறிப்பிட்ட வயதிற்குப் பிறகும் தத்தெடுக்கப்படாத நாய்களைக் கருணைக் கொலை செய்வதையும் கவனித்தேன்,” என்கிறார் மினி.
அமெரிக்காவில் பராமரிப்பு இல்லங்களில் மினி தன்னார்வலப் பணிகளில் பங்களித்துள்ளார். இந்த அனுபவம் அவருக்குப் பல விஷயங்களைத் தெளிவுபடுத்தியது. எப்படிப்பட்ட இல்லத்தை தான் உருவாக்கவேண்டும் என்பதில் தெளிவாக இருந்தார்.
விலங்குகள் படும் கஷ்டங்களுக்குத் தீர்வாக ஒரு இல்லத்தை உருவாக்கினார். கால்நடை மருத்துவர் ஒருவரை நியமித்தார். விலங்குகளுக்கு அறுவை சிகிச்சைகள் மேற்கொள்வதற்காக ஆபரேஷன் தியேட்டர் கட்டினார்.
முக்கிய மைல்கல்
2006-ம் ஆண்டு கோவை மாநகராட்சி விலங்குகளுக்கான கருத்தடை திட்டத்தை ஏற்பாடு செய்திருந்தது. அதில் மினி தன்னார்வலராக இணைந்திருந்தார். அது HAS முயற்சியின் முக்கிய மைல்கல்லாக அமைந்தது.
நாய்கள் சங்கிலியால் கட்டப்பட்டு ஒரு கூண்டுக்குள் அடைக்கப்பட்டிருந்ததை மினி கவனித்தார். நாய்கள் சிறுநீரும் மலமும் கழித்துவிட்டு அதன் மேலேயே உட்கார்ந்திருந்தன. இதைக் கண்டு மிகவும் வருத்தப்பட்டார்.
”நல்ல நோக்கத்திற்காக இந்தத் திட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தாலும் மாநகராட்சிக்கு இதில் போதுமான நிபுணத்துவம் இல்லை என்பதை நாங்கள் தெரிந்துகொண்டோம்,” என்கிறார் மினி.
அங்கிருந்த நாய்களைப் புகைப்படம் எடுத்தார். விலங்குகள் நல செயற்பாட்டாளரான மேனகா காந்திக்கு இ-மெயிலுடன் புகைப்படங்களையும் அனுப்பி வைத்தார்.
”இதுபோன்ற சம்பவங்களைப் பார்த்த பிறகு வெறுமனே குறை சொல்லிகொண்டிருப்பதைக் காட்டிலும் செயலில் காட்டினால் நல்லது என்று மேனகா காந்தி எனக்கு பதிலளித்தார். அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்த முறையான திட்டமிடலுடன் கோவை மாநகராட்சிக்கு செல்ல முடிவு செய்தேன்,” என்கிறார் மினி.
இதற்கிடையில் மேனகா காந்தி கோவை மாநகராட்சியின் செயலுக்குக் கண்டனம் தெரிவித்தார். மினிக்கு ஒத்துழைப்பு அளிக்குமாறும் கேட்டுக்கொண்டார்.
இந்தத் திட்டத்தைக் கையாள்வதற்கான முன்மொழிவுடன் மினி மாநகராட்சியை அணுகினார்.
2006-ம் ஆண்டு நவம்பர் மாதம் HAS மற்றும் கோவை மாநகராட்சிக்கு இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. HAS இத்திட்டத்தை சிறப்பாகக் கையாண்டதுடன் மாநகராட்சி வழங்கிய நிலத்தில் ஒரு தங்குமிடத்தையும் நிறுவியது.
தடுப்பூசி போடுவது, கருத்தடை திட்டங்கள், விலங்குகளை மீட்பது, கைவிடப்பட்ட விலங்குகளுக்கு மறுவாழ்வளிப்பது போன்ற செயல்களில் HAS ஈடுபட்டுள்ளது. மேலும், தத்தெடுக்கும் சேவைகளையும் வழங்கத் தொடங்கியது.
முயற்சிக்கு ஆதரவு
மினி, மினியின் கணவர், 2 ட்ரஸ்டி ஆகியோருடன் தொடங்கப்பட்ட முயற்சி இன்று முழு நேரமாக செயல்படும் 21 ஊழியர்களுடன் விரிவடைந்துள்ளது. இதில் கால்நடை மருத்துவர்கள், பராமரிப்பாளர்கள், விலங்குகளைக் கையாள்பவர்கள், ஆம்புலன்ஸ் ஓட்டுநர் போன்றோர் அடங்குவர்.
HAS தினமும் கிட்டத்தட்ட 100 செல்லப்பிராணிகளுக்கு சிகிச்சையளிக்கிறது. தங்களது செல்லப்பிராணிகளுக்கு சிகிச்சையளிக்க வசதியில்லாதவர்களுக்காக புற நோயாளிகள் பிரிவும் செயல்படுகிறது.
கோவையில் இருந்து 25 கி.மீட்டர் தொலைவில், பொள்ளாச்சி செல்லும் வழியில் உள்ள வழுக்குப்பாறை என்கிற இடத்தில் 1.5 ஏக்கரில் இந்த விலங்குகளின் சரணாலயம் அமைந்துள்ளது.
”நாய்கள், பூனைகள், குதிரைகள், மாடுகள் என கிட்டத்தட்ட 70 விலங்குகள் தத்தெடுப்பதற்காக எங்களிடம் இருக்கின்றன. தத்தெடுக்க முடியாத நிலையில் இருப்பவர்கள் இந்த விலங்குகளைப் பராமரிப்பதற்கான செலவை ஏற்றுக்கொண்டு ஸ்பான்சர் செய்யலாம்,” என்கிறார்.
மினி ஆரம்பத்தில் சொந்த செலவிலேயே நிறுவனத்தை நிர்வகித்து வந்துள்ளார். இரண்டு முதல் மூன்றாண்டுகள் கடந்த பின்னரே நிதி திரட்டத் தொடங்கினார். மக்கள் அளித்த ஆதரவு இவரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. தனிநபர்கள், கிளப், கார்ப்பரேட் என பலர் நிதியுதவி அளிப்பதில் ஆர்வம் காட்டியுள்ளனர். இன்று ஒரு ஆண்டிற்கு 1 கோடி ரூபாய்க்கும் மேலாக நிதி கிடைப்பதாக மினி தெரிவிக்கிறார்.
மினி மக்கள் அளிக்கும் ஆதரவிற்கு நன்றி தெரிவிக்கும் அதேசமயம் நாட்டில் இதுபோன்ற பராமரிப்பு இல்லங்களின் எண்ணிக்கை குறையவேண்டும் என்றும் விருப்பம் தெரிவிக்கிறார்.
”நீங்கள் விலங்குகளிடம் பரிவு காட்டத் தொடங்கினால், தங்குமிடங்களை அமைப்பதற்கான தேவையே இருக்காது,” என்கிறார் மினி.
ஆங்கில கட்டுரையாளர்: அபூர்வா பி | தமிழில்: ஸ்ரீவித்யா