ஆதரவற்ற விலங்குகளை மீட்டு சிகிச்சை அளித்து பராமரிக்கும் ஆர்வலர்!
பெங்களூருவைச் சேர்ந்த சஜேஷ் சாலையில் கைவிடப்பட்ட நாய்களுக்கு அடைக்கலம் கொடுக்க விரும்பி Animal Lives Are Important (ALAI) என்கிற நிறுவனத்தைத் தொடங்கி காயம்பட்ட 300-க்கும் மேற்பட்ட விலங்குகளுக்கு அடைக்கலம் கொடுத்து பராமரித்து வருகிறார்.
நாய் நமது செல்லப்பிராணி. பலர் வீட்டில் நாய் வளர்ப்பதுண்டு. இவற்றை டாமி, டைகர், ஜிம்மி, ஜாக்கி என செல்லப் பெயர் வைத்துதான் அழைப்பார்கள். அதேபோல் நாயும் வீட்டில் இருப்பவர்களுடன் பாசமாக பழகிவிடும். குடும்ப உறுப்பினராகவே மாறிவிடும்.
ஆனால் சாலைகளில் சுற்றித் திரியும் நாய்கள் சொல்லமுடியாத அளவிற்கு துன்பங்களை அனுபவிக்கின்றன. வயிற்றுப் பசிக்கு உணவு கிடைக்காது. ஒதுங்க இடம் இருக்காது. இதுதவிர காயம்பட்டு, நோய்வாய்பட்டு வலியால் தவிப்பதையும் பார்க்கமுடிகிறது. இதுபோன்ற விலங்குகளுக்கு எத்தனையோ விலங்குகள் நல ஆர்வலர்களும் என்ஜிஓ-க்களும் உதவிக் கரம் நீட்டுகிறார்கள்.
கொரோனா சமயத்தில்கூட நல்லுள்ளம் படைத்த எத்தனையோ பேர் முறையான அனுமதி பெற்று தகுந்த பாதுகாப்புடன் சாலைகளில் திரியும் கைவிடப்பட்ட நாய்களுக்கு உணவளித்த நெகிழ்ச்சியான சம்பவங்களைக் கேள்விப்பட்டிருக்கிறோம்.
சஜேஷ் பெங்களூருவைச் சேர்ந்தவர். விலங்குகள் நல ஆர்வலர். ஒரு நிறுவனத்தில் பிராண்டிங் ஆலோசகராக வேலை பார்த்த இவர் நாய்களுக்கு அடைக்கலம் கொடுத்து பராமரிக்கும் உன்னத நோக்கத்திற்காக தன் வேலையை ராஜினாமா செய்துவிட்டார்.
தங்குமிடம்
முதல்கட்டமாக 2017-ம் ஆண்டு ஆம்புலன்ஸ் ஒன்றை ஏற்பாடு செய்தார். காயம்பட்ட நாய்களை மீட்டு விலங்குகளுக்கான தங்குமிடத்தில் கொண்டு சேர்த்தார்.
முதல் முதலாக அவர் மீட்ட நாய் ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்டிருந்தது. இந்த நாயை மீட்டு அடைக்கலம் கொடுக்க முயற்சி செய்தார். யாரும் அந்த நாயை ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லை.
வாயில்லா ஜீவன்களின் நிலையைக் கண்ட சஜேஷ் வருத்தப்பட்டார். 2017-ம் ஆண்டு பெங்களூருவில் Animal Lives Are Important (ALAI) என்கிற விலங்குகளுக்கு மறுவாழ்வு அளிக்கும் தங்குமிடத்தைத் தொடங்கினார்.
இன்று இந்த தங்குமிடத்தில் 300-க்கும் மேற்பட்ட விலங்குகள் தஞ்சமடைந்துள்ளன.
மீட்புப் பணிகள்
காயம்பட்டுள்ள நாய்கள், விபத்துக்குள்ளானவை, துன்புறுத்தப்பட்டவை, குறைபாடுள்ள நாய்கள் என உதவி தேவைப்படும் அனைத்து விலங்குகளையும் ALAI பராமரிக்கிறது.
இவை ஆரோக்கியமாக வாழத் தேவையான உதவிகள் செய்யப்படுகின்றன. கருத்தடை செய்யப்படுகிறது. தடுப்பூசி போடப்படுகின்றன.
தற்போது பகலூரில் இரண்டு தங்குமிடங்கள் செயல்படுகின்றன. ஒன்றில் வயதான நாய்களும் மனிதர்களைக் கண்டு பயப்படும் நாய்களும் தங்கியிருக்கின்றன. இரண்டு ஏக்கர் பரப்பளவு கொண்ட மற்றொரு தங்குமிடத்தில் விலங்குகள் சிகிச்சை பெற்று வருகின்றன.
“இங்கு மாடு, ஆடு, பன்றி, குதிரை என சுமார் 350 விலங்குகள் இருக்கின்றன. இங்கு குறிப்பிட்ட நேரத்தில் குறைந்தது 100 விலங்குகளாவது சிகிச்சை பெறுகின்றன,” என்கிறார் சஜேஷ்.
விலங்குகளை மீட்கும் செயல்முறை
வாட்ஸ் அப் அல்லது ஃபேஸ்புக் மூலம் மீட்புப் பணிகள் நடைபெறுகின்றன. தகவலளிப்பவர்கள் நிறுவனத்தை டேக் செய்வார்கள். நாய்களைப் பிடிப்பதில் அனுபவமிக்க குழுவினர் அந்த இடத்திற்கு அனுப்பப்படுவார்கள் ஆம்புலன்ஸ் அனுப்பப்படும்.
மூர்க்கத்தனமாக நடந்துகொள்ளும் விலங்குகள் மட்டுமே வலை போட்டு பிடிக்கப்படும். மற்ற விலங்குகளை குழுவினர் வெறும் கைகளாலேயே பிடித்துவிடுவார்கள்.
பிறகு நாய்கள் தங்குமிடங்களுக்குக் கொண்டு செல்லப்படும். மருத்துவர்கள் அவற்றை பரிசோதிப்பார்கள். நாய் பற்றிய முழுமையான விவரங்கள் பதிவு செய்யப்படும். மருத்துவச் சிகிச்சையின் ஒரு பகுதியாக நாய்களுக்கு மூன்று சுற்று தடுப்பூசி செலுத்தப்படும். ரேபீஸ் நோய் தடுப்பிற்கான தடுப்பூசி நாய்களுக்கு போடப்படும்.
இந்தத் தங்குமிடத்தில் டிஸ்டம்பர் வைரஸ் தாக்கப்பட்ட நாய்கள், வயது முதிர்ந்த நாய்கள், நிரந்தரமாக தங்கியிருப்பவை, முதுகெலும்பில் காயம்பட்டவை, சிகிச்சையில் இருக்கும் நாய்கள், பெரிய விலங்குகள் என ஆறு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு பராமரிக்கப்படுகின்றன.
“இங்குள்ள நாய்களுக்கு தினமும் இரண்டு வேளை உணவு கொடுக்கிறோம். அவற்றின் உடல்நிலை தினமும் கண்காணிக்கப்படும்,” என்கிறார் சஜேஷ்.
மருத்துவர்கள், நாய்களைப் பிடிப்பதில் நிபுணத்துவம் பெற்றவர்கள், பராமரிப்பாளர்கள், ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் என கிட்டத்தட்ட 18 தன்னார்வலர்கள் குழுவாக இணைந்து நாய்களைப் பராமரிக்கிறார்கள். சஜேஷின் மனைவி ஸ்கைலா ALAI செயல்பாடுகளுக்கு உதவுகிறார்.
இந்நிறுவனம் மிலாப் கூட்டுநிதி தளத்தின் மூலம் நிதி திரட்டி வருகிறது. கடந்த ஆண்டு நான்கைந்து கார்ப்பரேட் நிறுவனங்கள் சமூக பொறுப்புணர்வு நடவடிக்கைகள் மூலம் நிதியுதவி வழங்கியுள்ளன.
சவால்கள் மற்றும் வருங்காலத் திட்டங்கள்
பெங்களூருவில் விலங்குகளுக்கான தங்குமிடங்கள் அதிகம் இல்லை. இதனால் அதிகளவில் உள்ள தேவைகளைப் பூர்த்தி செய்யமுடிவதில்லை என்கிறார் சஜேஷ். இடப்பற்றாக்குறை காரணமாக அதிக எண்ணிக்கையிலான விலங்குகளுக்கு அடைக்கலம் கொடுக்க முடியவில்லை என வருத்தம் தெரிவிக்கிறார்.
தனியார் மருத்துவமனைகளும் சிகிச்சைக்கான கட்டணங்களைக் குறைத்துக் கொள்ளவேண்டும் என கோரிக்கை விடுக்கிறார்.
“சாலைகளில் இருக்கும் கைவிடப்பட்ட விலங்குகளுக்கு காயம் ஏற்பட்டிருப்பதைப் பார்ப்பவர்கள் அவற்றை மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல முன்வருவார்கள். இவர்களிடம் அதிக கட்டணம் வசூலிக்கும் பட்சத்தில் உதவ முன்வருபவர்களும் தயக்கம் காட்ட வாய்ப்புண்டு. இதனால் விலங்குகளுக்கு உதவி கிடைக்காமல் போகும்,” என்கிறார் சஜேஷ்.
நாய்களை மீட்பது குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த சஜேஷ் விரும்புகிறார்.
”பெங்களூருவில் விலங்குகள் நலன் தொடர்பாக சில நிறுவனங்கள் செயல்படுகின்றன. இவர்கள் செயல்படாத பகுதிகளில் நாங்கள் கவனம் செலுத்த பட விரும்புகிறோம்,” என்கிறார் சஜேஷ்.
ஆங்கில கட்டுரையாளர்: அஞ்சு அன் மேத்யூ | தமிழில்: ஸ்ரீவித்யா