ரூ.1800 கோடி டர்ன்ஓவர் செய்யும் ஆசிரியரின் மகன்: திருச்சி இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்க அமெரிக்காவில் நிறுவனம்!
திருச்சியில் பிறந்து, வளர்ந்து வேலைக்காக அமெரிக்கா சென்ற சித் அஹ்மத், திருச்சி இளைஞர்களுக்கு சர்வதேச வேலைவாய்ப்பு கிடைக்க அட்லாண்டாவில் VDart என்ற நிறுவனம் தொடங்கி ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளித்துள்ளார்.
1971ம் ஆண்டு திருச்சியில் இவரது பெற்றோருக்கு ஆறாவது குழந்தையாகப் பிறந்தார். அப்பா பத்தாம் வகுப்பு வரை படித்தவர், அம்மா தொடக்கப் பள்ளி ஆசிரியை. விவசாயப் பின்னணி கொண்ட நடுத்தர வர்க்க குடும்பத்தில் பிறந்து வளர்ந்தாலும் இன்று அமெரிக்காவில் நிறுவனம் தொடங்கி, 10 நாடுகளில் அதன் கிளைகளுடன் விரிவாகி ஆண்டுக்கு ரூ.1800 கோடி வரை டர்ன் ஓவர் செய்கிறார் சித் அஹ்மத்.
திருச்சியில் இருந்து அட்லாண்டா வரை சாதித்த சித் அஹ்மத்-இன் வெற்றிக்கதையை அவரே நம்மிடம் அமெரிக்காவில் இருந்து பகிர்ந்து கொண்டார். விரிவான நேர்காணலில் இருந்து தொகுப்பு இதோ:
திருச்சியில் இருந்த சாதரணக் குடும்பத்தில் பிறந்தாலும்கூட குழந்தைகளை நன்றாக படிக்கவைத்தனர் சித் அஹ்மதின் பெற்றோர்கள். மற்ற குழந்தைகள் தமிழ் வழியில் கல்வி கற்க, ஆங்கிலோ இந்தியப் பள்ளிகளில் ஆங்கில வழியில் படிக்கும் வாய்ப்பு சித் அஹமத்திற்குக் கிடைத்தது.
சித் பத்தாம் வகுப்பு முடித்தார். பயாலஜியில் ஆர்வம் இருந்ததால், மருத்துவர் ஆகவேண்டும் என்பது அவரின் பெற்றோரில் கனவு. ஆனால், போதிய மதிப்பெண் கிடைக்கவில்லை. அதனால், இவரது பெற்றோர் பெங்களூருவில் பொறியியல் படிப்பில் சேர்த்தனர். சித்திற்கு கணிதம் படிப்பது கஷ்டமாக இருந்ததால், இஞ்சினியரிங்கில் பல அரியர் வைத்துள்ளார்.
”நான்காண்டு பொறியியல் படிப்பை ஏழு ஆண்டுகளில் நிறைவு செய்தேன். எல்லோரும் நான் பிஎச்டி படித்துக்கொண்டிருப்பதாகவே நினைத்தார்கள்,” என்று சிரித்துக் கொண்டே சொன்னார் சித்.
சித் கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும்போது அவரது அப்பா இறந்துவிட்டார். குடும்பப் பொறுப்புகளை பகிர்ந்துகொள்ளவேண்டிய நிர்பந்தம். அதனால், திருச்சியில் வேலை தேடினார். பேப்பரில் பார்த்த மார்க்கெட்டிங் எக்ஸிக்யூடிவ் வேலைக்கு விண்ணப்பித்தார்.
90-களில் கம்ப்யூட்டர் படிப்பு பிரபலமடைந்திருந்தது. இந்தியாவில் கணினி படிப்பில் அதிக கவனம் செலுத்தப்பட்டது. பலர் கணினிப் பிரிவில் திறன் பெற்றனர். ’பிரில்லியன்ஸ் கம்ப்யூட்டர் செண்டர்’ என்கிற செண்டரில் மார்க்கெட்டிங் எக்ஸிக்யூடிவ் வேலையில் சேர்ந்தார் சித். கணினி படிப்பில் மாணவர்கள் சேர பெற்றோர்களை சம்மதிக்க வைக்கும் பணி அது.
1993-1996 ஆண்டுகளிடையே இதுபோல் வெவ்வேறு நிறுவனங்களில் கிட்டத்தட்ட 3 ஆண்டுகள் வேலை செய்தார். அப்போது அவருக்கும் சம்பளம் ரூ.5000.
அமெரிக்க கனவு
“பட்டப்படிப்பும் கம்ப்யூட்டர் படிப்பும் முடித்து என் நண்பர்கள் அனைவரும் ஒவ்வொருவராக அமெரிக்கா செல்ல ஆரம்பித்தனர். நான் 21 அரியர் வைத்திருந்தேன். அரியர் தேர்விற்கு படித்துக்கொண்டே வேலையும் செய்து கொண்டிருந்தேன்.
அந்த சமயத்தில் நண்பர் ஒருவர் ’கம்ப்யூட்டர் கோர்ஸ் மத்தவங்களுக்கு புரொமோட் செய்தால் போதுமா? நீயும் கம்ப்யூட்டர் பிரிவில் படப்படிப்பு முடித்தால் அமெரிக்கா போகலாமே?’ என்று கேட்டுள்ளார்.
கம்ப்யூட்டர் புரோக்கிராமிங் படிக்க நினைத்தவருக்கு சென்னையில் வேலை கிடைத்துள்ளது. சென்னையில் ஆப்டெக் நிறுவனத்தில் வேலை கிடைத்துள்ளது. ஒட்டுமொத்த தமிழ்நாட்டின் செயல்பாடுகளுக்கு தலைமைப் பொறுப்பேற்றார்.
சென்னையில் அறை எடுத்து தங்கியிருந்த சித் அஹ்மத் உடன் தங்கியிருந்தவர்கள் சாஃப்வேர் இஞ்சினியர்கள் என்பதால் டிசிஎஸ் போன்ற நிறுவனங்களில் வேலை செய்தனர். ஹெச்1 விசா அடிப்படையில் அமெரிக்க நிறுவனங்கள் திறமையான இந்தியர்களை பணியமர்த்தி வந்தது.
“சென்னையில் இருக்கும் அமெரிக்க நிறுவனம் ஒன்று ஊழியர்களை பணியமர்த்தும் ரெக்ரூட்டர்களைத் தேடி வருவதாக என் நெருங்கிய நண்பர் என்னிடம் கூறினார். அந்த சமயத்தில் இந்த வேலை வாய்ப்பு இந்தியாவில் மிகக்குறைவு. புரோகிராமிங் தெரியாமல் அமெரிக்கா செல்லவேண்டும் என்கிற என்னுடைய கனவை எப்படியாவது நிறைவேற்ற எண்ணி இந்த நேர்காணலுக்குச் சென்றேன்,” என்கிறார் சித்.
இவரைச் சுற்றியிருந்த நண்பர்கள் எல்லோருமே சாஃப்ட்வேர் டெவலப்பர்கள் என்பதால் இவர்களிலிருந்து எளிதாக பணியமர்த்த முடியும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார். பிட்ஸ்பர்கைச் சேர்ந்த அந்த நிறுவனத்தில் சித்’திற்கு வேலை கிடைத்தது.
“இந்தியர்கள் பலரை பணியமர்த்தினேன். திருச்சியில் பொறியியல் கல்லூரிகள் இருந்தாலும் சாஃப்ட்வேர் நிறுவனங்கள் இல்லை. பலர் டெல்லி, கொல்கத்தா போன்ற இடங்களுக்கு வேலைக்குச் சென்றார்கள். எனக்குத் தெரிந்த பலரை அமெரிக்கா அனுப்பி வைத்தேன். என்னுடைய திறமையைக் கண்டு அவர்கள் என்னை அமெரிக்கா அழைத்தனர். இந்தியாவிலிருந்து மட்டுமல்லாமல் சீனா, சிங்கப்பூர் என சர்வதேச அளவில் பணியமர்த்தும் பொறுப்பை ஒப்படைத்தனர்,” என விவரித்தார்.
இப்படித்தான் அவரது அமெரிக்கப் பயணம் தொடங்கப்பட்டுள்ளது. 1997-ம் ஆண்டு அமெரிக்கா சென்றுள்ளார்.
திருச்சியில் தொழில் தொடக்கம்
தன்னைப் போல் திருச்சியில் திறமையான ஏராளமானோர் இருக்கிறார்கள் என பணியமர்த்திய முதல் நிறுவனத்திடம் கூறியிருக்கிறார் சித்.
“திருச்சியில் பெருநிறுவனங்கள் அதிகமில்லை. வேலைக்காக என் அப்பா வெளிநாட்டுக்கு சென்றார். நான் அம்மாவுடன் வளர்ந்தேன். இப்படி பெற்றோரில் ஒருவர் வேலைக்கு செல்ல மற்றொருவர் குழந்தையைப் பராமரித்தனர். இந்த நிலை மாறி குடும்பங்கள் பிரியாமல் ஒன்றாக வாழவேண்டும் என விரும்பினேன். இதை உறுதிசெய்யும் வகையில் திருச்சியில் வேலை வாய்ப்புகளை உருவாக்க நினைத்தேன்,” என்கிறார்.
மக்களுடன் எளிதாக இணைப்பை ஏற்படுத்திக்கொள்வது இவரது மிகப்பெரிய பலம். ரெக்ரூட்டிங் பிரிவில் செயல்பட இது உதவியது. ரெக்ரூட்டிங், விற்பனை, வாடிக்கையாளர் நிர்வாகம், குழு நிர்வாகம் என படிப்படியாக இவரது பணி அனுபவம் விரிவடைந்துள்ளது.
“2007ம் ஆண்டு பொருளாதார மந்தநிலை உச்சத்தில் இருந்த காலகட்டம். என்னுடைய முயற்சிக்கு அதுவே சரியான தருணம் என்று தோன்றியது. டெட்ராய்டில் இருந்து அட்லான்டாவிற்கு மாற்றலாகியிருந்தேன். வீட்டை விற்றுவிட்டு அபார்ட்மெண்டிற்கு மாறியிருந்தேன். ஓரளவிற்கு கையில் சேமிப்பு இருந்தது. குழந்தைகள் இருவரும் சிறியவர்கள். நான் திருச்சியில் தொழில் தொடங்காவிட்டால் வேறு யாரும் செய்யமாட்டார்கள் என்று இதுவே சரியான தருணம் என துணிந்து இறங்கினேன்,” என்று குறிப்பிட்டார்.
VDart தொடக்கப்புள்ளி
அமெரிக்காவில் நிறுவனம் தொடங்கப்பட்ட தருணம் வேலையை விட்டு சொந்தமாக முயற்சி தொடங்கிய ஆரம்ப நாட்கள் மிகவும் நெருக்கடியான காலமாக இருந்தது.
“இதுபோன்ற மிகப்பெரிய மாற்றத்தை சந்திக்கும்போது, உங்களை சுற்றியிருப்பவர்களே உங்களுடைய மிகப்பெரிய பலம் என்று தோன்றும். குடும்பத்தினரின் பங்களிப்பு முக்கியத்துவம் வாய்ந்தது. அடுத்த 12 மாதங்கள் செலவை சமாளிக்கப் போதுமான சேமிப்பு இருக்கிறது என மனைவிக்கு தைரியம் கொடுத்தேன். அப்படியே முயற்சி வெற்றி பெறவில்லை என்றாலும் வேறு வேலை பார்த்துக்கொள்ளலாம் என தைரியப்படுத்தினேன்,” என்கிறார் புன்முறுவலுடன்.
அதேபோல் முதல் வாடிக்கையாளரைக் கையில் வைத்துக்கொண்டு தொழில் தொடங்குவதே சிறந்தது என்கிறார். இதுவே தொடர் வெற்றிக்கு வழிவகுக்கும் என்கிறார்.
”தொடக்கத்தில் நான் மட்டுமே நிறுவனத்தில் இருந்தேன். சேல்ஸ், மார்க்கெட்டிங், அக்கவுண்ட்ஸ் என எல்லாவற்றையும் நானே பார்த்தேன். முதல் 12 மாதங்கள் நான் என் தொழிலில் இருந்து சம்பளம் எடுத்துக் கொள்ளவில்லை. முதல் ஆண்டிலேயே ஒரு மில்லியன் டாலர் வருவாய் கிடைக்கும் என நான் எதிர்பார்க்கவில்லை. 18 மாதங்கள் நான் தனியாகவே எல்லா வேலைகளையும் செய்தேன்,” என்கிறார்.
மெல்ல VDart விரிவடைந்தது. அட்லாண்டா, திருச்சி என இரு இடங்களிலும் முக்கியப்பணிகள் நடக்க மேஉம் பல நாடுகளில் கிளைகள் உள்ளது.
“நிலத்தில் வேலை செய்யும் விவசாயி சிந்தும் வியர்வைத் துளியும் காயும் முன்னரே கூலி கொடுத்துவிடவேண்டும் என்று என் அப்பா சொல்வார். அந்த வார்த்தைகளை இன்றளவும் நினைவில் வைத்திருந்து பின்பற்றுகிறேன். இன்று VDart நிறுவனத்தில் 10 நாடுகளில் கிட்டத்தட்ட 3700 ஊழியர்கள் வேலை செய்கிறார்கள். நிறுவனம் எந்த நிலையில் இருந்தாலும் சரியான நேரத்தில் ஊழியர்களின் கைகளில் சம்பளம் கிடைத்துவிடவேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறேன்,” என்கிறார்.
சந்தித்த சவால்களும் எதிர்கொண்ட விதமும்
அடுத்தபடியாக குழுவை விரிவாக்கம் செய்வது சவாலாக இருந்தது என்கிறார் சித். அன்றைய நாட்களுடன் ஒப்பிடுகையில் இன்று நிதி பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம், ஆனால் தான் இதுவரை வெளியில் இருந்து நிதி பெற முயற்சிக்கவில்லை என்றார் சித்.
VDart தொடங்கி பத்தாண்டுகாலத்தில் மேலும் பல சேவைகளை வழங்கும் நான்கு நிறுவனங்களை சித் தொடங்கியிருக்கிறார். ரெக்ரூட்டிங் தாண்டி சாஃப்ட்வேர் உருவாக்கும் பிரிவில் விரிவடைந்தோம். இப்படி உருவானதுதான் VDart டிஜிட்டல். அடுத்து Vouch என்கிற பிராடக்ட் பிரிவைத் தொடங்கினோம், VDart VPN என விரிவுபடுத்திக்கொண்டே இருந்தோம், என்கிறார்.
“இந்த நான்கு நிறுவனங்களின் 2016ம் ஆண்டின் டர்ன்ஓவர் 100 மில்லியன் டாலராக இருந்தது. இன்று எங்கள் டர்ன்ஓவர் 250 மில்லியன் டாலர், அதாவது கிட்டத்தட்ட 1800 கோடி,” என்றார் சித்.
இவை அனைத்துமே திருச்சியில் வேலை வாய்ப்பு உருவாக்கவேண்டும் என்கிற நோக்கத்துடன் உருவாக்கப்பட்டுள்ளது என்பதே இவர் நிறுவனத்தின் சிறப்பம்சம்.
”இன்று திருச்சியில் மட்டுமே 550 பேர் பணிபுரிகின்றனர். கடந்த ஆண்டுகளில் கிட்டத்தட்ட 3000 பேருக்கு திருச்சியில் வேலைவாய்ப்பை VDart ஏற்படுத்தி தந்துள்ளது,” என்கிறார்.
இதுதவிர, சமீபத்தில் திருச்சி மன்னார்புரத்தில் VDart புதிய அலுவலகம் திறக்கப்பட்டுள்ளது. திருச்சியில் இதுவரை இல்லாத அளவிற்கு 650 பேர் வேலை செய்யக்கூடிய ஒரு பிரம்மாண்ட அலுவலகமாக இது செயல்பட உள்ளது.
“எங்கள் அலுவலகத்தில் வேலை செய்வோரில் 52% பேர் பெண்கள், இவர்கள் நைட் ஷிஃப்டில் வேலை பார்க்கின்றனர். இதில் 38% பேர் முதல் தலைமுறையாக பணிபுரிபவர்கள். இவர்கள் கோவிட் சமயத்தில் வீட்டிலிருந்து வேலை செய்த சூழலைப் பார்த்தேன். இவர்களுக்காகவே இப்படிப்பட்ட அலுவலகத்தை அமைத்திருக்கிறோம், இது உலகத்தரம் வாய்ந்ததாக இருக்கும்,” என்கிறார்.
அடுத்த ஐந்தாண்டுகளில் திருச்சியில் 5,000 வேலை வாய்ப்புகள் உருவாக்க திட்டமிட்டிருக்கிறார். VDart BPM மூலம் வேலை வாய்ப்புகள் அதிகளவில் உருவாகும் என சித் அஹமத் தெரிவிக்கிறார்.
கொரோனா தாக்கம்
பெருந்தொற்று பரவத் தொடங்கிய முதல் இரண்டு காலாண்டு VDart நிறுவனத்திற்கு மிகப்பெரிய சவாலான காலகட்டமாக இருந்துள்ளது.
”மற்ற நிறுவனங்கள் இந்தச் சூழலை சமாளிக்க நேரம் எடுத்துக்கொண்டது. நிறுவனங்கள் ஊழியர்களை பணியமர்த்தவில்லை. எங்கள் குழுவினருக்கு வேலை குறைந்ததால் வேலையை விட்டு அனுப்பிவிடுவார்களோ என்கிற பயம் இருந்தது. அவர்களுடைய குடும்ப சூழலைப் புரிந்துகொண்டு முதலில் அவர்களுக்கு நம்பிக்கையளித்தேன்,” என்கிறார்.
ஆறு மாதங்களுக்குப் பின்னர் நிலை மாறியது. ஊழியர்கள் வீட்டிலிருந்து பணிபுரிய ஆரம்பித்தனர். புதிய, மாறுபட்ட யோசனைகளுடன் வாய்ப்புகள் விரிவடையத் தொடங்கியது என்கிறார்.
“கோவிட் சமயத்தில் எங்கள் ஊழியர்களை நாங்கள் கவனித்துக்கொண்ட விதம்தான் எங்களோட சக்சஸ் ஃபார்முலா,” என்கிறார்.
தொழில்முனைவர்களுக்கு ஊக்கமளிக்கும் வகையில் பகிர்ந்த சித் அஹமத்,
”தொழில்முனைவு என்பது தைரியம் சம்பந்தப்பட்டது. ஒருமுறை சவாலான சூழலை எதிர்கொள்ள முடிந்தால் தொடர்ந்து இது சாத்தியம். வணிக மாதிரிகள் மாறிக்கொண்டே இருக்கும். ஒரே தயாரிப்பு/சேவையைக் கொண்டு தொழிலைத் தொடரக்கூடாது. உங்கள் வணிகத்துடன் தொடர்புடைய தயாரிப்பு/சேவையிலும் கவனம் செலுத்தவேண்டும். கற்றல் வாய்ப்பாகவே கருதி தொடர்ந்து புதிய யோசனைகளைப் புகுத்தவேண்டும்,” என்கிறார்.
VDart 2025-ம் ஆண்டில் 500 மில்லியன் டாலர் டர்ன் ஓவரை எட்ட திட்டமிட்டிருப்பதாகவும் 2030க்குள் பில்லியன் டாலர் நிறுவனமாக இலக்குக் கொண்டு செயல்பட்டு வருவதாக சித் தெரிவித்தார்.
“நான் அட்லான்டாவில் இருந்தாலும் 3 மாதங்களுக்கு ஒருமுறை 2 வாரம் திருச்சியில் இருப்பேன். அடுத்த இரண்டாண்டுகளில் திருச்சியில் வந்து செட்டிலாகி முழுவீச்சில் அங்கிருந்து செயல்பட விரும்புகிறேன். என் மனசு எப்போதும் திருச்சியை சுற்றியே வலம் வரும்,” என்று புன்னகையுடன் முடித்துக் கொண்டார் சித் அஹ்மத்.