‘கொரோனா முடிவிற்கு வராது, அத்துடனே வாழ வேண்டும்’ – வேலூர் சிஎம்சி வைராலஜிஸ்ட் டாக்டர் ககந்தீப் காங்!
அறிவியல் துறையில் ஒரு பெண்ணாக வலம் வந்தது, கோவிட்-19 தொற்று, ரோட்டாவைரஸ் தடுப்பூசி கண்டுபிடிப்பு என பல விஷயங்களை ஹெர்ஸ்டோரி உரையாடலில் பகிர்ந்துகொண்டார் ககன்தீப்.
கொரோனா பெருந்தொற்று முதல், இரண்டு, மூன்றாம் அலை என பரவிக்கொண்டிருந்த சமயத்தில் சரியான தகவல்களை மக்களிடையே கொண்டு சேர்த்ததில் முக்கியப் பங்கு வகித்தவர் இந்தியாவின் தொற்றுநோயியல் துறை நிபுணர் டாக்டர் ககன்தீப் காங்.
ககன்தீப் காங் ராயல் சொசைட்டி ஃபெலோவாக தேர்வு செய்யப்பட்ட முதல் இந்தியப் பெண் விஞ்ஞானி. ரோட்டோவைரஸ் தடுப்பூசி கண்டுபிடிப்பில் இவரது பங்களிப்பு அளப்பரியது.
தற்போது இவர் வேலூர் கிரிஸ்டியன் மெடிக்கல் கல்லூரியில் இரைப்பை குடல் அறிவியல் துறை பேராசிரியராக பணியாற்றி வருகிறார். இதே கல்லூரியில்தான் இவர் எம்பிபிஎஸ், எம்டி மற்றும் பிஎச்டி படிப்புகளை முடித்தார்.
அறிவியல் துறையில் ஒரு பெண்ணாக வலம் வந்தது, கோவிட்-19 தொற்று, ரோட்டாவைரஸ் தடுப்பூசி கண்டுபிடிப்பு என பல விஷயங்களை ஹெர்ஸ்டோரி உரையாடலில் பகிர்ந்துகொண்டார் ககன்தீப்.
நேர்காணலின் தொகுப்பு இதோ:
ஹெர்ஸ்டோரி: உங்கள் ஆரம்ப நாட்கள் பற்றிப் பகிர்ந்துகொள்ளுங்கள். அறிவியல் மற்றும் ஆராய்ச்சியில் உங்களுக்கு எப்படி ஆர்வம் ஏற்பட்டது?
டாக்டர் ககன்தீப் காங்: வேலூர் சிஎம்சி கல்லூரியில் சேர்வதற்கு முன்பு அப்பாவின் வேலை காரணமாக பல்வேறு இடங்களுக்கு மாற்றலாகிக் கொண்டே இருந்தோம். அடிக்கடி புதிய பள்ளி, புதிய பாடங்கள், புதிய சூழல் என நாட்கள் நகர்ந்தன. எனக்கு வாசிப்பு பழக்கம் அதிகம். இதுதான் அறிவியலில் ஆர்வம் ஏற்பட முக்கியக் காராணம். வீடு நிறைய புத்தகங்கள் இருக்கும். மருத்துவம், உளவியல் போன்ற துறையில் என் உறவினர் இருந்தார்கள். அவர்களுடன் நேரம் செலவிடும் வாய்ப்பு கிடைத்தது.
அறிவியல் பிரிவில் ஆர்வம் இருந்ததால் மருத்துவத் துறையில்தான் பிற்காலத்தில் செயல்படுவேன் என நினைத்தேன். அப்படியே நடந்தது. இன்று மருத்துவ கல்லூரியில் சேர விண்ணப்பித்தால் வாய்ப்பு கிடைக்குமா என்று எனக்குத் தெரியவில்லை. நான் படித்த நாட்களில் பொது அறிவிற்கும் பாடம் சார்ந்த அறிவாற்றலுக்குமே முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. ஆனால் இன்று அப்படியில்லை.
ஹெர்ஸ்டோரி: நீங்கள் பல காலமாக நவீன ஆய்வுகளில் பங்களித்து வருகிறீர்கள். உங்கள் புதுமையான பணிகள் குறித்து விவரிக்க முடியுமா?
டாக்டர் ககன்தீப் காங்: கேள்விகளில் இருந்துதான் ஆய்வு தொடங்குகிறது. அதைத் தொடர்ந்து நம் கண்முன் இருக்கும் பிரச்சனைக்கு எப்படித் தீர்வுகாண்பது என கண்டறிவோம். கல்லூரி நாட்களில் பாடதிட்டங்கள் அல்லாத கூடுதல் நடவடிக்கைகளில் பங்கேற்றிருக்கிறேன். இதில் அறிவியல் சாராத நடவடிக்கைகள் மூலமாகவே பிரச்சனைக்கு தீர்வு காண்பது பற்றி அதிகம் தெரிந்துகொண்டேன்.
உதாரணத்திற்கு புதன்கிழமைதோறும் மாணவர்களுக்கான ஹெல்த் கிளினிக் நடத்துவோம். இந்த முகாம்களில் குழந்தைகளுக்கான ஸ்கிரீனிங் நடைபெறும். தடுப்பூசிகள் போடப்படும். நாட்டின் முதல் தட்டம்மை தடுப்பூசி பிரச்சாரத்தில் நான் பங்கேற்றிருந்தேன். இதன் மூலம் தொற்று நோய்கள் பிரிவில் ஆர்வம் ஏற்பட்டது. நான் படித்த கிரிஸ்டியன் மருத்துவக் கல்லூரியில் ஆய்விற்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டது.
தொற்று நோய்களுக்கான தடுப்பூசி ஆய்வுகளுக்கு பிரபலமானவர் டி ஜேக்கப் ஜான். இவர் போலியோ மற்றும் தட்டம்மை நோய்களுக்கு எதிரான பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தார். 80-களில் இவரது தலைமையில் வேலூரில் போலியோ தடுப்பு சார்ந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
ஹெர்ஸ்டோரி: பாரத் பயோடெக் நிறுவனத்தின் Rotovac, சீரம் இன்ஸ்டிட்யூட் நிறுவனத்தின் Rotasiil ஆகிய ரோட்டா வைரஸ் தடுப்பூசிகள் WHO ஒப்புதல் பெறுவதில் நீங்கள் முக்கியப் பங்கு வகித்திருக்கிறீர்கள். இது குறித்து பகிர்ந்துகொள்ளுங்கள்.
டாக்டர் ககன்தீப் காங்: எனக்கு ரோட்டா வைரஸ் மீது ஆர்வம் ஏற்படுவதுக்கு முன்பே 1980-களில் ரோட்டா வைரஸ் தடுப்பூசி உருவாக்கும் பணிகள் தொடங்கப்பட்டன. டாக்டர் எம் கே பன் (MK Bhan) என்பவர் இந்தப் பணிகளைத் தொடங்கினார். எய்ம்ஸ் மருத்துவமனையில் பச்சிளம் குழந்தைகளுக்கு பாதிப்பு ஏற்படுவதைக் கண்டுபிடித்தார். இந்தக் குழந்தைகளுக்கு ரோட்டா வைரஸ் தனித்துவமான திரிபு இருப்பதைக் கண்டுபிடித்தார்.
இந்த தொற்று பாதித்த குழந்தைகளுக்கு முறையாக ஃபாலோ அப் செய்தபோது ரோட்டா வைரஸ் வயிற்றுப்போக்கு குறைந்தது. ஆரம்ப நாட்களிலேயே தொற்று பாதிப்பு ஏற்படாத குழந்தைகளுடன் ஒப்பிடும்போது குறைவான பாதிப்பே இருந்தது. இதனால் இந்தத் திரிபுக்கு தடுப்பூசி சிறந்த பலனளிக்கும் என்பது தெரிந்தது.
80-களின் இறுதியிலும் 90-களின் தொடக்கத்திலும் தடுப்பூசி உருவாக்கும் பணிகள் தொடங்கப்பட்டன. டாக்டர் ரோஜர் கிளாஸ் அவர்களுடனும் இந்திய-அமெரிக்க தடுப்பூசி நடவடிக்கை திட்டத்துடனும் இணைந்து டாக்டர் பன் இந்த ஏற்பாட்டைத் தொடங்கினார்.
வேலூரில் ரோட்டா வைரஸ் பாதிப்பைப் பார்த்தபோதுதான் நானும் இதில் பங்கேற்கத் தொடங்கினேன். டாக்டர் பன் கண்டறிந்த திரிபைக் காட்டிலும் நான் பார்த்த திரிபு மாறுபட்டிருந்தது. அவரது ஆய்வை நானும் பின்பற்ற முயற்சி செய்தேன். பலனில்லை. ரோட்டா வைரஸ் வயிற்றுப்போக்குக்கு எதிரான பாதுகாப்பு கிடைக்கவில்லை.
இந்த இரண்டு திரிபுகளுமே தடுப்பூசியாக உருவாக்கமுடியும் என்றாலும் ஒன்று பலனளிக்கும்; மற்றொன்று நிச்சயம் பலனளிக்கும் என்று சொல்லமுடியாது. இந்த நிலையை பலருக்குத் தெரியப்படுத்தினேன். இதுபற்றி பலருடன் கலந்துரையாடினேன்.
இறுதியாக, டாக்டர் பன் Rotovac தடுப்பூசி உருவாக்கும் பணியில் இணைந்துகொள்ள எனக்கு அழைப்பு விடுத்தார். இரண்டு விதங்களில் பங்களிக்கலாம் என்றார். முதலில் மூன்றாம் கட்ட மருத்துவப் பரிசோதனையில் பங்களிக்கச் சொன்னார்.
அடுத்ததாக தடுப்பூசி பரிசோதனையில் பெறப்பட்ட எல்லா மாதிரிகளையும் ஆய்வு செய்யும் குறிப்பு ஆய்வகம் (reference laboratory) அமைக்கச் சொன்னார். மருத்துவ மேம்பாட்டு குழு, ஆய்வக மதிப்பீடு குழு என ஒரு நெட்வொர்க் உருவானது.
தடுப்பூசி ஆய்வுகளின் அனைத்து வகையான சாம்பிள்களையும் ஆய்வு செய்யும் வகையில் நாங்கள் ஆய்வகம் அமைத்ததால், தடுப்பூசி உருவாக்கும் பணியின் ஆரம்பகட்டத்திலிருந்து பங்களித்து வருகிறோம் எனலாம். அமெரிக்காவின் நேஷனல் இன்ஸ்டிட்யூட்ஸ் ஆஃப் ஹெல்த் இந்த தடுப்பூசியை உருவாக்கயது. சீரம் இன்ஸ்டிட்யூட் ஆஃப் இந்தியா இதற்கான உரிமம் வழங்கியது. ஆனால் இந்த தடுப்பூசி முற்றிலும் இந்தியாவில் உருவகாக்கப்பட்டது.
விலங்குகள் மீதான பரிசோதனை தொடங்கி முதல், இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்ட பரிசோதனைகளின் ஆய்வுகளில் நாங்கள் பங்கேற்றோம். Rotovac, Rotasiil இரண்டு தடுப்பூசிகளுக்குமே உரிமம் பெறப்பட்டது. உரிமம் பெற்ற பிறகு ஆய்வுகள் செய்யப்படவேண்டியிருந்தது. அந்த ஆய்வுகளிலும் நாங்கள் பங்கேற்றோம்.
ஹெர்ஸ்டோரி: நாட்டின் முன்னணி தொற்றுநோயியல் நிபுணராக பெருந்தொற்று காலத்தில் சரியான தகவல்களை மக்களிடம் கொண்டு சேர்த்தீர்கள். இது தொடர்பாக நீங்கள் சந்தித்த சவால்கள் என்னென்ன?
டாக்டர் ககன்தீப் காங்: யாருடைய வார்த்தைகளை நம்பவேண்டும் என்பது சமூகத்திற்குத் தெரியவேண்டும். ஆனால் மக்கள் புரிந்துகொள்வதில்லை. மருத்துவத் துறையின் வெவ்வேறு நிபுணர்கள் SARS Cov-2 பற்றி வெவ்வேறு கோணத்தில் தங்கள் கருத்துகளை முன்வைத்தனர்.
இந்தத் தகவல்கள் பொதுமக்களுக்கு சென்ற சேரவேண்டியதன் அவசியத்தை நான் உணர்ந்தேன்.
கொரோனா பெருந்தொற்று சூழலானது மக்களுக்கு அறிவியலின் முக்கியத்துவத்தை உணர்த்தியிருக்கிறது. கோவிட் பாதிப்பு, சிகிச்சைக்கான மருந்து, தடுப்பூசி போன்றவை அறிவியல் ரீதியான தீர்வுகள் என்பதை மக்கள் உணர்ந்துள்ளனர்.
என்னைப் பொறுத்தவரை சரியான தகவல்களை எளிமையாக மக்களுக்கு கொண்டு சேர்ப்பது சவாலாகவும் அதேசமயம் ஒரு புதுவிதமான கற்றல் அனுபவமாகவும் இருந்தது.
ஹெர்ஸ்டோரி: பல நாடுகள் மாஸ்க் அணிவது கட்டாயமில்லை எனத் தெரிவித்துள்ளன. தொற்று முடிவிற்கு வந்துவிட்டது என எடுத்துக்கொள்ளலாமா அல்லது அத்துடன் வாழப் பழகிக்கொள்ளவேண்டுமா?
டாக்டர் ககன்தீப் காங்: கொரோனா பெருந்தொற்று முடிவிற்கு வராது. கேட்பதற்கு மிகவும் கடினமாக இருந்தாலும் இதுதான் யதார்த்தம். எத்தனையோ தொற்று நோய்கள் நம்மைச் சூழ்ந்துள்ளன. அவற்றில் பெரும்பாலானவற்றை கடந்து செல்லும் திறன் நம்மிடம் உள்ளது.
அந்த வகையில் இது ஒரு புதிய வைரஸ். எல்லா இடங்களிலும் மிகவும் வேகமாக பரவக்கூடிய தொற்று. குழந்தைகள் உட்பட அனைவருக்கும் தொற்று பாதிப்பு ஏற்படும் என்கிற நிலையை எட்டிவிட்டோம். பெரியவர்களில் பெரும்பாலானோர் இரண்டு தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டிருக்கின்றனர்.
இதனால், நம்மால் சூழலை சிறப்பாக எதிர்கொள்ள முடியும். இருப்பினும் புதிய திரிபுகள் வர வாய்ப்புண்டு. அதிகம் பரவக்கூடிய தன்மை கொண்டதாகவோ தீவிர பாதிப்பு ஏற்படுத்தக் கூடியதாகவோகூட இருக்கலாம்.
பல்வேறு திரிபுகள் வரக்கூடும். நம்மால் இதை முற்றிலுமாக ஒழிக்க முடியாது. உருமாற்றம் அடைந்துகொண்டே செல்லும். விலங்குகளையும் பாதிக்கும். அறிகுறிகளற்ற தொற்றாக இருக்கும். ஆக, நாம் இந்தத் தொற்றுடன் வாழ பழகிக்கொள்வதே நல்லது.
மழைக்காலம், வெயில் காலம் என எப்படி அந்தந்த பருவத்திற்கேற்ற ஆடைகளை அணிந்துகொள்கிறோமோ அப்படித்தான் கொரோனா தொற்றையும் எதிர்கொள்ளவேண்டும். தொற்று குறைந்திருக்கும் சமயத்தில் மாஸ்க் அணிவது கட்டாயமில்லை. அதிகரிக்கும்போது மாஸ்க் அணிந்து தற்காத்துக்கொள்ளலாம்.
ஹெர்ஸ்டோரி: குழந்தைகள் பள்ளிகளுக்கு திரும்புவது சரியான முடிவு என நினைக்கிறீர்களா?
டாக்டர் ககன்தீப் காங்: என்னைக் கேட்டால், குழந்தைகள் எப்போதோ பள்ளிக்கு சென்றிருக்கவேண்டும் என்பேன். இந்தியாவில் ஆரோக்கியமான குழந்தைகள் அனைவருக்குமே தடுப்பூசி தேவைப்படாது. 80 சதவீத குழந்தைகளுக்கு தொற்று பாதித்திருக்கும் என ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன.
80 சதவீத குழந்தைகள் தடுப்பூசியும் போட்டுக்கொள்ளவில்லை நோய் பாதிப்பும் இல்லை. குழந்தைகளுக்கு பாதிப்பு ஏற்பட்டாலும் அறிகுறிகள் ஏதும் தென்படவில்லை என்பது தெரிகிறது
ஒவ்வொரு தடுப்பூசியும் அளிக்கும் நோய் எதிர்ப்புத் திறன் பற்றிய விரிவான தரவுகள் கிடைத்தால் குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்தலாம் என்பதே என்னுடைய கருத்து.
ஹெர்ஸ்டோரி: அறிவியல் மற்றும் ஆராய்ச்சி பிரிவில் ஒரு பெண்ணாக செயல்படுவது கடினமாக உள்ளதா?
டாக்டர் ககன்தீப் காங்: வேலூர் சிஎம்சி மருத்துவமனையைத் தொடங்கியதே ஒரு பெண்தான். நான் மருத்துவம் படித்தபோது வகுப்பில் 40 சதவீதம் பெண்களின் பங்களிப்பு இருந்தது. தற்போது 60 சதவீதத்திற்கும் மேல் பெண்கள் இருக்கிறார்கள். பெண்களின் பங்களிப்பு அதிகமிருக்கிறது என்றே சொல்லுவேன்.
அதேசமயம், ஆய்வுகளைப் பொருத்தவரை தலைமைப் பொறுப்பில் பெண்கள் இல்லை. நான் ஆய்வுத் துறையில் களமிறங்கிய சமயத்தில் என்னைச் சுற்றியிருந்த அனைவருமே ஆண்கள். என்னுடைய கருத்துகளை முன்வைக்க முடியாத சூழல்களை சில சமயம் சந்தித்திருக்கிறேன். சிஎம்சி மருத்துவக் கல்லூரி முன்னாள் மாணவி என்பதால் பெரிதாக பிரச்சனைகள் எதையும் சந்திக்கவில்லை.
பெண்கள் என்பதால் நம்முடைய திறன் மீது நமக்கே அவநம்பிக்கை ஏற்படுவதுண்டு. ஆனால், கூட்டங்களில் பங்கேற்கும்போது முன்னரே நம்மைத் தயார்படுத்திக்கொண்டு சிறப்பாக பேசவேண்டியது அவசியம். பெண்களின் திறன் வெளிப்படுவதற்கான தளம் கிடைக்கும்வரை அவர்கள் திரை மறைவிலேயே இருப்பார்கள்.
FRS பெற்ற முதல் இந்தியப் பெண் நான். இது எனக்கான அங்கீகாரமாக மாறியது.
ஹெர்ஸ்டோரி: கொரோனா பெருந்தொற்று பாதிப்புகளால் எத்தனையோ சவால்களை சந்தித்திருக்கிறோம். இந்தச் சூழலில் அறிவியல் சார்ந்த சிந்தனைகளை ஊக்குவிக்கும் வகையில் வழங்கப்படும் 'இன்ஃபோசிஸ் பரிசு’ போன்ற பரிசுகளின் முக்கியத்துவம் என்ன?
டாக்டர் ககன்தீப் காங்: ஏற்கெனவே சாதனை படைத்து, மேலும் பல சாதனைகள் படைக்கவுள்ள இளைஞர்களை கவுரவிக்கும் வகையில் இன்ஃபோசிஸ் பரிசு வழங்கப்படுகிறது. இது வாழ்நாள் சாதனைக்கு வழங்கப்படும் பரிசு அல்ல. எனவே, இந்த அங்கீகாரத்திற்கு அப்பால் தொடர்ந்து பங்களித்துக் கொண்டிருக்கவேண்டும் என்கிற சிந்தனையை ஊக்குவிக்கும்.
ஆங்கில கட்டுரையாளர்: ரேகா பாலகிருஷ்ணன் | தமிழில்: ஸ்ரீவித்யா