Brands
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
ADVERTISEMENT
Advertise with us

‘இதுக்கலாம் GST கிடையாது’ - மத்திய அரசு வெளியிட்ட பட்டியல் இதோ!

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஜிஎஸ்டியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்ட உணவுப் பொருட்களின் பட்டியலை வெளியிட்டுள்ளார்.

‘இதுக்கலாம் GST கிடையாது’ - மத்திய அரசு வெளியிட்ட பட்டியல் இதோ!

Wednesday July 20, 2022 , 2 min Read

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஜிஎஸ்டியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்ட உணவுப் பொருட்களின் பட்டியலை வெளியிட்டுள்ளார்.

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற 47வது ஜிஎஸ்டி கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளின் அடிப்படையில், கடந்த திங்கட்கிழமை அன்று (ஜூலை 18) முதல் பல்வேறு பொருட்கள் மீதான ஜிஎஸ்டி அதிகரிக்கப்பட்டது.

Nirmala Sitharaman

டெட்ரா பேக் தயிர், லஸ்ஸி, மோர், பால், பன்னீர், எல்இடி டார் லைட், எல்இடி பல்புகள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் மீதான ஜிஎஸ்டி வரி அதிகரிக்கப்பட்டது. பேக்கேஜிங் மற்றும் பிராண்டிங் செய்யப்பட்ட அரிசி, கோதுமை, தானியங்கள், பால், மோர், தயிர், லஸ்ஸி, வெல்லம், அப்பளம், மீன், இறைச்சி போன்றவற்றுக்கு 5% ஜிஎஸ்டி விதிக்கப்படும் என ஜிஎஸ்டி கவுன்சில் அறிவித்துள்ளது.

இந்நிலையில், கடந்த திங்கள்கிழமை முதல் அமலுக்கு வந்த ஜிஎஸ்டியின் புதிய விகிதங்கள் குறித்து மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது ட்விட்டர் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளார். ஜிஎஸ்டி விகிதங்கள் மற்றும் விலைவாசி உயர்வு தொடர்பாக எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பால் மக்களவை நடவடிக்கைகள் செவ்வாய்க்கிழமை ஒத்திவைக்கப்பட்டதை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சீதாராமன் தனது ட்விட்டர் பக்கத்தில் உணவுப் பொருட்களுக்கு 5 சதவீத ஜிஎஸ்டி விதித்ததை ஆதரித்து, ஜிஎஸ்டி கவுன்சிலின் முடிவு ஒருமனதாக எடுக்கப்பட்டது என்றும், ஜூன் மாதம் நடந்த அமைச்சர்கள் குழு இந்த விவகாரத்தை முன்வைத்தபோது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் அனைத்து மாநிலங்களும் கலந்து கொண்டதாகவும் தெரிவித்துள்ளார்.

இதுபோன்ற உணவுப் பொருட்களுக்கு வரி விதிக்கப்படுவது இது முதல் முறை அல்ல எனத் தெரிவித்துள்ள அவர்,

“ஜிஎஸ்டிக்கு முந்தைய ஆட்சியில் மாநிலங்கள் உணவு தானியத்திலிருந்து கணிசமான வருவாயை சேகரித்து வருகின்றன. பஞ்சாப் மாநிலம் மட்டும் 2,000 கோடி ரூபாய்க்கு மேல் உணவு தானியத்தின் மீது கொள்முதல் வரி மூலம் வசூலித்துள்ளது. உபி 700 கோடி வசூலித்துள்ளதை சுட்டிக் காட்டியுள்ளார்.

எதற்கெல்லாம் ஜிஎஸ்டி கிடையாது:

ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்டபோது, ​​பிராண்டட் தானியங்கள், பருப்பு வகைகள், மாவு ஆகியவற்றுக்கு 5 சதவீத ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டது. ஆனால், இது தற்போது திருத்தப்பட்டுள்ளது குறித்து நிர்மலா சீதாராமன் தெளிவு படுத்தியுள்ளார்.

பதிவு செய்யப்பட்ட பிராண்ட் அல்லது பிராண்டின் கீழ் விற்கப்படும் பொருட்கள் 25 கிலோ அல்லது 25 லிட்டருக்குள் இருந்தால் மட்டுமே ஜிஎஸ்டி விதிக்கப்படும் என்றும், பேக்கேஜிங், பிராண்டிங், லேபிளிங் செய்யப்படாமல் சாதாரணமாக லூஸில் விற்பனை செய்யப்படும் அரிசி, கோதுமை, பஃப்டு ரைஸ், தானியங்கள், மோர், தயிர், லஸ்ஸி, மாவு, ரவை, ஓட்ஸ், சோளம் ஆகிய பொருட்களுக்கு ஜிஎஸ்டி கிடையாது என்றும் நிர்மலா சீதாராமன் தெளிவுபடுத்தியுள்ளார்.
அதாவது, பாக்கெட்டில் அடைக்கப்படாமல் சில்லறையாக கடைகளில் விற்கப்படும் மேற்கூறிய பொருட்களுக்கு 5 சதவீத ஜிஎஸ்டி கிடையாது என மத்திய நிதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.
GST

நடுத்தர மற்றும் ஏழை மக்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள் என்றும், தானியங்கள் மீதான ஜிஎஸ்டியை குறைக்க வேண்டும் என தொடர் கோரிக்கை வைப்பட்டதை அடுத்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

"பிராண்டட் பொருட்களுக்கு வரி செலுத்தும் சப்ளையர்கள் மற்றும் தொழில்துறை சங்கங்கள் முறைகேடுகளில் ஈடுபடுகின்றன. இதுபோன்ற முறைகேடுகளை தடுக்க அனைத்து பேக்கேஜ் செய்யப்பட்ட பொருட்களுக்கும் ஒரே மாதிரியான ஜிஎஸ்டியை விதிக்க வேண்டும் என்று அரசுக்கு கடிதம் எழுதியுள்ளனர். இந்த பரவலான வரி ஏய்ப்பு பல்வேறு மாநிலங்களில் கவனிக்க வேண்டியதாக உள்ளது,” நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

ராஜஸ்தான், மேற்கு வங்கம், தமிழ்நாடு, பீகார், உத்தரபிரதேசம், கர்நாடகா, மகாராஷ்டிரா, ஹரியானா மற்றும் குஜராத் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த அதிகாரிகளைக் கொண்ட ஃபிட்மென்ட் கமிட்டி பல கூட்டங்களில் இந்த சிக்கலை ஆராய்ந்து, கட்டுப்படுத்தும் முறைகளை மாற்றுவதற்கான பரிந்துரைகளை வழங்கியதாக மத்திய அமைச்சர் விளக்கம் அளித்துள்ளார்.

தொகுப்பு - கனிமொழி