2019ல் இந்தியாவில் ட்ரெண்ட் ஆன டாப் 10 ஹேஷ்டேக்குகள்: ‘பிகில்’ எந்த இடம் தெரியுமா?
பொதுவிவாதத் தளமான ட்விட்டரில் அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, செய்திகள் பற்றி விரிவான விவாதங்கள் ஹேஷ்டேக்குகளாக போட்டு விவாதிக்கப்படுகிறது. 2019ம் ஆண்டில் இந்தியாவின் டாப் 10 ஹேஷ்டேக்குகள் இதோ...
பிரேக்கிங் நியூஸ், அரசியல், விளையாட்டு பொழுதுபோக்கு, அன்றாட நிகழ்வுகளை உலகளாவிய பொதுஉரையாடலாக கொண்டு செல்லும் தளமாக விளங்குகிறது ட்விட்டர். ஒரு நிகழ்வு பற்றி ஆக்கப்பூர்வமான கருத்தோ, நக்கலான கலாய்ப்புகளோ எதுவாயினும் ஒரே ஒரு ஹேஷ்டேக் போட்டு அதனை சங்கிலித் தொடர் போல பலர் பின்பற்றி சென்று அன்றைய ட்ரெட்டிங்காகவே மாற்றிவிடுகின்றனர். இதில் பயனுள்ள ஹேஷ்டேக்குகளும் இருக்கிறது, வேடிக்கையான ஹேஷ்டேக்குகளும் இருக்கிறது.
2019ம் ஆண்டில் இந்திய அளவில் ட்ரெண்டான ஹேஷ்டேக்குகளை ட்விட்டர் இந்தியா வெளியிட்டுள்ளது. அந்தப் பட்டியல் இதோ:
- #loksabhaelections2019 : உலகிலேயே மிகப்பெரிய ஜனநாயக நாடாக இந்தியா திகழ்கிறது. இந்தியத் தேர்தல் முறை மற்ற நாடுகளாலேயே பாராட்டப்பட்ட ஒன்று இந்த ஆண்டு இந்தியாவில் நடந்த லோக்சபா தேர்தல் பற்றி கருத்து பரிமாற்றம் செய்ய ட்விட்டர் சிறந்த தளமாக இருந்தது. இதனால் #loksabhaelections2019 ஹேஷ்டேக் 2019ல் டாப் 1 இடத்தை பிடித்திருக்கிறது.
2. #chandrayaan2: உலகிலேயே முதன் முறையாக நிலவின் தென்துருவத்தில் ரோபோடிக் ரோவரை களமிறக்கும் இஸ்ரோவின் முயற்சி கோடிக்கணக்கான இந்தியர்கள் மட்டுமின்றி உலகளாவிய மக்களால் உற்று பார்க்கப்பட்ட நிகழ்வு. இஸ்ரோவைப் பாராட்டும் நாசாவின் ட்வீட் இந்தியர்கள் பலரால் அதிகம் மறுபகிர்வு செய்யப்பட்டு டாப் 10 மறுட்வீட் பட்டியலில் இருக்கிறது.
3. #cwc19: உலகக்கோப்பை கிரிக்கெட்டால் இந்த ஆண்டு கிரிக்கெட் ரசிகர்கள் கோடைக்காலத்தில் செம பிஸியாக இருந்தனர். அரையிறுதியில் இந்தியா நியூசிலாந்திடம் தோல்வியைத் தழுவினாலும், இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் ட்விட்டரில் பூந்து விளையாடிவிட்டனர். வெற்றிக்கான தருணங்கள், அதிர வைத்த அசம்பாவிதங்கள், அசத்தலான கேட்ச்கள் என யாருமே மறக்க முடியாத மீம்ஸ்களை அள்ளி தெளித்துவிட்டனர். #cwc19 இந்த ஆண்டில் அதிகம் பகிரப்பட்ட 3வது ஹேஷ்டேக் ஆகும்.
4. #pulwama: ஜம்மு – ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் புல்வாமா மாவட்டத்தில் நடந்த தீவிரவாத தாக்குதலில் 40 சிஆர்பிஎஃப் வீரர்கள் கொல்லப்பட்டனர். இந்தத் தாக்குதல் சம்பவத்தால் கொதித்தெழுந்த இந்தியர்கள் இது பற்றி ட்விட்டரில் தங்களது கண்டனங்களைப் பதிவு செய்தனர்.
5. #article370: 2019 ஆகஸ்ட்டில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து தரும் சட்டப்பிரிவு 370ஐ நீக்கம் செய்து உத்தரவு பிறப்பித்தது. இதற்கு ஆதரவு மற்றும் எதிர்ப்பு தெரிவித்து ட்விட்டரில் #article370 ஹேஷ்டேக்கில் கருத்துப் பரிமாற்றம் அதிக அளவில் நடந்துள்ளது.
6. #bigil: எல்லா வருடத்தைப் போலவே இந்த ஆண்டும் தமிழ் மற்றும் தெலுங்கு சினிமா ரசிகர்கள் வட்டாரம் திரைப்படங்கள் பற்றி காரசார விவாதங்களை ட்விட்டரில் நடத்தியுள்ளனர். ‘தளபதி’ விஜயின் ரசிகர்கள் தீபாவளி பிளாக்பஸ்டர் படமான பிகில் பற்றி ட்விட்டரில் வெறித்தனமான கருத்து பரிமாற்றம், கொண்டாட்டம் என தெறிக்க விட்டுள்ளனர். #bigil ஹேஷ்டேக் பெரிசா சவுண்டு கொடுத்திருக்குங்கோ.
7. #diwali: ஆண்டுதோறும் கொண்டாடப்படும் பண்டிகையாக இருந்தாலும் தீப ஒளித் திருநாளாம் தீபாவளியைப் பற்றி மக்கள் தங்களது மகிழ்ச்சியான தருணங்களை பகிர்ந்துகொண்டனர். பண்டிகையை எப்படி கொண்டாடுவது, ஏன் கொண்டாடுகிறோம் என்பதில் தொடங்கி தங்களுக்கு பிடித்தமானவர்களுக்கு வாழ்த்துகளை தெரிவிப்பது வரை என #diwali ட்விட்டர்வாசிகளால் கொண்டாடப்பட்டுள்ளது.
8. #avengersendgame: உலகம் முழுவதும் ரசிகர்களால் உற்சாகமாக விவாதிக்கப்பட்டது போல அவென்சர்ஸ்என்ட் கேம் பற்றி இந்திய ரசிகர்களும் சிலாகித்து மகிழ்ந்தார்கள். என்ட் கேமில் என்ன இருக்கக்கூடும் என்று ரசிகர்கள் பகிர்ந்து கொண்டதால் #avengersendgame ட்வீட் இந்த ஆண்டில் அதிகம் பகிரப்பட்ட ஹேஷ்டேக்காக இடம்பெற்றுள்ளது.
9.#ayodhyaverdict : அரசியல், வரலாறு, சமூக – மதம் சார்ந்தவையாக இந்தியாவில் கருதப்படும் முக்கியமான விவகாரம் அயோத்தி நிலப் பிரச்னை. உச்சநீதிமன்றம் இந்த விவகாரம் குறித்த இறுதித்தீர்ப்பை அறிவித்த நிலையில் நெட்டிசன்கள் தங்களது கருத்துகளை ட்வீட் செய்து வெளிப்படுத்தினர்.
10.#eidmubarak: ட்விட்டர்வாசிகள் ஒவ்வொரு பண்டிகையையும் அதற்கே உரிய உற்சாகம், குதூகலத்துடன் கொண்டாடி மகிழ்ந்தனர். இந்த ஆண்டின் சிறந்த ட்வீட்களில் 10வது இடத்தில் இருக்கிறது #EID ஹேஷ்டேக். நல்லிணக்கத்தின் வெளிப்பாடாக நெட்டிசன்கள் ஒருவருக்கொருவர் வாழ்வு தழைக்க வாழ்த்துகளைப் பகிர்ந்தனர்.