25 வயதில் நாடாளுமன்ற எம்.பி.க்கள் ஆன 4 இளம் அரசியல்வாதிகள்!
நடந்து முடிந்த 18வது நாடாளுமன்றத் தேர்தலில் ஜாம்பவான்களை தோற்கடித்து 4 இளம் அரசியல்வாதிகள் நாடாளுமன்றம் செல்கின்றனர். யார் அந்த 4 பேர்?
2024 நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் பல ஆச்சரியங்களை அளித்திருக்கிறது. பாஜக தனிப்பெரும்பான்மை பலத்துடன் வெற்றி பெறும் இண்டியா கூட்டணிக்கு வெற்றி வாய்ப்புகள் இல்லை என்ற தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளை தவிடு பொடியாக்கின தேர்தல் முடிவுகள்.
4 இளம் அரசியல்வாதிகளுக்கு தேர்தல் முடிவுகள் ஆச்சரியப் பரிசளித்துள்ளன. முதல் முறை தேர்தல் களம் கண்ட 25 வயது வேட்பாளர்கள் நாடாளுமன்றத்திற்குள் மக்கள் பிரச்னைகளைப் பேசும் பிரதிநிதிகளாகியுள்ளனர்.
18வது நாடாளுமன்றத்திற்குள் நுழையும் அந்த 4 பேர் புஷ்பேந்திர சரோஜ், பிரியா சரோஜ், சாம்பவி சௌத்ரி மற்றும் சஞ்சனா ஜாதவ் ஆவர். புஷ்பேந்திர சரோஜ் மற்றும் பிரியா சரோஜ் சமாஜ்வாதி கட்சி சார்பில் போட்டியிட்டனர், சாம்பவி சௌத்ரி லோக் ஜன்சக்தி கட்சி சார்பாகவும், சஞ்சனா ஜாதவ் காங்கிரஸ் கட்சி சார்பிலும் போட்டியிட்டனர்.
சாம்பவி சௌத்ரி யார்?
சாம்பவி சௌத்ரியின் அரசியல் குடும்பத்தைச் சேர்ந்தவர், இவரின் தந்தை அசோக் சௌத்ரி ஆளும் ஜனதா தளத்தின் (யுனைடட்) மூத்த தலைவர் மற்றும் பீகார் அமைச்சரவையில் மிகவும் செல்வாக்கு மிக்கவராவார். 1999ல் பிறந்த சாம்பவி, 2022ல் முதுகலைப் படிப்பை முடித்துள்ளார். தற்போது பள்ளி ஒன்றின் இயக்குனராக செயல்பட்டுக் கொண்டிருக்கும இவர் தனது பி.எச்.டி படிப்பை தொடர்ந்து கொண்டிருக்கிறார்.
லோக் ஜனசக்தி கட்சியின் சார்பில் பீகாரின் சமஸ்திபூர் மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் சன்னி ஹசாரியை எதிர்த்து சாம்பவி போட்டியிட்டார். சன்னி ஹசாரி ஜனதா தளம் கட்சியின் மூத்தத் தலைவரான மகேஷ்வர் ஹசாரியின் மகன் ஆவார். 1,87,251 வாக்குகள் வித்தியாசத்தில் எதிர்த்து நின்ற வேட்பாளரை தோல்வியடையச் செய்து நாடாளுமன்றத்திற்கு தேர்வாகி இருக்கிறார் சாம்பவி. தேசிய ஜனநாயகக் கூட்டணியின் இளம் வேட்பாளர் சாம்பவி என்று பிரச்சார மேடையில் பிரதமர் நரேந்திர மோடி இவரை பாராட்டினார்.
புஷ்பேந்திர சரோஜ்
கௌசாம்பியைச் சேர்ந்த புஷ்பேந்திர சரோஜ்ம் சமாஜ்வாதி கட்சி உறுப்பினர். உத்திரபிரதேச மாநிலம் கௌசாம்பி மக்களவைத் தொகுதியில் தற்போதைய பாஜக எம்பி வினோத்குமார் சோங்கரை 1 லட்சத்து 3 ஆயிரத்து 944 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து வெற்றியை தன் வசமாக்கியுள்ளார். புஷ்பேந்திர சரோஜ் சமாஜ்வாதி கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் இந்திரஜித் சரோஜின் மகன் ஆவார்.
இந்திரஜித் ஐந்து முறை எம்எல்ஏவாக இருந்தவர். 2019 மக்களவைத் தேர்தலில் வினோத்குமாரின் இந்திரஜித் தோல்வியடைந்தார், 2024 தேர்தலில் அவருடைய மகன் புஷ்பேந்திர சரோஜ் வினோத் குமாரை தோல்வியடையச் செய்துள்ளார். லண்டன் குயின் மேரி பல்கலைக்கழகத்தில் பட்டம் படித்து முடித்த பின்னர் புஷ்பேந்திர சரோஜ் அரசியலுக்கு வந்துவிட்டார்.
“என்னுடைய தொகுதி வளர்ச்சியில் கவனம் செலுத்தவே விரும்புகிறேன்,” என்று தேர்தல் வெற்றிக்குப் பின்னர் புஷ்பேந்திர சரோஜ் தெரிவித்துள்ளார்.
பிரியா சரோஜ்
25 வயதாகும் பிரியா சரோஜ் உத்திரபிரதேசத்தில் மச்லிஷாஹர் தொகுதியில் சமாஜ்வாதி கட்சி சார்பில் போட்டியிட்டார். தற்போதைய பாஜக எம்பி போலாநாத்தை 35 ஆயிரத்து 850 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து வெற்றி வாகை சூடியுள்ளார் பிரியா. இவரின் தந்தை தூபானி சரோஜ் முன்று முறை எம்பியாக இருந்தவர். பிரியா சரோஜ் உச்சநீதிமன்ற வழக்கறிஞராவார்.
சஞ்சனா ஜாதவ்
ராஜஸ்தானின் பரத்பூர் தொகுதியில் பாஜக வேட்பாளர் ரமஸ்வரூபை 51,983 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றுள்ளார் காங்கிரஸ் கட்சி சார்பாக நின்ற சஞ்சனா ஜாதவ். கடந்த சட்டசபை தேர்தலில் களமிறங்கிய சஞ்சனா, 409 வாக்குகள் வித்தியாசத்தில் பாஜகவின் ரமேஷ் கேதியிடம் தோல்வியடைந்தார். எனினும், நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று இளம் எம்.பி என்கிற பெருமையை பெற்றுள்ளார். சஞ்சனாவின் கணவர் ராஜஸ்தான் காவல்துறையில் பணியாற்றுகிறார்.
தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த சஞ்சனா தன்னுடைய வெற்றி குறித்து தெரிவித்த போது,
“கடினமாக உழைக்கும் ஒருவருக்கும் எப்போதுமே முன்னேற்றம் இருக்கும். பிரச்சாரத்தின் போது நான் ஒருபோதும் சுணக்கம் அடைந்ததில்லை. நான் எதிர்பார்த்ததைவிட அதிகமாக கட்சி எனக்கு தந்திருக்கிறது. ராகுல் காந்தி, மல்லிகார்ஜூன கார்கே, சோனியா காந்தி, சச்சின் பைலட், அசோக் கெலோட் என்னை கட்சியின் எதிர்கால நம்பிக்கை என்று தெரிவித்துள்ளனர். மக்களின் ஆதரவால் நான் வெற்றி பெற்றிருக்கிறேன். என் மீது நம்பிக்கை கட்சிக்கு நன்றி கூற கடமைபட்டிருக்கிறேன். என்னுடைய தொகுதி வளர்ச்சியை எதிர்நோக்கி உள்ளது, சுகாதாரம், வேலைவாய்ப்பு, குடிநீர் பிரச்னைகள் உள்ளன. அவற்றை சரிசெய்ய நான் முயற்சிப்பேன்,” என்று கூறியுள்ளார்.
'பிரச்சாரத்திற்கு கிரவுட்ஃபண்டிங்' - நிதி திரட்டி குஜராத்தில் காங்கிரஸ் எம்.பி ஆன ஜெனிபென் தாகோர்!