குறைந்த விலையில் நிறைய பட்டாசு: ’bijili’ வழங்கும் ஒரிஜனல் சிவகாசி பட்டாசுகள்!
ஆன்லைனில் பட்டாசு விற்பனை குறித்த சந்தேகங்களுக்கு விளக்கமளித்து நேரடியாக ஆர்டர் பெற்று பட்டாசுகளை விற்பனை செய்து வருகிறார் சிவகாசியைப் பூர்வீகமாக கொண்ட முன்னாள் ஐடி ஊழியர் ரமேஷ் சீனிவாசன்.
தீபாவளி என்றாலே நம் அனைவரின் நினைவுக்கும் வருவது புத்தாடைகளும், பட்டாசுகளும்தான். டமால் டுமீல் என காதை கிழிக்கும் வகையில் வெடிக்கும் பட்டாசுகளை வெடிப்பதில் இளசுகளுக்கு விருப்பம் அதிகம். கண்ணைக் கவரும் வண்ண மத்தாப்புக்களை கொளுத்துவதில் மகளிருக்கும், குழந்தைகளுக்கும் ஆர்வம். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விதவிதமாக பட்டாசு வெடித்து காலங்காலமாக தீபாவளியை கோலாகலமாகக் கொண்டாடி வருகின்றனர் மக்கள்.
தமிழகம் மட்டுமன்றி இந்தியா முழுவதும் பல்வேறு பகுதிகளில் உள்ள மக்கள் வெவ்வேறு பெயர்களில் தீபாவளியைக் கொண்டாடி வருகின்றனர். ஆனால் அனைத்து பகுதி கொண்டாட்டங்களிலும் பட்டாசுகளின் ஆதிக்கம் மட்டும் தவிர்க்க இயலாததாகவே உள்ளது.
பண்டிகை மட்டுமன்றி, திருமண விழா, வெற்றிக் கொண்டாட்டங்கள், பேரணிகள் என பட்டாசுகள் மக்களின் வாழ்வின் முக்கிய அங்கமாக மாறிவிட்டன என்றே கூறலாம். எப்போதும் ஏதாவதொரு சூழலில் பட்டாசின் தேவை ஏற்படுவதால் தற்போது பட்டாசுகள் ஆன்லைனிலும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.
பல்வேறு ஆன்லைன் விற்பனை தளங்கள் பட்டாசுகளை போட்டி போட்டு விற்று கோடிகளில் லாபங்களை அள்ளின. இந்நிலையில் உச்ச நீதிமன்றம் கடந்தாண்டு விதித்த தடையாணையை அடுத்து ஆன்லைன் பட்டாசு விற்பனை நிறுத்தப்பட்டது.
இதையடுத்து புதிய முயற்சியாக ஆன்லைன் பட்டாசு விற்பனைக்கு பதிலாக ஆன்லைனில் பட்டாசு விற்பனை குறித்த சந்தேகங்களுக்கு விளக்கமளித்து நேரடியாக ஆர்டர் பெற்று பட்டாசுகளை விற்பனை செய்து வருகிறார் சிவகாசியைப் பூர்வீகமாக கொண்ட ரமேஷ் சீனிவாசன்.
எம்பிஏ பட்டதாரியான இவர், 10 ஆண்டுகளுக்கும் மேலாக ஐடி துறையில் விற்பனை மற்றும் விரிவாக்கம் தொடர்பாக டிஜிட்டல் மார்க்கெட்டிங்கில் பணியாற்றியுள்ளார். இதையடுத்து LESSBURN என்ற பெயரில் தனது சொந்த நிறுவனத்தை நிறுவி வெப்சைட் உருவாக்கிக் கொடுக்கும் பணியைச் செய்து வந்த இவரது வாழ்க்கையில் 2017ம் ஆண்டு நிகழந்த ஓர் சம்பவம் தான் திருப்புமுனையாக அமைந்துள்ளது.
இதுகுறித்து அவர் நம்மிடம் தெரிவித்ததாவது, 2017ஆம் ஆண்டு தீபாவளி நெருங்கிக் கொண்டிருந்தது. நான் அப்போது பெங்களூரில் வசித்து வந்தேன். எங்கள் தெருவில் வசிப்பவர்கள் எனது நண்பரிடம் ரூபாய் ஓன்றரை லட்சம் அளித்து தீபாவளிக்கு சிவகாசியில் போய் பட்டாசுகளை வாங்கி வருமாறு கூறினர். அப்போது நான் கேட்டேன் ஏன் இங்கு பட்டாசுகள் கிடைக்காதா என்று, அதற்கு அவர்கள் இங்கு பட்டாசுகளின் விலை தாறுமாறாக இருக்கும் எனத் தெரிவித்தனர்.
”இதையடுத்து என் கவனம் பட்டாசுகளின் விலை குறித்து திரும்பியது. எனது சொந்த ஊர் சிவகாசி, நான் படித்ததும் அங்குதான். இதனால் எனக்கு ஓரளவுக்கு அங்கு விற்பனையாகும் பட்டாசுகளின் விலை தெரியும். ஆனால் சிவகாசி பட்டாசுகள் சென்னை, பெங்களூரு போன்ற நகரங்களில் விற்பனையாகும்போது 3 மடங்கு விலை உயர்வுடன் விற்பனை செய்யப்படுகின்றன என்ற அதிர்ச்சி உண்மை தெரியவந்தது,” என்றார்.
மேலும், பொதுவாக பட்டாசுகளை வாங்குபவர்கள் அதன் பிராண்ட் கூறி வாங்குவதில்லை. பட்டாசுகளின் ரகங்களைக் கூறித்தான் வாங்குவார்கள். இதனால் இங்கிருக்கும் இடைத்தரகர்கள் தரமற்ற முறையில் தயாரிக்கப்படும் பட்டாசுகளை அதிக விலைக்கு விற்று லாபம் சம்பாதித்து விடுகின்றனர். மேலும், இதுபோன்ற பட்டாசுகளால்தான் வெடி விபத்துகளும் நேரிடுகின்றன என்ற அதிர்ச்சித் தகவலையும் தெரிவிக்கிறார்.
ரூ.1800 மதிப்புள்ள 10 ஆயிரம் வாலா வெடி, சென்னை, பெங்களூரு போன்ற பகுதிகளில் ரூ.3 ஆயிரம் முதல் 5 ஆயிரம் வரை விற்பனை செய்யப்படுகிறது. இவற்றை அதிக விலையின்றி, சிவகாசி தயாரிப்பு விலைக்கே எவ்வாறு விற்பனை செய்யலாம் என சிந்தித்தேன். இதன் விளைவுதான் joshy pyrotechnics private limited என்ற நிறுவனத்தைத் தொடங்கி, bijili.in என்ற பிராண்ட்டில் ஆன்லைனி்ல் பட்டாசுகளை விற்பனை செய்யத் தொடங்கினேன்.
2018ஆம் ஆண்டு மார்ச் மாதம் தொடங்கப்பட்ட எங்களின் இந்த ஆன்லைன் விற்பனை தளத்தை சுமார் 60ஆயிரம் பேர் பார்வையிட்டிருந்தனர். இது எங்களுக்கு நல்ல ஊக்கத்தை அளித்தது. இதையடுத்து ஆன்லைன் முறையில் பட்டாசுகளுக்கு ஆர்டர் எடுத்து டெலிவரி கொடுத்து வந்தோம்.
தமிழகம் மற்றும் பெங்களூருக்கு வீடுகளுக்கேச் சென்று பட்டாசுகளை டோர் டெலிவரியாக கொடுத்தோம். மற்ற மாநிலங்களில் எங்களின் கமர்ஸியல் டிராவல் ஏஜென்சிக்குச் சென்று வாடிக்கையாளர்களே டெலிவரி பெற்றுக் கொள்ளவேண்டும். இதிலும் மற்ற பொருள்களைப் போல பட்டாசுகளை சாதாரணமாக எல்லா கொரியர் மற்றும் டிராவல்ஸ்ஸில் அனுப்ப முடியாது. இதற்கென்றே உரிமம் பெற்ற வணிக ரீதியிலான கொரியர் சர்வீஸ் உள்ளன. அவர்கள் மூலம்தான் பட்டாசுகளை அனுப்ப முடியும். மேலும், பட்டாசுகளை நீர் புகாவண்ணம் பாதுகாப்பாக பேக்கிங் செய்து அனுப்பவேண்டும் என தனது இந்த புதுத் தொழிலில் உள்ள சிரமங்களை அடுக்குகிறார் ரமேஷ்.
இந்நிலையில்தான், இவர்கள் தொடங்கிய புது தொழிலுக்கு உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு மூலம் இடையூறு ஏற்பட்டது. பட்டாசு வெடிப்பதை தடை செய்யவேண்டும், இதனால் நாடு முழுவதும் காற்று மாசு ஏற்படுகிறது எனத் தொடரப்பட்ட வழக்கில் தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம், தீர்ப்பில் இணையவழி பட்டாசு விற்பனைக்கும் சேர்த்துத் தடை விதித்தது. இதனால் பெற்ற ஆர்டர்களை பாடுபட்டு டெலிவரி செய்துள்ளனர்.
இணையவழியில் பட்டாசுகளை விற்பனை செய்வதுதானே தடை செய்யப்பட்டுள்ளது. ஆனால் இணையத்தில் பட்டாசு விற்பனை குறித்து விளக்கமளிக்கலாமே என தனது தொழில் நுணக்கத்தை மாற்றிக் கொண்டு பட்டாசு குறித்து தெளிவாக விளக்கமளித்து, விரும்புவோரிடம் நேரிடையாக ஆர்டர் பெற்றுக் கொண்டு பட்டாசுகளை டெலிவரி செய்து வருகின்றனர்.
தரமான பட்டாசுகளை எவ்வாறு தேர்வு செய்து வழங்குகிறீர்கள் என்ற கேள்விக்கு,
“நானே சிவகாசிக்கு நேரில் போய் 80க்கும் மேற்பட்ட பட்டாசு நிறுவனங்களைப் பார்வையிட்டு, அதில் சிறந்ததாக 4 நிறுவனங்களை மட்டும் தேர்வு செய்து, அவர்களிடம் இருந்து பட்டாசுகளை வாங்கி விற்பனை செய்கிறோம்,” என்கிறார்.
கடந்தாண்டு மட்டும் சுமார் 2500 ஆன்லைன் ஆர்டர் மூலம் ரூ. 1 கோடிக்கும் மேலாக பட்டாசுகளை விற்பனை செய்துள்ளார். நிகழாண்டு மட்டும் இதுவரை ஆன்லைன் விசாரணையாக சுமார் 750 பேர் பட்டாசுகள் குறித்து விசாரித்துள்ளனர். தீபாவளி நெருங்கி வருவதால் இதன் எண்ணிக்கை 6 ஆயிரத்தைத் தாண்டும் என எதிர்பார்ப்பதாக தெரிவிக்கிறார். இவ்வாறு விசாரணை நடத்துபவர்களிடம் ஆர்டர் பெற்று, அவர்களிடம் பட்டாசுகளை விற்பனை செய்யத் திட்டமிட்டுள்ளார்.
மேலும், Best Rate, Best Quality, Best Delivery போன்றவையே தங்களின் தாரக மந்திரம் எனத் தெரிவிக்கும் ரமேஷ் சீனிவாசன்,
தற்போது தமிழகம் மட்டுமன்றி கர்நாடகம், ஆந்திரா, தெலங்கானா போன்ற பகுதிகளுக்கு பட்டாசுகளை விநியோகித்து வருகிறார். இந்தியா முழுவதும் சிவகாசி விலையிலேயே தரமான, பாதுகாப்பான பட்டாசுகளை விற்பனை செய்வதே தனது லட்சியம் எனத் தெரிவிக்கிறார்.
பணத்தை வாரியிறைத்து பட்டாசு வாங்காமல், சிவகாசி விலையிலேயே bijili பிராண்ட் பட்டாசுகளை குறைந்த விலையில் நிறைய வாங்கி, ஆசை தீர வெடி வெடித்து வரும் தீபாவளியை ஜமாய்ங்க பிரண்ட்ஸ்.
வலைதள முகவரி: bijili