'பட பட' பட்டாசை ஆன்லைனில் விற்று தெறிக்கவிடும் சிவகாசியைச் சேர்ந்த இளைஞர்!

30th Sep 2016
  • +0
Share on
close
  • +0
Share on
close
Share on
close
"

சிவகாசியை சேர்ந்த அபிலாஷ் சங்கர் தனது தந்தை கடந்த 25 ஆண்டுகளாக நடத்திவந்த பட்டாசு வியாபாரத்தை உலகம் அறியச் செய்யவும், தற்காலத்திற்கு ஏற்ப சந்தைப்படுத்தவும் முடிவெடுத்தார். தொழில் முனைவோருக்கு ஆன்லைன் தொழில் இன்று இலகுவாகிவிட்ட  நேரத்தில், பட்டாசு விற்பனையை இணையம் மூலம் விற்க முடிவெடுத்தார் அபிலாஷ். ஆனாலும், இந்த தொழிலை ஆன்லைனில் செய்ய பல சிக்கல்களை சந்தித்துள்ளார்.     

பொதுவாக நேரடி விற்பனைக்காக, பட்டாசு கடை விரிக்க வேண்டும் என்றாலே பல உரிமங்கள் வாங்க வேண்டும். அதையே இணையதளம் மூலம் 'ஆன்லைன்' விற்பனை செய்வது என்பது இன்னும் சிரமமான விஷயம். அடுத்து, பட்டாசு பார்சல்களை மற்ற பொருள்கள் போல் சாதாரண கூரியர் மூலம் அனுப்பிவிட முடியாது. அதனை கையாள சிறப்பு உரிமங்கள் பெறவேண்டும். அப்படி பல கட்டங்ககளைத் தாண்டி ஒரு வெற்றிகரமான தொழில்முனைவராக இன்று உருவாகி இருக்கிறார், சிவகாசியை சேர்ந்த இளைஞர் அபிலாஷ் சங்கர்!

\"அபிலாஷ்

அபிலாஷ் சங்கர்


அவர் ’தமிழ் யுவர்ஸ்டோரி' உடன் தனது தொழில் பயணத்தை பற்றி பகிர்ந்து கொண்டார்.

சிவகாசியில் பிறந்த அபிலாஷ், தகவல் தொழில்நுட்பத்தில் பொறியியல் படிப்பை முடித்தார். பகுதி நேரப் பணியாக பட்டாசு வியாபாரத்தையும் தன் தந்தையுடன் செய்து வந்தார். இரண்டாம் ஆண்டு படிக்கும் போதே இன்ஜினியரிங் தனக்கு பயன் அளிக்காது என்று அபிலாஷ் புரிந்து கொண்டார். பின்னர் முழு நேர பணியாக பட்டாசு வியாபாரத்தை கவனிக்கத் தொடங்கினார் அபிலாஷ். 

பத்தாம் வகுப்பு படிக்கும் போதே ஒவ்வொரு ஆண்டு தீபாவளியின் போதும் 25,000 ரூபாய் வரையிலும் பட்டாசு விற்பனை செய்த அனுபவம் அபிலாஷுக்கு மேலும் கைகொடுத்தது. தந்தையிடமிருந்து கற்ற தொழில் அனுபவம் புதிய நம்பிக்கையை தந்தது.

எப்போது இந்த தொழிலில் முழுநேரமாக இறங்கி ஒரு தொழில் முனைவராக வளர்ந்தார் என்று கேட்டபோது,

\"நான் 10 வயதாக இருந்த போதே 60 கிப்ட் பாக்ஸ் பட்டாசுகளை விற்றதுதான் என் முதல் அனுபவம். என்னை அறியாமலே செய்த அந்த செயலும், எனது குடும்பச் சூழலும் அதன் மீது ஒரு ஆர்வத்தை தூண்டியது.” என்றார்.

ஃப்ளிப்கார்ட் மூலம் முதன் முதலாக 2011 ஜூன் மாதம் ஆன்லைனில் ஒரு மொபைல் போன் வாங்கினேன் . அதுவே என்னுடைய அனைத்து முயற்சிக்கும் ஆரம்பமாக அமைந்தது. யார் யாரிடமோ பொருள் வாங்கி அவர்களால் ஆன்லைன் மூலம் நம்மிடம் அதை கொண்டுசேர்க்க முடிகிறது என்றால், கையிலேயே பொருள் வைத்திருக்கும் ​நம்மால் ஏன் இதை செய்ய முடியாது என்று யோசிக்க ஆரம்பித்தேன். 

“ரிலையன்ஸ் நிறுவனத்தில் கிடைத்த வேலைவாய்ப்பை உதறிவிட்டு தைரியமாக அப்பா செய்து வரும் பட்டாசு கடை தொழிலை, ஆன்லைனில் செய்ய முடிவு எடுத்தேன்.\"

அது 2012 ஆம் ஆண்டு அதாவது அபிலாஷ் இன்ஜினியரிங் படித்து முடித்த வருடம். அவரது முயற்சிக்கு முதலில் முட்டுக்கட்டையாக இருந்தது அவரது பெற்றோர்கள். கல்லூரி முடித்து எல்லாரும் நல்ல வேலைக்கு செல்லும் போது இவர் மட்டும் அப்பா செய்யும் தொழிலை ஏன் செய்ய வேண்டும் என்று கேட்டிருக்கிறார்கள்.

'எதை வேண்டுமானாலும்ஆன்லைனில் விற்கலாம் ஆனால், பட்டாசை எந்த காலத்திலும் விற்கமுடியாது' என்று அபிலாஷின் அப்பா அவரிடம் சொல்லி அவநம்பிக்கையை வெளிப்படுத்தியுள்ளார். 

”என் மீது இவ்வளவு பாசம் வைத்த அப்பாவே இப்படி சொல்லி விட்டாரே என்று சோர்வடைந்தேன். நிச்சயம் அவரது எண்ணத்தை மாற்ற வேண்டும் என்று முடிவு எடுத்தேன். நண்பர்கள் இருவர் சேர்ந்து பணியாற்ற முன் வந்தனர். பின்னர் வந்த வேகத்திலே பிற சொந்த வேலைகளால் அவர்கள் விலகிக் கொண்டனர். மீண்டும் தனி ஆளாக என் கனவுத் தொழிலை செதுக்க ஆரம்பித்தேன்.\"

வியாபார நோக்கில் ஆரம்பிக்க பட்ட அவரது பயணம், ஒரு குறிக்கோளாக மாறியது. 2013 இல் தமிழ்நாட்டில் பல இடங்களுக்கு பயணம் செய்து, பட்டாசு பற்றிய மக்களின் மன நிலையை தெரிந்து கொண்டார் அபிலாஷ். மக்கள் அவரவர் ஊரில் பட்டாசு வாங்குவதற்கும், சிவகாசியில் வாங்குவற்கும் எவ்வளவு பணம் மிச்சம் செய்ய முடியும் என்று அலசி ஆராய்ந்திருக்கிறார்.

இந்தியாவில் கடைகோடி வரை சிவகாசி பட்டாசை கொண்டு செல்ல வேண்டும் என்ற வெறி அதிகம் ​ஆனது என்று கூறினார். அவரது லாபத்தை குறைத்துக்கொண்டு, தமிழ்நாட்டில் ஒவ்வொரு பகுதிக்கும் அவரது பட்டாசை கொண்டு சென்றிருக்கிறார்.

அப்போது சிவகாசியில் முதன் முதலாக ஆரம்பிக்கப்பட்டதுதான் இவரது 'மை கிராக்கர்ஸ் டாட் காம்' mycrackers.com இணையதளம்.

\"image\"

image


விற்பனைக்கான பொருள் மற்றும் பணியாற்ற இடம் இருந்ததால், விளம்பரத்திற்கு மட்டுமே அபிலாஷுக்கு முதலீடு தேவைப்பட்டது. ரூபாய் 12,000 மட்டுமே முதல் ஆண்டு விளம்பரத்துக்காக இவர் செலவழித்தார். பின்னர், இன்று வரை வாய்மொழியாகவே ஒவ்வொரு வாடிக்கையாளரும், தனது நண்பர்களை இந்த ஆன்லைன் இணைய தளத்துக்கு அறிமுகம் செய்கிறார்கள் என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

தந்தை, அண்ணன், நண்பர்களும் அபிலாஷுக்கு இன்று உதவியாக இருக்கிறார்கள். நேரடி வணிகத்துக்கும், ஆன்லைன் வணிக விற்பனைக்கும் என்ன வித்தியாசத்தை உணர முடிந்தது என்று கேட்டால் இப்படி பதிலளித்தார்.

\"வாடிக்கையாளர் நினைத்து பார்க்க முடியாத ரகங்களை குறைந்த விலையில் இதில் கொடுக்க முடியும். ஒரே நேரத்தில் பல வாடிக்கையாளர்களையும் இதில் கவனிக்க முடியும், நேரில் இது மிக அரிது,” என்றார். 

2013 இல் எனது பிராண்ட்டுக்காக மாடல் வைத்து விளம்பரம் ஷூட் செய்து, அதை ஆன்லைனில் பதிவேற்றம் செய்தேன். பின்னர், நிறைய புதுமைகள் செய்தோம் . மொத்த விலைக்குபொருள்களை கொடுத்தேன். 

”முதல் வருட தீபாவளிக்கு 25 பேர்தான் பட்டாசு வாங்கினார்கள், இரண்டாம் வருடத்தில் 150 பேர், 2014 இல் 625 பேரும், 2015 இல் 1600க்கு மேல் என்று வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டிருக்கிறது, இது தவிர மொத்த விற்பனையாளர்கள் தனி,\" என்று தன் வளர்ச்சியை விளக்கினார்.

இரண்டாம் வருடத்தில் இருந்தே லாபம் வர ஆரம்பித்தது என்று சொல்லும் அபிலாஷ், மக்கள் அதிகம் விரும்பும் பொருள்களை தேவையான அளவுக்கு மட்டுமே வாங்கி, சரியான முறையில் இருப்பு வைத்து விற்பனை செய்வதால், நஷ்டம் எதுவும் இல்லாமல் பார்த்து கொள்ள முடிகிறது என்கிறார். ஒரு வருடம் முழுவதும் நன்றாக ஆராய்ந்து, அடுத்த வருட விற்பனைக்கு தயார் செய்யும் தொழில் இது. ஒவ்வொரு வாடிக்கையாளரிடம் அவரே நேரிடையாக பேசி அவர்களுக்கு வேண்டியதை தெரிந்து கொள்கிறார். அதற்கு ஏற்ப பட்டாசு வகைகளை சிபாரிசு செய்கிறார். அந்த ஆண்டு விற்காத பட்டாசுகளை விற்க ஒரு வருடம் ஆகி விடும் என்பது இந்த தொழிலில் உள்ள பின்னைடைவான பிரச்சனை என்பதும் அபிலாஷ் நேரில் கண்டறிந்த உண்மை!

இந்த தொழிலை அபிலாஷ் தொடங்கிய போது அவருக்கு வயது 22. அதுவே அவருக்கு ஒரு சிக்கலாக இருந்ததாம். குடும்பத்தினருக்கு நம்பிக்கை ஏற்படுத்தவே படாத பாடு பட்டிருக்கிறார். தொழில் அனுபவம் வேண்டும் என்பதற்காக பெட்ரோல் பங், லாட்ஜ் என்று சிறு பணிகள் புரிந்து அனுபவங்களை கற்றிருக்கிறார். 

\"image\"

image


எல்லா தொழில்களில் உள்ளது போன்று இதிலும் பல சவால்கள் நண்பர்கள், உடன் பணியாற்றியவர்கள் மூலமாக ஏற்படுவதாகவும் சொல்கிறார் அபிலாஷ். கூடவே இருந்துவிட்டு தீபவளிக்கு சில மாதங்கள் முன்பாக இவரது ஆன்லைன் வணிகம் போன்றே சிலர் போட்டி தளத்தை தொடங்குவார்கள் என்கிறார். இவரை விட குறைந்த விலைக்கு பட்டாசுகளை தருவதாக இவரது வாடிக்கையாளர்களிடமே ஆசை காட்டி விற்க முயற்சிப்பார்களாம். 

தரம், நேர்மை, குறித்த நேரத்தில் டெலிவரி இவற்றால் மட்டுமே இதுபோன்ற திடீர் வணிகர்களிடமிருந்து வேறுபட்டு நிற்க முடியும் என்பது அபிலாஷின் அனுபவம்.

இன்று சிவகாசியில் கிடத்தட்ட 200 ஆன்லைன் வணிகர்கள் இருப்பதாக அபிலாஷ் சொல்கிறார். கடந்த ஆண்டு பல புதிய ரக பட்டாசுகளை ஆன்லைனில் சேர்த்திருக்கிறது இவரது நிறுவனம். விற்பனை மட்டுமல்லாது சிவகாசி பட்டாசு தொழிலை காப்பாற்ற சீன பட்டாசுகளை புறக்கணிக்குமாறும் குரல் கொடுத்துவருகிறார். அது தொடர்பாக விளம்பரங்களையும், பதிவுகளையும் வெளியிட்டு வருகிறார். 

இன்று தொழில் விரிவடைந்துள்ளதால், 

\"7 பட்டாசு தயாரிப்பு கம்பெனிகளுடன் ஒப்பந்தம் செய்துள்ளோம். தமிழகம் மட்டுமல்லாமல் பெங்களூரு, மைசூரு, ஹைதராபாத் என்று தெலுங்கானா வரை சப்ளை செய்கிறோம். சிவகாசி பட்டாசை குறைவான விலைக்கு நாடுமுழுவதும் விற்பனை செய்ய வேண்டும் என்பதே என் கனவு. ஆண்டுக்கு ஒருமுறை தீபாவளிக்கு நுகர்வோர் வெடிக்கும் பட்டாசுகளில்தான் சிவகாசியின் வாழ்வாதாரம் இருக்கிறது\" என்கிறார் அபிலாஷ்.

போட்டி வணிகர்களுக்குள் இருந்தாலும், பயனடைவது வாடிக்கையாளர்களாக இருக்க வேண்டும் என்பதுதான் அபிலாஷின் வாதம். சீன பட்டாசுகளுக்கு ஈடு கொடுத்து சிவகாசியை வாழவைக்க வேண்டும் என்றால் இந்திய அரசு, பட்டாசு ஏற்றுமதி வாய்ப்பை உருவாக்கித் தர வேண்டும் என்பதே அபிலாஷின் எதிர்ப்பார்ப்பு.!

இணையதள முகவரி: mycrackers.com

"
  • +0
Share on
close
  • +0
Share on
close
Share on
close
Report an issue
Authors

Related Tags

Our Partner Events

Hustle across India