சலூன் கடை நடத்தி 60 கோடி டர்ன்ஓவர்; ஹேர் ஸ்டைலிங்கில் ஜாலம் செய்யும் தனிஷ்!
2014-ம் ஆண்டு தனிஷ் பத்ரா நிறுவிய ஹேர் மாஸ்டர்ஸ் சலூன் 21 கிளைகளுடன் செயல்பட்டு வருகிறது.
திட்டமிடப்படாத பயணம் எதிர்பாராத, அழகான இடத்திற்கு இட்டுச் செல்லும் என்று சொல்லப்படுவதுண்டு. இதற்கு சரியான உதாரணம் தனிஷ் பத்ரா.
தனிஷ் லண்டன் ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸ் பட்டதாரி. இவரது அப்பா கட்டுமானம் தொடர்பான வணிகத்தில் ஈடுபட்டிருந்தார். அதில் இணையவேண்டும் என்பதே தனிஷின் திட்டமாக இருந்தது. இந்தியா திரும்பியதும் அவரது முடிவு மாறி அழகுப் பிரிவில் செயல்படத் தொடங்கினார்.
“நான் லண்டனில் இருந்தபோது அங்கிருந்த 'ஹெட்மாஸ்டர்ஸ்’ என்கிற பிரீமியம் சலூனில் முடிதிருத்தம் செய்துகொள்வேன். இந்தியா திரும்பியபோது அத்தகைய சேவையளிக்கும் சலூன் இங்கு இல்லாததைக் கண்டு ஏமாற்றம் அடைந்தேன்,” என்று எஸ்எம்பிஸ்டோரி இடம் தனிஷ் தெரிவித்தார்.
டெல்லியில் லுக்ஸ், கீதாஞ்சலி, அஃபினிட்டி போன்ற போட்டியாளர்கள் செயல்படும் நிலையில் ஆடம்பர சேவைகள் வழங்கும் சங்கிலித் தொடர் சலூன் நிறுவனத்தைத் தொடங்கத் தீர்மானித்தார். 2014-ம் ஆண்டு புதுடெல்லியில் பஞ்சாபி பாக் பகுதியில் 'ஹேர் மாஸ்டர்ஸ்’ (Hair Masters) தொடங்கினார்.
பஞ்சாபி பாக் பகுதியில் தனிஷிற்கு சொந்தமான காலி மனை இருந்தது. அங்கு ஹேர் மாஸ்டர்ஸ் தொடங்கினார். 'ஹெட்மாஸ்டர்ஸ்’ கண்டு உந்துதல் பெற்ற இவர் இந்திய வாடிக்கையாளர்களுக்கு ஆடம்பர உணர்வையும் தரமான சேவைகளையும் வழங்க விரும்பினார். இவர் தனது ஊழியர்களில் ஒருவரை லண்டனில் உள்ள Vidal Sassoon Academy-க்கு பயிற்சிக்கு அனுப்பி வைத்தார்.
“நான் தொடங்கியபோது மிகப்பெரிய போட்டியாளர்கள் சிறப்பாக செயல்பட்டு வந்தனர். என்னுடைய லேனில் 'லுக்ஸ்’ சலூன் இருந்தது. ஆனாலும் என்னுடைய சேவை மீது எனக்கு நம்பிக்கை இருந்தது,” என்றார்.
ஹேர் கலரிங் செய்ய Michelle Frank, மேக் அப் செய்ய Christian Dior, கண் இமைகளுக்கு Huda Beauty போன்ற பிரீமியம் பிராண்டுகளையே தனது சலூனில் பயன்படுத்துவதாக தனிஷ் தெரிவிக்கிறார். ஹேர்கட், ஹேர் தெரபி, மேக் அப், தனிநபர் பராமரிப்பு சேவைகள் என முழுமையான சேவைகளை ஹேர் மாஸ்டர்ஸ் வழங்குகிறது.
2015ம் ஆண்டு ஹேர் மாஸ்டர்ஸ் சண்டிகரில் மற்றொரு ஸ்டோர் திறந்தது. அதே ஆண்டு மும்பை பாந்திராவில் ஒரு சலூன் அமைக்கப்பட்டது. இன்று மும்பையில் Palladium, புதுடெல்லியில் DLF Emporio போன்ற பிரீமியம் மால்கள் உட்பட நாடு முழுவதும் 21 ஸ்டோர்கள் இயங்குகின்றன. 500 ஊழியர்கள் பணிபுரிகின்றனர். 2018-19 நிதியாண்டில் 60 கோடி ரூபாய் விற்றுமுதல் கொண்டுள்ளது.
ஹேர் மாஸ்டர்ஸ் தலைமுடி பராமரிப்பில் சிறப்பு கவனம் செலுத்துகிறது என்கிறார் தனிஷ். ஒவ்வொரு ஆண்டும் தனிஷ் ஒவ்வொரு கிளைகளில் இருந்து ஒரு ஊழியரை Vidal Sassoon Academy-க்கு பயிற்சிக்கு அனுப்பி வைக்கிறார். தேர்வு செய்யப்படும் ஊழியர் மூன்றாண்டுகளுக்கு ஒப்பந்தத்தில் கையொப்பமிட வேண்டும்.
ஹேர் மாஸ்டர்ஸ் ஏற்கெனவே வாடிக்கையாளராக இருந்த நண்பர் ஒருவரின் உதவியுடன் நிதி திரட்டியுள்ளது. தற்போது கிட்டத்தட்ட 23 கோடி ரூபாய் நிதி திரட்ட டெல்லியைச் சேர்ந்த முதலீட்டாளர் ஒருவருடன் தனிஷ் இறுதிகட்ட பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.
பிரபலங்களின் தேவையறிந்து சேவையாற்றினார்
இந்தியாவின் பொழுதுபோக்குத் துறையைச் சேர்ந்த பெரும்பாலான பிரபலங்களை மும்பையின் பாந்திரா பகுதியில் பார்க்கமுடியும். எனவே பாந்திராவில் பிரீமியம் சலூன் திறந்தது எதிர்பார்த்ததைக் காட்டிலும் சிறப்பாகவே பலனளித்தது.
சல்மான் கான், மாதுரி தீக்ஷித், ஆயுஷ்மான் குரானா, தமன்னா ஷர்மா, கங்கனா ரனாவத் போன்ற பாலிவுட் பிரபலங்கள் ஹேர் மாஸ்டர் சலூனுக்கு விரும்பி வருகை தருகிறார்கள் என்கிறார் தனிஷ்.
“பிரபலங்கள் எங்களுடைய சலூனிற்கு வருவார்கள். எங்கள் ஊழியர்கள் என்னை அழைத்து அங்கு வந்துள்ள பிரபலம் குறித்து தெரிவிப்பார்கள்,” என்கிறார் தனிஷ்.
கேஸ்டிங் டைரக்டர் ஒருவர் ‘ஆர்யா’ என்கிற ஹாட்ஸ்டார் வெப் சீரீஸ் தொடர்பாக இரண்டு நாட்கள் ஷூட்டிங் நடத்த சலூனை புக் செய்யவேண்டும் என்று தனிஷை அழைத்து கேட்டுக்கொண்டார். தனிஷ் மிகவும் ஆச்சரியமடைந்துள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது,
“அந்த கேஸ்டிங் டைரக்டர் எங்களது சலூனுக்கு வழக்கமாக வரும் வாடிக்கையாளர். எங்கள் சலூன் அவருக்கு மிகவும் பிடிக்கும். இங்குள்ள சூழலும் அமைப்பும் அவரை வெகுவாக கவர்ந்தது. எனவே ஷூட்டிங்கிற்கு ஹேர் மாஸ்டர்ஸ் சலூனை பரிந்துரை செய்தார். சுஷ்மிதா சென் மற்றும் அவரது நண்பர்கள் இந்த சலூனில் தயாரானார்கள்,” என்றார்.
முக்கிய சவால்கள்
கோவிட்-19 பரவல் தொடங்கியதற்கு முன்பான காலகட்டம் வரை சலூன் துறையில் மட்டுமே எப்போதும் வணிகத்தில் மந்தநிலை ஏற்படாமல் இருந்தது. நகர்புறங்களில் உள்ள ஆண்களும் பெண்களும் தங்களது வருவாயில் 20 சதவீதம் வரைகூட அழகுபடுத்தும் தேவைகளுக்குச் செலவிடத் தயாராக உள்ளனர்.
“வணிகம் தொடங்கியது முதல் வாடிக்கையாளர்களைப் பெறுவதிலோ சேவையளிப்பதிலோ அதிக சவால்களை சந்தித்ததில்லை. ஊழியர்களை பணியமர்த்துவது, எங்கள் சலூனின் தரநிலைக்கு ஏற்ப தரமான நிபுணர்களைக் கண்டறிவது போன்றவை ஆரம்பகட்ட சவாலாக இருந்தது. பின்னர் இதற்கு தீர்வு கண்டோம்,” என்று தனிஷ் எஸ்எம்பிஸ்டோரி இடம் தெரிவித்தார்.
பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பின்னரும் எங்கள் சலூனில் வாடிக்கையாளர்கள் நிரம்பியிருந்தனர். டிஜிட்டல் பரிவர்த்தனைகள் மேற்கொள்ளப்பட்டன. இருப்பினும் கோவிட்-19 சூழலானது வணிகத்தையும் ஒட்டுமொத்த துறையையும் கடுமையாக பாதித்துள்ளது என்கிறார் தனிஷ்.
வருங்காலத் திட்டம்
மிகப்பெரிய சங்கிலித் தொடர் சலூன் நிறுவனமாக உருவாகவேண்டும் என்பதே தனிஷின் கனவு. வரும் நாட்களில் அதிக சாத்தியக்கூறுகள் நிறைந்த முதல் மற்றும் இரண்டாம் நிலை நகரங்களில் அவுட்லெட்கள் திறக்க விரும்புகிறார் தனிஷ்.
இந்நிறுவனம் ஜெய்பூர், மும்பை, பெங்களூரு, ஹைதராபாத், துபாய் ஆகிய இடங்களில் புதிய கிளைகள் திறக்க உள்ளது. 2025-ம் ஆண்டில் தேசிய மற்றும் சர்வதேச சந்தைகளில் கூடுதலாக 50 கிளைகள் திறக்க இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
வரும் நாட்களில் நேரடியாக வாடிக்கையாளர்கள் வீடுகளுக்கே சென்று முழு வீச்சில் சேவையளிக்கும் தளமாக உருவாகவும் திட்டமிட்டுள்ளார்.
ஆங்கில கட்டுரையாளர்: பாலக் அகர்வால் | தமிழில்: ஸ்ரீவித்யா