நவீன தொழில்நுட்ப உதவியுடன் விவசாயம் செய்து லட்சாதிபதி ஆன மகாதேவ்!
மகாராஷ்டிராவைச் சேர்ந்த மகாதேவ் விவசாயத்தின் மீதுள்ள ஈடுபாடு காரணமாக சிறியளவில் விவசாயம் செய்யத் தொடங்கி இன்று 5 ஏக்கர் நிலத்தில் ஆரஞ்சு, திராட்சை உள்ளிட்டவற்றை வளர்த்து அதிக லாபம் ஈட்டி வருகிறார்.
தொழில்நுட்பப் புரட்சியை ஏற்படுத்தாத துறையே இல்லை எனும் அளவிற்கு அனைத்து துறைகளிலும் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இதில் விவசாயத் துறையும் விதிவிலக்கல்ல.
வறட்சி, குறைந்த மழைப்பொழிவு, கடன் பிரச்சனை, பயிர் சேதம் என விவசாயிகள் ஏராளமான பிரச்சனைகளை சந்தித்து வரும் சூழலில் தொழில்நுட்பம் இவர்களுக்குக் கைகொடுக்கிறது.
தொழில்நுட்பத்திறன் உதவியாலும் துறைசார் நிபுணர்களின் உதவியாலும் விவசாயிகளின் விளைச்சல் பன்மடங்கு அதிகரிக்கின்றன. இவ்வாறு பலனடைந்த விவசாயிகள் மற்றவர்களுக்கும் உந்துதலாக இருக்கின்றனர்.
அப்படிப்பட்ட விவசாயிகளில் ஒருவர்தான் மகாராஷ்டிராவின் வாசிம் பகுதியில் வசிக்கும் மகாதேவ். இவர் விவசாயத்தின் மூலம் கோடிக்கணக்கில் வருவாய் ஈட்டி வருகிறார். 5 ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்து கொண்டிருக்கிறார். 40 சதவீத லாபம் கிடைப்பதாகத் தெரிவிக்கிறார்.
ஆரம்பத்தில் மகாதேவின் குடும்பத்தினர் இவரது கிராமத்தில் உள்ள நிலத்தில் கூலி வேலை செய்துகொண்டிருந்தனர். மகாதேவும் அவர்களுடன் சேர்ந்து கூலி வேலை செய்து வந்தார். பிறகு படிப்பிற்காக மும்பை சென்றார். அங்குள்ள ஜேஜே ஸ்கூல் ஆஃப் ஆர்ட்ஸ் கல்லூரியில் படித்தார். மகாதேவ் படிப்பில் ஆர்வம் காட்டியபோதும் அவரது மனம் எப்போதும் விவசாயத்தைச் சுற்றியே இருந்து வந்தது.
தற்போது மகாதேவ் மும்பையில் இண்டீரியர் டிசைனராக பணியாற்றுகிறார். 2008ம் ஆண்டு முதல் நவீன விவசாயத்தில் ஈடுபட்டு வருகிறார்.
கல்லூரி நாட்களில் மகாதேவ் ஹாஸ்டலில் தங்கியிருந்தார். இங்கு நாசிக், சதாரா ஆகிய பகுதிகளைச் சேர்ந்த மாணவர்கள் தங்கியிருந்தனர். இவர்கள் மகாதேவுடன் நட்புடன் பழகியுள்ளனர். மகாதேவ் இவர்கள் வீட்டிற்கு செல்வதுண்டு. அப்போது அவர்கள் விவசாயம் செய்வதைப் பார்த்துள்ளார்.
ஏற்கெனவே விவசாயத்தின் மீதிருந்த ஆர்வம் மேலும் அதிகமானது. சிறியளவில் விவசாய வேலைகளைத் தொடங்கா தீர்மானித்தார். சிறு நிலம் ஒன்றை வாங்கினார். அதில் ஆரஞ்சு மரம் வளர்த்தார். நல்ல விளைச்சல் இருந்தது.
இன்று இவரது தோட்டத்தில் 6,000 ஆரஞ்சு மரங்கள் உள்ளன. 2018ம் ஆண்டு எலுமிச்சை, திராட்சை போன்றவை இவரது தோட்டத்தை நிறைக்கத் தொடங்கின. இவரது தோட்டத்தில் விளையும் திராட்சைகள் அதிக லாபம் ஈட்டித் தருகின்றன.
மும்பையில் வசித்து வரும் மகாதேவ் இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்கு ஒருமுறை கிராமத்துக்கு வந்து இந்தத் தோட்டங்களைப் பார்வையிடுகிறார்.
“முதல் முயற்சியிலேயே அதிக விளைச்சல் கிடைத்துவிடவில்லை. நிபுணர்களிடம் ஆலோசனை கேட்டு அவற்றைப் பின்பற்றினேன்,” என்கிறார் மகாதேவ்.
இவரது நிலத்தை 2 மேலாளர்களும் 5-6 விவசாயிகளும் பராமரித்து வருகின்றனர். வாட்ஸ் அப் குழுக்கள் மூலம் மகாதேவ் மற்ற விவசாயிகளுக்கு உதவி வருகிறார்.
ஹிந்தியில்: ஷோபித் ஷீல் | தமிழில்: ஸ்ரீவித்யா