மொட்டை மாடியில் திராட்சை தோட்டம்; மாதம் ரூ.5 லட்சம் ஈட்டும் புனே விவசாயி!
புதுமையாக யோசிக்கும் விவசாயிகள் இருக்கும் வரை விவசாயத்திற்கு அழிவே கிடையாது என்பதை நிரூபித்திருக்கிறார் புனேவைச் சேர்ந்த விவசாயி ஒருவர்.
புதுமையாக யோசிக்கும் விவசாயிகள் இருக்கும் வரை விவசாயத்திற்கு அழிவே கிடையாது என்பதை நிரூபித்திருக்கிறார் புனேவைச் சேர்ந்த விவசாயி ஒருவர்.
குறைந்த செலவில் நல்ல லாபம் ஈட்டும் பல வழிகள் விவசாயிகள் இருக்கின்றன. ஆனால், அதைப் பற்றிய விழிப்புணர்வு பல விவசாயிகளுக்கு முழுமையாக சென்று சேர்வது கிடையாது. குறிப்பாக இயற்கை முறையில் விவசாயம் செய்தாலே அது நஷ்டத்தில் தான் முடியும் என்றும் எண்ணமும் பரவலாக இருக்கிறது.
ஆனால், புனேவைச் சேர்ந்த விவசாயி ஒருவர் வெறும் 1100 சதுர அடி கொண்ட தனது வீட்டின் மாடியில் திராட்சை தோட்டம் அமைத்து நல்ல லாபம் ஈட்டி வருகிறார்.
திராட்சை தோட்டமான மொட்டை மாடி:
மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் உள்ள சோலாப்பூர் நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது ஊர்லிகாஞ்சன் கிராமம். இங்கு வசித்து வரும் பெளசாஹேப் காஞ்சன் என்ற 58 வயதான விவசாயி, தனக்கு சொந்தமான 3 ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்து வருகிறார். விவசாயத்தில் புதுமையான விஷயங்களைப் பற்றி அறிந்து கொள்வதிலும், அதனை முயற்சிப்பதிலும் பெளசாஹேப் காஞ்சனுக்கு ஆர்வம் அதிகம்.
2013ம் ஆண்டு பெளசாஹேப் காஞ்சன் ஐரோப்பிய நாடுகளுக்குச் சுற்றுப்பயணம் சென்றுள்ளார். அங்கு விளைந்த திராட்சை கொடிகளை பார்த்த போது, நாமும் ஏன் இதை முயற்சித்து பார்க்கக் கூடாது என்ற எண்ணம் அவருக்கு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து தோட்டக்கலையின் உதவியை நாடிய பௌசாஹேப், 2015ம் ஆண்டு புனேவில் உள்ள ஐ.சி.என்.ஆர். தேசிய ஆய்வு மையத்தில் மஞ்சரி மெடிகா என்ற வகையைச் சேர்ந்த திராட்சை செடிகளை வாங்கி வளர்க்க ஆரம்பித்துள்ளார்.
மஞ்சரி மெடிகா வகை திராட்சையின் விதைகளில் இருந்து மருந்து தயாரிக்கப்படுவதால், கூடுதல் விலை கிடைக்கும் என்பதை ஆராய்ந்து அறிந்து கொண்ட பெளசாஹேப் அதனை பயிரிட்டுள்ளார்.
இதனையடுத்து, தனது வீட்டின் மொட்டை மாடியில் 30 அடி உயரத்தில் 1100 சதுர அடி பரப்பளவில் திராட்சை கொடிகளை படரவிட்டார். அதுமட்டுமின்றி இந்த செடிகளுக்கு செயற்கை உரங்களையோ, பூச்சி மருந்துகளையோ பயன்படுத்தாமல் தனது வீட்டிலிருந்து கிடைக்கும் சமையற் கழிவுகள் மற்றும் மாட்டுச்சாணத்தைக் கொண்டு இயற்கை உரம் தயாரித்து பயன்படுத்தி வருகிறார்.
3 ஆண்டுகளுக்குப் பிறகு இரும்பு சட்டங்களால் ஆன பந்தலை தயார் செய்து சுமார் 32 அடி உயரத்தில் திராட்சை கொடிகளை வளர்த்து வருகிறார். பெளசாஹேப்பின் இந்த வித்தியாசமான விவசாயத்தை பற்றிக் கேள்விப்பட்ட வேளாண் துறை விஞ்ஞானிகள் கூட அவரது தோட்டத்தை பார்வையிட்டு, பழங்களின் தரம் குறித்து ஆய்வு நடத்துவதாக பெருமையுடன் தெரிவித்துள்ளார்.
ஏ.என்.ஐ. செய்தி நிறுவனத்திற்கு அளித்துள்ள பேட்டியில்,
"மொட்டை மாடியில் எப்படி அதிக அளவிலான திராட்சையை விளைவிக்க முடியும் என விவசாயிகள் மற்றும் மக்கள் அடிக்கடி வந்து ஆச்சரியத்துடன் கண்டு செல்கிறார்கள். நகர்ப்புறங்களில் வசிக்கும் மக்களுக்கு விவசாயத் துறையில் எதையும் செய்ய வாய்ப்பு உள்ளது என்பதை நான் உணர்த்த விரும்பினேன். அவர்கள் தங்கள் மொட்டை மாடியைப் பயன்படுத்தி, திராட்சை விளைவிக்க முடியும்,” எனத் தெரிவித்துள்ளார்.
திராட்சை கொடிக்கான இரும்பு பந்தல் மற்றும் பசுமை வலை அமைக்க சுமார் 6 ஆயிரம் ரூபாய் செலவான நிலையில், மாதந்தோறும் 5 லட்சம் ரூபாய் வரை பௌசாஹேப் காஞ்சன் லாபம் ஈட்டி வருவது குறிப்பிடத்தக்கது.
தகவல் உதவி: ஏஎன்ஐ