BigBossTamil3 டைட்டிலை வென்ற முகேன் ராவ்: மலேசியா இளைஞரின் கனவு நிஜமான கதை!
பெற்றோர் இடையே பிரிவு, சிக்கலான குழந்தைப்பருவம், கிடைத்த வேலை செய்து சொந்த காலில் நின்று, அன்பை ஏங்கிய இளைஞராக மலேசியாவில் இருந்து இந்தியா வந்த முகேன் ராவ் பிக்பாஸ்3 டைட்டிலை வென்று தன் கனவை நினைவாக்கி இருக்கிறார்.
கடந்த 100 நாட்களுக்கும் மேலாக தமிழகம் முழுவதும் எத்தனையோ பரபரப்புச் செய்திகளை பின்னுக்குத் தள்ளி ஒவ்வொரு வீடுகளிலும் சிம்மாசனம் இட்டு அமர்ந்திருந்தார் பிக் பாஸ். அங்கு நடக்கும் சம்பவங்களை, போட்டியாளர்களின் நடவடிக்கைகளை மக்கள் தங்கள் வாழ்க்கையோடு ஒப்பிட்டு பார்த்துக் கொண்டதால், அந்நிகழ்ச்சியோடு அவர்களால் எளிதாக ஒன்றிப் போக முடிந்தது. இதுவே அந்நிகழ்ச்சியின் மாபெரும் வெற்றி.
இது போக, இம்முறை டைட்டிலை வெல்லப் போவது யார் என்ற எதிர்பார்ப்பும் மக்களிடையே அதிகமாக இருந்தது. சேரன், பாத்திமா பாபு, கவின், லாஸ்லியா, சாண்டி, ஷெரின், தர்ஷன், முகேன் ராவ், வனிதா, மீரா மிதுன், ரேஷ்மா, மோகன் வைத்யா, சாக்ஷி, அபிராமி, கஸ்தூரி, மதுமிதா மற்றும் சரவணன் என 17 போட்டியாளர்கள் இம்முறை பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
சர்ச்சைகளுக்குப் பஞ்சமில்லாமல் நடந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஆரம்பம் முதலே தர்ஷன் அல்லது முகேன் தான் இம்முறை டைட்டிலை வெல்வார் என்ற பேச்சு இருந்தது. அவர்களது கணிப்பைப் போலவே டைட்டிலை வென்று பாராட்டுகளைப் பெற்று வருகிறார் முகேன். பிக் பாஸ் வீட்டில் அபிராமியுடனான நட்பைத் தவிர்த்து அவர் வேறெதுவும் சர்ச்சைகளில் சிக்கவில்லை. அனைத்து போட்டியாளர்களிடம் அன்பானவர் என்ற நல்ல பெயரைப் பெற்றார் முகேன்.
இசை ஆர்வம்
சிறு வயது முதலே இசையில் முகேனுக்கு ஆர்வம் அதிகம். அவரது அப்பா பிரகாஷ் ராவ்வும் நல்ல பாடகர் மற்றும் மேடை நடிகர். அதனாலேயே முகேனுக்கும் சிறு வயதிலேயே இசையின் மீது ஈர்ப்பு வந்து விட்டது. தனது 13 வயதிலேயே சொந்தமாக பாடல்கள் எழுதி, பாட ஆரம்பித்து விட்டாராம் முகேன். சமயங்களில் நள்ளிரவில் கூட எழுப்பி தான் எழுதிய பாடல்களை பாடிக் காட்டுவாராம்.
தூக்கக் கலக்கமாக இருந்தாலும் கூட, முகெனைப் பாராட்டத் தவறியதில்லையாம் அவரது அப்பா. குடும்பத்தாரின் பாராட்டுகள் தான் அவரை மென்மேலும் கலைத் துறையில் முன்னேறிச் செல்ல உந்தியிருக்கிறது.
இசை மீது தீராத காதலோடு பயணித்தாலும், முகேனின் குழந்தைப் பருவம் அவ்வளவு இனிமையானதாக இல்லை. தனக்கு விபரம் தெரிந்த நாள் முதலாகவே பெற்றோர் இடையே ஏற்பட்ட சண்டைகளால் மனதளவில் பெரும் பாதிப்புக்கு ஆளாகி இருக்கிறார். ஒரு கட்டத்தில் மன அழுத்தத்திற்காக சிகிச்சையும் பெற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. வாழ்க்கை எப்படி எப்படியோ தடம் மாற ஆரம்பித்தது.
ஒரு கட்டத்தில் திரும்பிப் பார்த்த போது, நிச்சயம் இது தான் பயணிக்க வேண்டிய பாதை அல்ல என்பதை உணர்ந்தார் முகேன். தனக்குத் தானே போதி மரமாகி தெளிவைப் பெற்றார். தன் கஷ்டங்களை எல்லாம் எரித்து விட்டு, பீனிக்ஸ் பறவையாய் மீண்டும் எழுந்தார்.
மன அழுத்தங்களில் இருந்து விடுபட சிறுசிறு கைவினைப் பொருட்கள் செய்யத் தொடங்கினார். பிக் பாஸ் வீட்டில் கூட, கையில் கிடைத்த பொருட்களை எல்லாம் வைத்து அவர் எப்போதும் ஏதாவது செய்து கொண்டே இருப்பதை நாம் பார்த்திருப்போம். அதுவும்கூட மன அழுத்தத்தில் இருந்து விடுபட ஒரு விதமான தியானம் தான்.
மற்ற போட்டியாளர்கள் எல்லாம் ஒரு கட்டத்தில் பிக் பாஸ் வீட்டிற்குள் இருக்க முடியாமல், வெளியில் செல்ல வேண்டும் என கன்பெஷன் ரூமுக்குச் சென்று கதறியதுண்டு. ஆனால், முகேன் இதுவரை அப்படிச் செய்ததாக நமக்கு காட்டவேயில்லை. காரணம் எந்தச் சூழ்நிலையிலும், அன்பைக் கொடுத்து, அன்பைப் பெற்று வாழும் வாழ்க்கை சூட்சமத்தை அவர் அறிந்திருந்தார் என்று தான் சொல்ல வேண்டும்.
போலீஸ் கனவு
முகேனை போலீசாக்க வேண்டும் என அவரது பெற்றோர் விரும்பி இருக்கின்றனர். ஆனால் ஒரு கட்டத்தில் அவர் இசைப் பாதையில் பயணிக்கத் தொடங்கியதும், தங்கள் விருப்பத்தை மகன் மீது அவர்கள் திணிக்க விரும்பவில்லை. மகனுக்குத் தேவையான சுதந்திரத்தை அவர்கள் கொடுத்தனர்.
தனக்கான மேடைகள் கிடைக்காத சமயத்தில், சமூகவலைதளங்கள் மூலமாகவே மக்களிடம் தன்னை பிரபலப்படுத்திக் கொண்டார் முகேன். சமூக ஊடகங்கள் மூலமாக அவர் நேரடியாக மக்களுடன் பேசினார். அதன் மூலம் தனக்கென ஒரு ரசிகர் வட்டத்தையும் உருவாக்கிக் கொண்டார். ஒவ்வொரு ரசிகனையும் அவர் மதித்தார்.
ஒருமுறை வானொலி மூலம் ரசிகை ஒருவர் தனது மகளின் பிறந்தநாள் விழாவிற்கு அழைப்பு விடுத்துள்ளார். தனது இசை ஆல்பங்கள் மூலம் முகேன் பிரபலமாகி இருந்த சமயம் அது. ரசிகை யார் என்ன ஏது என்று கூட விசாரிக்காமல், உடனடியாக அவரது அழைப்பை ஏற்று அந்த விழாவில் கலந்து கொண்டு அனைவரையும் ஆச்சர்யப்படுத்தி உள்ளார் முகேன்.
ஆல்பங்கள், யூடியூப் தளத்தில் பல்வேறு சுவாரசியமான காணொளிப் பதிவுகள், சில தமிழ், மலாய் மொழித் திரைப்படங்களில் பங்களிப்பு என ஆயிரக்கணக்கான மலேசிய இளைஞர்களை தன்வசமாக்கிய முகேன், பிக் பாஸ் டைட்டிலை தட்டிச் சென்று உலகளவில் மேலும் பிரபலமாகி விட்டார் என்றுதான் சொல்ல வேண்டும்.
முகேனைப் போலவே அவரது பாடல்களும் துள்ளல் ரகம் தான். சிறு வயதிலேயே தன் தந்தையுடன் மேடை நிகழ்ச்சிகளில் பாடத் தொடங்கினார். நிச்சயம் எதிர்காலத்தில் முகேன் மாபெரும் பாடகர் ஆவார் என அப்போதே மக்கள் அவரைப் பாராட்டத் தொடங்கினர். ஆனால், அவருக்கோ நடிகராக வேண்டும் என்ற கனவும் இருந்தது. அதற்குக் காரணம் அவரது மாமா தான். அவர் Senandung Malam என்ற படத்தில் பேப்பர் போடும் பையனாக முகேனை நடிக்க வைத்தார். அப்போதிருந்து தான் பெரிய நடிகராக வேண்டும் என்ற ஆசை முகேனுக்குள் உண்டானது.
மலேசியாவில் பத்துக்கும் மேற்பட்ட டெலி பிலிம்களிலும், ஐந்திற்கும் மேற்பட்ட விளம்பரங்களிலும் நடித்துள்ளார் முகேன். அதோடு இரண்டு குறும்படங்களிலும், மூன்று திரைப்படங்களிலும் அவர் நடித்துள்ளார். மலேசியாவில் அவருக்கான வாய்ப்புகள் கிடைத்த போதும், முகேனின் பார்வை எப்போதும் இந்தியா மீதே தான் இருந்துள்ளது. இங்கு வந்து தமிழ்ப் படத்தில் நடித்து புகழ் பெற வேண்டும் என்பது தான் முகேனின் ஆசை.
மெழுகுச் சிலை
உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல் என்பது முகேனின் பாலிசி. லண்டனில் உள்ள மேடம் துஷாட்ஸ் மியூசியத்தில் தனது மெழுகுச்சிலை இடம் பெற வேண்டும் என்பது தான் தனது ஆசை என்று முகேன் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். அந்த சிலையுடன் செல்பி எடுத்துக் கொள்ள வேண்டும் என்பது தான் அவரது லட்சியமாம்.
பிக் பாஸ் டைட்டில் மூலம் கோடம்பாக்கத்தில் அவருக்கு வாய்ப்பு கிடைக்கிறதோ இல்லையோ, மலேசியாவில் நிச்சயம் மூன்று படங்களில் கமிட் ஆவது உறுதி என்கிறார்கள் அவரின் நண்பர்கள்.
இளமையில் வறுமை மிகவும் கொடுமையானது. ஆனால், அதனையும் கடந்து தான் வந்துள்ளார் முகேன். குடும்பச்சூழல் காரணமாக தனது விருப்பங்கள் பலவற்றை அவர் சுருக்கிக் கொண்டதாகக் கூறுகிறார்கள் அவரது நண்பர்கள். பெற்றோரை சிரமப்படுத்தக் கூடாது என்பதற்காக சிறு வயதிலேயே தனக்கான தேவைகளுக்காக உழைக்கத் தொடங்கியுள்ளார் முகேன்.
பொது இடங்களுக்குச் செல்லும் போது குளிர்பான டின்கள், பிளாஸ்டிக் பாட்டில்கள் கிடந்தால் அவற்றைச் சேகரித்து, பழையப் பொருட்கள் வாங்கும் கடையில் கொடுத்து அதில் கிடைக்கும் காசை செலவுக்குப் பயன்படுத்தி உள்ளார். கால் டாக்சியும் ஓட்டியுள்ளார். வாய்ப்பு கிடைக்கவில்லை என்று புலம்பாமல், வாய்ப்புகள் தேடி வரும் வகையில் செயல்பட வேண்டும் என்பதுதான் முகேன் இன்றைய இளைய சமுதாயத்துக்கு கற்றுக்கொடுத்துள்ள பாடம்.
தன் குடும்பத்தை வறுமையில் இருந்து மீட்டெடுக்க வேண்டும் எனப் போராடி இன்று அதில் ஓரளவு வெற்றியும் பெற்றிருக்கிறார். தன் தம்பிக்கும், தங்கைக்கும் சமயத்தில் பெற்றோராக மாறி பொறுப்புணர்வுடன் செயல்பட்டிருக்கிறார். சிறந்த பாடகர், நடிகர், பாடலாசிரியர் என்பதையெல்லாம் மீறி மனிதநேயம் கொண்ட பாசக்கார சகோதரராகவும் இருந்து வருகிறார் முகேன். பிக் பாஸ் வீட்டிற்கு தனது அம்மாவும், தங்கையும் வந்த போது அவர்களைத் தூக்கி தனது பாசத்தை அவர் வெளிப்படுத்திய விதம் நெகிழ்ச்சியாக இருந்தது.
நேர்மையான போட்டியாளர்
ஆரம்பத்தில் பிக் பாஸ் வீட்டில் அதிகம் அறியப்படாத போட்டியாளராகத் தான் முகேன் இருந்தார். ஆனால் தனது பாசத்தினாலும், நேர்மையாலும் குறைந்த காலக்கட்டத்திலேயே அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். நேர்மையாக விளையாட்டை விளையாடும் நபர் என்று தொகுப்பாளர் கமல்ஹாசனே பலமுறை முகேனை பாராட்டியிருக்கிறார்.
பிக் பாஸ் இறுதிப் போட்டிக்கு நேரடியாக தகுதி பெறும் கோல்டன் டிக்கெட்டும் முகேனுக்குத் தான் இம்முறைக் கிடைத்தது. கடந்த சீசன்களில் இந்த வாய்ப்பைப் பெற்றவர்கள் யாரும் டைட்டிலை வென்றது கிடையாது. ஆனால், இம்முறை அந்த வரலாற்றையும் மாற்றி எழுதியிருக்கிறார் முகேன்.
பிக் பாஸ் வீட்டில் அபிராமியுடன் இருந்த நட்பு, கட்டிலை உடைத்தது, கோபத்தில் சேரைத் தூக்கியது என சில சர்ச்சைகளில் சிக்கிய போதும், தர்ஷனுடனான நட்பு, நண்பர்களுக்கு அவர் கொடுத்த முக்கியத்துவம், சகபோட்டியாளர்களை தன் உறவுகளாக மாற்றிக் கொண்ட பக்குவம், கையில் கிடைக்கும் பொருட்களை வைத்து கலைப் பொருட்கள் செய்வது, பாடல்கள் பாடுவது, வீட்டிற்கு வந்த போட்டியாளர்களின் உறவினர்கள் அனைவருக்கும் மறக்க முடியாத நினைவுப்பரிசுகள் கொடுத்தது என யாராலும் வெறுக்க முடியாத ஒரு நபராகவே முகேன் திகழ்ந்தார்.
முகேனின் வெற்றியை அவரது நண்பர்களும், ரசிகர்களும் கொண்டாடி வருகின்றனர். மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருவதால் முகேனின் வெற்றிச் செய்தியை அவரது அப்பாவால் கொண்டாட முடியவில்லை. அதனால் பினாலே கொண்டாட்டத்தில் அவரது சகோதரராலும் கலந்து கொள்ள முடியவில்லை.
நம்பிக்கை
டைட்டிலை வென்று பாராட்டு மழையில் நனைந்து கொண்டிருந்த பொழுதிலும், மறக்காமல் தன் தம்பியுடன் போனில் பேசியுள்ளார் முகேன். அப்போது,
“இனி நம் வாழ்க்கை மாறும்... துன்பங்கள் முடிவுக்கு வரும்," என அவர் கூறியுள்ளார்.
யாருக்கும் வெற்றி சுலபத்தில் கை கூடுவதில்லை. ஒவ்வொரு வெற்றியின் பின்னணியிலும் அளவில்லா உழைப்பும் வலிகளும் பதிவாகியிருக்கும். முகேனும் அதற்கு விதிவிலக்கல்ல. ஆனால் வாழ்க்கையில் சந்தர்ப்ப சூழ்நிலைகள் போடும் தடைக்கற்களைப் படிக்கட்டுகளாக மாற்றத் தெரிந்தவர்கள் நிச்சயம் ஒருநாளில் வெற்றி வாகை சூடுவார்கள் என்பதற்கு முகேனின் வாழ்க்கையும் ஒரு உதாரணமாகி இருக்கிறது.
"அன்பு எப்போதுமே அனாதை தான்.. இது பிக் பாஸ் நிகழ்ச்சியில் முகேன் கூறி பிரபலமான டயலாக். ஆனால், அதை உண்மையில்லை என அவருக்கு வெற்றியைப் பரிசாகத் தந்து நிரூபித்திருக்கிறார்கள் மக்கள்.
மற்றவர்களுக்குப் பிடித்த மாதிரி நடந்து கொள்ள வேண்டும் என்பதை விட, முதலில் தனக்குப் பிடித்த மாதிரி நடந்து கொண்டு, பின்னர் அதை மற்றவர்களுக்கும் பிடிக்கும்படி செய்ய வேண்டும் என்பது தான் பிக் பாஸ் வீடு மூலம் முகேன் நமக்குச் சொல்லும் பாடம்.