அன்று கேன்டீனில் பாத்திரம் கழுவியவர் இன்று ரூ.75 கோடி ஈட்டும் உணவக உரிமையாளர்!

நாராயண் பூஜாரியின் கதை ஊக்கம் அளிப்பதாக இருக்கிறது. வேலை தேடி மும்பை வந்தவர், கேண்டீனில் பாத்திரம் கழுவியது வரை பல வேலைகள் செய்திருக்கிறார். இன்று அவர், 1300 பேருக்கு மேல் வேலை அளிக்கும் ஷிவ் சாகர் ஈட்டரீ்ஸ் சங்கிலித்தொடர் உணவகங்களை நடத்தி வருகிறார்.
1 CLAP
0

பிரச்சனைகளுக்குத் தீர்வு காணும் உங்களை திறனோடு ஒப்பிடும் போது பிரச்சனைகளின் தீவிரம் ஒரு பொருட்டே அல்ல எனச் சொல்லப்படுவதுண்டு. அதே போல, மன உறுதி, விடா முயற்சி மற்றும் நம்பிக்கை உங்களை எந்த அளவு முன்னேற்றும் என்பதற்கான உதாரணமாக நாராயன் புஜாரி திகழ்கிறார்.

கர்நாடாகாவின் உடுப்பியில் சிறிய கிராமத்தில் பிறந்து வளர்ந்த நாராயண் 13 வயதில் மும்பைக்கு வேலை தேடிச்சென்றார். கேண்டீனில் பாத்திரங்கள் கழுவுவது உள்ளிட்ட பல வேலைகளை செய்தவர் இரவு நேர பள்ளி வகுப்பிலும் சேர்ந்து படித்தார்.

துவக்கம்

1980-களில் இட்லி, பாவ் பாஜி, தோசை ஆகிய உணவுப் பொருட்களை பிரபலமாகிய நிலையில், இவற்றை வழங்கும் உணவகங்கள் அதிகம் இல்லாததை நாராயண் கவனித்தார். இது தொடர்பாக ஆய்வு செய்வதவர் வர்த்தக நோக்கில் இதில் இறங்கலாம் எனத் தீர்மானித்தார். அவரிடம் முதலீடும் இல்லாத நிலையில் பங்குதாரர் ஒருவரை கண்டறிந்தார்.

1990ல் 23 வயதான நாராயண் மும்பையில் சர்ச்கேட் பகுதியில் ரூ.40 லட்சம் முதலீட்டில் ’ஷிவ் சாகர்’ உணவகத்தைத் துவக்கினார். அடுத்த ஆண்டு பங்குதாரர் விலகிக் கொண்டார். கடின உழைப்பு மூலம் மெல்ல முன்னேறியவர், முதலில் மேலாளர் என்பதில் இருந்து பங்குதாரராகி, பின் உரிமையாளரானார்.

விரைவில் ஷிவ் சாகர் மும்பையின் பிரபலமான உணவகமானது. ஆண்டுக்கு ரூ.75 கோடி எனும் விற்றுமுதல் ஈட்டியது.

“அந்த நாட்கள் வித்தியாசமானவ என்கிறார் நாராயண். இன்று போல் போட்டி கிடையாது. ஆனால், வாடிக்கையாளர்களைக் கவர அதிகம் கஷ்டப்பட வேண்டியிருந்தது. நாங்கள் பல மாற்றங்களை செய்து, சந்தையில் இருக்கும் உணவுப் பொருட்களில் இருந்து வேறுபடும் வகையில் உணவினை மேம்படுத்தினோம். பல்வேறு தோசை வகைகளை அறிமுகம் செய்தோம். இந்திய பிட்சாவை அறிமுகம் செய்தோம்,” என்கிறார் நாராயண்.

பொதுவாக உணவகங்கள் இரவு 8 மணிக்கு மூடப்படும் நிலையில், ஷிவ் சாகர் உணவகம் நள்ளிரவு வரை திறந்திருந்து இளைஞர்கள் மத்தியில் பிரபலமானது. இணையம் இல்லாத காலத்தில் தான் மேற்கொண்ட மார்க்கெட்டிங் உத்திகளை நாராயண் நினைவு கூறுகிறார். மும்பை திரையரங்களுடன் பண்ட மாற்று அடிப்படையில் விளம்பரம் செய்யும் உத்தியை கையாண்டார்.

இரண்டாம் தலைமுறை

நாராயணனின் மகள் நிகிதா 2017ல் பிடெக் முடித்த நிலையில் ஷிவ் சாகர் உணவக நிர்வாகத்தில் இணைந்தார்.

“நான் இணைந்தவுடன் கடல் உணவுக்கான Fish N Bait உணவகத்தை துவக்கினோம். இது மிகவும் புதியதாக இருந்தது,” என்கிறார் நிகிதா.

எனினும் இந்த ரெஸ்டாரண்ட் பிரபலமாகவில்லை. நிறைய முதலீடு செய்த நிலையில் இந்த வர்த்தகம் லாபமாக அமையவில்லை என்கிறார் நிகிதா. 2018ல் இதை மூடிவிட்டார்.

“பாருடன் கூடிய ரெஸ்டாரண்ட் அல்லது சாதாரண உணவகம் தான் செயல்படும் என்பதை உணர்ந்தோம்,” என்கிறார் நிகிதா.

Fish N Bait உணவகத்தின் சூழலை மாற்றி அதை Butterfly High பிரிமியம் உணவகமாக மாற்றினார். இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.

’தி பிக் ஸ்மால் காபி பார்’ எனும் மற்றொரு உணவகத்தையும் துவக்கினார். இரண்டாம் மற்றும் மூன்றாம் அடுக்கு நகரங்களில் இதை விரிவாக்கத் திட்டமிட்டோம் என்கிறார்.

“இதன் பிறகு அதிகம் ஆர்டர் செய்து குறைவாக பணம் செலுத்தும் வசதியை கொண்டு வந்தோம். அதாவது அதிகம் ஆர்டர் செய்தால் அதற்கேற்ப செலவு குறைவாகும். வர்த்தக உணவுகளுக்கு இது பொருத்தமாக இருந்தது,” என்கிறார்.

சந்தை சவால்கள்

பலரும் தங்கள் பெயரை காபி அடித்து ஷிவ் ஹோம் சாகர் அல்லது ஸ்ரீ ஷிவ் சாகர் எனும் பெயரில் உணவகங்களை நடத்த முற்பட்டனர் என்கிறார் நாராயண். எனினும், இந்த பிராண்ட் பெயரை பயன்படுத்த தடை பெற்றதாக கூறுகிறார்.

இன்று ஷிவ் சாகர் மும்பை, புனா மற்றும் மங்களூருவில் 15 கிளைகளைக் கொண்டுள்ளது. பட்டர்பிளை ஹை மற்றும் தி பிக் ஸ்மால் காபி பார் தலா ஒரு கிளைகளை கொண்டுள்ளது. இந்த உணவகங்களில் 1,300 பேருக்கு மேல் பணியாற்றுகின்றனர்.

விரிவாக்கத்திற்கு மத்தியில் தரத்தை தக்க வைப்பதிலும் கவனம் செலுத்துகிறார்.

“சுத்தம், சுகாதாரத்தில் மிகவும் கவனமாக இருக்கிறேன். முதலில் டாய்லெட் மற்றும் அதன் பிறகு சமயலறைக்கு சென்று பார்ப்பேன். இவை நல்ல நிலையில் இருந்தால் மேலாளர் தப்பித்தார். இல்லை என்றால் என்னிடம் மாட்டிக்கொள்வார்,” என்கிறார் நாராயண்.

தொழில்முறை சமையல் கலைஞர்களும் பணிக்கு அமரத்தப்பட்டுள்ளனர். வேலைக்கு சேர்பவர்களுக்கு முதலில் பயிற்சி அளிக்கப்படுகிறது.

உணவகத்தொழில் போட்டி மிக்கதாக இருக்கிறது என்பவர், சந்தை தேவைக்கு ஏற்ப புதுப்பித்துக்கொண்டே இருக்க வேண்டும் என்கிறார்.

அப்பாவும், மகளும் பரஸ்பரம் ஒருவரிடம் இருந்து மற்றவர் கற்றுக்கொள்வதாக கூறுகின்றனர். கடின உழைப்பு, ஊழியர் நிர்வாகம், விற்பனை விஷயம் ஆகியவற்றை அப்பாவிடம் இருந்து கற்றுக்கொண்டதாக மகள் கூறுகிறார்.

ஆன்லைன் மார்க்கெட்டிங் உத்திக்கு மகளே காரணம் என்கிறார் நாராயண்.

“துவக்கத்தில் என் மகள் மார்க்கெட்டிங்கிற்கு என்று ரூ.2 லட்சம் கேட்ட போது எதற்காக என நினைத்தேன். ஆனால், இன்று பலரும் உணவகம் செல்லும் முன் ஜோமேட்டோ போன்றவற்றில் ஆய்வு செய்வதை அறிகிறேன்,” என்கிறார்.

எதிர்காலத் திட்டம்

முப்பதாண்டுகளுக்கு மேல் செயல்பட்டு வந்தாலும், ஷிவ் சாகம் மூன்று நகர்களுக்கு மேல் விரிவாக்கம் செய்யவில்லை.

“எங்கள் உணவகங்கள் சொந்த நிதியில் நடத்தப்படுகின்றன. பின்னணி செயல்பாட்டிற்கான குழுவையும் உருவாக்கிய பின்னரே விரிவாக்கம் செய்கிறோம்,” என்று கூறும் நிகிதா ஒப்பந்த அடிப்படையில் விரிவாக்கம் செய்யும் திட்டம் இல்லை என்கிறார்.

கோவிட்-19 தொழிலை பாதித்தது என்கிறார் நாராயண். 50 சதவீத பணியாளர்கள் சென்றுவிட்டனர் என்கிறார் அவர்.

ஆங்கிலத்தில்: பவ்யா கவுசல் | தமிழில்: சைபர் சிம்மன்