ஒரு தயாரிப்பில் துவங்கி இன்று 9 பிராண்ட்கள்: வெற்றி நிறுவனம் வளர்த்த கோவை தொழில்முனைவர்!
2016ல் ஒரு பிராண்டுடன் துவங்கப்பட்ட சாபேர்ட் இண்டெக் இன்று ஒன்பது பிராண்ட்கள் கொண்ட நிறுவனமாக வளர்ந்திருக்கிறது.
தமிழரசன் பிரவீன் பல ஆண்டுகளாக ஜெர்மனியின் ஜவுளி தொழில்நுட்ப வல்லுனராக பணியாற்றிக்கொண்டிருந்தார். 2015ல் இந்தியா திரும்பியவர், கோவையில் தனது குடும்ப நிறுவனமான தாம்சன் குழுமத்தில் இணைந்தார். அவரது தந்தை துவக்கிய இந்நிறுவனம், இரும்பு, எஃகு மற்று ஜவுளி உள்ளிட்ட துறைகளில் செயல்பட்டு வருகிறது.
ஜெர்மனியில் இருந்த போது, பிரவீன், பயன்படுத்திய பின் தூக்கி வீசக்கூடிய டாய்லெட் சீட்களுக்கான தேவை இருப்பதை உணர்ந்துள்ளார்.
“இந்தியாவிலும் டாய்லெட் சீட் கவர்களுக்கான தேவை இருப்பதை கவனித்தேன்,” என எஸ்.எம்.பி ஸ்டோரியிடம் பேசிய பிரவீன் கூறினார்.
இந்த தயாரிப்பில் அதிக நிறுவனங்கள் ஈடுபடாததால் இதில் இறங்குவது எனத் தீர்மானித்தார்.
2016ல், சாபர் இண்டெக் (Sauber Intech) எனும் தனி பிரிவின் கீழ் இந்திய சந்தைக்கான டாய்லெட் கவர்களை உற்பத்தி செய்யத்துவங்கினார். ஆலை மற்றும் கருவிகளில் ரூ.25 லட்சம் முதலீடு செய்தார். மேலும், வாகனங்களை வாடகைக்கு எடுக்கக் கடனும் வாங்கினார். மொத்தமாக ரூ.1.5 கோடி தேவைப்பட்டது.
இன்று கம்ஃபே கேர், கேரி கேர், பிரைமா டோனா, மில்லி பெல்லி, வில்பி, கோகோ எலிக்ஸர், கருக் முருக், ஜேட், டெஸி கேஸி ஆகிய 9 பிராண்ட்களை கொண்ட நுகர்வோர் நிறுவனமாக சாபர் வளர்ந்துள்ளது.
மேலும், டாய்லெட் கவர் மட்டும் தயாரித்த நிலையில் இருந்து, சோப், சலவை சோப், ஸ்னேக்ஸ், பாணங்கள், டிஷுயூ, எண்ணெய் ஆகிய பிரிவுகளில் 120க்கும் மேற்பட்ட பொருட்களை கொண்டிருக்கிறது.
போட்டி மிகுந்த சந்தை
எப்.எம்.சி.ஜி எனக் குறிப்பிடப்படும் வேகமாக நகரும் நுகர்வோர் பொருட்கள் துறை இந்தியாவில் நான்காவது பெரிய துறையாக இருக்கிறது. இந்தப் பிரிவில், வீட்டு உபயோக மற்றும் தனிநபர் நலன் பொருட்கள் 50 சதவீத விற்பனையை பூர்த்தி செய்கின்றன. எனினும், இந்த சந்தை, ஐடிசி, டாடா, இந்துஸ்தான் லீனர், நெஸ்லே, மற்றும் பல சிறிய நிறுவனங்கள் செயல்படும் போட்டிமிக்க துறையாக இருக்கிறது.
இந்த சந்தை போட்டிமிக்கதாக இருந்தாலும் வளர்ச்சி வாய்ப்புகளைக் கொண்டதாக இருக்கிறது என்கிறார் பிரவீன்.
பிரவீன் எட்டு மாதங்கள் சந்தையை ஆய்வு செய்து, முதல் பொருளை அறிமுகம் செய்தார். நாடு முழுவதும் பயணம் செய்து வலுவான விநியோகச் சங்கிலியை உருவாக்கியதாகக் கூறுகிறார்.
மேலும், தென்னகத்தில் நிறுவனம் 16 நகரங்களில் பல கிளை அலுவகங்களையும் அமைத்தது.
அமேசான் போன்ற இ-காமர்ஸ் மேடைகளில் இருந்தாலும் துவக்கம் முதல் நிறுவனம் கடைகள் விற்பனையிலும் கவனம் செலுத்தி வருகிறது.
விநியோக அமைப்பு
நவீன ரீடைல் கடைகளில் விற்பனை செய்வது நுகர்பொருள் சந்தையில் தனியிடம் பிடிப்பதற்கான முக்கிய அம்சம் என்கிறார் பிரவீன். விநியோக நிறுவனங்கள், உங்கள் தயாரிப்புகளை தங்கள் வலைப்பின்னல் கடைகள் முழுவதும் மற்றும் இலக்கு வாடிக்கையாளர்கள் வராத இடங்களிலும் முன்னிறுத்துவார்ககள்,” என்கிறார்.
”கடைகளை தேர்வு செய்வது முக்கியமானது, இல்லை எனில், பொருட்கள் விற்காமல் திரும்பி வருவது ஏமாற்றம் அளிக்கும்,” என்கிறார்.
இன்றும் கூட நிறுவனம், ஒரு கடையைத் தேர்வு செய்யும் முன், அதன் வாடிக்கையாளர் பரப்பு மற்றும் விற்பனை வாய்ப்புகளை ஆய்வு செய்கிறது. இது எங்கள் வளர்ச்சியின் முக்கிய அம்சமாக இருக்கிறது என்கிறார்.
சாபர் நிறுவனம் இந்தியா முழுவதும் மூன்று லட்சம் விற்பனை நிலையங்கள் மூலம் மற்றும் ஆன்லைன் தளங்களில் விற்பனை செய்கிறது. 90 சதவீத விற்பனை கடைகள் மூலம் வருவதாக பிரவீன் கூறுகிறார்.
பிராண்ட்கள்
நிறுவனம், கேரி கேர், மில்லி பெல்லி மற்றும் வில்பி ஆகிய பிராண்ட்களை சொந்தமாக உருவாக்கிய நிலையில், மற்ற பிராண்ட்கள் நிறுவனம் வாயிலாக விற்பனை செய்யும் மற்ற உற்பத்தியாளர்கள் உருவாக்கியவை.
“இவை பெரிய பிராண்ட்கள் சார்பில் செயல்பட்டு, அவர்களுக்காக ஒயிட் லேபில் பொருட்களைத் தயாரிப்பதால் அவர்கள் பொருட்களை நாங்கள் மார்க்கெட்டிங் செய்கிறோம்,” என்கிறார் பிரவீன்.
சாபர் நிறுவனம் 2016ல் டாய்லெட் சீட் கவர்களை உற்பத்தி செய்யத்துவங்கி, 2017ல் பயன்படுத்திய பின் தூக்கி வீசும் ரகத்தை அறிமுகம் செய்தது. 2018 முதல் மற்ற பிரிவுகளிலும் பொருட்களைத் தயாரிக்கத் துவங்கியது.
கோவிட் சவால்
2020 மார்ச் மாதம் எழுந்த கொரோனா அலை பல நிறுவனங்களை பாதித்தது போல, சாபர் நிறுவனத்தையும் பாதித்தது.
”ஆரம்ப மாதங்கள் மிகவும் கடினமாக இருந்தன. பல பொருட்கள் காலாவதியானதால் எரிக்க வேண்டியிருந்தது” என்கிறார் பிரவீன்.
பல வகையான பொருட்கள் இருந்ததால் தாக்குப்பிடிக்க முடிந்தது என்கிறார் பிரவீன். அதே நேரத்தில் நிறுவனம் சானிடைசர்களையும் விற்கத்துவங்கியது.
”நல்லவேளையாக கொரோனாவுக்கு முன் சானிடைசர் விற்பனையைத் துவக்கினோம். இதன் காரணமாக இந்தப் பிரிவில் வளர்ச்சி காண முடிந்தது” என்கிறார்.
புதிய பிரிவுகளில் பொருட்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டிருப்பதோடு, கிராமப்புறங்களில் உள்ள கடைகளையும் சென்றடைய நிறுவனம் விரும்புகிறது
ஆங்கிலத்தில்: பவ்யா கவுசல் | தமிழில்: சைபர் சிம்மன்