'நோ லேப்டாப், நோ மீட்டிங், 9 நாள் ஹாலிடே' - Meesho தனது ஊழியர்களுக்கு ஜாக்பாட் அறிவிப்பு!
இந்தியாவின் முன்னணி சமூக காமர்ஸ் நிறுவனமான மீஷோ, பண்டிகை கால விற்பனைக்கு பிறகு, ஊழியர்களுக்கு ஓய்வு அளிக்கும் வகையில் புதுமையான திட்டத்தை அறிவித்துள்ளது.
இந்தியாவின் முன்னணி சமூக காமர்ஸ் நிறுவனமான Meesho, பண்டிகை கால விற்பனைக்கு பிறகு, ஊழியர்களுக்கு ஓய்வு அளிக்கும் வகையில், புதுமையான திட்டத்தை அறிவித்துள்ளது.
ஊதியத்துடன் கொண்ட 9 நாட்கள் விடுமுறையை அளித்துள்ளதோடு, இந்த காலத்தில் லேப்டாப், கூட்டங்கள் இல்லாமல் முழு ஓய்வில் இருக்க நிறுவனம் ஊக்குவித்துள்ளது.
இது தொடர்பாக நிறுவனம், தொழில்முறை சமூக வலைப்பின்னல் தளத்தில் தனது ஊழியர்களுடன் பகிர்ந்து கொண்டுள்ள பதிவில், 'ரீசெட் அண்ட் ரீசார்ஜ்' (Reset and Recharge) எனும் திட்டத்தை அறிவித்துள்ளது.
அக்டோபர் 26 முதல் நவம்பர் வரை நான்காவது முறையாக நிறுவனம் தழுவிய ரீசெட் அண்ட் ரீசார்ஜ் ஓய்வு காலத்தை அணுக இருக்கிறோம். இந்த ஆண்டு நம்முடைய மெகா பிளாக்பஸ்டர் விற்பனைக்காக தீவிர கவனம் செலுத்திய நிலையில், நாம் ஓய்வை அனுபவிக்க வேண்டிய நேரம் இது, என அந்த பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த காலத்தில், ஊழியர்கள் நிறுவன பணியில் இருந்து முழுவதும் விலகி இருக்கவும், லேப்டாப்களை பயன்படுத்தாமல் இருக்க மற்றும் ஸ்லேக் செய்திகளுக்கு பதில் அளிக்காமல் இருக்க ஊக்குவிக்கப்படுகின்றனர், என அந்த பதிவு தெரிவிக்கிறது.
”வரவிருக்கும் ஆண்டிற்கு நம்மை துடிப்புடன் தயாராக்கிக் கொள்ள நம் உடலையும், உள்ளத்தையும் புதுப்பித்துக்கொள்ள இந்த பிரேக் உதவும். 9 நாட்களுக்கு, பணி சார்ந்த மெயில்கள், கூட்டங்கள், ஸ்லேக் செய்திகள் எதுவும் கிடையாது,” என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த பதிவு சமூக ஊடக பயனாளிகள் மத்தியில் பரவலான வரவேற்பை பெற்றுள்ளது. இது தொடர்பாக பலரும் கருத்து தெரிவித்து விவாதித்து வருகின்றனர்.
”ஊழியர்களுக்கு ஒரு வார விடுமுறை. மீஷோ ஒரு பச்சைக்கொடி மட்டும் அல்ல பெரும் பச்சை வனமாக திகழ்கிறது. கனவு நிறுவன இலக்குகள் என இதை குறிப்பிடலாம்,” என்று பயனாளி ஒருவர் தெரிவித்துள்ளார்.
”ஊழியர்களுக்கு 9 நாள் விடுப்பு அளிக்கும் இந்த முடிவை நிதானமாக பாராட்ட விரும்புகிறேன். இன்றைய வேகமான உலகில், முடிவில்லா பணி சுழற்சியில் சிக்கி, ஓய்வெடுக்க மறந்துவிடலாம். அனைத்து ஊழியர்களுக்கும் 9 நாள் விடுப்பு அளிக்கும் மீஷோவின் இந்த முடிவு, அதன் ஊழியர்களை மதிப்பதையும், அவர்கள் புத்துணர்ச்சி பெறும் அவசியத்தை உணர்ந்திருப்பதையும் உணர்த்துகிறது,” என இன்னொரு பயனாளி கூறியுள்ளார்.
நேர்நிறை பணி கலாச்சாரத்தை உருவாக்க இது உதவும் என்றும் கூறியுள்ளார்.
'தூங்கினால் பரிசு' - 100 நாட்கள்; 9 மணி நேரம் தூக்கம்: 10 லட்சம் வெல்ல மீண்டும் வாய்ப்பு!
Edited by Induja Raghunathan