மெலிஸ்ஸா, வயது 34: 193 உலக நாடுகள் சுற்றிய முதல் தெற்காசிய மங்கை!
193 உலக நாடுகளை தன்னந்தனியாக சொந்த செலவில் பயணித்து சாதித்த மெலிஸ்ஸா பகிர்ந்த அனுபவங்களும், அவர் ஏற்படுத்தக் கூடிய தாக்கங்களும்!
ஒரு புதிய நாட்டுக்குப் பயணம் செய்தால், உள்ளூர் மக்களிடம் வழி கேட்டுக்கொண்டே போவதுதானே நம்மில் பலரது வழக்கம். ஆனால், மெலிஸ்ஸா ராய் சற்றே வித்தியாசமானவர். ஒரு வழிப்போக்கராக யாரிடமெல்லாம் வழி கேட்கிறாரோ, அவர்கள் வீட்டிலேயே தங்கி, அவர்கள் பார்வையில் உலகம் எப்படிப்பட்டது என்பதை அறிந்து, அவர்களின் வாழ்வனுபவங்களை மனத்துக்குள் சுமந்தபடி அடுத்த நாட்டுக்குப் பயணம் செய்வார்.
மெல்லிஸா 30 வயதைத் தொடுவதற்குள்ளேயே ஏழு கண்டங்களிலும் உள்ள 100 நாடுகளுக்குப் பயணம் செய்து அசத்தியவர். அன்டார்டிகாவில் தனது தடத்தைப் பதித்தபோது, அவர் தனது 30-வது பிறந்தநாளை அங்கேயே கொண்டாடினார். அதன்பின் நான்கு ஆண்டுகள் கழித்து, இதோ இப்போது 'உலகின் ஒவ்வொரு நாட்டிலும் வலம்வந்த முதல் தெற்காசிய பெண்' என்ற பெருமையைப் பெற்றார். உலகம் சுற்றிய இந்த மங்கை தனது பயணத்தை கிறிஸ்துமஸுக்கு மறுநாள் நிறைவு செய்தது, வங்கதேசத்தில்.
இந்த 34 வயது உலகப் பயணியிடம் கவனம் ஈர்க்கும் தனித்துவங்களுள் ஒன்று, இவர் மற்ற இன்ஸ்டாகிராம் டிராவல் இன்ஃப்ளூயன்ஸர்கள், நவீன நாடோடிகள்போல் அல்லாமல், ஸ்பான்ஸர்களின் துணையின்றி தன்னுடைய சொந்தச் செலவிலேயே இந்தப் பயணத்தை மேற்கொண்டிருக்கிறார் என்பதுதான்.
மெலிஸ்ஸாவுக்கு சாத்தியமானது எப்படி?
கட்டுக்கோப்புக்கு அடங்கியிருத்தல், வெளியே வரமுடியாத போராட்டங்களுடன் தனது குழந்தைப் பருவத்தை 'வலி' மிகுந்ததாக விவரிக்கும் மெலிஸ்ஸா, சிறையில் இருந்து தப்பித்து சிறகடித்துப் பறக்கக் காத்திருந்ததாக குறிப்பிடுகிறார்.
"வீட்டுக்குள் முடங்கிக் கிடப்பதை ஒருபோதும் விரும்பவில்லை. வீட்டைவிட்டு வெளியே வந்து, மனம்போன போக்கில் போகவேண்டும் என்பதையே எப்போதும் விரும்பினேன்," என்கிறார்.
அரெஜ்ன்டினாவில் கல்லூரிப் படிப்பைப் படித்துக்கொண்டிருந்தபோதுதான், தனது பயணத்துக்கான பாதையைக் கண்டறிந்தார். மற்றவர்கள் எல்லாரும் தங்கள் விடுமுறையைக் கழிக்க தங்களது வீடுகளுக்குத் திரும்பிக்கொண்டிருந்தபோது, மெலிஸ்ஸா மட்டும் தென் அமெரிக்காவுக்கு தன்னந்தனியாகப் பயணிக்க கிளம்பினார்.
"நான் அப்படியே எல்லா இடங்களுக்கும் போய்க்கொண்டே இருந்தேன். பெரு, சிலி, பொலிவியா, பிரேசில், மச்சு பிச்சு... இப்படி ஒவ்வொரு இடத்துக்கும் பயணிக்கத் தொடங்கினேன்.”
இடையில், மிகப் பெரிய கப்பல் ஒன்றில் 1000-க்கும் மேற்பட்ட மாணவர்களுடன் நானும் உலகை வலம் வந்தேன். கடலிலேயே ஒரு செமஸ்டர் தேர்வும் எழுதினோம். நாங்கள் 100 நாள்களில் 12 நாடுகளுக்குச் சென்றோம். உலகின் ஏழு அதிசயங்களையும் கண்டு வியந்தோம்," என்று பயணம் மீதான ஆர்வம் ஆரம்பித்த பின்புலத்தை அடுக்குகிறார் மெலிஸ்ஸா.
பட்டப்படிப்பை முடித்த பிறகு, பங்கு வர்த்தகத்தில் முதலீட்டைத் தொடங்கியவர், அவ்வப்போது நிறுவனப் பணிகளிலும் ஈடுபட்டு, தனது சாகசப் பயணங்களுக்காக பணம் சேர்த்துக்கொண்டார். இவர் நடித்த விளம்பரப் படம் ஒன்றிலும் பயணம் சார்ந்த விஷயங்கள் இடம்பெற்றிருக்கும். அந்த விளம்பரத்தில் ஹாலிவுட் நடிகர் அலெக் பால்டுவின்னின் உதவியாளராக விமான நிலையத்துக்குச் சென்று ஒரு விமானத்தில் பயணிப்பார்.
"நான் மீண்டும் லாஸ் ஏஞ்செல்ஸ் செல்வேன். ஹாலிவுட்டில் பணியாற்றி விளம்பரப் படங்களில் நடிப்பேன். அப்படி சேர்க்கும் பணத்தில் பயணம் செல்வேன்," என்கிறார் கேஷுவாலாக.
மெலிஸ்ஸா தனது 29 வயதில் அடியெடுத்து வைக்கும்போது, கால் பதித்த நாடுகளின் எண்ணிக்கை 66-ஐ தொட்டது. அடுத்த பிறந்தநாளுக்குள் 100 நாடுகளை எட்ட வேண்டும் என்று தீர்மானித்தார்.
"நான் 30 வயதை நெருங்கும்போது எனக்கும் மிட்லைஃப் கிரைஸிஸ் வந்தது. திருமணம் ஆகவில்லை; குழந்தை இல்லை... சரி, 30 வயதைத் தொடுவதற்கு முன்பு எனக்காக ஏதாவது செய்தாக வேண்டும்? என்ன செய்யலாம்? என்று யோசிக்கும்போதுதான் அந்தத் தீப்பொறி என்னைப் பற்றிக்கொண்டது. பயணத்தைத் தொடங்கினேன்," என்கிறார் இன்னமும் அதே ஆர்வத்துடன்.
மெலிஸ்ஸா ஒவ்வொரு நாட்டுக்கும் பயணித்தார். ஒவ்வொரு நாட்டிலும் நான்கைந்து நாள்கள் வலம்வந்தார். பிரபல ஹோம்ஸ்டே நெட்வொர்க்கிங் வலைதளமான Couchsurfing மூலம் தான் பயணிக்கும் நாடுகளில் உள்ளூர்வாசிகளின் வீடுகளில் தங்கியபடி சுற்றுலா தளங்களில் சுற்றித் திரிந்தார்.
இந்த அனுபவம் குறித்துப் பகிரும் மெல்லிஸா, "உள்ளூர்க்காரர்களை நேரடியாக அணுக முடியும் என்பதால் Couchsurfing மிகவும் உதவியது. நான் செல்லும் நாடுகளில் வி.ஐ.பி வரவேற்பும் விருந்தும் கிடைத்தது. உள்ளூர்வாசிகளின் நட்பு கிடைப்பதால், அவர்கள் மூலமே சில நாள்கள் தங்கினாலும் முழு அனுபவத்தைப் பெற முடிந்தது.
அதாவது, ஒரு நாட்டில் இரண்டு மூன்று வாரங்கள் தங்கி கிடைக்கக் கூடிய முழுமையான பயண அனுபவத்தை என்னால் உள்ளூர் மக்களுடன் பழகியபடி மூன்று நாள்களிலேயே பெற முடிந்தது" என்று நெகிழ்கிறார்.
பனாமாவில் சான்றிதழ்பெற்ற 'டைவ்மாஸ்டர்' பெற்றது தனி அனுபவம். புரொஃபஷனல் அசோசியேஷன் ஆஃப் டைவிங் இன்ஸ்டரக்டர்ஸின் சான்றிதழைப் பெறுவதற்காக 60 டைவ்ஸ், முதலுதவி பயிற்சி என பல படிநிலைகளைக் கடந்திருக்கிறார் மெலிஸ்ஸா.
இதுபோன்ற சாகசங்கள் ஒருபக்கம் இருக்க, இன்னொரு பக்கம் உலகின் பதற்றம் நிறைந்த எல்லைப் பகுதி ஒன்றில் தைரியமாகப் பயணித்திருக்கிறார். கொலம்பியாவில் இருந்து வெனிசுலா வரை நடந்தே சென்றிருக்கிறார். வெனிசுலாவின் அரசியல் மற்றும் பொருளாதாரச் சிக்கல்களால் கடந்த சில ஆண்டுகளாக எல்லைப் பகுதியில் கடும் பதற்றம் நிலவி வந்ததும், இதையொட்டி பலமுறை அந்த எல்லையே மூடப்பட்டதும் இங்கே கவனிக்கத்தது.
இதன் தொடர்ச்சியாக பஹ்ரைன், குவைத், கத்தார் உள்ளிட்ட மத்திய கிழக்கு நாடுகள் அனைத்துக்குமே பயணித்தார். 2019 ஆம் ஆண்டு ஆப்கானிஸ்தானில் அடியெடுத்து வைத்தபோது வந்தது 34-வது பிறந்தநாள். அங்கேயே கொண்டாட்டம்.
மற்ற சுற்றுலாப் பயணிகளுக்கு எளிதில் கிட்டாத அனுபவம் தனக்குக் கிடைக்கும் விதத்தை உதாரணத்துடன் பகிர்ந்தபோது...
"பலரும் பார்க்காத இடங்களில் என்னால் எளிதில் கால்பதிக்க முடிந்தது. உள்ளூர்வாசிகளின் வீடுகளில் தங்குவதால், வழக்கமான சுற்றுலா பயணிகள் போகாத இடங்களுக்கும் என்னால் எளிதில் சென்று பார்க்க முடிந்தது. என் பயணத்தைத் தொடங்கி ஓர் ஆண்டு காலம் முடிந்தபோது, எனது 30-வது பிறந்தநாளை அன்டார்டிகாவில் கொண்டாடினேன். அன்டார்டிகாவை என்னால் மறக்கவே முடியாது. நாம் கனவில் காணும் காட்சிகளையெல்லாம் அங்கு நேரில் கண்டு வியக்க முடியும்," என்று சிலாகிக்கிறார்.
அதன்பிறகு 100-வது நாட்டுடன் அவர் நின்றுவிடவில்லை. அடுத்தடுத்து செல்லவேண்டிய நாடுகளைப் பட்டியலிட்டார். ஆப்பிரிக்க நாடுகளில் தீவிரப் பயணம் மேற்கொண்டார்.
இறுதியாக, 2019 ஆம் ஆண்டு டிசம்பர் 26ல் வங்கதேசத்தில் காலெடுத்து வைத்தார். அந்தத் தருணத்தில்தான் 'உலகின் அனைத்து நாடுகளுக்கும் பயணித்த முதல் தெற்காசிய மங்கை' என்ற சிறப்பிடத்தை வசப்படுத்தினார்.
"நான் பயணிக்கும் கடைசி நாடாக வங்கதேசத்தைத் தேர்ந்தெடுத்ததற்குக் காரணம் உண்டு. எல்லாம் எங்கு தொடங்கியதோ, அங்கேயே மீண்டும் வந்து நிற்கக் கூடிய வட்டத்தை உருவாக்குவதே நோக்கம். ஆம், என் மூதாதையர்களின் மண்தான் வங்கதேசம். என் சொந்த பூமி அது. என்னையும், என் பூர்விகத்தையும், என் பிறப்பையும், என் தந்தையையும், என் மூதாதையர்களையும் அடையாளப்படுத்துவதே வங்கதேசம்தான்," என்று தனது உலகம் சுற்றும் பயணத்தின் இறுதிநாள்கள் குறித்து ஃபேஸ்புக் பக்கத்தில் மெலிஸ்ஸா உணர்ச்சிமேலிட விவரித்திருக்கிறார்.
இந்தப் பயணம் முழுவதுமே தன் சொந்தப் பயணத்தை செலவிட்டதும் இதர பயணப் பிரியர்களிடம் இருந்து மெலிஸ்ஸாவை வேறுபடுத்தி காட்டுகிறது. பெரும்பாலான சாகசப் பயணிகளும் ஸ்பான்சர்ஷிப் அல்லது இலவச பயண டிக்கெட்டுகள், வசதிகளுடன் வலம்வந்து உலகைச் சுற்றி சாதிக்கும் நிலையில், ஸ்பான்சர்கள் யாருடைய உதவியும் இல்லாமல் உலகின் 193 நாடுகளுக்கும் பயணித்துத் திரும்பியிருக்கும் மெலிஸ்ஸாவின் சாதனை மெச்சத்தக்கது.
இதில் நாம் அனைவரும் கவனிக்க வேண்டிய இன்னொரு அம்சமும் இருக்கிறது. அதுதான் தன்னம்பிக்கையுடன் தன்னந்தனியாக பயணித்து, பயணம் மீது தீராக்காதல் கொண்ட அனைவருக்குமே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய அனுபவம். இந்த அரிதான அனுபவம் குறித்து மெலிஸ்ஸா பகிரந்தவற்றில் அனைவரும் கவனிக்கவேண்டிய முக்கியமான சில வரிகள் இவை:
"விண்ணிலிருந்து பார்க்கும்போது எல்லைக்கோடுகளும் வரைபடமும் இருக்கவே இருக்காது. ஆம், ஒரே கோள்.. ஒரே இனம். இந்தப் பூமியில் பெரும்பாலான மனிதர்களும் பேரன்புமிக்க நல்லவர்கள். எனவே, உலகின் எந்த மூலைக்குச் செல்லவும் நீங்கள் அச்சப்பட வேண்டாம் என்பது என்னுடைய அனுபவப்பூர்வ கருத்து. நீங்கள் எவ்வளவு தூரம் பயணிக்கிறீர்கள் என்பது விஷயம் இல்லை... உலகின் எல்லா பகுதியில் உள்ள மனிதர்களும் ஒரே மாதிரியானவர்கள் என்பதை நீங்கள் உணர்வது நிச்சயம்."
தொகுப்பு: ப்ரியன்