வீட்டிலே தையல் தொழில்; இன்று லாபமும் ஈட்டி பல பெண்களை தொழில் முனைவர் ஆக்கிய ரஞ்சனா!
புனேவின் கிராமத்தைச் சேர்ந்த ரஞ்சனா குல்ஷெட்டி தையல் வேலையில் ஆர்வம் இருந்ததால் படிப்படியாகப் பயிற்சி எடுத்துக்கொண்டு இன்று ஏற்றுமதியும் செய்யும் அளவிற்கு வளர்ச்சி அடைந்துள்ளார்.
ரஞ்சனா குல்ஷெட்டியின் குடும்பத்தில் அவரது கணவர் மட்டுமே வருவாய் ஈட்டி வந்தார். குடும்பச் செலவுகள் அதிகரித்தபோது கணவரின் சுமை அதிகரிப்பதை ரஞ்சனா கவனித்தார். அவருக்கு தையல் வேலையில் ஆர்வம் அதிகம். எனவே குடும்பத்தின் அதிகரித்து வரும் பணத் தேவைகள் பூர்த்தி செய்யப்படுவதில் தானும் பங்களிக்க விரும்பினார்.
தையல் வேலையில் முறையாக பயிற்சி பெற்றார். பின்னர் பிளவுஸ் தைக்க ஆரம்பித்தார். சொந்த தொழில் மூலம் வருவாய் ஈட்டத் தொடங்கினார். தனது வருமானத்தில் வீடு வாங்கினார். இரண்டு குழந்தைகளை படிக்கவைத்தார். இந்த நிலையை எட்ட பல்வேறு போராட்டங்களைக் கடந்து வந்துள்ளார்.
இவரது கணவருக்கும் குடும்பத்தினருக்கும் வேலைக்குச் செல்லும் பெண்களைப் பிடிக்காது. அவரது கணவர் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். தையல் இயந்திரத்தை எடுத்து வெளியே வீசியுள்ளார்.
ரஞ்சனாவின் தொழில்முனைவு முயற்சி அவரது வாழ்க்கையை முழுமையாக மாற்றிவிட்டது.
“இந்தத் தொழில் என்னுடைய திறமையை வெளிப்படுத்த வாய்ப்பளித்தது. அத்துடன் சவால் நிறைந்த சமூகத்தை நம்பிக்கையும் எதிர்கொள்ளவும் கற்றுக்கொடுத்தது,” என்று ஹெர்ஸ்டோரி இடம் தெரிவித்துள்ளார்.
பயணம்
ரஞ்சனா புனேவில் உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர். இவர் தனது பெரும்பாலான நேரத்தை வீட்டு வேலைகளிலேயே செலவிட்டு வந்தார். வருவாய் ஏதும் ஈட்டவில்லை. 1997ம் ஆண்டு வடிவமைப்பு மற்றும் தையல் பிரிவில் தொழில்முறையாக கற்க விரும்பினார். இதற்கு பணம் தேவைப்பட்டது.
உள்ளூரில் தொழில் புரிந்து வந்த மனிஷா வர்மா என்பவரிடம் வேலை செய்தார். சாக்லேட் கவர்களில் ஸ்டிக்கர் ஒட்டத் தொடங்கினார். ஒரு கிலோ சாக்லேட்டிற்கு 2 ரூபாய் என்கிற வீதத்தில் சம்பாதித்தார்.
இவரது முதல் சேமிப்புத் தொகை 500 ரூபாய் ஆனது. இதைக் கொண்டு பிளவுஸ் தைக்கக் கற்றுக்கொண்டார். இரண்டு மாத பயிற்சி எடுத்துக்கொண்டார். அதன் பிறகு பயிற்சியைத் தொடரமுடியாமல் போனது. புனேவின் வார்ஜே கிராமத்தில் உள்ள ஒரு டெய்லரிடம் வேலை செய்யத் தொடங்கினார். கைகளால் தைக்கவேண்டிய வேலைகள் இவருக்குக் கொடுக்கப்பட்டது. ஒவ்வொரு பிளவுஸ் தைப்பதற்கும் 1.5 ரூபாய் சம்பாதித்தார்.
“நான் என் முதலாளியிடம் தையல் கற்றுக்கொண்டு அதற்கு பதிலாக சம்பளம் இல்லாமல் வேலை செய்வதற்கு அனுமதி கேட்டேன். ஓராண்டிற்குப் பின்னர் 1999ம் ஆண்டு சொந்தமாக தையல் தொழிலைத் தொடங்கினேன்,” என்று நினைவுகூர்ந்தார்.
ஆரம்பத்தில் 5,000 ரூபாய் முதலீடு செய்தார். ஒரு தையல் இயந்திரத்துடன் வேலையைத் தொடங்கினார். ஒரு பிளவுஸ் தைப்பதற்கு 25 ரூபாய் கட்டணம் வசூலித்தார்.
பணப்பற்றாக்குறை காரணமாக தொழில் வளர்ச்சியடையவில்லை. 2015ம் ஆண்டு Amdocs நிறுவனத்தின் சமூக பொறுப்புணர்வு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக Mann Deshi Foundation பெண் தொழில்முனைவோர்களுக்கு ஆதரவளித்து வருவது குறித்து தெரிந்துகொண்டார். இது அவரது வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது.
இந்த முயற்சியின்கீழ் பெண் தொழில்முனைவோர்களுக்கு விதை நிதி வழங்கப்பட்டது. ரஞ்சனா 20,000 ரூபாய் கடன் பெற்றுக்கொண்டார். ஒன்றரை ஆண்டுகள் வரை மாதத் தவணையாக 1,300 ரூபாய் செலுத்த வேண்டியிருந்தது. கடன் பெறுவதற்கான செயல்முறையும் எளிதாகவே இருந்தது. ஆதார் மற்றும் பான் கார்டு மட்டுமே சமர்ப்பிக்கவேண்டியிருந்தது.
வணிக உத்திகள், இலக்கு நிர்ணயித்தல், டிஜிட்டல் மார்கெட்டிங், கட்டணங்கள் போன்ற பகுதிகளில் திறன் சார்ந்த பயிற்சி பெற்றார். தனது தொழில் முயற்சி வெற்றி பெற ஒருவர் மற்றவர்களுக்கு பரிந்துரை செய்தது சிறப்பாக பலனளித்தது என்கிறார்.
இன்று எட்டு தையல் இயந்திரங்கள் வைத்துள்ளார். மூன்று பெண்களை பணியமர்த்தி உள்ளார். ஒவ்வொரு மாதமும் 250 பிளவுஸ் விற்பனை செய்கிறார். அத்துடன் மற்ற உடைகள், மாஸ்க் போன்றவற்றையும் தயாரிக்கிறார். இவை தவிர லேப்டாப் பேக், செடி வைக்கும் தொட்டிகள், சுவர் அலங்காரப் பொருட்கள் என சணல் பொருட்களையும் விற்பனை செய்கிறார். இவை மஹாராஷ்டிராவில் விற்பனை செய்யப்படுகிறது. Mann Deshi முயற்சியின் உதவியுடன் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
மார்ச் மாதம் கொரோனா தொற்று பரவத் தொடங்கியது முதல் ரஞ்சனா Matoshree Vridh Ashram என்கிற முதியோர் இல்லத்திற்கும் பார்வை குறைபாடுள்ளவர்களுக்கும் மாஸ்க் தயாரிக்கத் தொடங்கினார். இந்த மாஸ்க் 5 ரூபாய் முதல் 25 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. இதுவரை சுமார் 80,000 மாஸ்க் விற்பனை செய்துள்ளார்.
சமீபத்தில் ரஞ்சனாவும் அவரது குழுவினரும் இணைந்து சணல் கொண்டு செடி வைக்க பயன்படுத்தப்படும் 500 தொட்டிகளை ஏற்றுமதி செய்துள்ளனர்.
கோவிட்-19 மற்றும் இதர சவால்கள்
கொரோனா வைரஸ் பரவலால் பெரும்பாலான சமூக மற்றும் பொருளாதார நடவடிக்கைகள் ஸ்தம்பித்துள்ள நிலையில் பல திருமணங்கள் ரத்து செய்யப்பட்டு, ஒத்திவைக்கப்படுவதால் ரஞ்சனாவின் விற்பனை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் பயிற்சி வகுப்புகளும் எடுக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.
ஆரம்பத்தில் சிறு தொழில் முனைவோர்களுடன் கட்டணம் தொடர்பான சவால்கள் இருந்துள்ளன. பலர் பொருட்களை வாங்கும்போது பணம் கொடுப்பதில்லை. பின்னர் வாங்கியதையே மறுத்து விட்டனர். தொழில்முனைவோராக இதுபோன்ற பல படிப்பினைகள் அவருக்குக் கிடைத்துள்ளன.
பெண்கள் சம்பாதிப்பதை பல குடும்பங்களில் போற்றுவதில்லை என்று வருத்தம் தெரிவித்தார். இவரது குடும்பத்திலும் இதே நிலையே இருந்துள்ளது.
“என் கணவர் ஆரம்பத்தில் இதை ஏற்கவில்லை. நான் பயிற்சி வகுப்புகளுக்கு செல்வதற்கு ஆதரவாக இருக்கவில்லை. அவருடன் சண்டையிட்டு நானே சொந்த முயற்சியில் தொடங்கினேன். பல முறை தையல் இயந்திரத்தை எடுத்து வெளியே வீசிவிட்டு என்னையும் வெளியில் தள்ளியுள்ளார். லட்சியம் நோக்கிய எனது பயணத்திற்கு இவை எதுவும் தடையாக இருக்கவில்லை,” என்றார்.
நிதி சுதந்திரம் அடையவேண்டும் என்கிற லட்சியத்தை நோக்கிய ரஞ்சனாவின் பத்தாண்டு கால பயணம் அவரது திறமையை சிறப்பாக வெளிக்கொணர்ந்துள்ளது.
ஆங்கில கட்டுரையாளர்: டென்சின் நார்சம் | தமிழில்: ஸ்ரீவித்யா