ராமநாடில் ‘மினி பஞ்சாப்’- களர் நிலங்களை ‘கலர்’ தோட்டங்கள் ஆக்கிய பஞ்சாபியர்கள்!

By parani tharan|12th Oct 2020
தங்கள் மாநிலத்தில் உழைப்புக்கேற்ற வருமானம் கிடைக்கவில்லை என தமிழகத்தில் ஓர் வறண்ட நிலப்பரப்பை வாங்கி, கருவேல மரங்களை அகற்றி, நிலத்தை பண்படுத்தி, இன்று பூக்களும், பழங்களும் பூத்துக்குழுங்கும் பூஞ்சோலையாக மாற்றியுள்ளனர் பஞ்சாபை சேர்ந்த விவசாயிகள்.
Clap Icon0 claps
  • +0
    Clap Icon
Share on
close
Clap Icon0 claps
  • +0
    Clap Icon
Share on
close
Share on
close

ஓய்வின்றி உழைப்பவர்கள், உழைப்பதற்கு அஞ்சாதவர்கள், கடின உழைப்பாளிகள் எனப் பெயர் பெற்ற தமிழர்கள் உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் தங்களின் தடம் பதித்து, தங்களின் உழைப்பால் வெற்றிக்கொடி நாட்டி தங்களின் பிறந்த மண்ணுக்கு பெருமை தேடித் தந்துள்ளனர். அதே போல் உழைப்பதில் நாங்களும் குறைந்தவர்கள் அல்ல என போட்டிபோட்டு வடமாநிலத்தவர்கள் பலர், தமிழகத்துக்கு படையெடுத்தவண்ணம் உள்ளனர்.


கூலி வேலை, கட்டிட வேலை என வடமாநிலத்தவர்கள் தமிழகத்தில் பணிபுரிந்து வந்த நிலையில், என்னதான் கடுமையாக உழைத்தாலும், வருமானம் போதவில்லை என்ற நிலையில் தமிழகத்தில் ஓர் வறண்ட நிலப்பரப்பை வாங்கி, அங்கிருந்த கருவேல மரங்களை அகற்றி, நிலத்தை பண்படுத்தி, இன்று பூக்களும், பழங்களும் பூத்துக்குலுங்கும் ஓர் பூஞ்சோலையாக அதை மாற்றியுள்ளனர் பஞ்சாபைச் சேர்ந்த புலம் பெயர்ந்த விவசாயிகள்.


ராமநாதபுரம் மாவட்டம், அபிராமம் அருகே உள்ள ஏ.தரைக்குடியிலிருந்து 3 கி.மீ., தொலைவில் உள்ள ஓர் குக்கிராமம் வல்லந்தை. இப்பகுதியில் உள்ள வறண்ட கருவேலங்காட்டை பஞ்சாபைச் சேர்ந்த ஓர் டிரஸ்ட் வாங்கியிருந்தது. இந்த டிரஸ்ட்டுக்குச் சொந்தமான அந்நிலத்தை பஞ்சாப், பீகார், உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களிலிருந்து வந்த சில குடும்பத்தினர் சேர்ந்து, கடுமையாக உழைத்து அந்த தரிசு நிலத்தை திருத்தி, பண்படுத்தி, பல்வேறு விதமான பழங்கள் விளையும் பழத் தோட்டத்தையே உருவாக்கி உள்ளனர்.

சிங்3

இதுகுறித்து இந்த டிரஸ்டின் உறுப்பினரான பஞ்சாபைச் சேர்ந்த தர்ஷன்சிங் (53 வயது) தெரிவித்ததாவது,

“பஞ்சாபில் நாங்கள் என்னதான் கடுமையாக உழைத்தாலும், உழைப்புக்கேற்ற வருமானம் கிடைக்கவில்லை. அதனால் குறைந்த முதலீட்டில், எங்கள் டிரஸ்ட் மூலம் வாங்கிய இந்த தரிசு நிலத்தில் கொய்யா, நெல்லி, பப்பாளி மற்றும் மாம்பழ வகைகளான ’பங்கனபள்ளி', ’ஹிமாம் பசந்த்', ’அல்போன்சா', போன்றவற்றை பயிரிட்டு வளர்க்கிறோம். மிகப் பெரிய அளவில் லாபம் கிடைக்கவில்லை என்றாலும், எங்கள் உழைப்புக்கேற்ற வருவாய் கிடைக்கிறது. மேலும், தரிசு நிலங்களாக இருந்தவற்றை இன்று வளமான மண்ணாக மாற்றிய திருப்தியுடன் மகிழ்ச்சியாகவே வாழ்கிறோம்,” என்கிறார்.


2007ல் வாங்கிய இடத்தில் 2009ஆம் ஆண்டு வரை சீரமைப்புப் பணிகளை மட்டுமே மேற்கொண்டு வந்துள்ளனர். சுமார் 25-க்கும் மேற்பட்ட இடங்களில் ஆழ்குழாய் கிணறுகளைத் தோண்டியபோது, ஓன்றிரண்டில் மட்டுமே தண்ணீர் வந்துள்ளது. இதனால் சொட்டு நீர் பாசன முறையைப் பயன்படுத்தி, முதலில் பலா, நெல்லி, கொய்யா, பப்பாளி போன்றவற்றை மட்டுமே விளைவித்துள்ளனர்.

Ramnad

நிலத்தை சரிசெய்யும் பஞ்சாப் விவசாயிகள் (பட உதவி: தி ஹிந்து)

மேலும், அருகில் உள்ள கிராமங்களான நகரத்தார்குறிச்சி, அச்சங்குளம், ஏ.தரைக்குடி, டி.புனவாசல் ஆகிய பகுதிகளிலும், பல நூறு ஏக்கர் பரப்பளவில் இவர்களது பகுதியைச் சேர்ந்த நண்பர்களும் உறவினர்களும் இதேபோல நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலங்களை பண்படுத்தி, பழத் தோட்டங்களை உருவாக்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


இந்த பழத்தோட்டங்களில் விளையும் தென்னை, மா, நாவல், பலா, நெல்லி, சப்போட்டா, கொய்யா, தர்பூசணி, வெள்ளரி, போன்றவற்றின் மூலம் இவர்களுக்கு ஓரளவுக்கு லாபம் கிடைத்து வருகிறது. இதனால் இவர்களின் உழைப்புக்கேற்ற வருமானம் கிடைத்தாலும், மாம்பழத்தில் மட்டும் லாபம் பார்ப்பது இவர்களுக்கு குதிரைக்கொம்பாகவே இருக்கிறது.

கடுமையான வெயில், தண்ணீர் பற்றாக்குறை போன்ற பல்வேறு காரணிகளால் பூக்கள் உதிர்வதும், மகசூல் குறைவால் விலை கூடுதலாக இருப்பதால் தித்திக்கும் மாம்பழ விற்பனை மட்டும் எப்போதும் இவர்களுக்கு கசப்பாகவே இருக்கிறது. ஆனாலும் தளராமல் தங்கள் பணியை மேற்கொண்டு வருகின்றனர்.
பஞ்சாப் விவசாயி

பட உதவி: The Better India

இங்கிருந்து உற்பத்தியாகும் மா, கொய்யா, வெள்ளரி, தர்பூசணி, பப்பாளி போன்ற பழங்களை கமுதி, அபிராமம் பகுதி வியாபாரிகளுக்கு விற்பனை செய்ததுபோக, மீதியை மதுரை, பெங்களூருவுக்கு மொத்தமாக வாகனங்களில் அனுப்புகிறார்கள்.

தற்போது 80 ஏக்கரில் நெல்லி, 70 ஏக்கரில் மா, 20 ஏக்கரில் கொய்யா, சில ஏக்கரில் பப்பாளி, எலுமிச்சை மற்றும் 1500 தென்னை மரங்கள் என எங்களின் விவசாயப் பணிகள் பரந்து விரிந்து நடைபெற்று வருகிறது. தமிழக அரசு மேலும் தரிசு நிலங்களை எங்களுக்கு வழங்கி, மானியம் உள்ளிட்ட சில உதவிகளை வழங்கினால் வறண்ட பிரதேசம் எனும் இப்பகுதியின் பெயரையே மாற்றி, வளமான பூமியாக மாற்றி விடுவோம் என நம்பிக்கையுடன் இந்தி கலந்த தமிழில் தெரிவிக்கிறார் தர்ஷன்சிங்.

கடின உழைப்பு மட்டும் இருந்தால்போதும், களர் நிலத்தையும் திருத்தி, கலர்கலராக கனிகள் காய்த்துக் குலுங்கும் பழத்தோட்டமாக மாற்றலாம் என உழைப்புக்கான ஓர் புதிய அத்தியாயத்தையே நமக்கு பஞ்சாபியர்கள் அறிமுகப்படுத்தியுள்ளனர் என்றே நாம் சொல்லவேண்டும்.

Get access to select LIVE keynotes and exhibits at TechSparks 2020. In the 11th edition of TechSparks, we bring you best from the startup world to help you scale & succeed. Join now! #TechSparksFromHome

Latest

Updates from around the world