‘ஐ மிஸ் யூ அம்மா’; விஆர் தொழில் நுட்பத்தால் இறந்த மகளை சந்தித்தத் தாய்!
4 ஆண்டுகளுக்கு முன் இறந்த மகளை தொழில்நுட்பம் மூலம் சந்தித்தது சரியா? வல்லுனர்கள் என்ன சொல்கிறார்கள்?
டெக்னாலஜி உலகை அடுத்த லெவலுக்கு நகர்த்திக் கொண்டிருக்கும் ஒரு தொழில்நுட்பம் விர்ச்சுவல் ரியாலிட்டி. இதன் மூலம், நீங்கள் இருந்த இடத்தில் இருந்து கொண்டே, இதுவரை கண்டிராத விஷயங்களை நேரில் பார்த்தது போன்ற விசி த்திரமான அனுபவத்தை பெற முடியும். உதாரணத்திற்கு, இருக்கும் இடத்திலிருந்து வானில் மிதப்பது போன்று ப்ரோகிராம் உருவாக்கினால், விர்ச்சுவல் ரியாலிட்டி கண்ணாடிகளை மாட்டிக் கொண்டு அந்த அனுபவத்தை உணர முடியும்.
இந்த வியக்கதகு VR தொழில்நுட்பத்தின் உதவியுடன் தென்கொரியாவில் ‘மீட்டிங் யூ’ என்ற டிவி நிகழ்ச்சியில் நான்கு ஆண்டுகளுக்கு முன் இறந்த மகளை அவளுடைய தாய் சந்தித்த நெகிழ்ச்சியான நிகழ்வு படமாக்கப்பட்டு ஒளிப்பரப்பட்டது.
கொரியாவைச் சேர்ந்த ஜாங் ஜி சாங் என்ற பெண்ணின் மகள் நயோன். அவர் கடந்த 2016ம் ஆண்டு ஒருவித அரிய நோயால் பாதிக்கப்பட்டு அவளுக்கு 7 வயதாக இருக்கும்போது உயிரிழந்துள்ளார். மகளின் திடீர் இழப்பை ஏற்றுக் கொள்ள முடியாத தாயுக்கு, மகளுக்கு இறுதியாக நிறைவான ஒரு குட் பை சொல்லும் வாய்ப்பை வழங்கியது கொரியாவை சேர்ந்த எம்.பி.சி தொலைகாட்சி நிறுவனம்.
இதற்காக, அந்நிறுவனம் கடந்த 8 மாதங்களாக சிறுமி நயோனின் உருவத்தைத் தத்ரூபமாக வடிவமைக்கும் பணியில் ஈடுப்பட்டது. சிறுமியின் உடல் வாகு, தலைமுடி, முகம், அவளது குரல் என அனைத்தையும் பார்த்துப் பார்த்து வடிவமைத்துள்ளனர்.
‘மீட்டிங் யூ’ என்ற தலைப்பில் வெளியாகிய 9 நிமிட ஆவணப்படம் ஒரு வாரத்தில் 13 மில்லியனுக்கும் அதிகமான முறை யூடியூப்பில் பார்க்கப்பட்டுள்ளது. புல் வெளிக்குள் பாறையின் பின் ஒளிந்திருக்கும் நயோன் அம்மா என்று அழைத்துக்கொண்டே ஓடிவருவதுடன் தொடங்குகிறது வீடியோ.
‘அம்மா, நீ எங்கே இருந்தாய்? நீங்க என்னை நினைக்குறீங்களா’ என்று சிறுமி கேட்கிறாள். அதற்கு ‘நான் ஒவ்வொருநாளும் உன்னை நினைக்கிறேன்’ என்று மகளை தொட முயன்று கொண்டே மனம் உடைந்து அழுகிறார் ஜாங் ஜி.
‘ஐ மிஸ்டு யூ லாட் மாம்’ என்று நயோன் கூற, அம்மாவும் உன்ன ரொம்ப மிஸ் பண்றேன் என தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்ட ஆறு வயதான செல்ல மகளின் கைகள் அவளது தலைமுடியை தொட்டுக் கொண்டே கூறுகையில் ஜாங் ஜி-யின் முகத்தில் கண்ணீர் வழிந்தோடி, பார்வையாளர்களது மனதை கணக்கச் செய்கிறது.
ஆனால் நிஜ உலகில், ஜாங் ஜி மகளின் அஸ்தியால் செய்த செயின் டாலரை அணிந்து ஒரு ஸ்டுடியோவில் பச்சை திரைக்கு முன்னால் நின்று, ஒரு விர்ச்சுவல் ரியாலிட்டி ஹெட்செட் மற்றும் தொடுஉணர் கையுறைகளை அணிந்து, கண்ணீர் வழிய உணர்ச்சிகளை வெளிப்படுத்திக் கொண்டிருந்தார்.
மகளுடன் கேக் வெட்டி பிறந்தாள் கொண்டாடி மகிழ்ந்த தாய்க்கு ஒரு பூங்காத்தை கொடுக்கும் நயோன், இறுதியாய் அம்மாவுக்காக எழுதிய கடிதத்தை படித்து காண்பித்துவிட்டு துயில் கொள்வதுடன் முடிவடைகிறது வீடியோ.
பல பார்வையாளர்கள் இம்முயற்சிக்கு பாராட்டுக்களைத் தெரிவித்து ஜாங்கிற்கு தங்களது அனுதாபத்தையும் ஆதரவையும் வழங்கி வருகின்றனர். பார்வையாளர்களில் ஒருவர் ‘என் அம்மா எதிர்பாராத விதமாக இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு காலமானார், மெய்நிகர் யதார்த்தத்தின் மூலம் நான் அவர்களை சந்திக்க விரும்புகிறேன்’ என்று ஏக்கத்துடன் தெரிவித்திருந்தார்.
ஆனால் ஊடகக் கட்டுரையாளர் பார்க் சாங்-ஹியூன் ஒருவரின் தனிப்பட்ட வலியை நியாயமற்ற முறையில் பயன்படுத்திக் கொள்ளும்செயல் இது என விமர்சித்துள்ளார்.
“இழப்பை எதிர்கொண்ட ஒரு தாய் தனது மறைந்த மகளை சந்திக்க விரும்புகிறார் என்பது புரிந்துகொள்ளத்தக்கது. நானும் அவ்வாறே செய்வேன். ஆனால், பார்வையாளர் மதிப்பீடுகளுக்காக ஒரு குழந்தையை இழந்த பாதிக்கப்பட்ட தாயை ஒளிபரப்பாளர் பயன்படுத்திக் கொண்டதில் சிக்கல் உள்ளது.
படப்பிடிப்பிற்கு முன்னர் தாய்க்கு ஆலோசனை வழங்கப்பட்டிருந்தால், எந்த மனநல மருத்துவர் இதை ஏற்றுக்கொள்வார் என்று எனக்குதெரியவில்லை.” என்று அவர் ஏஎஃப்பி நியூஸ் ஏஜென்சியிடம் தெரிவித்துள்ளார்.
லண்டனில் உள்ள டி மான்ட்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தின் கணினி, பொறியியல் மற்றும் ஊடகத் துணை டீன் டாக்டர் சாரா ஜோன்ஸ் கூறுகையில்,
“துக்கப்படுபவர்களைச் சந்திக்க தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி அவர்களை மீண்டும் உயிர்ப்பிக்க முடியும் என்பதற்காக, நாம் அதை முயற்சிக்க வேண்டும் என்பதில்லை. முக்கியக் கவலைகளில் ஒன்று இறந்தவரின் உரிமை. அவர்கள் டிஜிட்டல் முறையில் மீண்டும் உயிர்ப்பிக்க விரும்புகிறார்களா? விஆர் தொழில்நுட்பத்தால் அவர்கள் சொல்லும் சொற்களை யார் கட்டுப்படுத்துகிறார்கள்? அந்த உறவை நீங்கள் எவ்வளவு காலம் உயிரோடு வைத்திருக்க முடியும்? இது முடிந்து போனதை ஒருமுறை திரும்பிப் பார்ப்பதற்கான வாய்ப்பா அல்லது நீங்கள் அந்த உறவை நீடிக்குறீர்களா?’ என்று விவாதத்தை ஏற்படுத்தும் கேள்விகளை முன் வைத்துள்ளார்.
ஆயினும், தொழில்நுட்பம் ‘அன்புக்குரியவர்களை நினைவில் வைத்திருக்க புதிய வழி’ ஒன்றை வழங்கியுள்ளது என்று ஆதரவாளர்கள் கூறிவருகின்றனர். ஆவணப்படம் தயாரிப்பாளர்களும் இம்முயற்சி குடும்பத்தை ஆறுதல் படுத்துவதையே நோக்கமாகக் கொண்டோம் என்று விளக்கியுள்ளனர்.
நினைவின் அடையாளமாய் தனது மகளின் பெயரையும், பிறந்த தேதியும் கையில் பச்சை குத்தியுள்ள தாய் ஜாங் ஜி இம்முயற்சி அன்புக்குரியவர்களை இழந்து தவிப்பவர்களை ஆறுதல்படுத்தும் என்று நம்புவதாக கூறியுள்ளார்.
“இது மிகக் குறுகிய கால அனுபவமாக இருந்தபோதிலும், அந்த நேரத்தில் நான் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தேன்,” என்று ஜாங் ஜி அவரது வலைப்பதிவில் எழுதியுள்ளார்.
பட உதவி: dailymail