பெண்களுக்கு நடமாடும் ‘டாய்லெட் பஸ்’ சென்னையில் அறிமுகம் - இதில் என்ன ஸ்பெஷல்?
She toilet எனும் பாராட்டத்தக்க முன்னெடுப்பைத் தூய்மையாகப் பராமரிப்பு நம் அனைவரது பொறுப்பு என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னையில் கடைவீதி, மார்க்கெட், பூங்கா, கடற்கரை போன்ற பொது இடங்களில் எல்லாம் டாய்லெட் என்பது பெண்கள் சந்திக்கும் மிகப்பெரிய பிரச்சனையாக உள்ளது. பொது இடங்களில் இருக்கும் கழிப்பறைகளில் சுகாதாரக் குறைபாடு ஒருபுறம் என்றால், நிறைய இடங்களில் கழிப்பறை என்பதே கிடையாது என்பது தான் நிதர்சனமான உண்மை. தற்போது அதற்குத் தீர்வு காணும் வகையில் சென்னை மாநகராட்சி She toilet என்ற பெயரில் பிங்க் நிற மொபைல் டாய்லெட்டை அறிமுகப்படுத்தியுள்ளது.
கடந்த மாதம் செப்டம்பர் 20ம் தேதி தமிழக நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு, நகரில் உள்ள 15 மண்டலங்களுக்கு 15 கழிவறைகளை கொடியசைத்து தொடங்கி வைத்தார். அக்டோபர் 5 ஆம் தேதி வரை, மூன்று மண்டலங்களை உள்ளடக்கிய பகுதிகளுக்கு ஆறு பேருந்துகள் அனுப்பட்டுள்ளன.
முதற்கட்டமாக 15 மொபைல் ஷீ டாய்லெட்டுகள் ரூ.4.37 கோடியில் வாங்கப்பட்டுள்ளன. சென்னை மாநகராட்சியின் தலைமை பொறியாளரான மகேசன் கூறுகையில்,
“அடுத்த ஆறு மாதங்களில் இந்த பேருந்துகளின் பயன்பாட்டை நாங்கள் கவனிப்பதன் அடிப்படையில், இந்த பேருந்துகளை கூடுதல் கொள்முதல் செய்ய நாங்கள் திட்டமிடுவோம்," எனத் தெரிவித்துள்ளார்.
ஷீ டாய்லெட் சிறப்பம்சங்கள்:
- ஒவ்வொரு ஷீ டாய்லெட்டிலும் நான்கு க்யூபிகல்கள் உள்ளன. அதில் மூன்று இந்தியன் ஸ்டைல் மற்றொன்று வெஸ்டர்ன் ஸ்டைல் டாய்லெட்கள் ஆகும்.
- க்யூபிகல்களுக்கு இடையில் ஒரு பொதுவான வாஷ் பேசின் கட்டப்பட்டுள்ளது.
- மொபைல் கழிப்பறைகளில் கழிவுநீரை சேகரிக்க ஒரு தொட்டியும் உள்ளது, பின்னர், அது சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் வாரியத்தின் நகரம் முழுவதும் உள்ள நீரேற்று நிலையங்களில் பம்ப் செய்யப்படுகிறது.
- பேருந்துக்குள் சுகாதாரம் மற்றும் சுகாதார பொருட்களை விற்பனை செய்யும் வசதி செயல்பாட்டில் உள்ளது.
- பஸ்ஸின் இருபுறமும் நுழைவாயில்கள் உள்ளன.
- பேருந்தின் வெளிப்புறச் சுவரில் உள்ள எல்இடி திரையில் சுகாதாரம், கழிப்பறை பயன்பாடு பற்றிய விழிப்புணர்வு வீடியோக்கள் ஒளிபரப்பப்படுகின்றன.
- துர்நாற்றம் வீசாமல் இருக்க வாசனை ஸ்பிரே, முழு நேர தண்ணீர் வசதி மற்றும் தூய்மை உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து மகேசன் கூறுகையில் "பேருந்துகளில் தேவையான அனைத்து வசதிகளும் உள்ளன, மேலும் அவை பொதுமக்களிடையே பிரபலமடைந்து வருவதையும் காண்கிறோம்” என்றார்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்:
பொது இடங்களில் பெண்களுக்கான கழிப்பறை பிரச்சனைக்கு தீர்வு காணும் வகையில் சென்னை மாநகராட்சி மேற்கொண்டுள்ள இந்த முன்னெடுப்பை பாராட்டியுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், இதனை தூய்மையாக பராமரிப்பது அனைவரது பொறுப்பு என வலியுறுத்தியுள்ளார்.
She toilet எனும் பாராட்டத்தக்க முன்னெடுப்பைத் தூய்மையாகப் பராமரிப்பது நம் அனைவரது பொறுப்பு என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.