மோடி பாராட்டிய மதுரை சலூன் கடைக்காரர் மோகன் யார்?
‘மன் கி பாத்’ நிகழ்ச்சியில், தமிழகத்தைச் சேர்ந்த மோகனின் உன்னத சேவைப் பற்றி குறிப்பிட்டு பாராட்டினார் மோடி. அப்படி மோகன் என்ன செய்தார்?
நேற்று ‘மன் கி பாத்’ அதாவது மனதின் குரல் ரேடியோ நிகழ்ச்சியில் மக்களுடன் உரையாற்றிய பிரதமர் மோடி, கொரோனா வைரஸ் தொற்று பற்றியும் இந்தியாவில் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்களின் பணிகள் பற்றியும் பேசினார். அதோடு, தங்கள் சொந்த நலனைத் தாண்டி மக்களுக்கு சேவைப் புரிந்தவர்களும் கோவிட் வாரியர்சுக்கு இணையானவர்கள் என குறிப்பிட்டார்.
நண்பர்களே, நம்முடைய மருத்துவர்கள், செவிலியர்கள், பிற மருத்துவத்துறைப் பணியாளர்கள், காவல்துறையினர், ஊடகத்தைச் சேர்ந்த நண்பர்கள் போன்ற இவர்கள் அனைவரும் புரிந்துவரும் சேவை பற்றி நான் பலமுறை பேசியிருக்கிறேன். மனதில் குரலிலும்கூட நான் அவர்களைப் பாராட்டியிருக்கிறேன். இப்படி சேவைபுரிவதில் தங்களுடைய அனைத்தையும் அர்ப்பணிப்பவர்களின் எண்ணிக்கை கணக்கிலடங்கா, என்றார் மோடி.
இவ்வாறு பேசிய பிரதமர், நம் தமிழகத்தைச் சேர்ந்த மோகன் என்பவரை பற்றியும் அவரின் உன்னத சேவைப் பற்றியும் ‘மன் கி’ பாத்’ நிகழ்ச்சியில் குறிப்பிட்டு பாராட்டினார்.
மோகன் யார்? அவர் அப்படி என்ன செய்தார்?
தமிழ்நாட்டைச் சேர்ந்த சி.மோகன், முடிதிருத்தகம் ஒன்றை மதுரையில் நடத்தி வருகிறார். இவர் தனது மகளின் படிப்புக்கு என சேமித்து வைத்திருந்த 5 லட்ச ரூபாய் பணத்தை வறுமையில் வாடும் தன்னுடைய வாடிக்கையாளர்கள் குடும்பத்திற்கும், அவர்கள் வசிக்கும் பகுதி மக்களுக்கும் தானாமாக செலவழித்தார்.
“தன்னிடம் இருந்த 5 லட்ச ரூபாய் சேமிப்புப் பணத்தை, கொரோனா தாக்கத்தால் வருவாய் இன்றி தவிக்கும் தன் பகுதி மக்களுக்கு 5 கிலோ அரிசி, மளிகைப் பொருட்கள், காய்கறிகள் வாங்கிக் கொடுத்து, உதவினார்.
கொரோனா ஊரடங்கால் அனைத்து தொழில்களும் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில் அதிகமான பாதிப்பை சந்தித்தவர்கள் சலூன் கடைக்காரர்கள் மற்றும் அதில் பணிபுரியும் முடிதிருத்தும் தொழிலாளர்கள். கடந்த 2 மாதமாக கடையைத் திறக்கமுடியாமல் இவர்கள் தவித்தனர்.
இதுகுறித்து பி.மோகன் நாளிதழ் ஒன்றுக்கு பேட்டி அளிக்கையில்,
‘‘என்னுடைய சொந்த ஊர் ராமநாதபுரம் மாவட்டம். 20 ஆண்டுகளுக்கு முன் பிழைக்க மதுரை வந்தேன். இங்கே சலூன் தொழில் செய்து வந்தேன். என்னை வாழ வைத்தது, இந்த ஊரும், இந்த ஊர் மக்களும்தான். அவர்களுக்கு இந்த இக்கட்டான நேரத்தில் உதவுவது மகிழ்ச்சியாக உள்ளது,” என்றார்.
தனது மகள் நேத்ராவும் இதற்குக் காரணம் என்றார். 9-ம் வகுப்பு படிக்கும் அவரது மேல் படிப்பிற்காக சலூன் கடை வருமானத்தில் சேமித்துவைத்த 5 லட்சம் ரூபாய் வங்கியில் போட்டு வைத்திருந்தார்.
கொரோனா’வால் மோகன் தன் கடையை மூடியதால் வருமானம் இல்லாவிட்டாலும் தன் அன்றாட வாழ்வாதாரத்திற்கு பிரச்சனையின்றி சேமிப்பை வைத்து நாட்களை கழித்தார். ஆனால் அவரைச் சுற்றி இருந்த பகுதி ஏழை, எளிய மக்கள் பலர், அன்றாடம் வேலைக்குப் போய் பணம் ஈட்டினால் தான் வீட்டில் சமைக்க முடியும்.
“எங்கள் கடைக்கு முடி வெட்ட வரும் வாடிக்கையாளர்கள் பலரின் குடும்பங்களும் அன்றாட சாப்பாட்டிற்கே மிகவும் சிரமப்படுகிறார்கள். சிலர் என் வீட்டிற்கு வந்து கஷ்டத்தை பகிர்ந்தனர். இதைப்பார்த்த என் மகள் தான், படிப்புச் செலவை பிறகு பார்த்துக் கொள்ளலாம், அந்தப் பணத்தை சாப்பாட்டுக்கு வழியில்லாதவர்களுக்கு உதவுங்கள்,” என்றார் மோகன்.
உடனே வங்கியில் இருந்து தன் சேமிப்புப் பணம் 5 லட்சம் ரூபாயை எடுத்து, தன் பகுதியில் கஷ்டப்படுகிற குடும்பத்திற்கும், வாடிக்கையாளர்களுக்கும் 5 கிலோஅரிசி, ஒரு கிலோ காய்கறி, மளிகைப்பொருட்கள், எண்ணெய் போன்றவற்றை கொடுத்து உதவினார்.
இதுவரை 650 குடும்பங்களுக்கு உதவியுள்ளோம். 5 லட்சமும் காலியாகவிட்டது. தற்போது எனது மனைவியின் நகையை அடகு வைத்து, அந்த பணத்தில் மீதமுள்ள இன்னும் பலருக்கு உதவ உள்ளேன்,’’ என்றார் மோகன்.
தன் குடும்பத்தைத் தாண்டி மக்களின் நல்வாழ்வுப் பற்றி சிந்தித்து சிக்கலான சமயத்தில் உதவிடும் மோகன் மற்றும் அவர் குடும்பத்தை பிரதமர் மோடி பாராட்டியது, அவரைப் போன்றோருக்கு ஊக்கமாக இருக்கும்.