மோடி கேபினட்டில் புதிதாய் இணைந்த 7 பெண் அமைச்சர்கள்: யார் இவர்கள்?
பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. இதில் 11 பெண்கள் இடம்பெற்றுள்ளனர்.
கடந்த 2019ஆம் ஆண்டு லோக்சபா தேர்தலில் வெற்றி பெற்று, மீண்டும் மோடி பிரதமராக பதவியேற்றபோது, அவரது அமைச்சரவையில் 53 அமைச்சர்கள் இடம் பெற்றிருந்தனர். இரண்டு ஆண்டுகளாக இந்த அமைச்சரவையில் மாற்றம் எதுவும் இல்லாமல் இருந்து வந்தது.
இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலையின் தாக்கம் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து மீண்டும் இயல்புநிலை திரும்பி வருகிறது. இம்முறை கொரோனா பரவலை பாஜக சரியாக சமாளிக்கவில்லை என்ற குற்றச்சாட்டு மத்திய அரசு மீது விமர்சனமாக வைக்கப்பட்டது. இதனால் அமைச்சரவையில் மாற்றம் செய்யப்படும் எனவும் எதிர்பார்க்கப்பட்டது.
அதன் தொடர்ச்சியாக சமூக நீதித் துறை அமைச்சராக இருந்த தாவர்சந்த் கெலாட் நேற்று முன்தினம் கர்நாடகா ஆளுநராக நியமிக்கப்பட்டார். நேற்று மத்திய அமைச்சர்கள் ஹர்ஷ் வர்தன், பாபுல் சுப்ரியோ உள்ளிட்ட 14 பேர் ராஜினாமா செய்தனர். இதனால் மோடியின் புதிய அமைச்சரவை பற்றிய எதிர்பார்ப்பு அதிகரித்தது.
இந்நிலையில், மத்திய அமைச்சர்களாகப் புதிதாகப் பதவியேற்க இருக்கும் 43 பேரின் பட்டியல் நேற்று வெளியானது. அதில், 13 பேர் வக்கீல்கள், 6 மருத்துவர்கள், 5 பொறியாளர்கள், 7 குடிமைப் பணி அதிகாரிகள் ஆவர்.
மேலும், மத்திய அமைச்சரவையில் இம்முறை மொத்தம் 11 பெண்களுக்கு அமைச்சர் பதவி அளிக்கப்பட்டுள்ளது. முன்னதாக மத்திய அமைச்சரவையில், கேபினட் அமைச்சர்களாக நிர்மலா சீதாராமன், ஸ்மிருதி இரானி, இணை அமைச்சர்களாக, சாத்வி நிரஞ்சன் ஜோதி, ரேணுகா சிங் என நான்கு பெண் அமைச்சர்கள் உள்ளனர்.
இந்நிலையில், நேற்று நடந்த மத்திய அமைச்சரவை விரிவாக்கத்தில், பாஜகவைச் சேர்ந்த மீனாட்சி லேகி, ஷோபா கரன்ட்லஜே, அனுப்பிரியா சிங் படேல், தர்ஷனா விக்ரம் ஜர்தோஷ், அன்னப்பூர்ணா தேவி, பிரதிமா பவுமிக், டாக்டர் பாரதி பிரவீன் பவார் மற்றும் அப்னா தளத்தை சேர்ந்த அனுப்பிரியா சிங் படேல் என, ஏழு பெண் அமைச்சர்கள் பதவியேற்றனர்.
இதுவரை இல்லாத வகையில் தமது அமைச்சரவையில் பெண்களுக்கும் அதிக முக்கியத்துவத்தை மோடி கொடுத்திருக்கிறார். மத்திய அமைச்சரவையில் இடம் பெற்றுள்ள 11 பெண் அமைச்சர்களின் புதியவர்களான 7 அமைச்சர்களின் விபரமாவது:
ஷோபா கரண்ட்லஜே
54 வயதாகும் ஷோபா, கர்நாடகா மாநிலத்தின் உடுப்பி சிக்மகலூர் தொகுதி மக்களவை உறுப்பினர் ஆவார். முதல்வர் எடியூரப்பாவின் நம்பிக்கைக்கு உரியவராகக் கருதப்படும் இவர், சிக்மகளூர் தொகுதியில் பாஜ கட்சியின் அடித்தளத்தை வலுப்படுத்தியதில் முக்கிய பங்காற்றியவர். தற்போது இரண்டாவது முறையாக எம்.பி ஆக பதவி வகிக்கிறார்.
கர்நாடகா அமைச்சரவையில் இவர் கேபினட் அமைச்சராக இருந்திருக்கிறார். அந்த மாநிலத்தில் ஒரு முறை எம்எல்ஏ, எம்எல்சி பதவியை வகித்திருக்கிறார். மாநில உணவு, கிராமப்புற வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் அமைச்சராகவும் இருந்துள்ளார். 30 ஆண்டுகால அரசியல் அனுபவம் உடையவர். புதிய அமைச்சரவையில் வேளாண் துறை மற்றும் விவசாயிகள் நலன் துறை இணை அமைச்சராகி இருக்கிறார்.
மீனாக்ஷி லேகி
54 வயதாகும் மீனாக்ஷி, புதுடெல்லி மக்களவைத் தொகுதியில் இருந்து இரண்டாவது முறை உறுப்பினராக தேர்வானார். இவர் பாஜகவின் செய்தித்தொடர்பாளராக பணியாற்றினார். உச்ச நீதிமன்ற வழக்கறிஞராகவும் சமூக சேவகராகவும் அறியப்பட்டவர். பாஜக தலைவர்களில் மிகவும் பிரபலமானவரான இவர், ஏற்கனவே மத்திய அமைச்சரவையில் இணைக்கப்பட்டிருக்க வேண்டிய நபர்களில் ஒருவராக மக்களால் எதிர்பார்க்கப்பட்டவர். புதிய அமைச்சரவையில் வெளியுறவுத்துறை மற்றும் கலாச்சாரத் துறை இணை அமைச்சராக மீனாக்ஷிக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
தர்ஷனா விக்ரம் ஜார்டோஷ்
குஜராத்தைச் சேர்ந்தவர் 60 வயதான தர்ஷனா விக்ரம் ஜார்டோஷ், இவர் தற்போது மத்திய அமைச்சரவையில் இணைக்கப்பட்டுள்ளது, வரவிருக்கும் குஜராத் மாநில சட்டசபை தேர்தலில், பா.ஜ., கட்சிக்கு பலனளிக்கும் எனக் கூறப்படுகிறது. 40 ஆண்டுகாலமாக பொது வாழ்க்கையில் உள்ளார். இம்முறை அவருக்கு ஜவுளித்துறை மற்றும் ரயில்வே துறை இணை அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது.
அன்னபூர்ண தேவி
ஜார்கண்டைச் சேர்ந்த அன்னபூர்ண தேவி, அம்மாநில பெண்கள் மற்றும் குழந்தைகள் அமைச்சராக பதவி வகித்தவர். ஜார்கண்ட் மற்றும் பீகாரில் நான்கு முறை எம் எல் ஏவாக இருந்தவர். தனது 30 வயதிலேயே பீஹார் அரசின் சுரங்கத் துறை அமைச்சராக இருந்தவர். முதல்முறையாக லோக்சபாவுக்கு தேர்வாகி உள்ள இவர், மத்திய அமைச்சரவையில் இணைக்கப்பட்டுள்ளார். புதிய அமைச்சரவையில் கல்வித்துறை இணை அமைச்சராகி இருக்கிறார்.
பாரதி பிரவின் பவார்
மஹாராஷ்டிராவைச் சேர்ந்த பாரதி மருத்துவர் ஆவார். மருத்துவப் பயிற்சியாளரான இவர் நாசிக் மாவட்டத்தில் ஊட்டச்சத்து குறைபாடு, குடிநீர் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு பாடுபட்டவர். தேசியவாத காங்கிரசில் இருந்து பாஜகவில் இணைந்தவர். நாசிக் மாவட்டத்தில் உள்ள, எஸ்.டி., தனித் தொகுதியான, டின்டோரியில் போட்டியிட்டு முதல்முறையாக வென்றவர். சுகாதாரம் மற்றும் குடும்பநலன் இணை அமைச்சராக இம்முறை இவருக்கு பதவி அளிக்கப்பட்டுள்ளது.
பிரதிமா பவுமிக்
வட கிழக்கு மாநிலமான மேற்கு திரிபுரா தொகுதியில் இருந்து, கடந்த, 2019ல் தேர்வானவர் பிரதிமா. அம்மாநில பொதுச் செயலாளர் ஆவார். லோக்சபா எம்.பி. பதவியின் முதல் மாத சம்பளத்தை அசாம் வெள்ள நிவாரண நிதிக்கு அளித்து பாராட்டுகளைப் பெற்றவர். திரிபுராவில் இருந்து மத்திய அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள முதல் நபர் என்ற பெருமையை தற்போது பெற்றுள்ளார். புதிய அமைச்சரவையில் சமூகநீதி மற்றும் மேம்பாடு துறையின் இணை அமைச்சராகி இருக்கிறார்.
அனுப்ரியா சிங் படேல்
40 வயதாகும் இவர், உத்தர பிரதேசத்தின் மிர்ஸாபூர் தொகுதியைச் சேர்ந்த மக்களவை உறுப்பினர். இவர், இரண்டாவது முறை எம்.பி ஆக பதவி வகிக்கிறார். மோதியின் முதலாவது அமைச்சரவையில் சுகாதாரத்துறை இணை அமைச்சராக இவர் பதவி வகித்தார். உத்தர பிரதேச மாநில சட்டசபையில் எம்எல்ஏ ஆகவும் இருந்துள்ளார். இம்முறை அவருக்கு வர்த்தகம் மற்றும் தொழில்துறை இணை அமைச்சராக பதவியேற்றுள்ளார்.
பிரதமர் மோடியின் முதல் ஆட்சியில், ஒன்பது பெண் அமைச்சர்கள் இருந்தனர். இதில் ஆறு பேர் கேபினட் அமைச்சர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.