Brands
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
ADVERTISEMENT
Advertise with us

‘விதை என் தொழில் மட்டுமல்ல; என் தன்னம்பிக்கை விருட்சத்துக்கான விதை’ - மாம்ப்ரூனர் ஹரிணி துரைராஜ்!

பெங்களூருவில் வசித்து வரும் ஹரிணி துரைராஜ் தரமான பொடி வகைகளை பாரம்பரிய முறையில் தயாரித்து விற்பனை செய்து வருகிறார்.

‘விதை என் தொழில் மட்டுமல்ல; என் தன்னம்பிக்கை விருட்சத்துக்கான விதை’ -  மாம்ப்ரூனர் ஹரிணி துரைராஜ்!

Wednesday October 13, 2021 , 6 min Read

நான் வெக்கற சாம்பார் நல்லாயில்லைன்னு சொல்ற என் குழந்தை பக்கத்து வீட்டு ரமா வெக்கற சாம்பாரை டம்ளர்ல வாங்கிக் குடிக்கறாளே? என்ன செய்யறது? எப்படி சுவையான சாம்பார் செய்யறது ? ரமா எப்படி இவ்ளோ நல்லா சாம்பார் வைக்கிறார் ?


சரி, இன்னிக்கு எப்படியாவது ரமாகிட்ட ரெசிபி கேட்டுடவேண்டியதுதான் என்கிற முடிவுடன் நோட்புக், பேனா சகிதம் காலிங்பெல்லை அழுத்தினேன்.

”ரமா, நீ சாம்பார் எப்படி பண்றன்னு கொஞ்சம் சொல்லேன்?” என்று கேட்டதும் புன்னகையுடன் ரெசிபியைப் பகிர்ந்துகொண்டார். குறிப்பெடுத்துக்கொண்ட எனக்கு ஒரே ஆச்சரியம். ஏன் என்கிறீர்களா?

சொன்னால் நம்ப மாட்டீர்கள். அச்சு அசல் ரமா சொன்ன அதே முறையில்தான் நானும் சாம்பார் தயாரிக்கிறேன். பிறகு ஏன் என் சாம்பாரில் நிறம், மணம், சுவை எதுவுமே இருப்பதில்லை? ஒருவேளை ரமா ஏதாவது சீக்ரெட் இன்கிரியண்டை சொல்லாமல் மறைத்துவிட்டாரோ? இதில் என்ன மேஜிக் இருக்கக்கூடும்?


ரமாவுடன் உரையாடலைத் தொடர்ந்தேன். அப்போதுதான் ஒரு விஷயம் புலப்பட்டது. என்னுடைய சாம்பாருக்கும் ரமாவின் சாம்பாருக்கும் ஒரே வித்தியாசம்தான். அதுதான் சாம்பார்பொடி. நான் கடையில் வாங்கும் சாம்பார் பொடியை சேர்த்து சாம்பார் தயாரிக்கிறேன். ரமா தரமான மூலப்பொருட்களைக் கடையில் வாங்கி அவரே சாம்பார் பொடி தயாரித்து சாம்பாரில் சேர்க்கிறார்.


பொடி வகைகள் நாம் சமைக்கும் உணவில் சுவையைக் கூட்டுகின்றன. ஆனால் இந்த பொடி வகைகளை வீட்டில் தயாரிக்க நேரம் இல்லை என்பதுதானே முக்கியப் பிரச்சனை? கவலையை விடுங்கள்.


சாம்பார், ரசம் தயாரிப்பதாக இருந்தாலும், பிரியாணி சமைப்பதாக இருந்தாலும் ஹரிணி கொடுக்கும் பொடி வகைகளை சேர்த்து சமைத்துப்பாருங்கள். பிறகு உங்கள் சமையலை எல்லோரும் ஆஹா, ஓஹோ என பாராட்டுவார்கள். இனி ஹரிணி துரைராஜ் பற்றியும் அவரது ‘விதை’ பிராண்ட் பற்றியும் பார்ப்போம்.

விதை ஹரிணி

ஊட்டி அருகில் உள்ள கூடலூரில் பிறந்தவர் ஹரிணி. பள்ளிப்படிப்பை இங்கு முடித்துள்ளார். படிப்பில் சுட்டி. மருத்துவம் இவரது கனவாக இருந்தபோதும் மருத்துவப் படிப்பில் சேர முடியாமல் போனது.


கோயமுத்தூர் ராமகிருஷ்ணா கல்லூரியில் மைக்ரோபயலாஜி பிரிவில் இளநிலை பட்டம் முடித்தார். அதே கல்லூரியில் முதுகலைப் படிப்பிற்கு பயோஇன்ஃபர்மாடிக்ஸ் தேர்வு செய்து சேர்ந்துள்ளார். கோல்ட் மெடலிஸ்ட். யுனிவர்சிட்டி ரேங்க் ஹோல்டர்.


கல்லூரியில் பயோடெக்னாலஜி பிரிவில் மூன்று ஆண்டுகள் வரை பிராஜெக்ட் அசோசியேட்டாக பணியாற்றினார். இந்த சமயத்தில் பிஎச்டி படிப்பையும் மேற்கொண்டார்.

துரதிர்ஷ்டவசமாக இவரது கைட் ஒரு விபத்தில் உயிரிழந்துவிட்டார். பிஎச்டி படிப்பு தற்காலிகமாக ப்ரேக் ஆனது.


காதல் திருமணம் செய்துகொண்ட ஹரிணி, சென்னைக்கு மாற்றலாகியுள்ளார். சென்னைக்கு வந்த பிறகு பிஎச்டி படிப்பைத் தொடர நினைத்தார். ஃப்ரீலான்சிங் வாய்ப்பு கிடைக்கவே உள்ளடக்கம் எழுதும் வேலையில் சில நாட்கள் ஈடுபட்டிருந்தார்.


தனியார் பள்ளியில் சுமார் இரண்டாண்டுகள் வரை ஆசிரியையாக வேலை பார்த்துள்ளார். பிஎச்டி படிப்பை முடிக்க நினைத்த ஹரிணிக்கு உடல்நலப் பிரச்சனை ஏற்பட்டதால் முடிக்க முடியாமல் போனது.

மிகப்பெரிய கேள்விக்குறி

ஹரிணிக்கு குழந்தை பிறந்தது. குழந்தை வளர்ப்பில் கவனம் செலுத்தி வந்தார்.

”நம்ம குழந்தைக்கு எல்லாமே பெஸ்டா கொடுக்கணும்னுதானே நாம எல்லாரும் நினைப்போம்? நானும் அப்படித்தான் யோசிச்சேன். குழந்தையை ஹெல்தியா வளர்க்க ஆசைப்பட்டேன். ஆனா சுத்தி பார்த்தா கலப்படம், ரசாயனம் இப்படி கைக்கு கிடைக்கற எல்லாமே அன்ஹெல்தியா இருக்கறதை கவனிச்சேன்,” என்கிறார் ஹரிணி.

குழந்தைக்கு மிகவும் கவனமாக வீட்டிலேயே அனைத்தையும் தரமான முறையில் தயாரித்துக் கொடுக்க ஆரம்பித்துள்ளார். சிறு தானியங்களை உணவில் சேர்த்துள்ளார். சத்து மாவு கஞ்சி, பழங்கள், வேகவைத்த சுண்டல், முளைகட்டிய பயிர் போன்றவற்றை குழந்தைக்கு கொடுத்துள்ளார்.

ஹரிணி

குழந்தைக்கு பால் ஒவ்வாமை இருந்ததால் தேங்காய் பால், பாதாம் பால் போன்றவற்றைக் கொடுத்துள்ளார். இப்படி குழந்தை வளர்ப்பில் சிதையாத கவனம் செலுத்தி வந்த ஹரிணியின் மனதில் திடீரென்று அடுத்து என்ன என்கிற மிகப்பெரிய கேள்விக்குறி எழுந்துள்ளது.

’விதை’க்கான விதை

“என் ஃப்ரெண்ட்ஸ் ஒரு தடவை வீட்டுக்கு வந்திருந்தாங்க. நான் சமைச்சு பரிமாறினேன். சாப்பிட்டு ரொம்ப சுவையா வித்தியாசமா இருக்குன்னு பாராட்டினாங்க. என்ன பொடி சேர்க்கறன்னு கேட்டாங்க. யதேச்சையா அவங்களுக்கு சாம்பார் பொடி , ரசப்பொடி இப்படி சில பொடி வகைகளைக் கொடுத்தேன். அப்படித்தான் நான் எங்க குடும்பத்துக்காக வீட்ல அரைக்கற பொடி வகை எங்க வீட்டு சுவத்தைத் தாண்டி வெளிய போச்சு.”

ஹரிணி தனிப்பட்ட ஃபார்முலாவைப் பின்பற்றி பொடி வகைகளை தயாரித்துப் பயன்படுத்தியுள்ளார். அவரது பாட்டியின் குறிப்புகளை வைத்து தயாரிப்பு முறையை மெருகேற்றியுள்ளார். இவரது பொடி வகை தரமானதாகவும் சுவை கூட்டுவதாகவும் இருக்கவே பலர் கேட்டுள்ளனர்.

“எல்லார் வீட்லயும் சாம்பார் செய்வாங்க. ஏதோ ஒரு பொடியை அரைச்சு அதுல சேர்த்துதான் செய்வாங்க. அப்படி இருக்கும்போது என்னோட பொடி வகைகளுக்கு இவ்ளோ தேவை இருந்ததைப் பார்க்கும்போது ஆச்சரியமாக இருந்தது,” என்கிறார்.

இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொண்டு தரமான பொருட்களைத் தயாரித்து விற்பனை செய்யத் திட்டமிட்டார். கொரோனா பரவல் உச்சத்தில் இருந்த 2020-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் Vidhai Store தொடங்கியுள்ளார்.


’விதை’ வணிகத்திற்கான விதை எப்போதோ தொடங்கப்பட்டுவிட்டது என்கிறார் ஹரிணி. கிட்டத்தட்ட ஐந்தாண்டுகளுக்கு முன்பே விதை என்கிற பெயரில் ஒரு ஃபேஸ்புக் பேஜ் மட்டும் தொடங்கியுள்ளார்.

“ஒரு சின்ன விதையை விதைக்கறோம். அது செடியா வளருது. அப்புறம் பெரிய மரமா உயர்ந்து நிக்குது. நிறைய கிளைகள் உருவாகுது. பூ பூக்குது. காய் காய்த்து, பழம் கொடுக்குது. ஒரு பெரிய விஷயத்துக்கான அடித்தளமே சின்ன விதைதான். இதுதான் பெயர் காரணம்,” என்று விளக்குகிறார் ஹரிணி.
விதை

எத்தனையோ பிராண்ட் பொடி வகைகளை விற்பனை செய்தாலும் தனது தயாரிப்புகளுக்கான தேவை கட்டாயம் இருக்கும் என்பது ஹரிணியின் நம்பிக்கை.

“சந்தையில ஒரு பிராடக்ட் எல்லாருக்கும் பிடித்ததாக இருக்கவேண்டும் என்கிற அவசியமில்லை. காரணம் மக்களோட விருப்பம் மாறுபடும். ஒரே பிராண்ட் எல்லாருக்கும் பிடித்தமானதாக இருந்துவிட்டால் ஒரே தயாரிப்பிற்கு சந்தையில் பல பிராண்டுகள் இருக்கவேண்டிய அவசியம் என்ன?” என்று கேள்வியெழுப்புகிறார்.

ஹரிணி தன்னை தொழில்முனைவராக அல்லாமல் முதலில் நுகர்வோராகப் பார்க்கிறார்.

“நான் பேசறதைவிட என் பிராடக்ட் பேசணும். எந்த ஒரு தயாரிப்பிற்கும் கன்சிஸ்டன்சியும் தரமும் ரொம்ப முக்கியம். அதில் சமரசம் பண்ணிக்கவே கூடாது. உங்க குழந்தைக்கு கொடுத்தா எப்படி குடுப்பீங்களோ அதேமாதிரி வாடிக்கையாளர்களுக்கும் கொடுக்கணும். அவ்வளவுதான். எப்பவும் ஒரு நல்ல பிராடக்ட் அதுக்கான மார்கெட்டை அதுவே உருவாக்கிக்கும்,” என்கிறார் நம்பிக்கையுடன்.

தயாரிப்பு வகைகள்

விதை தயாரிப்பான ’ஆல்மண்ட் சாக்கோ மிக்ஸ்’ குழந்தைகள் அதிகம் விரும்பும் தயாரிப்பு. குழந்தைகளிடையே இது மிகப்பெரிய ஹிட். கேக் மீது டாப்பிங்காக பயன்படுத்தலாம், பாலில் கலந்து குடுக்கலாம், மில்க்‌ஷேக் தயாரிப்பில் சேர்க்கலாம், இப்படி 16 வகை டிஷ்களில் சேர்க்கலாம்.


அடுத்த மிகப்பெரிய ஹிட் முருங்கைப் பொடி. இதை சாதத்தில் கலந்தும் சாப்பிடலாம், இட்லி, தோசைக்கு தொட்டுக்கொள்ள பொடியாகவும் பயன்படுத்தலாம். அதேபோல் இட்லி பொடி பல வாடிக்கையாளர்களைக் கவர்ந்து இழுப்பதாக தெரிவிக்கிறார். சாம்பார் பொடியையும் பலர் விரும்பி வாங்குகிறார்கள்.


வேர்கடலை பொடி மிகவும் பிரபலம். இதை இன்ஸ்டண்ட் சட்னி போல் பயன்படுத்தலாம். இந்தப் பொடியுடன் தண்ணீர் கலந்துவிட்டால் போதும். நொடியில் சட்னி தயார். கருவேப்பிலை பொடி, எள்ளு பொடி, பாலக்காடு சாம்பார் பொடி, ஐயர் சாம்பார் பொடி, ஐயங்கார் சாம்பார் பொடி என பல விதமான பொடிகளை வழங்குகிறார்.

விதை தயாரிப்புகளின் சிறப்பம்சம்

தற்போது 50-க்கும் மேற்பட்ட தயாரிப்புகள் விற்பனை செய்யப்படுகின்றன. வாடிக்கையாளர்களின் தனித்தேவைக்கேற்ப பொடி வகைகளை தயாரித்து தருகிறார்.

எந்தவித பதப்படுத்தும் பொருட்களும் சேர்ப்பதில்லை. செயற்கை நிறங்கள் சேர்க்கப்படுவதில்லை.


வீட்டிலேயே பொடி வகைகளைத் தயாரிக்கிறார். கைகளாலேயே வறுத்து பொடி செய்கிறார். பாரம்பரிய சமையல் பாத்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன. வாடிக்கையாளர்களைக் கையாள்வது, தயாரிப்பது, டெலிவரி என அனைத்தையும் ஒன் வுமன் ஆர்மியாக திறம்பட சமாளிக்கிறார் ஹரிணி.

3
“நம்பகத்தன்மை நிறைந்த ஒரு பிராண்டை உருவாக்கவேண்டும் என்பதே என்னுடைய கனவு. முன்னாடி இருந்த சுவை இப்ப இல்லைன்னு ஒரே ஒரு வாடிக்கையாளர்கூட நினைக்கக்கூடாது. அந்த அளவிற்கு தொடர்ந்து தரமான தயாரிப்பை கொடுக்கறதுதான் என்னுடைய லட்சியம்,” என்கிறார்

விலை, முதலீடு மற்றும் வருவாய்

200 கிராம் மற்றும் 500 கிராம் அளவுகளில் விதை தயாரிப்புகள் கிடைக்கின்றன. 200 கிராம் பொடி வகைகளின் ஆரம்ப விலை 150 ரூபாய். அதிகபட்சமாக ஆலமண்ட் சாக்கோ மிக்ஸ் 500 கிராம் 875 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகின்றன.

10,000 ரூபாய் ஆரம்ப முதலீட்டுடன் தொழிலைத் தொடங்கியுள்ளார். மாதம் 2-3 லட்ச ரூபாய்க்கு விற்பனை செய்கிறார். இதில், 70,000 முதல் 1 லட்ச ரூபாய் வரை லாபம் ஈட்டுவதாக ஹரிணி குறிப்பிடுறார்.

வாடிக்கையாளர் தொகுப்பு

இந்தியா முழுவதும் தயாரிப்புகளை அனுப்புகிறார். உள்நாட்டில் விற்பனையை ஊக்குவிப்பதுடன் வெளிநாடுகளிலும் ’விதை’ பிராண்ட் பிரபலமாகவேண்டும் என்று விரும்புகிறார்.


கனடா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, யூகே ஆகிய நான்கு பகுதிகளுக்கு தற்சமயம் தயாரிப்புகளை விற்பனை செய்து வருகிறார். இவர்களிடமிருந்து தொடர்ந்து ஆர்டர் வருவதாக தெரிவிக்கிறார்.


தனிநபர் வாடிக்கையாளர்களுக்கு மட்டுமின்றி ரெஸ்டாரண்டுகள், சூப்பர் மார்க்கெட் போன்ற இடங்களுக்கு விதை தயாரிப்புகள் விற்பனை செய்யப்படுகின்றன.

”சூப்பர்மார்கெட்ல என்னோட தயாரிப்பு இருக்கறதைப் பார்க்கும்போது சந்தோஷமா இருக்கும். என் காதுபடவே இது நல்லாயிருக்கும்னு ஒரு வாடிக்கையாளர் இன்னொருத்தர்கிட்ட சொல்லிட்டிருந்தாங்க. கேக்கும்போதே ரொம்ப பெருமையா இருந்துதுங்க,” என்கிறார்.

சமூக வலைதளங்களில் செயல்பட்டாலும் பரிந்துரைகளின் பேரிலேயே வாடிக்கையாளர் வட்டம் விரிவடைந்து வருகிறது.

4

சவால்கள்

தயாரிப்பைத் தொடர்ந்து ஒரே மாதிரியான தரத்துடனும் சுவையுடனும் கொடுக்கவேண்டும். இதுதான் மிகப்பெரிய சவால்.

“மொத்த ஆர்டர்கள் வரும்போது தனி ஆளாக கிலோ கணக்குல தயாரிக்கறது சவாலா இருக்கும். ஆனா என்னோட ஆர்வம் மட்டும்தான் எனக்கு உந்துசக்தியா இருந்து செயல்பட வைக்குது,” என்கிறார் ஹரிணி.

டெலிவரி தொடர்பாகவும் பல்வேறு சிக்கல்களை சந்தித்துள்ளார்.

வருங்காலத் திட்டம்

வல்லாரை, தூதுவளை போன்ற சூப்பர் ஃபுட் தயாரிப்புகளை வாடிக்கையாளர்களுக்கு வழங்க திட்டமிட்டிருக்கிறார். தொடர்ந்து புதுமை படைக்கவும் தரத்தை மென்மேலும் அதிகரிக்கவும் விரும்புகிறார்.


ஹரிணியின் வாழ்க்கையை தொ.மு என்றும் தொ.பி என்றும் பிரிக்கலாம். அதாவது தொழில்முனைவிற்கு முன்பும் பின்பும் என பிரித்தால் இரண்டு வெவ்வேறு சுபாவம் கொண்ட நபராகத் தோன்றுகிறார்.


ஆரம்பத்தில் அதிகம் பேசாத, அமைதியான பயந்த சுபாவம் கொண்ட ஹரிணியை தொழில்முனைவுப் பயணம் தன்னம்பிக்கை அதிக துணிச்சலான பெண்ணாக மாற்றியுள்ளது.

”விதை என் தொழில் மட்டுமல்ல. தன்னம்பிக்கைங்கற விருட்சத்துக்கான விதையையும் அதுதான் கொடுத்துது. மத்தவங்களை சார்ந்திருக்கும்போது நீங்கள் பலவீனம் ஆகறீங்க. உங்க கனவை நனவாக்கிக்க நீங்கதான் உழைக்கணும்,” என்று கூறி முடிக்கிறார் ஹரிணி.