‘சமத்துவம் நிறைந்த உலகை உருவாக்குவதே என் கனவு’ – சமூக ஆர்வலர் சகாரிகா தேகா!
குவஹாத்தியைச் சேர்ந்த சாகரிகா தேகா 2020-ம் ஆண்டு Maan Ki Umeed என்கிற தொண்டு நிறுவனத்தைத் தொடங்கி பெண்கள் சந்திக்கும் பிரச்சனைகளுக்கு தீர்வளித்து வருகிறார்.
சமத்துவம் நிறைந்த ஒரு உலகை உருவாக்கவேண்டும், இதுதான் குவஹாத்தியைச் சேர்ந்த சகாரிகா தேகாவின் கனவு. இதற்கு இளைஞர்கள் முன்நின்று பல முயற்சிகளை மேற்கொள்ளவேண்டும் என்பதை சகாரிகா புரிந்துகொண்டார். குறிப்பாக இந்தியாவின் தென்கிழக்கு பகுதிகளில் இதற்கான தேவை அதிகமிருப்பது அவருக்குப் புரிந்தது.
பெண்களின் உரிமைகளைப் பற்றிய வீடியோக்களையும் ஆவணப்படங்களைப் பார்த்த சாகரிகாவிற்கு இதில் ஆர்வம் பிறந்துள்ளது. குறிப்பாக ரோஹிங்கியா பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் அவரை வெகுவாக பாதித்தது.
”மிடில் ஸ்கூல் படிச்சப்ப ஐக்கிய நாடுகள் மனித உரிமை கவுன்சில் பத்தி எங்க ஆசிரியர்கள் மூலமா தெரிஞ்சுகிட்டேன். அதுக்கப்புறம் அதுல பங்களிக்கணும்னு ஆசைப்பட்டேன். ஆனா எப்படி ஆரம்பிக்கறதுன்னு தெரியலை,” என்கிறார் நொய்டா அமிதி பல்கலைக்கழகத்தில் இளங்கலைப் பட்டப்படிப்பு படித்து வரும் சாகரிகா.
ஒவ்வொரு முறை ஒரு குற்றச்செயல் பற்றிக் கேள்விப்படும்போதும் கவிதை ஒன்றைப் பதிவிடத் தொடங்கினார். அவர் கேள்விப்பட்ட முதல் குற்றம் பாலியல் வன்கொடுமை. சமூக வலைதளங்களில் தன் கருத்துகளை பதிவிட்டார். பொதுவெளியில் பேசினார். மக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்தது. பெண்களின் பிரச்சனைகள் குறித்தும் மேம்பாடு குறித்தும் அதிகம் எழுதுவதற்கு மக்களிடமிருந்து கிடைத்த வரவேற்பு ஊக்கப்படுத்தியது.
தொடக்கம்
“பெண்களோட உரிமையைப் பத்தின என் கருத்துகளை கவிதை வடிவத்துல கொடுக்க ஆரம்பிச்சேன். பெண்கள் மற்றும் குழந்தைகளோட மேம்பாட்டுல எனக்கு ஆர்வம் அதிகம்,” என்கிறார்.
இரண்டாண்டுகளில் 17 கவிதைகள் எழுதியிருக்கிறார். பெண்களின் பார்வையில் மட்டுமல்லாது சமூகத்தின் கண்ணோட்டத்திலும் அவரது கவிதைகள் எழுதப்பட்டிருக்கின்றன.
சாகரிகாவின் கவிதைகள் அங்கீகரிக்கப்பட்டு, ஐக்கிய நாடுகளின் ’Girl Up’ என்கிற பிரிவில் அசாம் சாப்டரை வழிநடத்த அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. ஆன்லைனில் இதுபற்றி பகிர்ந்துகொண்டார். ஆறு மாதங்களில் 47 பேர் அடங்கிய குழுவை அவர் ஒருங்கிணைத்தார்.
’அசோகா யங் சேஞ்ச்மேக்கர்ஸ்’ கூட்டமைப்பில் சகாரிகா பங்களித்தார். முக்கியமான பிரச்சனைகள் தொடர்பாக செயல்பட நாடு முழுவதும் உள்ள இளம் சமூகத்தினர் இந்த கூட்டமைப்பில் இணைந்திருக்கிறார்கள்.
முக்கிய நோக்கம்
2020-ம் ஆண்டு டிசம்பர் மாதம் சொந்தமான நிறுவனம் தொடங்க முடிவு செய்தார். இப்படித்தான் Maan Ki Umeed தொடங்கப்பட்டது. குடிசைப் பகுதிகளைச் சேர்ந்த குழந்தைகளை ஆரம்பப்பள்ளியில் சேர்ப்பதில் இந்த முயற்சி கவனம் செலுத்துகிறது. அத்துடன் அவர்களது திறன் மேம்பாட்டிலும் கவனம் செலுத்துகிறது.
சக்தியளிப்பது, வேலை வாய்ப்பு, கல்வி, சேவை ஆகிய நான்கும் இந்த முயற்சியின் நான்கு முக்கியத் தூண்கள்.
சமூகத்தில் பெண்கள் சந்திக்கும் வெவ்வேறு பிரச்சனைகள் தொடர்பாக இந்நிறுவனம் பணியாற்றுகிறது. குறிப்பாக மாதவிடாய் சுகாதாரம் பற்றி பாடதிட்டத்தில் இணைப்பது தொடர்பாக செயல்பட்டு வருகிறது.
’Project Adoption’ என்கிற மற்றொரு பிராஜெக்டிலும் இந்த முயற்சி கவனம் செலுத்துகிறது. நலிந்த பிரிவைச் சேர்ந்த குழந்தைகளை ஆரம்பப் பள்ளியில் சேர்ப்பதே இதன் நோக்கம். இந்த பிராஜெக்டில் 60-க்கும் மேற்பட்ட மாணவர்கள் இருக்கின்றனர். இதில் பெரும்பாலானோர் ஆதரவற்ற குழந்தைகள்.
“ஏழை குழந்தைங்க ஆரம்பப் பள்ளியில் சேர நாங்க உதவறோம். அவங்களுக்கு நம்பிக்கையைக் கொடுக்கறோம். பாலின சமத்துவம், மாதவிடாய் சுகாதாரம், உடலமைப்பு பற்றிய நேர்மறை கண்ணோட்டம், மனநலன், சுற்றுச்சூழல் இப்படி ஏராளமான முக்கியமான விஷயங்களைப் பத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தறோம்,” என்கிறார்.
நலிந்த பிரிவைச் சேர்ந்த பெண்கள், குழந்தைகளை தனியாக வளர்த்து வரும் அம்மாக்கள் போன்றோர் சிறுதொழிலில் ஈடுபடவும் இவர் தனது குழுவினருடன் சேர்ந்து உதவி வருகிறார். இதற்காக நிதி திரட்டுகிறார்.
”தையல் வேலையில ஆர்வம் இருக்கற பெண்கள் எங்ககூட இருக்காங்க. அவங்களை பைகள், துணிகள் எல்லாம் தைக்க வைக்கறோம். இதுக்குத் தேவையான பொருட்களை எல்லாம் நாங்க திரட்டற நிதியிலேர்ந்து வாங்கிக் கொடுக்கறோம். அவங்க தயாரிச்சதை எங்க இன்ஸ்டாகிராம் அக்கவுண்ட் மூலமா விற்பனை செய்யறோம். இதுல கிடைக்கற லாபத்துலேர்ந்து ஒரு பகுதியை அவங்களுக்கு சம்பளமா கொடுக்கறோம்,” என்கிறார்.
Maan Ki Umeed குழுவில் தன்னார்வலர்கள், இண்டர்ன் என 50-க்கும் மேற்பட்டோர் இருக்கின்றன. நன்கொடைகள் மூலமாகவும் நிதி திரட்டுவதன் மூலமாகவும் இந்நிறுவனம் செயல்பட்டு வருகிறது.
பெண்கள் உரிமைக்கான பிரச்சாரம்
2020-ம் ஆண்டு அசாம் வெள்ளத்தின்போது எத்தனையோ என்ஜிஓ-க்களும் அரசாங்க அமைப்புகளும் மக்களுக்கு நன்கொடைகள் வழங்கி உதவி செய்தன. உணவு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை மக்களுக்கு விநியோகித்தன. ஆனால் குறிப்பாக பெண்களுக்கென்று தனி கவனம் செலுத்தப்படவில்லை.
வெள்ள பாதிப்பு ஏற்பட்டாலும்கூட பெண்களின் மாதவிடாய் பிரச்சனை நிற்கப்போவதில்லை என்பதை வலியுறுத்தும் வகையில் ’Flood doesn’t stop menstruation’ என்கிற பிரச்சாரத்தைத் தொடங்கினார். இதன் மூலம் அரசாங்கமும் என்ஜிஓ-க்களும் வழங்கும் அத்தியாவசியப் பொருட்கள் தொகுப்பில் சானிட்டரி பேட்களை சேர்க்க கோரிக்கை விடுத்தார்.
சமூக வலைதளங்களில் இந்தக் கோரிக்கை மேலும் வலுப்பெற்றது. விரைவிலேயே வெள்ள நிவாரணப் பணிகளில் ஈடுபட்டிருந்த Goonj போன்ற பெரிய என்ஜிஓ-க்களையும் சிறியளவில் செயல்படும் என்ஜிஓ-க்களையும் இந்தப் பிரச்சாரம் சென்றடைந்தது.
இவர்கள் பாதிக்கப்பட்டவர்களுக்கு சானிட்டரி பேட்களை விநியோகிக்கத் தொடங்கினார்கள்.
அசாம் வெள்ள பாதிப்பு சமயத்தில் 10,000 சானிட்டரி பேட்களை இவரது குழுவினர் நன்கொடையாக வழங்கியிருக்கின்றனர்.
2022-ம் ஆண்டு மே மாதத்தின்படி இவரது குழுவினர் 500-க்கும் மேற்பட்ட கிராமப்புற பெண்களைச் சென்றடைந்துள்ளனர். கோவிட் சமயத்தில் அசாமின் ஐந்து மாவட்டங்களில் 3,500 பேருக்கு அத்தியாவசியப் பொருட்களை விநியோகித்து உதவியுள்ளனர்.
2021-2022 ஆண்டுகளில் சாகரிகா படிப்பிற்காக டெல்லி சென்றிருந்த சமயத்தில் குழுவினருடன் சேர்ந்து கூட்டுநிதி பிரச்சாரத்தில் ஈடுபட்டார். இதில் திரட்டப்பட்ட தொகையை வெள்ளம் மற்றும் கோவிட்-19 நிவாரணப் பணிகளில் ஈடுபட்டிருந்த நிறுவனங்களுக்கு வழங்கியிருக்கிறார்.
சாகரிகா தனது வருங்கால திட்டங்கள் பற்றிக் கூறும்போது,
”Maan Ki Umeed பெரியளவுல வெற்றியடையணும், அதுதான் என் கனவு. கூடிய சீக்கிரம் வேலை வாய்ப்பு உருவாக்கிக் கொடுக்கற முயற்சியை விரிவுபடுத்த விரும்பறேன்,” என்கிறார்.
ஆங்கில் கட்டுரையாளர்: அபூர்வா பி | தமிழில்: ஸ்ரீவித்யா