ஆண்கள் ஆதிக்கம் செலுத்தும் பெயின்டிங் துறையில் செயல்படும் பெண்கள்!
ஆண்கள் ஆதிக்கம் செலுத்தி வரும் பெயிண்டிங் துறையில் nShakti மூலம் பயிற்சி பெற்ற துர்கா, விஜயா இருவரும் திறமையாக வேலை செய்து வருமானம் ஈட்டி வருவதுடன் மற்ற பெண்களும் துறையில் செயல்பட ஊக்கமளிக்கிறார்கள்.
”வாணி அழகா பெயிண்ட் பண்ணுவா தெரியுமா....?” – யாராவது உங்களிடம் இப்படிச் சொன்னால் நீங்கள் எப்படிக் கற்பனை செய்வீர்கள்? வாணி கையில் பெயிண்ட் பிரஷ் வைத்துக்கொண்டு ஆயில் பெயிண்டிங் செய்வதையோ பாட் பெயிண்டிங் செய்வதையோ கற்பனை செய்தீர்களா? அப்படிச் செய்திருந்தால் உங்கள் எண்ணத்தை மாற்றிக் கொள்ளுங்கள்.
ஆம், வாணி பெயின்ட் செய்வது வீட்டு சுவர்களை. அட, இது ஏன் நம் கற்பனைக்கு எட்டாமல் போனது? அது உங்கள் தவறில்லை. காலம் காலமாக சுவர்களில் பெயின்ட் அடிக்கும் வேலை ஆண்களின் பிரிவாகவே இருந்து வருகிறது.
இந்த எண்ணத்தை மாற்றி பெண்களால் பெயின்டிங் வேலையையும் திறம்பட செய்யமுடியும் என்பதை சிலர் நிரூபித்து வருகிறார். ஆண்கள் மட்டுமே ஆதிக்கம் செலுத்தி வந்த இந்தத் துறையில் பெண்கள் கால் பதித்து சாதித்து வருகிறார்கள். அப்படிப்பட்ட பெண்கள் இருவர் பற்றி சற்று விரிவாகப் பார்ப்போம்.
துர்கா, மயிலாடுதுறை
36 வயது துர்காவிற்கு இரண்டு குழந்தைகள். இவர் வேலை செய்து சம்பாதிப்பதற்காக தன் வீட்டின் நாலு சுவற்றை மட்டும் தாண்டவில்லை. ஆண்களுக்கானது என்று நிர்ணயிக்கப்பட்ட பெயின்டிங் துறையில் தடைகளைத் தகர்த்தெறிந்து நுழைந்துள்ளார். கரண்டி பிடித்த கைகளில் இன்று பெயிண்ட் பிரஷ் இருக்கிறது. வீட்டுச் சுவர்களில் பெயிண்ட் அடிப்பதற்கு முறையாக பயிற்சி எடுத்துக்கொண்டு இந்த வேலையை செய்து வருகிறார்.
மக்கள் மனதில் படிந்திருக்கும் பழமையான நம்பிக்கைகளை சுரண்டி எடுத்துவிட்டு புதிய வண்ணங்களைப் பூசி வருகிறார் துர்கா.
“பெண்கள் பெயின்டிங் கத்துக்க nShakti திட்டம் மூலமா உதவறாங்க. எனக்குத் தெரிஞ்சவங்க மூலமா இதைப்பத்தி தெரிய வந்தது. உடனே தொழிற்சங்கம் போனேன். இலவசமாக பயிற்சி கொடுக்கறதா சொன்னாங்க. உடனே சேர்ந்துட்டேன்,” என்கிறார் துர்கா.
பாதுகாப்பாக பெயின்ட் செய்வது, பெயின்டை மிக்ஸ் செய்வது, வீடு முழுக்க எப்படி பெயின்ட் செய்வது என 15 நாட்கள் முழுமையான பயிற்சி வழங்கப்பட்டுள்ளது. துர்கா ஆர்வமாகக் கற்றுக்கொண்டுள்ளார். அதுமட்டுமில்லை தனது கிராமத்தைச் சேர்ந்த மேலும் 25 பெண்கள் இதில் சேர்ந்துகொள்ள ஊக்கமளித்துள்ளார்.
துர்காவின் குடும்பத்தினர் அவரது புதிய முயற்சியையும் ஆர்வத்தையும் ஊக்குவித்தார்கள். இருந்தாலும் அவரது பாதுகாப்பு பற்றிய நியாயமான கவலை குடும்பத்தினருக்கு இருந்தது.
“அக்கம் பக்கத்துல இருக்கறவங்க என்ன சொல்லுவாங்க? இது பாதுகாப்பான வேலையா? அடிப்பட்டா என்ன செய்யறது? உடல் உழைப்பு அதிகம் இருக்குமே? உடல்நலம் பாதிக்கப்படாதா? இப்படி ஏராளமான கேள்விகளும் கவலைகளும் இருந்தது,” என்கிறார் துர்கா.
வீட்டில் இருப்பவர்கள் இப்படிக் கவலைத் தெரிவித்த நிலையில் அருகிலிருப்பவர்கள் நம்பிக்கை இழக்கும் வகையில் பேசியுள்ளனர்.
”பெயின்டிங் ஆண்கள் செய்யற வேலை’. ’முன்னாடி பார்த்த டெய்லரிங் வேலையையே நீ தொடர்ந்து செஞ்சிருக்கலாம்’. ’ஏற்கெனவே உனக்கு வயசாகிடுச்சு, இதெல்லாம் தேவையா?’ இப்படி பலர் எதிர்ப்பு தெரிவிச்சாங்க,” என்று துர்கா குறிப்பிட்டார்.
இன்று துர்கா அவருக்கு வசதியான நேரத்தில் வேலை செய்கிறார், சம்பாதிக்கிறார்.
“நான் வேலை செய்ய ஆரம்பிச்சு மூணு வருஷம் ஓடிடுச்சு. நான் nShakti முதல் பெண் கான்ட்ராக்டர் ஆனேன். பெயின்டரா இருந்தப்ப ஒரு நாளைக்கு 350 ரூபாய் சம்பாதிச்சேன். இப்போ 650 ரூபாய் வரை சம்பாதிக்கிறேன். எனக்கு வசதியான நாட்கள்ல எனக்கு வசதியான நேரத்துல வேலை செய்யறேன்,” என்கிறார் மகிழ்ச்சியுடன்.
துர்காவின் கணவர் அவரது முயற்சிக்கு ஆதரவளித்து வருகிறார். இவர்களது மகளுக்கு 18 வயதாகிறது. காவல்துறையில் சேர விரும்புகிறார். மகன் ஏழாம் வகுப்பு படிக்கிறார். விவசாயத் துறையில் செயல்பட விரும்புகிறார். குழந்தைகள் தங்களுக்கு விருப்பமான துறையைத் தேர்வு செய்து செயல்பட அனைத்து விதங்களிலும் உதவுவோம் என்கிறார் துர்கா.
விஜயா, மரகாத்தூர்
33 வயது விஜயா மரகாத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர். இவருக்கு இரண்டு குழந்தைகள். இவரது கணவர் ஹோட்டலில் வேலை செய்வதற்காக சென்னை சென்றார். பெருந்தொற்று சமயத்தில் வருமானம் இல்லை. வேறு வழியின்றி வீடு திரும்பியுள்ளார்.
குடும்பச் செலவுகளை சமாளிக்க வேலை செய்யத் தீர்மானித்தார் விஜயா.
“டெய்லரிங் கத்துக்கப் போனேன். அங்க ஒருத்தர் பெண்களுக்காக உருவாக்கப்பட்ட பெயின்டிங் கோர்ஸ் பத்தி சொன்னாங்க. நானும் சேர்ந்தேன். பயிற்சி முடிஞ்சதும் வேலையை ஆரம்பிச்சேன். சீக்கிரமே வேலையை நல்லா செய்யக் கத்துகிட்டேன். நான் நினைச்ச அளவுக்கு வேலை கஷ்டமா இல்லை,” என்கிறார் விஜயா.
மக்களின் மனநிலையை மாற்றுவதுதான் மிகப்பெரிய சவால் என்கிறார். வீட்டைப் பெயின்டிங் செய்வதற்கு பெண்கள் குழுவைப் பார்த்ததும் மக்களுக்கு அதிர்ச்சி ஏற்படுகிறது. அந்த அதிர்ச்சியைப் போக்கி நம்பிக்கை ஏற்படுத்துவது கடினம். ஆனால் வேலையைத் தொடங்கியதும் மக்களின் மனநிலை மாறிவிடுகிறது என்கிறார் விஜயா.
இரண்டு பெண் குழந்தைகள், புகுந்த வீட்டினர் என அனைவரும் ஒன்றாக இருப்பதால் பெருந்தொற்று சமயத்தில் குடும்பத்தினரின் பாதுகாப்பு கருதி விஜயா பெயிண்டிங் வேலைக்குச் செல்லவில்லை.
”கொரோனா நேரத்துல வெளிய வேலை செய்யப் போகாததால அந்த நேரத்தை பயன்படுத்தி என் வீட்டுக்கு பெயின்ட் அடிச்சேன். என்னைப் பத்தி தப்பா பேசினவங்க நான் பெயின்ட் பண்ண என் வீட்டைப் பார்த்ததும் அவங்க வீட்டுக்கும் பெயின்ட் பண்ண கேட்டுக்கிட்டாங்க,” என்கிறார் மகிழ்ச்சியுடன்.
வெளிநாட்டில் வசிக்கும் ஒரு குடும்பத்தினர் இந்தியா திரும்பியபோது கிராமத்தில் இருக்கும் அவர்களது வீட்டிற்கு பெயின்ட் செய்யவேண்டும் என்று கேட்டுள்ளனர். விஜயா குழுவினர் கொடுத்த மதிப்பீட்டைக் காட்டிலும் நான்கு மடங்கு அதிகம் கொடுக்க அவர்கள் தயாராக இருந்த சம்பவத்தை விஜயா ஆச்சரியத்துடன் பகிர்ந்துகொண்டார்.
”வேலை செய்ய ஆர்வம் இருந்தாலும் குடும்பத்தோட பாதுகாப்புதான் முக்கியம். எனக்குப் பிடிச்ச வேலையை நான் செய்யற மாதிரி என் குழந்தைங்களும் அவங்களுக்குப் பிடிச்சதை செய்யணும். இதுதான் என் ஆசை,” என்கிறார் விஜயா.
ஆங்கில கட்டுரையாளர்: தியா கோஷி ஜார்ஜ் | தமிழில்: ஸ்ரீவித்யா