சேப்பாக்க ‘தோனிமேனியா’ - 82 வயது ரசிகை ஜானகி பாட்டியின் அசத்தல் போஸ்ட்!
கிரிக்கெட்டின் ரஜினி அல்லது சூப்பர் ஸ்டார் என்றால் அது தோனியேயன்றி வேறு யார் இருக்க முடியும். 8 வயது முதல் 80 வயது முதியவர்கள் வரை தோனிக்கு விசிறிகள் உள்ளனர். அவர்கள் தோனி மீது செலுத்தும் அன்பு அளவிடமுடியாதது.
கிரிக்கெட்டின் ரஜினி அல்லது சூப்பர் ஸ்டார் என்றால் அது தோனியேயன்றி வேறு யார் இருக்க முடியும். அதுவும் சென்னை ரசிகர்கள் அவர் பெவிலியனில் பேடைக் கட்டிக் கொண்டு நிற்கும் போதே பிக் ஸ்க்ரீனில் காட்டினால் பெரிய அளவில் ஆவேச கூக்குரல் எழுப்பி தங்கள் ‘தல’-யை ஆராதிக்கின்றனர். ஜெயிலர் பாடல் வரவேற்க தோனி களமிறங்கினால் கேட்க வேண்டுமா? மைதானமே அதிர்ந்தது.
சேப்பாக்கத்திற்குப் பின்னால் உள்ள கடல் அலைகளும் திரும்பிப் பார்க்கும் அளவுக்கு தோனி இறங்கும்போது ரசிகர்களின் ஆரவாரக் கூச்சல் விண்ணைப்பிளந்தது. பவுண்டரி லைனில் பீல்டிங் செய்த கேகேஆரின் ஆந்த்ரே ரஸல் காதைப் பொத்திக் கொள்ள வேண்டிய அளவுக்கு ஆரவாரக் கூச்சல் பல காத தூரம் சென்றடைந்தது.
‘இவன் பேரத் தூக்க நாலு பேரு
பட்டத்த பறிக்க நூறு பேரு
குட்டிச் செவுத்த எட்டிப் பாத்தா
உசுரக் கொடுக்க கோடி பேரு...’
என்ற ஜெயிலர் பாடல் வரிகள் அதிர்ந்தன தோனி இறங்கும் போது. இதைவிட ஒரு வீரருக்கு ரசிகர்களின் அன்பின் வெளிப்பாடு வேறு என்ன வேண்டும்?
இதில் வேடிக்கை என்னவென்றால் தோனி ரசிகர்களாக இருப்பதில் வயது வேறுபாடு கிடையாது. 8 வயது முதல் 80 வயது முதியவர்கள் வரை தோனிக்கு விசிறிகள் உள்ளனர். அமெரிக்க டென்னிஸ் ஸ்டார் ஆந்த்ரே அகாசிக்குத்தான் இதற்கு முன்னர் பெரிய ரசிகர் பட்டாளம் உண்டு என்பதாகக் கேள்விப்பட்டிருக்கிறோம். தோனி இப்போது அதையெல்லாம் கடந்து விட்டார்!!
இந்த வகையில் சமீபத்தில் தோனி ரசிகையாக 82 வயது ஜானகி பாட்டி அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார். தோனியின் மீதான தன் அன்புக்குக் காரணம் என்ன என்பதை தன் இன்ஸ்டாகிராம் போஸ்ட்டில் தெரிவித்துள்ளார் ஜானகிப்பாட்டி.
“டியர் மாஹி, இந்தக் கடிதம் 82 வயதான என்னிடமிருந்து எழுகிறது. நான் உங்களது நிரந்தர ரசிகை. உங்களது பெரிய சியர்லீடர்!!
நான் எனது 40 வயதுகளில் மிகவும் பிஸியாக பணியாற்றி வந்தேன். பிள்ளைகள், குடும்பம், வீட்டு வேலை என நாட்கள் கடந்தது. அப்போது நான் சோர்வாகவும் உணர்ந்தது உண்டு. அந்த நேரத்தில் என் சுய அக்கறையில் சச்சினின் ஆட்டத்தை கண்டு ரசிக்கத் துவங்கினேன். அவரை நேரில் சந்தித்து விட வேண்டும் என்பது எனது கனவு. அவரது ஆட்டம் எனக்குள் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
பின்னர் எனது 70 மற்றும் 80 வயதுகளில், “தோனி பினிஷஸ் ஆஃப் இன் ஸ்டைல்” என்ற வர்ணனை என் காதுகளை ஈர்க்கத் தொடங்கின, இது எனக்கு சச்சின் டெண்டுல்கரை ரசித்த போது கொடுத்த அதே மகிழ்ச்சியைக் கொடுத்தது. "இன்னும் தண்ணீர் ஆழமாக ஓடுகிறது" என்பதை மட்டுமே நான் அவரில் பார்க்க முடிந்தது, மேலும் அவரது போட்டிக்கு பிந்தைய பேட்டிகள் அதை எனக்கு மீண்டும் மீண்டும் நிரூபித்தன.
என்ன சூழ்நிலையாக இருந்தாலும் மிகவும் அமைதியாகவும் ஒருங்கிணைவுடன் இருக்கும் அவரது செயல்பாடுகள் என்னை சாந்தப்படுத்தின. இந்த சூழலில் தான் தோனியின் ஆட்டத்தை நாம் நேரில் பார்த்து ரசிக்க போகிறோம் என எனது குடும்பத்தினர் தெரிவித்தனர். அதை கேட்டு எனக்குள் மகிழ்ச்சி ஏற்பட்டது. எனது வயது தொடங்கி அனைத்தையும் அது அப்படியே மறக்க செய்தது.
உங்கள் பணியைக் களத்தில் நேரில் பார்ப்பது ஒரு மாயாதீதம். உங்கள் செயல்பாடுகளை நேரில் கண்டபோது என் உடல் சோர்வு, என் 82 வயது ஆகியவற்றை மறந்தேன். நீங்கள் மேலும் தொடர்ந்து கர்ஜிக்க வேண்டும். நாங்கள் அனைவரும் உங்கள் மீது வைத்திருக்கும் பிரியத்தை நீங்கள் சுமக்க வேண்டும். நேரில் பார்த்தது என் இதயத்திலிருந்து ஒருநாளும் மறையாது...” என்று பதிவிட்டுள்ளார்.
அவரது இந்த பதிவை ஒரு லட்சம் பேருக்கும் மேல் நெகிழ்ச்சியுடன் லைக் செய்துள்ளனர்.
தல தோனிக்கு சேப்பாக்கம் ஸ்டேடியத்தின் மினியேச்சர் மாடலை பரிசளித்த ரசிகர்!