தோனியின் சொத்து மதிப்பு என்ன பிசினஸ் முதல் முதலீடு வரை - A டு Z விவரம்...
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியின் நிதி சார்ந்த முதலீடு குறித்த விவரங்களை சற்று விரிவாக பார்ப்போம்.
'தோனி’ எனும் ஒற்றை மனிதர் பலருக்கும் ஊக்கம் கொடுப்பவர். அது களத்திற்குள் இருக்கும் வீரர்களுக்கும், களத்திற்கு வெளியில் இருக்கும் ரசிகர்களுக்கும் பொருந்தும். தோனியின் பூர்வீகம் உத்தரகாண்ட் மாநிலம். அவரது குடும்பம் அங்கிருந்து வாழ்வாதாரம் தேடி பிஹார் வந்தனர். வீட்டில் தோனி தான் கடைக்குட்டி.
பால்யம் தொடங்கி இளம் வயது வரை இரண்டு அறை கொண்ட ஊழியர்கள் குடியிருப்பில் வளர்ந்தவர் தோனி. எளிய பின்புலத்தை சேர்ந்த அவர் தன் கிரிக்கெட் கனவை துரத்த அதன் மூலம் பொருளாதார ரீதியாகவும் முன்னேற்றம் கண்டார். குடும்பச் சூழல் காரணமாக ரயில்வே துறையில் டிக்கெட் பரிசோதகராக பணியாற்றியவர்.
இன்று அவரது சொத்து மதிப்பு இந்திய ரூபாயில் பல்லாயிரம் கோடி. சுமார் 7 ஏக்கர் பரப்பளவு கொண்ட பண்ணை வீட்டில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். ராஞ்சியின் ரிங் ரோட்டில் இந்த வீடு அமைந்துள்ளது. மரங்கள் சூழ அமைந்துள்ள இந்த வீட்டில் உள்விளையாட்டு அரங்கம், வலைப்பயிற்சி தளம், உடற்பயிற்சிக் கூடமும் அமைந்துள்ளது. வீட்டில் கார் மற்றும் பைக்குகளை நிறுத்த பிரத்யேக கேரேஜ் உள்ளது. ராஞ்சியின் ஹார்மூ சாலையில் மூன்று மாடி வீடு ஒன்றும் தோனிக்கு உள்ளது.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி ஒரு கிரிக்கெட்டராக மட்டுமில்லாமல் பல ப்ராண்ட்களுடன் தன்னை இணைத்துக்கொண்டுள்ளார். விளையாட்டுத்துறை மட்டுமின்றி பல நிறுவனங்களில் முதலீடும் செய்துள்ளார்.
அப்படி, தோனி செய்துள்ள முதலீடுகள் மற்றும் ப்ராண்ட் அம்பாசிடராக இருந்து வருவாய் ஈட்டி வருகிறார். அப்படி அவர் எந்தெந்த நிருவனங்களுடன் இணைந்துள்ளார், அவரின் நிதி சார்ந்த முதலீடு குறித்த விவரங்களை சற்று விரிவாகப் பார்ப்போம்.
தோனியின் நிதி விவரம்…
- சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டனின் மொத்த சொத்து மதிப்பு ரூ.1,040 கோடி.
- சிஎஸ்கே அணிக்காக ஐபிஎல் விளையாடும் அவருக்கு அதன் மூலம் கிடைக்கும் தொகை ரூ.12 கோடி. இது ஒப்பந்தத்தின் அடிப்படையில் வழங்கப்படுகிறது. கடந்த 2021-ல் தோனியை சென்னை அணி தக்க வைத்தது குறிப்பிடத்தக்கது.
- தனது வாழ்க்கைக் கதை திரைப்படம் ஆனதன் மூலம் சுமார் 30 கோடி ரூபாய் ஈட்டியுள்ளார்.
- செவன், கதபுக், 7 இங்க் புரூஸ், ஷாகா ஹேரி (தாவர இறைச்சி தயாரிக்கும் நிறுவனம்), கருடா ஏரோஸ்பேஸ், காவேரி மருத்துவமனை, RIGI, கார்ஸ் 24, ஹோம்லேன் மற்றும் விளையாட்டு நிறுவனம் ஒன்றிலும் தோனி முதலீடு செய்துள்ளார்.
- சமூக வலைதள பதிவுக்கு தோனி பெரும் கட்டணம் ரூ.1 முதல் 2 கோடி எனத் தெரிகிறது. அவரை இன்ஸ்டாவில் 44 மில்லியன் பேரும், ட்விட்டரில் 8.6 மில்லியன் பேரும் பின் தொடர்ந்து வருகின்றனர். இத்தனைக்கும் தோனி அதில் ஆக்டிவாக இயங்குவதில்லை. 2020-ல் ஓய்வு அறிவிப்புக்கு பின்னர் 2 பதிவுகளை தான் இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார். இரண்டும் விவசாயம் சார்ந்தது. ட்விட்டரில் 2021-ல் கடைசியாக ட்வீட் செய்துள்ளார் என சொல்கிறது அவரது டைம்லைன்.
- ராஞ்சியின் சுஜாதா சவுக் பகுதியில் சொந்தமாக ‘மஹி ரெசிடன்ஸி’ என்ற விடுதி வைத்துள்ளார். இதில் உணவகம் மற்றும் பார் உள்ளது.
- ‘தோனி எண்டர்டெயின்மென்ட்’ என்ற பெயரில் திரைப்பட தயாரிப்பு நிறுவனம் வைத்துள்ளார். தமிழில் எல்.ஜி.எம் என்ற படம் தயாரிக்கப்பட்டுள்ளது.
- பெங்களூருவின் தெற்கில் ‘எம்.எஸ்.தோனி குளோபல் பள்ளி’ நடத்தி வருகிறார்.
- ரூ.17.8 கோடிக்கு டேராடூனில் ரியல் எஸ்டேட் முதலீடு செய்துள்ளார்.
- ராஞ்சி ரேஸ் எனும் ஹாக்கி அணியின் இணை உரிமையாளர், ஐஎஸ்எல் கால்பந்து லீகில் விளையாடி வரும் சென்னையின் எஃப்.சி அணியின் இணை உரிமையாளர். இது மட்டுமல்லாது மேலும் 3 விளையாட்டு நிறுவனங்களில் முதலீடு செய்துள்ளார்.
- பிராண்டிங் மூலம் ரூ.4 முதல் 6 கோடி ஈட்டி வருகிறார். இதில் ஜியோ சினிமா, அன்-அகாடமி, ஸ்கிப்பர் பைப்ஸ், வின்சோ, ரெட் பஸ், ஓரியோ, Viacom18, கோல்கேட், ஒப்போ, கோ டேடி, Pokestars, லிவ்பாஸ்ட், ஸ்னிக்கர்ஸ், சியாராம்ஸ், இந்தியன் டெரைன், சவுண்ட் லாஜிக், மாஸ்டர் கார்ட், ட்ரீம் 11, எஸ்ஆர்எம்பி, லாவா, பூஸ்ட், ஓரியன்ட் எலெக்ட்ரிக், பெப்சிகோ போன்ற நிறுவனங்கள் இதில் அடங்கும்.
- டுகாட்டி, ஹார்லி டேவிட்சன், கவசாகி, சுஸுகி, பிஎஸ்ஏ போன்ற இருசக்கர வாகனங்களை தோனி வைத்துள்ளார்.
- ஹம்மர், மிட்சுபிஷி, போர்ஷே, ஃபெராரி, ஆடி, ரோல்ஸ் ராய்ஸ், ஜீப், லேண்ட் ரோவர், பென்ஸ், மஹிந்திரா, நிசான், ஃபயர்பேர்ட் டிரான்ஸ் ஆம் ரக வின்டேஜ் கார் என பல கார்களை வைத்துள்ளார்.
'தோனி என் கையில ஐபிஎல் கப்பை கொடுத்து போட்டோ எடுக்கச் சொன்னார்' - சிஎஸ்கே பஸ் டிரைவர் தண்டபானி நெகிழ்ச்சி!
Edited by Induja Raghunathan