'தோனி என் கையில ஐபிஎல் கப்பை கொடுத்து போட்டோ எடுக்கச் சொன்னார்' - சிஎஸ்கே பஸ் டிரைவர் தண்டபானி நெகிழ்ச்சி!
தோனிக்கும், அவரது ரசிகர்களுக்குமான பந்தத்தை சொல்லித்தான் தெரிய வேண்டும் என்றும் கிடையாது. ஆனால் தோனி ரசிகர்களை எப்படியெல்லாம் நேசிக்கிறார், அவரது ஒரிஜினல் கேரக்டர் என்ன?? என பல ஆண்டுகளாக சிஎஸ்கே அணியின் பஸ் டிரைவராக உள்ள தண்டபானி என்பவர் பகிர்ந்துள்ள சுவாரஸ்ய தகவல்களை பகிர்ந்துள்ளார்.
தோனிக்கும், அவரது ரசிகர்களுக்குமான பந்தத்தை சொல்லித்தான் தெரிய வேண்டும் என்றும் கிடையாது. ஆனால், தோனி ரசிகர்களை எப்படியெல்லாம் நேசிக்கிறார், அவரது ஒரிஜினல் கேரக்டர் என்ன?? என பல ஆண்டுகளாக சிஎஸ்கே அணியின் பஸ் டிரைவராக உள்ள தண்டபானி என்பவர் பகிர்ந்துள்ள சுவாரஸ்ய தகவல்களை பகிர்ந்துள்ளார்.
அருண் ஜெட்லி ஸ்டேடியத்தில் எம்எஸ் தோனியின் அணி டெல்லி கேப்பிட்டல்ஸை வீழ்த்திய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 12வது முறையாக பிளேஆஃப்களுக்குள் அடியெடுத்து வைத்துள்ளது. ரசிகர்கள் இந்த உற்சாக கொண்டாட்டத்தில் இருந்து மீள்வதற்குள், ஸ்டார் தமிழ் ட்விட்டர் பக்கத்தில் பகிரப்பட்டுள்ள தோனி பற்றிய வீடியோ தாறுமாறு வைரலாகி வருகிறது.
சென்னை சூப்பர் கிங்ஸ்:
மற்ற சீசன்களை காட்டிலும் நடப்பு ஐபிஎல் தொடர் பல அதிரடி திருப்பங்களுடன் இறுதிக் கட்டத்தை நெருங்கி வருகிறது. ஒருபுறம் கோடிகளை கொட்டிக்கொடுத்து எடுக்கப்பட்ட பிரபல வீரர்களை விடவும், புதுமுகங்கள் களத்தில் அனல் தெறிக்க விளையாடி வருகின்றனர். மற்றொருபுறம் தோல்வி முகத்தில் இருந்த அணிகள் எல்லாம் வீறுகொண்டு விளையாடி “வெற்றி நமதே” என்ற எண்ணத்துடன் சுற்றிக்கொண்டிருந்த அணிகளை எல்லாம், அடித்து ஓரங்கட்டி பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன.
இதனால் எதிர்பாராத ட்விஸ்ட் அண்ட் டர்ன் உடன் ஐபிஎல் போட்டிகள் களைக்கட்டி வருகிறது. குறிப்பாக இந்த ஆண்டு நடந்து வரும் ஐபிஎல் போட்டியில் தல தோனி ‘டாக் ஆஃப் த கேம்’ ஆகவே மாறிவிட்டார் என்று தான் சொல்லவேண்டும். கொல்கத்தாவில் தல தோனியின் ஆட்டத்தை காண மஞ்சள் நிற டீஷர்ட் அணிந்து வந்த லட்சக்கணக்கான ரசிகர்கள் படையெடுத்து நம்ப தலயையே திக்குமுக்காட வச்சிட்டாங்க.
அதுமட்டுமா, சென்னை சூப்பர் கிங்ஸின் தாய் மண்ணான சென்னை சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் 6 வீக்கெட்களுக்குப் பிறகு 7வது ஆளாக களமிறங்கிய தோனியை வரவேற்க ரசிகர்கள் எழுப்பிய சத்தம் லோக்கல் சேனல் முதல் நேஷனல் மீடியா வரை வைரல் செய்தியானது. ஐபிஎல் வரலாற்றிலேயே எந்த ஒரு வீரருக்கும் இப்படியொரு வரவேற்பை ரசிகர்கள் கொடுத்தது இல்லை எனும் அளவிற்கு சென்னை ரசிகர்கள் தூள் கிளப்பி வருகின்றனர்.
தோனிக்காக குவியும் ரசிகர்கள்:
சிஎஸ்கே கேப்டன் தோனி காரணமாக 2023 ஐபிஎல் சீசன் அதிக கவனம் பெற்றுள்ளது. எங்கே சென்றாலும், எல்லா மைதானங்களில் தோனிக்கு என்று ஸ்பெஷல் ரசிகர்கள் குவிந்த வண்ணம் இருக்கின்றனர். அவரைக் காண ஆயிரக்கணக்கில் மக்கள் வர தொடங்கி உள்ளனர்.
இதற்குக் காரணம் கேப்டன் தோனியின் கடைசி ஐபிஎல் தொடர் இதுவென்று கூறப்பட்டு வருவது தான். கேப்டன் தோனியின் கடைசி ஐபிஎல் தொடர் இதுவென்று கூறப்பட்டு வருவதும் தான். இதுகுறித்து வர்ணையாளர்கள் கேட்கும் கேள்விக்கு கூட மிஸ்டர் கூல் தோனி புன்னகையை மட்டுமே உதிர்த்துவிட்டு செல்கிறார். இதுவரை மெளனம் கலைத்து பதிலளிக்கவில்லை.
தோனி மீது எப்படி ரசிகர்கள் அன்பு மழை பொழிகிறார்களோ? அதேபோல், அவரும் ரசிகர்கள் மீது அளவு கடந்த அன்பும், மரியாதையும் வைத்துள்ளார். சினிமா பிரபலங்கள் ஆடியோ ரிலீஸ் விழாவில் ரசிகர்களை புகழ்ந்து தள்ளுவதைப் போலவே, ஒவ்வொரு மைதானத்திலும் தனது வெற்றியைக் கொண்டாடும் போது, ரசிகர்களின் ஆதரவையும், அன்பையும் நினைவுகூர தோனி ஒருபோதும் தவறியது இல்லை.
ரசிகர்களை உயிராக நேசிக்கும் தோனி:
தற்போது ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழ் ட்விட்டர் பக்கத்தில் சிஎஸ்கே அணிக்கு பல ஆண்டுகளாக பஸ் ஓட்டுநராக இருக்கும் தண்டபானி என்பவர் தல தோனி குறித்து பகிர்ந்துள்ள சுவாரஸ்ய தகவல்கள் ரசிகர்களை நெகிழ வைத்துள்ளது.
2008ம் ஆண்டு சிஎஸ்கே அணி உருவானது முதலே வீரர்களை அழைத்துச் செல்லும் பேருந்திற்கு ஓட்டுநராக இருப்பவர் தண்டபாணி. நடப்பு போட்டியிலும் அவர் தான் சிஎஸ்கே அணியின் ஓட்டுநராக இருக்கிறார்.
அவர் தல தோனியைப் பற்றி பேசியுள்ள வீடியோவில்,
“எனக்கு சிஎஸ்கே அணியில் உள்ள அனைத்து வீரர்களையும் பிடிக்கும். அதிலும் குறிப்பாக ‘என் தல தோனியை’ தான் மிகவும் பிடிக்கும். ஏனெனில், மேட்சில் ஜெயிச்சாலும் சரி, தோற்றாலும் சரி... பேருந்தில் ஏற வரும் போது ஒரே மாதிரியாக தான் இருப்பார். எப்பவுமே தோனி முகத்தில் ஒரு சிரிப்பு இருந்து கொண்டே இருக்கும்...” எனக்கூறியுள்ளார்.
தல தோனி தரிசனத்திற்காக சாலையில் சிஎஸ்கே பஸ்ஸை சேசிங் செய்து வரும் ரசிகர்கள் பட்டாளம் ஏராளம். அப்படி ரசிகர்கள் வேகமாக வண்டி ஓட்டு வருவதை பேருந்துக்குள் இருந்து பார்க்கும் தோனி பல சமயங்களில் பதறிப்போவாராம்.
“தல தோனிக்கிட்ட எனக்குப் பிடிச்ச இன்னொரு விஷயம், அவருக்கு அவரோட ரசிகர்கள் என்றாலே உயிர். உங்களுக்கே தெரியும்... நம்ப பஸ் ஸ்டேடியம் பக்கம் வந்தாலே போதும். ரசிகர்கள் எல்லாரும் கார், பைக்கில் பின்தொடர்ந்து வருவது, செல்ஃபி எடுப்பது, போட்டோ எடுப்பது என வெளியே பெரிய அமர்க்களமே நடக்கும். ஆனால் உள்ள தல தோனி ஃபேன்ஸுக்கு எதுவும் ஆகிடக்கூடாதுன்னு டென்ஷனா இருப்பாரு,” எனக்கூறியுள்ளார்.
மனிதத்தை நேசிக்கும் மாமனிதன்:
கிரிக்கெட் மற்றும் சினிமா பிரபலங்கள் எப்போதுமே ரசிகர்கள் மற்றும் சமானிய மக்களிடம் இருந்து விலகி இருக்கவே ஆசைப்பாடுவார்கள். ஆனால் தல தோனி அப்படிக்கிடையாது சாதாராண பஸ் டிரைவராகவே இருந்தாலும் தண்டபாணிக்காக தல தோனி செய்த காரியம் ஒன்று அவரை மிகவும் உணர்ச்சிவசப்பட வைத்துள்ளது.
“எனக்கு பிடித்த சிஎஸ்கே மூமெண்ட் என்றால் அது 2018ம் ஆண்டு ஐபிஎல் மேட்சை நம்ப டீம் ஜெயிச்சது தான். கப் வென்ற சந்தோஷத்தை அனைவரும் கொண்டாடிக்கொண்டிருந்தோம். அப்போது பேருந்துக்குள் ஏற வந்த தோனி, உடனே என் கையில் கப்பை கொடுத்து போட்டோகிராப்ரை அழைத்து போட்டோ எடுக்கச் சொன்னார். இந்த தருணத்தை என்னால் வாழ்நாள் முழுவதும் மறக்க முடியாது. நீங்க வேணுன்னா எழுதி வச்சிக்கோங்க... தல தோனியை விட நல்ல ஒரு ப்ளேயர் கூட வந்துவிடலாம். அவரை விட சிறந்த ஒரு மனிதர் வர வாய்ப்பே இல்லை... என்ன சொன்னாலும் தல... தல... தான்,” எனத் தெரிவித்துள்ளார்.
தற்போது இந்த வீடியோ சோசியல் மீடியாவில் லட்சக்கணக்கான பார்வையாளர்களைக் கடந்து வைரலாகி வருகிறது.
'பிரியாவிடை கொடுக்க வந்துருக்காங்க' - ஐபிஎல் ஓய்வு குறித்த சஸ்பென்ஸை உடைத்த தல தோனி!