சொந்த கிராமத்தின் கல்வித் தரத்தை மேம்படுத்தும் இந்திய அமெரிக்கர்!
இந்தத் தொழிலதிபரின் அறக்கட்டளை உத்திர பிரதேசத்தின் ராம்பூர் கிராமத்ததைச் சேர்ந்த பெண்களுக்கு கல்வி மற்றும் தொழில்முறை பயிற்சி அளிக்கிறது.
உத்திர பிரதேசத்தின் சஹரன்பூர் மாவட்டத்தில் உள்ளது ராம்பூர் மனிஹரன் கிராமம். தரிசு நிலம் சூழ்ந்திருக்கும் இந்தப் பகுதியில் ஒரு கல்வி வளாகம் அமைந்துள்ளது. சுற்றுப் புறத்தில் உள்ள நகரங்களைச் சேர்ந்த மாணவர்கள் வேளாண்மை மற்றும் அறிவியல் கற்றுக்கொள்ள இங்கு ஒன்றுகூடுகின்றனர்.
22,000-க்கும் அதிகமானோர் வசிக்கும் இந்நகரில் ஹிலாரி ரோதம் க்ளிண்டன் நர்சிங் பள்ளி உள்ளது. இந்தப் பள்ளியை முன்னாள் அமெரிக்க அதிபர் பில் க்ளிண்டனும் அவரது மனைவி ஹிலாரி க்ளிண்டனும் தொடங்கி வைத்தனர்.
வினோத் குப்தா அறக்கட்டளை மேற்கொள்ளும் பல்வேறு முயற்சிகளில் இந்தக் கல்லூரியும் ஒன்று. இதன் நிறுவனர் இந்திய அமெரிக்கரான தொழிலதிபர் வினோத் குப்தா. இவர் இந்தக் கிராமத்தில் பிறந்து வளர்ந்தவர். இந்தப் பகுதியை மேம்படுத்தி நலிந்த பிரிவினைச் சேர்ந்த பெண்களுக்கு கல்வி உதவி அளிக்கவேண்டும் என்பதுமே இவரது நோக்கம்.
”கல்வியின் மூலம் ஒரு பெண்ணின் வாழ்க்கையில் மாற்றம் ஏற்பட்டால் அது மூன்று குடும்பங்களின் வாழ்க்கையில் மாற்றத்தைக் கொண்டு சேர்க்கும். முதலில் அந்தப் பெண் வளர்ந்த குடும்பம், இரண்டாவதாக அந்தப் பெண்ணின் புகுந்த வீடு, மூன்றாவதாக அவள் உருவாக்கும் குடும்பம். இந்த மூன்றுமே பலனடையும். இதுவே நாட்டை முன்னேற்றப் பாதையில் இட்டுச்செல்லும்,” என்கிறார் 72 வயதான இந்தத் தொழிலதிபர்.
இவர் அமெரிக்காவில் உள்ள இன்ஃபோக்ரூப் (Infogroup) என்கிற பிக்டேட்டா மற்றும் மார்கெட்டிங் சேவை வழங்கும் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் முன்னாள் சிஇஓ ஆவார். இவர் அமெரிக்கா மற்றும் இந்தியாவில் எண்ணற்ற மக்கள் நலப்பணிகளுக்காக 50 மில்லியன் டாலருக்கும் அதிகமாக நன்கொடை வழங்கியுள்ளார்.
வங்கியில் இருந்து 100 டாலர் கடன் பெற்று இன்ஃபோக்ரூப் நிறுவனம் தொடங்கியுள்ளார். தனிநபர் முயற்சியாக தொடங்கப்பட்ட இந்நிறுவனம் இன்று உலகளவில் செயல்பட்டு வருகிறது. 5,000க்கும் அதிகமானோரை பணியிலமர்த்தியுள்ளது. இதன் ஆண்டு வருவாய் 750 மில்லியன் டாலர். இவரது தலைமையில் இன்ஃபோக்ரூப் நிறுவனம் 45க்கும் அதிகமான நிறுவனங்களை வாங்கியது. பின்னர் 2010ம் ஆண்டு இந்நிறுவனம் 680 மில்லியன் டாலருக்கு விற்கப்பட்டது.
தொடக்கம்
விநோத் இந்தியாவின் ஒரு சிறு கிராமத்தில் வளர்ந்தவர். இவரது கிராமத்தில் மின்சாரம், சாலை வசதி, கழிப்பறைகள் போன்ற அடிப்படை வசதிகள் ஏதும் இல்லை. இவர் படிப்பில் இருந்த ஆர்வம் காரணமாக தனது கிராமத்தை விட்டுச்சென்று ஐஐடி கராக்பூரில் சேர்ந்தார். 1967ம் ஆண்டு மேற்படிப்பிற்காக அமெரிக்கா சென்றார்.
நெப்ராஸ்கா பல்கலைக்கழகத்தில் வேளாண்மை பொறியியல் மற்றும் வணிகம் பிரிவில் முதுகலை பட்டம் முடித்தார். அதன் பிறகு Commodore Corporation நிறுவனத்தில் மார்க்கெட்டிங் ஆய்வாளராக இணைந்தார்.
1972ம் ஆண்டு உள்ளூர் நெப்ராஸ்கா வங்கியில் இருந்து 100 டாலர் கடன் வாங்கிக்கொண்ட பிறகு அமெரிக்கன் பிசினஸ் இன்ஃபர்மேஷன் (ABI) என்கிற சொந்த வணிகத்தை நிறுவினார்.
1997ம் ஆண்டு வினோத் தான் வளர்ந்த கிராமத்தின் நலனில் பங்களிப்பதற்காக கல்வி உதவி வழங்க முடிவெடுத்தார். தனது கிராமத்திற்குத் திரும்பினார். கிராமப்புறப் பெண்களுக்குத் தரமான கல்வி வழங்க வினோத் குப்தா அறக்கட்டளை அமைத்தார். வினோத் தனது அம்மாவின் பெயரில் தொடங்கிய ‘தி ராம் ரதி குப்தா பெண்கள் பாலிடெக்னிக்’, ஃபேஷன் டிசைனிங் மற்றும் டெக்ஸ்டைல் டிசைனிங் சார்ந்த பல்வேறு பாடங்கள் மூலம் தொழிற்கல்வி மற்றும் திறன் மேம்பாட்டு பயிற்சியளிக்கிறது.
வினோத் சமூக நலனில் பங்களிப்பதை அங்கீகரிக்கும் வகையில் முன்னாள் அமெரிக்க அதிபர் பில் க்ளிண்டன் ’Giving’ என்கிற தனது புத்தகத்தில் இந்நிறுவனத்தைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளார். அந்தப் புத்தகத்தில் ’மாற்றுத் திறனாளிகள், பாதுகாப்பற்ற வீட்டுச் சூழலில் இருந்து வெளியேறி சுயமாக வருவாய் ஈட்டவேண்டிய அவசியமிருப்போர் போன்றோருக்கு ஆதரவளிக்கும் வகையில் இந்நிறுவனம் அவர்களை பணியிலமர்த்துவதில் தீவிரம் காட்டுகிறது’ என்று குறிப்பிட்டிருந்தார்.
வாஷிங்க்டன் ஜான் எஃப் கென்னடி செண்டர் ஃபார் பெர்ஃபார்மிங் ஆர்ட்ஸ் மையத்தில் ட்ரஸ்டியாக வினோத்தை நியமித்தார் க்ளிண்டன். அத்துடன் வினோத் பெர்முடாவின் தூதரக அதிகாரியாக செயல்படவேண்டும் என்றும் விருப்பம் தெரிவித்தார். எனினும் வினோத் ஏற்கெனவே அவருக்கிருந்த கடமைகளை சுட்டிக்காட்டி பொறுப்பேற்க மறுத்துவிட்டார்.
”ஆனால் நாங்கள் தொடர்ந்து நல்ல நண்பர்களாக இருந்து வருகிறோம். எங்களுக்கிடையே எந்தவித எதிர்பார்ப்பும் இல்லை. நட்பு மட்டுமே உள்ளது. இறுதியாக அவர் 2000ம் ஆண்டு இந்தியா வந்தார். ராம்பூர் சென்று பில் க்ளிண்டன் பள்ளிக்கான அடித்தளத்தை அமைத்தார்,” என்று வினோத் நினைவுகூர்ந்தார்.
கல்வி வளாகம்
பெண்கள் பொருளாதார ரீதியாக தற்சார்புடன் இருக்க உதவுவதற்கு கல்வியைப் பயன்படுத்துகிறது வினோத் குப்தா அறக்கட்டளை. ராம்பூரில் உள்ள கல்வி வளாகத்தில் பில் க்ளிண்டன் பள்ளி மற்றும் ஹிலாரி க்ளிண்டன் நர்சிங் பள்ளி உள்ளன.
பில் க்ளிண்டன் பள்ளியில் ஸ்மார்ட் வகுப்பறைகள், கலை மற்றும் கைவினை ஆய்வகம், நூலகம் உள்ளிட்ட நவீன வசதிகள் அமைக்கப்பட்டுள்ளன. இங்குள்ள ஆசிரியர்கள் அர்ப்பணிப்புடன் செயல்படுகின்றனர். இங்கு தற்போது 589 மாணவிகள் உட்பட மொத்தம் 1,152 மாணவர்கள் படிக்கின்றனர்.
ஹிலாரி க்ளிண்டன் நர்சிங் பள்ளி முன்னாள் மாணவியான வர்ஷா பன்சால் தனது கிராமத்தில் இந்த நர்சிங் பள்ளி அமைக்கப்படுவதற்கு முன்பிருந்த காலகட்டத்தை நினைவுகூர்ந்தார். முறையான வசதி இல்லாத காரணத்தால் அவரது கனவான மருத்துவப் படிப்பை படிக்கமுடியாமல் போனதாக தெரிவித்தார்.
”கல்வி நிறுவனம் அமைக்கப்பட்ட பிறகு நான் ஷாம்லி பகுதியில் இருந்து தினமும் அங்கு சென்று திரும்புவேன். மாலை நேரங்களில் என் குழந்தைகளுடன் நேரம் செலவிடுவேன்,” என்றார்.
வர்ஷா 2015ம் ஆண்டு படிப்பை முடித்த பிறகு மீரட்டில் உள்ள பிரபல அரசு மருத்துவமனையில் நேர்காணலில் தேர்ச்சி பெற்றார். தற்போது அங்குதான் பணிபுரிந்து வருகிறார்.
ஹிலாரி க்ளிண்டன் நர்சிங் பள்ளியில் ஜெனரல் நர்சிங் மற்றும் மிட்வைஃபரி, ஆக்சிலரி நர்சிங், பேபி நர்சிங் மற்றும் குழந்தை பராமரிப்பு ஆகிய படிப்புகள் உள்ளன. மாணவர்களின் திறனை மேம்படுத்துவதே இப்பள்ளியின் நோக்கம். இதில் சிமுலேஷன் ஆய்வகம் உள்ளது. இங்கு தற்போது 357 மாணவர்கள் படிக்கின்றனர். இதில் 320 பேர் பெண்கள்.
இந்த அறக்கட்டளை இத்தனை ஆண்டுகளில் வனவிலங்குகள் பாதுகாப்பில் குறிப்பிடத்தக்க அளவிற்கு பங்களித்துள்ளது. ராஜஸ்தானில் உள்ள ரன்தம்போர் புலிகள் காப்பகத்திற்கு உதவி வருகிறது. வன காப்பாளர்கள், அதிகாரிகள், வழிகாட்டிகள் போன்றோருக்கு நிதியுதவியும் பொருளுதவியும் வழங்கி வருகிறது.
இந்த அறக்கட்டளைக்கு அதன் நிறுவனர் நிதி வழங்கி வருகிறார். தனிநபர்களிடமிருந்தும் நன்கொடைகள் ஏற்றுக்கொள்ளப்படுகிறது. 7 கோடி ரூபாய் முதலீட்டில் இந்தக் கல்வி வளாகத்தில் அறிவியல் மையம் அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. இயற்பியல், வேதியியல், உயிரியல், கணிணி அறிவியல் உள்ளிட்ட பாடங்களுக்கான ஆய்வகம் அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மூலம் ராம்பூர் மற்றும் அருகிலுள்ள சஹரன்பூர், ஷாம்லி, டியோபாண்ட் போன்ற பகுதிகளைச் சேர்ந்த மாணவர்கள் பலனடைவார்கள்.
ஆங்கில கட்டுரையாளர்கள்: ஸ்ருதி கெடியா | தமிழில்: ஸ்ரீவித்யா