மும்பை குடிசை டூ அமெரிக்க பல்கலைக்கழகம் – சரிதா மாலியின் ஊக்கமிகு கதை!
மும்பை குடிசைப்பகுதி பிறந்த சரிதா மாலி ஏழ்மையான சூழலிலும் பெற்றோர் அளித்த ஊக்கத்தால் ஜேஎன்யூ பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை முடித்து பிஎச்டி படிப்பிற்காக அமெரிக்கா செல்ல இருக்கிறார்.
சரிதா மாலிக்கு 28 வயதாகிறது. மும்பை புறநகர் பகுதியான காட்கோபரில் பிறந்த இவரை வாஷிங்டன் பல்கலைக்கழகமும் கலிஃபோர்னியா பல்கலைக்கழகமும் மேற்படிப்பிற்கு படிக்க அழைத்திருக்கிறது. அமெரிக்காவில் மிகவும் கவுரமான ஃபெலோஷிப்பாக கருதப்படும் சான்சிலர் ஃபெலோஷிப் இவருக்கு கிடைத்திருக்கிறது.
விமானங்கள் விண்ணில் பறப்பதை அண்ணாந்து பார்த்து வியந்த சரிதா, அதில் ஏறி உட்கார்ந்து அமெரிக்காவிற்குப் பயணிக்க இருக்கிறார்.
குடும்பச் சூழல்
சரிதாவின் அப்பா ராம்சூரத் மாலி. அம்மா சரோஜ். சரிதாவிற்கு ஒரு அக்காவும் இரண்டு சகோதரர்களும் இருக்கிறார்கள். ஆறு பேர் கொண்ட குடும்பம். அன்றாட செலவுகளை சமாளிப்பதே ராம்சூரத்திற்கு கடினமாக இருந்திருக்கிறது.
ராம்சூரத் மாலி வாழ்வாதாரத்தைத் தேடி உத்திரப் பிரதேசத்திலிருந்து மும்பை வந்துள்ளார். சரிதாவின் அம்மா சரோஜ் இரவு வெகு நேரம் வரை கண்விழித்து பூக்களைத் தொடுத்து வைப்பார். ராம்சூரத் மாலி அதிகாலையில் அவற்றை எடுத்துச் சென்று சிக்னலில் விற்பனை செய்து வந்தார்.
ஒரு சிறிய அறையில் சரிதா தனது குழந்தைப்பருவத்தை செலவிட்டார். அதே அறையில் அம்மா சமையல் செய்வார். அந்த சின்ன அறையிலேயே குழந்தைகள் அனைவரும் புத்தங்களை அடுக்கி வைத்துக்கொள்வார்கள். அங்கேயே உட்கார்ந்து படித்து அதே அறையில் படுத்து தூங்குவார்கள்.
”எங்க வீடு ரொம்ப சின்னது. அதுல ஒரு சின்ன ஜன்னல் இருந்துது. அது வழியா பார்த்தா ஒரு கொய்யா மரம் தெரியும். அதுல காய்க்கற கொய்யா ரொம்ப இனிப்பா இருக்கும். சுத்தியிருக்கற பசங்க எல்லாருக்கும் அதுலேர்ந்து பறிச்சு சாப்பிடுவாங்க. எனக்கு பத்து வயசிருக்கும்போது அந்த மரத்தை வெட்டிட்டாங்க. ரொம்ப கஷ்டமா இருந்துது. அந்த கவலையில நான் நிறைய நாள் சாப்பிடாமகூட இருந்தேன்,” என்று ஆர்வத்துடன் சரிதா நினைவுகூர்ந்தார்.
அவரது வீட்டைச் சுற்றிலும் செம்பருத்தி செடி, வேப்ப மரம் என பசுமையாக காட்சியளிக்குமாம். பசுமை மட்டுமல்ல. அந்தப் பகுதி வன்முறைக்கும் பெயர்போனது என்கிறார் சரிதா. வன்முறை, கைகலப்பு, போதைப்பொருள், கொலை, கொள்ளை சம்பவங்கள் போன்றவை சர்வ சாதாரணமாக நடக்கும் என்கிறார்.
படிப்பிற்கு முக்கியத்தும்
சரிதாவின் அப்பா ராம்சூரத் ஐந்தாம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ளார். அம்மா சரோஜ் எட்டாம் வகுப்பு வரை படித்திருக்கிறார். குழந்தைகள் தன்னைப் போல் கஷ்டப்படக்கூடாது என்பதில் ராம்சூரத் உறுதியாக இருந்தார். குழந்தைகளின் நிலை மேம்பட படிப்பு மட்டுமே ஒரே பிடிமானம் என்று நினைத்தார். அதைக் கொண்டுதான் அவர்கள் வாழ்க்கையில் முன்னேற முடியும் என்பதால் படிக்க ஊக்குவித்தார்.
ராம்சூரத், தான் சந்திக்கும் நபர்களிடம் படிப்பு பற்றி கேட்டு தெரிந்துகொள்வார். அவர்கள் எவ்வளவோ விஷயங்களைப் பற்றிப் பகிர்ந்துகொண்டாலும் படிப்பு பற்றிய தகவல்கள் மட்டும் அவர் மனதில் தங்கிவிடும். என்னென்ன கல்லூரிகள் இருக்கின்றன? என்ன படிக்க வைக்கலாம்? புத்தகங்களெல்லாம் எங்கே கிடைக்கும்? இதுபோன்ற விவரங்களை ஆர்வமாகக் கேட்டுத் தெரிந்துகொள்வார்.
கிராமப் பின்னணி கொண்டவர்கள் என்பதால் குடும்பத்தின் பெரியவர்கள் சரிதாவைப் படிக்க வைக்கவேண்டாம் என்று பலமுறை தடுத்திருக்கின்றனர். பன்னிரண்டாம் வகுப்பு முடித்ததும் திருமணம் செய்து வைக்க கட்டாயப்படுத்தினார்கள்.
ஆனால், சரிதா நன்றாகப் படித்தார். முதல் மதிப்பெண் எடுத்தார். சரிதாவின் பெற்றோர் அவருக்கு பக்கபலமாக இருந்தார்கள். யாருடைய வார்த்தைகளுக்கும் செவி சாய்க்காமல் சரிதாவைப் படிக்க வைப்பதில் ஆர்வம் காட்டினார்கள்.
பள்ளிப்படிப்பில் நல்ல மதிப்பெண்கள் எடுத்த சரிதாவிற்கு ’சோமயா காலேஜ் ஆஃப் ஆர்ட்ஸ் அண்ட் காமர்ஸ்’ கல்லூரியில் மெரிட்டில் அட்மிஷன் கிடைத்தது.
ஜேஎன்யூ பல்கலைக்கழகம்
சரிதா பிஏ முடித்தார். கல்லூரியில் இவர்தான் டாப்பர். ஜேஎன்யூ பல்கலைக்கழகம் பற்றி கேள்விப்பட்ட சரிதா நுழைவுத் தேர்வு எழுதினார். தேர்வு முடிவுகள் வெளியானபோது இறுதியாக வெளியான ஒதுக்கீடு பட்டியலில் சரிதாவின் பெயர் இடம்பெற்றிருந்தது.
சரிதா மகிழ்ச்சியடைந்தார். அதேசமயம், படிப்பிற்காக அப்பாவால் செலவு செய்யமுடியாது என்கிற கவலையும் எழுந்தது. அந்த சமயத்தில்தான் சரிதாவின் அக்காவிற்கு திருமணம் செய்து வைக்கப்பட்டிருந்தது. ஏற்கெனவே அதற்காக அப்பா கடன் வாங்கியிருந்ததால் எப்படி படிப்பிற்காக செலவு செய்வார் என கவலைப்பட்டார் சரிதா.
ஜேஎன்யூ பல்கலைகழகத்தைப் பற்றி சரிதாவின் அப்பாவிற்கு எதுவும் தெரியாது. அவருக்குத் தெரிந்ததெல்லாம் ஒன்றுதான். நாடு முழுவதுமிருந்து ஆயிரக்கணக்கானோர் எழுதிய தேர்வில் வெறும் 35 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றிருக்கிறார்கள். அதில் சரிதாவும் ஒருவர். இதை நினைத்து பெருமைப்பட்டார்.
செலவைப் பற்றிக் கவலைப்படாமல் படிப்பில் கவனம் செலுத்தச் சொன்னார் சரிதாவின் அப்பா. அதைத் தொடர்ந்து மும்பையிலிருந்து டெல்லி நோக்கி புறப்பட்டார். இது ஒரு புத்தம் புதிய உலகத்தை அவருக்குக் காட்டியது.
தனிப்பட்ட முன்னேற்றம்
ஜேஎன்யூ பல்கலைகழகத்தில் சேர்ந்து படித்தார். அந்த காலகட்டம் அவரது அறிவுத்திறனை மேம்படுத்தியதுடன் தனிப்பட்ட நபராக அவரது ஆளுமையையும் மெருகேற்றியது.
பாடப்புத்தகம் தாண்டி அவரது வாசிப்பு விரிவடைந்தது. ஜேஎன்யூ அவருக்கு ஏட்டுக் கல்வியை மட்டும் வழங்கவில்லை. கனவு காணவும் வாழ்க்கையை ரசித்து வாழவும் கற்றுக்கொடுத்தது.
படிப்பினால் மட்டுமே வாழ்க்கையில் உயர முடியும். மாற்றத்தைக் கொண்டு சேர்க்க முடியும். இதை சரிதாவின் அப்பா நம்பினார். அது உண்மையாகிப் போனது. அவரது அறிவுத்திறன் மட்டுமல்ல வாழ்க்கையைப் பற்றிய கண்ணோட்டமும் மாறிப்போனது.
ஒரு பெண் நன்றாக படித்து நல்ல வேலைக்கு சென்றால் நல்ல மாப்பிள்ளை கிடைப்பார் என்று பெற்றோர் நினைப்பதுண்டு. ஆனால் ஒரு நல்ல மருமகளாக அல்ல, ஒரு நல்ல பெண்ணாக தன்னைத் தானே மாற்றிக்கொள்ளவேண்டும் என்று சரிதா நினைத்தார்.
ஆணாதிக்க மனோபாவம் மாறவேண்டும் என்று நினைத்தார். பெண்களின் விருப்பத்திற்கு மதிப்பளிக்கப்படவேண்டும் என்று கருதினார். 2016ம் ஆண்டு சக நண்பர்களுடம் சேர்ந்து முதல் முறையாக பியூட்டி பார்லர் சென்றார். மும்பையில் ஒரே ஒரு முறை மட்டுமே திரைப்படம் பார்த்திருந்தார். ஜேஎன்யூ வந்த பிறகு நகர் முழுவதையும் வலம் வந்தார்.
இப்படி சரிதாவின் வாழ்க்கை வெகுவாக மாறிப்போனது. தற்போது பிஎச்டி படிப்பிற்காக அமெரிக்கா செல்ல இருக்கிறார். பக்தி இலக்கிய ஆய்வில் ஈடுபட இருக்கிறார்.
இந்தி இலக்கியம் ஆண்களின் கண்ணோட்டத்தில் இருந்து அதிகம் பார்க்கப்பட்ட நிலையில் பெண்களின் கண்ணோட்டத்தில் உற்று நோக்கி ஆய்வு மேற்கொள்ள இருக்கிறார்.
மும்பை குடிசைப்பகுதியில் இருந்து மெல்ல பறக்கத் தொடங்கிய சரிதா முழுவீச்சில் பரந்த வெளியில் சிறகடித்து பறக்க இருக்கிறார். இனி இவருக்கு வானமே எல்லை.
ஆதாரம்: ஹிந்தி குழு | தமிழில்: ஸ்ரீவித்யா