'என் வாக்கு இனி இந்த கட்சிக்கு தான்' - எலான் மஸ்க் வெளிப்படை கருத்து!
அமெரிக்க தற்போதைய ஆளும் அரசு நிர்வாகத்தை கடுமையாக எலான் மஸ்க் விமர்சித்திருக்கிறார்.
டெஸ்லா தலைமை நிர்வாக அதிகாரி எலான் மஸ்க், அதிபர் ஜோ பைடன் நிர்வாகம் மற்றும் ஜனநாயகக் கட்சியை கடுமையமாக விமர்சித்துள்ளார். தொழிற்சங்கத்தின் ஆதரவோடு தயாரிக்கப்படும் மின்சார வாகனங்களுக்கு அதிக வரிச் சலுகைகள் வழங்குவதாக அறிவிக்கப்பட்டதையடுத்து, மஸ்க் கடுமையாக விமர்சித்தார்.
டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவன தலைவர் எலான் மஸ்க், கடந்த காலத்தில் ஜனநாயகக் கட்சியை ஆதரித்ததாகவும் இனி குடியரசுக் கட்சிக்கு வாக்களிக்கப் போவதாகவும் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து எலான் மஸ்க் டுவிட்டரில் கருத்துகளை பதிவிட்டுள்ளார், அதில்,
"கடந்த காலத்தில் நான் ஜனநாயகக் கட்சிக்கு வாக்களித்தேன், ஏனென்றால் அவர்கள் பெரும்பாலும் கருணைக் கட்சியாக இருந்தனர். ஆனால், அவர்கள் தற்போது பிரித்தாழும் சூழ்ச்சி மற்றும் வெறுப்பின் கட்சியாக மாறிவிட்டனர். எனவே, என்னால் இனி அவர்களை ஆதரிக்க முடியாது, இனி குடியரசுக் கட்சிக்கு வாக்களிப்பேன்," என தெரிவித்துள்ளார்.
மேலும், உலகின் மிகப் பெரிய பணக்காரரான மஸ்க்,
"இனி எனக்கு எதிரான அவர்களின் மோசமான தந்திர பிரச்சாரத்தை பாருங்கள்,,," எனவும் தெரிவித்திருக்கிறார்.
தேர்தலில் கலவரத்தை தூண்டியதாக டொனால்ட் டிரம்ப் டுவிட்டர் கணக்கு தடை செய்யப்பட்டது. இதையடுத்து, டுவிட்டரை மஸ்க் வாங்குவது உறுதி செய்யப்பட்ட நிலையில், டொனால்ட் டிரம்ப் மீதான டுவிட்டர் தடை நீக்கப்படும் என மஸ்க் அறிவித்தார்.
ஜனநாயகக் கட்சியை சேர்ந்த ஜோ பைடன், நிர்வாகம் சமீபத்தில் தொழிற்சங்கங்களை அனுமதிக்கும் நிறுவனங்கள் மூலம் அமெரிக்காவில் தயாரிக்கப்படும் மின்சார வாகனங்களுக்கு அதிக வரிச் சலுகைகள் வழங்கப்படும் என அறிவித்தது. இதை மஸ்க் கடுமையாக விமர்சித்துள்ளார். காரணம், எலான் மஸ்க்-க்கு சொந்தமான டெஸ்லா நிறுவனத்தின் அமெரிக்க தொழிற்சாலைகளுக்கு தொழிற்சங்கங்கள் என்று எதுவும் இல்லை.
கடந்த ஆண்டு அமெரிக்காவின் கலிபோர்னியாவில் இயங்கி வந்த டெஸ்லா, அதன் தலைமையகத்தை அரசியல் ரீதியாக பழமைவாத டெக்சாஸ்-க்கு மாற்றியது கவனிக்கத்தக்க ஒன்று. அதுமட்டுமின்றி மஸ்க் தனது தனிப்பட்ட குடியிருப்பையும் கலிபோர்னியாவில் இருந்து டெக்சாஸ்-க்கு மாற்றினார். இதற்குக் காரணம் இந்த பகுதிகளில் மாநில வருமான வரிகள் எதுவும் விதிக்கப்படுவதில்லை.
தற்போது தான், இந்த கட்சிக்கு தான் வாக்களிப்பேன் என மஸ்க் தெரிவித்த கருத்து கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. ஆனால், மஸ்க் வாக்களிப்பது குறித்தும் எந்த கட்சிக்கு வாக்களிப்பேன் என்ற கருத்து தெரிவிப்பது இது முதல் முறையல்ல, அமெரிக்காவின் முந்தைய தேர்தலின் போது மஸ்க் தெரிவித்த கருத்து குறித்து பார்க்கையில்,
"நான் என்னை மிதவாதியாக வகைப்படுத்துவேன், குடியரசுக் கட்சி அல்லது ஜனநாயகவாதி என்று அல்ல. உண்மையில், நான் ஜனநாயகக் கட்சிக்கு வரலாற்று ரீதியாக அதிக அளவில் வாக்களித்துள்ளேன். நான் குடியரசுக் கட்சிக்கு வாக்களித்திருக்கவே முடியாது. இப்போது, இந்தத் தேர்தலில்? நான் செய்வேன்," என அவர் குறிப்பிட்டிருந்தார்.