போட்டிக்கு மத்தியில் வெற்றி பெற்ற ஆர்கானிக் பிராண்ட் - 150 கோடி வருவாய் ஈட்டும் Nature Land-இன் வெற்றிக்கதை!
இந்தியா முழுவதும் 35,000 ஏக்கருக்கு மேல் விவசாய நிலத்தை தனது செயல்பாட்டின் கீழ் கொண்டுள்ள 'நேச்சர்லாண்ட்' ஆர்கானிக்ஸ் 15,000 ரீடைல் புள்ளிகள் மற்றும் 180க்கும் மேற்பட்ட எஸ்.கே.யூக்களை கொண்டுள்ளது.
தில்லி பல்கலைக்கழகத்தில் படிப்பை முடித்தவுடன் அஜீத் கோடரா, விவசாயத்தில் ஒரு மாற்றத்தை உண்டாக்குவதற்காக ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள தனது சொந்த கிராமமான ஸ்ரீ கங்காநகருக்கு செல்லத் தீர்மானித்தார்.
விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்த அஜீத், தனது தந்தை மற்றும் படிப்பை விட்டு விவாசயத்திற்கு வந்த தனது சகோதர் அரவிந்துடன் இணைந்து செயல்பட தீர்மானித்தார். எனினும், சகோதரர்களின் இந்த முடிவை உள்ளூர் விவசாயிகள் வரவேற்கவில்லை. நிறைய செலவு செய்து படித்த இந்த சகோதரர்கள் விவசாயத்தை மேற்கொள்வதை அவர்கள் விரும்பவில்லை. கிராமவாசிகள் விவசாயத்தின் மீது நம்பிக்கை இழந்திருந்தனர்.
இருப்பினும், அஜீத் மற்றும் அரவிந்த் நம்பிக்கை இழக்கவில்லை. அவர்கள் இணைந்து இயற்கை விவசாயம் செய்ய தீர்மானித்து, 2002ல் ’நேச்சர்லேண்ட் ஆர்கானிக்சை’ (Natureland organics) துவக்கினர்.
இந்த பிராண்ட 180 எஸ்கேயூக்களை கொண்டுள்ளது. இவற்றில் பருப்பு வகைகள், சிறு தானியங்கள், பார்லி அரிசி, எண்ணெய் அடக்கும். பி2பியில் இருந்து 2016ல் டி2சி பிரிவில் நுழைந்தது. இப்போது ரூ.150 கோடி ஆண்டு வருவாய் ஈட்டுகிறது. 2020 நிதியாண்டில் ரூ.135 கோடி ஈட்டியது.
பண்ணையில் இருந்து..
விவசாய நிலத்தை இயற்கை விவசாயத்திற்கு ஏற்றதாக மாற்ற மூன்று ஆண்டுகள் ஆனது என்கிறார் அஜீத்.
“அந்த கடினமான காலங்களில் சிக்கல்களை எதிர்கொண்டோம், எங்களிடம் பணம் இல்லை. எங்கள் குடும்பம் மட்டும் அல்ல, சுற்றி இருந்த அனைவரும் எங்களை ஊக்கமிழக்கச்செய்தனர். எங்கள் முயற்சிகள் வெற்றிபெறாது, எங்கள் நேரத்தை வீணாக்குகிறோம் என எச்சரித்தனர்,” என்கிறார்.
எனினும், சகோதரர்களின் விடாமுயற்சிக்கு மெல்ல பலன் கிடைத்தது. 2005ல் ரூ.25 லட்சம் முதலீட்டில் பி2பி வர்த்தகத்தில் கோதுமை மற்றும் சென்னா கொண்டு துடிப்பான வர்த்தகத்தை உருவாக்கினர்.
“மற்ற பகுதிகளில் உள்ள விவசாயிகளிடம் எங்கள் கருத்தாக்கத்தை விளக்கினோம். இது எளிதானது அல்ல என்றாலும் பலரும் இயற்கை விவசாயத்திற்கு மாற முன்வந்தனர். பரவலாக பலரை மாற வைத்து, நேச்சர்லாண்ட் ஆர்கானிக்ஸ் நிறுவனத்தை துவக்கினோம்,” என்கிறார் அஜீத்.
தற்போது நிறுவனம் இந்தியா முழுவதும் 35 ஆயிரம் ஏக்கருக்கு மேல் விவசாய நிலங்களைக் கொண்டுள்ளது. ராஜஸ்தான், மத்திய பிரதேசம், இமாச்சல பிரதேசம், உத்தர்காண்ட், மகாராஷ்டிரா, ஆந்திரா, தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்கள் நிலங்கள் அமைந்துள்ளன.
பயிர் நிர்வாகத் திறனை வளர்த்துக்கொள்ளவும் விளைச்சலை அதிகரிக்கவும் நிறுவனம் விவசாயிகளுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கிறது.
இயற்கை விவசாயத்திற்கு மாறுவதில் உள்ள சவால்கள் பற்றி பேசும் போது, உணவு சங்கிலியில் கலப்படம் ஏற்படுவதில் இருந்து எங்கள் விவசாயிகளைக் காப்பதே எங்கள் நோக்கம் என்கிறார் அஜீத்.
வர்த்தக பயணம்
வர்த்தகம் துவங்கிய பிறகு, 2002 முதல் 2015 வரை நிறுவனம் பி2பி பிரிவில் மட்டுமே செயல்பட்டு வந்தது. எனினும், 2016ல் டி2சி பிரிவில் நுழைந்த போது அடுத்த கட்ட வளர்ச்சி சாத்தியமானது.
“சிறிய பண்ணை நிலத்தில் இருந்து பி2பி நிறுவன பயணத்தை துவக்கினோம். இருப்பினும், காலப்போக்கில், பிரிமியம் நுகர்வோருக்கு மட்டும் அல்லாமல் வெகுஜன வாடிக்கையாளர்களுக்கும் நியாயமான விலையில் ஆர்கானிக் பொருட்களைக் கொண்டு செல்ல விரும்பினோம். அப்போது தான் டி2சி பிரிவில் நுழைந்தோம்,” என்கிறார்.
நுகர்வோரின் மாறிவரும் பழக்கங்கள், முன்னுரிமைகளை உணர்ந்த சகோதரர்கள் ஆப்லைன் கடைகள், இ-காமர்ஸ் தளங்கள் என அனைத்து வழிகளையும் பரிசீலித்தனர். டி2சி பிரிவில் நுழைந்தது மூலம் நிறுவனம் வாடிக்கையாளர்களுடன் நெருக்கமான தொடர்பை ஏற்படுத்திக்கொண்டது என்கிறார் அஜீத்.
“இந்த டி2சி பிராண்ட் இப்போது 40 சதவீத வருவாய் அளிக்கிறது. இது வளர்ந்து வருகிறது,” என்று கூறுகிறார்.
24 மந்த்ரா ஆர்கானிக், ஆர்கானிக் ஹார்வெஸ்ட் உள்ளிட்ட நிறுவனங்களுடன் போட்டியிடும் நேச்சர்லாண்ட் தனது இணையதளம் மற்றும் முன்னணி இ-காமர்ஸ் தளங்கள் மூலம் வாடிக்கையாளர்களை அடைகிறது.
பத்தாண்டுகளில் நிறுவனம் 15,000 ரீடைல் புள்ளிகள், 180க்கும் மேலான எஸ்கேயூகளை அடைந்துள்ளதாக அஜீத் கூறுகிறார். சொந்த பிராண்ட் பெயரில் விற்பனை செய்வதோடு, ஆர்கானிக் இந்தியா, பிகாஸ்கெட்டின் பிபி ராயல் ஆர்கானிக், ஷார்க் டாங் புகழ் அன்வேஷன் ஆகிய பிராண்ட்களுக்கும் சப்ளை செய்கிறது.
கோதுமை, பார்லி, கடுகு, தானியங்களுக்கு விரிவாக்கம் செய்வதன் மூலம் விதைகள் பிரிவிலும் நுழைந்துள்ளது.
சந்தை வாய்ப்பு
மேலும், மேலும் பலர் ஆரோக்கியத்தில் அக்கரை கொண்டு, சுற்றுச்சூழல் விழிப்புணர்வும் கொண்டிருப்பதால் பசுமை அலை வீசுகிறது, என்கிறார் அஜீத்.
“நீடித்தத் தன்மை மற்றும் சுற்றுச்சூழல் நட்பான பொருட்களை நுகர்வோர் வாங்க விழைகின்றனர். ஆர்கானிக் விவசாயம் சுற்றுச்சூழல் நட்பானதாக பார்க்கப்படுகிறது. நீடித்த தன்மை மற்றும் தார்மீக நுகர்வு ஆகிய அம்சங்களுக்கு ஏற்றதாக அமைந்து, ஆர்கானிக் பொருட்களை தேர்வு செய்ய வைக்கிறது,” என்கிறார்.
அதே நேரத்தில் இயற்கை விவசாயம் செலவு மிக்கது. நீடித்த விவசாய முறைகள் மற்றும் சப்ளை செயின் சீராக்கம் மூலம் செலவுகளை திறம்பட கையாள்வதாக அஜீத் கூறுகிறார். சூரிய மின்சக்தி, மழை நீர் சேகரிப்பு போன்றவற்றை நிறுவனம் பயன்படுத்துகிறது.
இந்தியாவில் ஆர்கானிக் உணவு சந்தை அண்மை ஆண்டுகளில் கவனத்தை ஈர்த்து, 2023ல் 1,582.2 மில்லியன் டாலராக உள்ளது. ஐஎம்.ஏசிஆர் குழும அறிக்கைபடி, 2032ல் இந்த சந்தை 21.19 சதவீத வளர்ச்சி அடைந்து 8,918.5 மில்லியன் டாலராக இருக்கும்.
“கடந்த பத்தாண்டுகளில் எங்கள் நிறுவனம் பெரிய அளவில் வளர்ச்சி கண்டுள்ளது. பாரம்பரிய நிறுவனங்கள் பல ஆண்டுகளில் அடைந்ததை நாங்கள் பெற்றுள்ளோம். ஆர்கானிக் உணவுக்கான அதிகரிக்கும் தேவையை இது உணர்த்துகிறது,” என்கிறார் அஜீத். ஒரு சில பிராண்ட்கள் ஆர்கானிக் எனும் பெயரில் அதிக விலை வைப்பதும் சந்தையில் நடக்கிறது என்கிறார்.
நேச்சர்லாண்ட் பொருட்களின் விலை பேக் அளவுக்கு ஏற்ப அமைகிறது. உளுந்து போன்ற பருப்புகள் கிலோ ரூ.265 ஆகும். கடுகு எண்ணெய் லிட்டர் ரூ.297. விலை போட்டி தற்போது மிகவும் சவாலாக இருக்கிறது என்று கூறும் அஜீத், தங்கள் பிராண்ட் வெகுஜன மக்களுக்கான பிராண்டாக இருக்க விரும்புவதால் சந்தையில் தழைக்கும் என்கிறார்.
ஆங்கிலத்தில்: பலக் அகர்வால் | தமிழில்: சைபர் சிம்மன்
'ஆண்டுக்கு ரூ.2 கோடி வர்த்தகம்' - பழத்தோலில் ஆர்கானிக் உரம் தயாரிக்கும் இளைஞர்!
Edited by Induja Raghunathan