‘நவரசா’ - ரூ.15 கோடி திரட்டி, 12 ஆயிரம் திரைக் குடும்பத்தினருக்கு உதவிட இணைந்த பிரபலங்கள்!
நவரசா ஆந்தாலஜி மூலம் கொரோனா காலத்தில் பாதிக்கப்பட்டுள்ள திரைப்படத் தொழிலாளர்களுக்கு உதவும் நோக்கம் நிறைவேறியுள்ளதாக அதன் தயாரிப்பாளர் ஜெயேந்திரா பஞ்சாபிகேசன் தெரிவித்துள்ளார்.
கொரோனா பெருந்தொற்று காலத்தில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு வாழ்வாதாரம் இழந்தவர்களில் திரைப்படத் தொழிலாளர்களும் அடங்குவர். திரைக்குப் பின் இருந்து பணியாற்றும் தொழிலாளர்கள் இல்லையென்றால் திரைத்துறை இல்லை. இதனை மனதில் கொண்டு பிரபல இயக்குனர்களான மணிரத்னம் மற்றும் ஜெயேந்திரா பஞ்சாபகேசன் இணைந்து வெப் தொடர் ஒன்றை தயாரித்து அதில் இருந்து கிடைக்கும் நிதியை திரைப்படத் தொழிலாளர்களுக்கு கொடுத்து உதவத் திட்டமிட்டனர்.
திட்டமிடல்களுடன் 2020 அக்டோபர் மாதத்தில் திரைப் பிரபலங்கள் ஒன்று சேர்ந்து ஒன்பது குறும்படங்களின் தொகுப்பாக, ‘நவரசா’ என்னும் ஆந்தாலஜி உருவாக்கியுள்ளனர்.
நவரசங்களை அடிப்படையாகக் கொண்ட இந்த வெப் தொடரை ஒடிடி தளமான நெட்ஃபிளிக்ஸ் வருகிற ஆகஸ்ட் 6ம் தேதி வெளியிடுகிறது.
டாப் ஸ்டார்களான சூர்யா, விஜய் சேதுபதி, பிரகாஷ் ராஜ், ரேவதி, சித்தார்த், யோகிபாபு, நித்யா மேனன், ரித்விகா, பார்வதி, ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். கௌதம் மேனன், கார்த்திக் நரேன், கார்த்திக் சுப்புராஜ், பிரியதர்ஷன், பிஜாய் நம்பியார், அரவிந்த்சாமி உள்ளிட்ட 9 இயக்குனர்கள் இயக்கியுள்ளனர்.
ஏ.ஆர். ரஹ்மான், இமான், ஜிப்ரான், கோவிந்த் வசந்தா போன்ற பிரபல இசையமைப்பாளர்களுடன் ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் என தென்னிந்திய திரைப்பட்டாளங்கள் ஒன்று சேர்ந்து நவரசாவை உருவாக்கியுள்ளனர்.
கோபம், கருணை, ஆச்சரியம், காமெடி, அமைதி, பயம், அருவருப்பு, தைரியம், காதல் என்று நவரசங்களை வெளிக்காட்டும் விதமாக ‘ரௌத்திரம்’, ‘எதிரி’, ‘சம்மர் ஆப் 92’, ‘ப்ராஜெக்ட் அக்னி’, ‘பீஸ்’, ‘துணிந்த பின்’, ‘இன்மை’, ‘பாயசம்’, ‘கிட்டார் கம்பி மேல் நின்று’ உள்ளிட்ட பெயர்களில் இந்த குறும்படங்கள் உருவாகியுள்ளன.
ஓடிடி தளத்தில் நவரசா வெப் சீரியஸ் வெளியாவதையொட்டி ப்ரமோஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், நவரசா தயாரிப்பாளர்களில் ஒருவரான ஜெயேந்திரா பஞ்சாபிகேசன் இது குறித்து யுவர் ஸ்டோரி தமிழிடம் கூறுகையில்,
“கோவிட் 19 நோய் பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் திரைப்படத் தொழிலாளர்கள் பணிகளின்றி பெரிதும் பாதிக்கப்பட்டனர். இதனால் அவர்களுக்கு வாழ்வாதாரம் அளிக்கும் விதமாக வெப் சீரியஸ் உருவாக்க நானும் என்னுடைய நண்பரான மணிரத்னமும் முடிவு செய்தோம். இந்த வெப் தொடர்களில் நடித்துள்ள பெரும்பாலானவர்கள் சம்பளம் வாங்காமலேயே நடித்தனர். ஏனெனில் இதில் கிடைக்கும் நிதி, திரைத் தொழிலாளர்களுக்கு பயன்படுத்தப்படுகிறது என்பதால் அவர்கள் சம்பளம் வாங்கவில்லை,” என்றார்.
ரூ.15 கோடி இலக்கு வைத்து நவரசா ப்ராஜெக்ட் தொடங்கப்பட்டது, ஏறத்தாழ அந்த இலக்கை அடைந்திருக்கிறோம். இந்த நிதியை எந்தத் தொழிலாளர்களுக்கு வழங்குவது என்று தேர்ந்தெடுக்கும் பணியை பெஃப்சி செய்தது.
மேலும், பூமிகா அறக்கட்டளை மூலம் தொழிலாளர்களுக்கு உதவிகள் வழங்கப்பட்டன.
தொழிலாளர்களுக்கு பணமாகக் கொடுக்காமல் ரூ.1,500 டாப் அப் செய்யப்பட்ட தனியார் வங்கியின் ப்ரீபெய்ட் அட்டை இவர்களுக்கு விநியோகம் செய்யப்பட்டுள்ளது. தொழிலாளர்கள் இதில் இருந்து அவர்களுக்குத் தேவையான மளிகைப்பொருட்களை பிரபல கடைகளில் வாங்க பயன்படுத்த முடியும்.
மே மாதம் முதல் சுமார் 12 ஆயிரம் திரைத் தொழிலாளர்கள் இந்த உதவியைப் பெற்று வருகின்றனர். 3 மாதங்கள் முடிந்து விட்ட நிலையில், மேலும் 3 மாதங்களுக்கு அவர்கள் இந்த உதவியைப் பெற முடியும்.
மேலும், தற்போது திரட்டப்பட்டிருக்கும் நிதியைக் கொண்டு மேலும் இரண்டு மாதங்களுக்கு அவர்களுக்கான உதவியானது நீட்டிக்கப்படலாம். கொரோனா 3வது அலையின் போதும் இவர்களின் வாழ்வாதாரம் பாதிக்காத சூழலை ஏற்படுத்தி இருக்கிறோம், என்கிறார் ஜெயேந்திரா.