ஆந்திராவின் கிராமங்களுக்குச் சென்று இலவச நரம்பியல் சிகிச்சை அளிக்கும் பெண் மருத்துவர்!
நரம்பியல் நிபுணர் பிந்து மேனன், 23 கிராமங்களைச் சென்றடைந்து வேனில் வைத்து நூற்றுக்கும் அதிகமானோருக்கு இலவசமாக சிகிச்சையளித்து வருகிறார்.
இந்தியாவில் சுகாதார பராமரிப்பு என்பது பல ஏழை மக்களுக்கும் விளிம்புநிலை சமூகங்களுக்கும் எட்டாக் கனியாகவே உள்ளது. பெரும்பாலான நேரங்களில் நாட்டின் தொலைதூரப் பகுதிகளுக்கு முறையான சுகாதாரப் பராமரிப்பு சேவைகள் சென்றடைவதில்லை. ஆனால் ஆயுஷ்மான் பாரத், மொஹல்லா க்ளினிக் போன்ற மத்திய மற்றும் மாநில அரசுத் திட்டங்கள் மாற்றத்தை ஏற்படுத்தி வருகிறது.
இந்த நோக்கத்தில் தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களின் பங்களிப்பு இருந்து வருகிறது.
நரம்பியல் நிபுணரான பிந்து மேனன் ‘நியூராலஜி ஆன் வீல்ஸ்’ 'Neurology on Wheels' என்கிற தனது அறக்கட்டளை மூலம் ஆந்திர பிரதேசத்தின் தொலைதூரப் பகுதிகளுக்கு சுகாதார பராமரிப்பு சேவைகளைக் கொண்டு சேர்க்கிறார்.
பிந்து இந்த பகுதிகளுக்கு மருத்துவ வேன் ஒன்றில் பயணிக்கிறார். இந்த வேன் இலவசமாக நரம்பியல் சிகிச்சையளிக்கத் தேவையான வசதி கொண்டது. அத்துடன் இவர் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளையும் ஏற்பாடு செய்து வருகிறார்.
2015ம் ஆண்டு முதல் பிந்து இதுவரை 23 கிராமங்களைச் சென்றடைந்து நூற்றுக்கும் அதிகமானோருக்கு இலவசமாக சிகிச்சையளித்துள்ளார். இவர் முகாம் அமைப்பதற்கு முன்பு குழுவினர் அந்தப் பகுதியை பார்வையிட்டு உள்ளூர் மக்களிடையே சுகாதாரம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துகின்றனர். இந்த செயல்முறையில் பக்கவாத நோயின் ஆபத்துகள், அறிகுறிகளைக் கண்டறிவது, சிகிச்சைக்கு அளிக்கப்படும் மருந்துகளின் பயன்கள் ஆகியவை எடுத்துரைக்கப்படுகிறது.
இவ்வாறு விழிப்புணர்வு ஏற்படுத்திய பிறகு ஹைபர்டென்ஷன், நீரிழிவு, பக்கவாதம் ஆகியவற்றைக் கண்டறியும் ஸ்கிரீனிங் முறையை இந்த அறக்கட்டளை இலவசமாக மேற்கொள்கிறது. அத்துடன் சிகிச்சைக்குத் தேவையான மருந்துகளையும் வழங்குகிறது.
பிந்து ’தி லாஜிக்கல் இந்தியன்’ உடனான உரையாடலில் கூறும்போது,
“கிராமங்களில் பக்கவாதம் மற்றும் வலிப்பு நோய் தொடர்பான விழிப்புணர்வு இருப்பதில்லை. சிகிச்சையைப் பொறுத்தவரை பழமையான சிகிச்சை முறையையே மக்கள் தேர்வு செய்கின்றனர். பக்கவாத நோய் ஏற்படாமல் தடுப்பதே சிறந்தது. முகாம்களில் பக்கவாதம் மற்றும் வலிப்பு நோயாளிகளுக்கு ஆலோசனைகளும் வழங்கப்படுகிறது,” என்றார்.
மேலும், ”மருந்துகள் தீர்ந்துபோன பின்பு என்ன செய்வதென்று நோயாளிகள் தவிப்பது முக்கியப் பிரச்சனைகளில் ஒன்று. நோயாளிகளுக்கு இதுகுறித்து ஆலோசனை வழங்குகிறோம். நோய் இருப்பது கண்டறியப்படாமல் இருப்பதையும் கொடிய நோய்களினால் ஏற்படும் ஆபத்துகள் குறித்து போதிய விழிப்புணர்வு இல்லாததையும் எங்களது முகாம்கள் மூலம் தெரிந்துகொண்டோம். தேவையான அளவிற்கு மாற்றம் ஏற்படவில்லை என்றாலும் தற்போது நிலைமை மெல்ல மாறி வருகிறது,” என்றார்.
பிந்து ஆந்திராவில் உள்ள சில மருத்துவமனைகளில் நரம்பியல் நிபுணராக பணியாற்றியுள்ளார் என ’தி நியுஸ் மினிட்’ தெரிவிக்கிறது. 2008ம் ஆண்டில் திருப்பதி மருத்துவக் கல்லூரியில் நரம்பியல் துறை அமைப்பதிலும் பங்களித்துள்ளார்.
பிந்து மொபைல் செயலி ஒன்றை உருவாக்கியுள்ளார்.
“நாங்கள் ‘எபிலெப்சி ஹெல்ப்’ என்கிற செயலியை வடிவமைத்துள்ளோம். இதன் மூலம் மருந்துகள் எடுத்துக்கொள்ள உரிய நேரத்தில் அலெர்ட் அனுப்பும் வசதி, செக் அப் தொடர்பான உதவிகள் போன்றவற்றை நோயாளிகள் பெறலாம்,” என்கிறார்.
கட்டுரை: THINK CHANGE INDIA