பட்ஜெட் 2022: ரிசர்வ் வங்கி மூலம் புதிய டிஜிட்டல் கரன்சி; பிட்காயின் வருவாய்க்கு 30% வரி அறிவிப்பு!
ரிசர்வ் வங்கியின் விதிமுறைகளின் கீழ், 2022-23ம் ஆண்டில் டிஜிட்டல் கரன்சி அறிமுகம் செய்யப்படும் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது மத்திய பட்ஜெட் உரையில் தெரிவித்துள்ளார். மேலும் பிட்காயின் வருமானத்திற்கு 30% சதவீதம் வரி விதிக்கப்படும் என்றும் அவர் பட்ஜெட் உரையில் கூறியுள்ளார்.
2022-23 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். இது அவர் தாக்கல் செய்யும் 4வது மத்திய பட்ஜெட் ஆகும்.
இந்தியாவில் கிரிப்டோகரன்சி மீதான ஒழுங்குமுறை விதிகள் விரைவில் அமலுக்கு வரும், இதற்கான சட்டம் விரைவில் கொண்டு வரப்படும் என்று நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் முன்பு அறிவித்திருந்ந்தார். அதன் தொடர்ச்சியாக இன்றைய பட்ஜெட் உரையில் 2022ல் டிஜிட்டல் கரன்சி குறித்த அறிவிப்பை அவர் வெளியிட்டிருக்கிறார்.
உலகம் முழுவதும் பல நாடுகளை சேர்ந்த மத்திய வங்கிகள் தங்களுக்கென சொந்த டிஜிட்டல் கரன்சியை (Central Bank Digital Currency - CBDC) உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளன. இந்நிலையில், இந்திய ரிசர்வ் வங்கியும் அடுத்தாண்டு தனது சொந்த டிஜிட்டல் கரன்சியை அறிமுகம் செய்யும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், தனது இன்றைய பட்ஜெட் உரையில் கூறியிருப்பது முக்கிய அறிவிப்பாகப் பார்க்கப்படுகிறது.
“டிஜிட்டல் கரன்சி மூலம் இணைய பரிவர்த்தனை ஊக்குவிக்கப்படும். இந்திய பொருளாதாரத்தை டிஜிட்டல் கரன்சி புதிய உயரத்திற்குக் கொண்டு செல்லும். பிளாக் செயின் தொழில்நுட்பத்தில் டிஜிட்டல் கரன்சி கொண்டு வரப்படும்,” என தனது மத்திய பட்ஜெட் உரையில் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
மேலும், பிட்காயின் வருமானத்திற்கு 30% சதவீதம் வரி விதிக்கப்படும் என்றும் அவர் பட்ஜெட் உரையில் கூறியுள்ளார். டிஜிட்டல் பணத்திற்கு என புதிய வங்கி ஏற்படுத்தப்படும் என்றும், 25 மாவட்டங்களில் 75 வங்கிகள் இதற்கென செயல்படுத்தப்படும் என்றும் நிர்மலா சீதாராமன் உரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிரிப்டோகரன்சி:
பிளாக்செயின் தொழில்நுட்பத்தில்தான் கிரிப்டோகரன்சி செயல்படுகிறது . உலகிலேயே மிகவும் பாதுகாப்பான தொழில்நுடபம் ஆகும் இது. இணையத்தில் கிரிப்டோகரன்சிகளுக்காக இருக்கும் லெட்ஜர் என்று இதை கூறலாம். எந்த வங்கியின் கட்டுப்பாட்டிலும் இல்லாத தனி தனி கரன்சிகள் இது ஆகும்.
உலகம் முழுக்க கிரிப்டோ கரன்சி பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் இதை வைத்து சில மோசடிகள் நடந்து வருவதால் இப்போது டிஜிட்டல் கரன்சி கொண்டு வரப்படுகிறது.
உலகளாவிய வர்த்தக முறையில் இந்த பிட்காயின் போன்ற டிஜிட்டல் கரன்சிகளின் புழக்கமானது அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்த டிஜிட்டல் கரன்சிகளை பல்வேறு உலகப் பிரசித்திப் பெற்ற வணிக நிறுவங்களும் ஏற்றுக் கொண்டு வருகின்றன.
சென்ட்ரல் பேங்க் டிஜிட்டல் கரன்சி என்பது, ரிசர்வ் வங்கியால் அதிகாரப்பூர்வமாக விநியோகிக்கப்படும் டிஜிட்டல் வடிவிலான கரன்சி ஆகும். இவை ஏற்கனவே உள்ள கரன்சிகள் போலவே செயல்படும். ஆனால், இவை பிட்காயின், எதிரியம் போன்ற கிரிப்டோ காயின்களை போல அல்லாமல் ஒரு நாட்டின் மத்திய வங்கியால் அங்கீகரிக்கப்பட்டு, நிதிக் கோட்ப்பாடுகளின்படி செயல்படும் கரன்சிகளாக இருக்கும். சிபிடிசி கரன்சிகளைக் கொண்டு ஒன்– டு–ஒன் முறையில் ஃபியாட் கரன்சிகளாகவும் மாற்ற இயலும்.
இந்தியாவில் டிஜிட்டல் கரன்சி முறையை அறிமுகப்படுத்துவது பற்றி, கடந்த சில ஆண்டுகளாகவே ரிசர்வ் வங்கி பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாகத்தான் அடுத்தாண்டு இந்தியாவில் டிஜிட்டல் கரன்சி அறிமுகப்படுத்தப்பட இருக்கிறது.
கடந்த குளிர்கால கூட்டத்தொடரிலேயே மத்திய அரசு இந்தியாவில் கிரிப்டோகரன்சிகளை ஒழுங்குப்படுத்த மசோதா கொண்டு வர உள்ளதாக தகவல்கள் வெளியாயின. இந்தியாவில் தனியார் கிரிப்டோ கரன்ஸியை கட்டுப்படுத்தும் மசோதா, The Cryptocurrency and Regulation of Official Digital Currency Bill, 2021, என்ற பெயரில் கொண்டு வரப்பட இருந்தது. ஆனால், அந்த மசோதா தாக்கல் செய்யப்படவில்லை. இந்த நிலையில்தான் டிஜிட்டல் கரன்சியை கொண்டு வர மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
பிளாக்செயின் தொழில்நுட்பத்தால் இயக்கப்படும் கிரிப்டோகரன்சி, டிஜிட்டல் கரன்சியாக செயல்பட நீண்ட காலமாக விரும்புகிறது, ஆனால் இது முதலீட்டிற்கான சொத்துகளாகவோ அல்லது பிளாக்செயின்களில் பரிவர்த்தனைகளைச் செய்வதற்கான டோக்கன்களாகவோ அதிகளவில் பார்க்கப்படுகிறது
ஆனால், இதற்கு மாறாக, சிபிடிசி டிஜிட்டல் நாணயமாகப் பயன்படுத்தப்படுகின்றன. உதாரணமாக, INR க்கு சமமான டிஜிட்டல் நாணயம் கோட்பாட்டளவில் பணம் செலுத்துவதற்கான சட்டப்பூர்வ டெண்டராகப் பயன்படுத்தப்படலாம். மேலும், பணப் பரிமாற்றங்கள் டிஜிட்டல் லெட்ஜரில் பதிவு செய்யப்படும்.
இந்த சிபிடிசி கரன்சிகளை அறிமுகப்படுதுவதன் மூலமாக, நம் அன்றாட வாழ்வில் பயன்படுத்தும் ரூபாய் நோட்டுக்களின் உற்பத்தியானது குறைக்கப்பட்டு, நம் நாட்டின் காகிதப் பயன்பாட்டில் பெரும் பகுதியை சேமிக்க முடியும். இனி வரும் காலங்கள் இணையவழி பணப்பரிமாற்றங்களுக்கான வாய்ப்புகளே அதிகம் என்பதால் இவற்றிக்கான தேவை என்பதும் அதிகமாகவே இருக்கும்.
அதோடு இந்த டிஜிட்டல் கரன்சி மூலம் பணத்தை டிஜிட்டல் முறையில் அனுப்ப முடியும், இதேபோல் யாரிடம் இந்தப் பணம் இருக்கிறது, எங்கெல்லாம் பணப் பரிமாற்றம் செய்யப்படுகிறது என்பதையும் கண்காணிக்க முடியும்.
மேலும், பல்வேறு தரப்பினருக்கு இடையே நிரல்படுத்தக்கூடிய கட்டணங்கள், விரைவான எல்லை தாண்டிய பணம் அனுப்புதல், சில்லறை பரிவர்த்தனைகள் மற்றும் பாதுகாப்பான முறையில் நேரடி பணம் செலுத்துவதற்கு இந்த சிபிடிசி பயன்படுத்தப்படலாம்.
இந்த சிபிடிசி ஆராய்ச்சியில் சீனா முன்னோடியாக இருந்து வருகிறது. இந்தியாவில் இன்னமும் அந்தளவிர்கு ஆராய்ச்சிகள் நடத்தப்படவில்லை என்றாலும், நமது உள்ளூர் கட்டண உள்கட்டமைப்பு வலுவானது. எனவே இந்தியாவின் எதிர்கால சிபிடிசி திட்டங்களுக்கு இது ஒருபெரிய சாதகமாகப் பார்க்கப்படுகிறது.
காகித பணத்தை மட்டுமே நம்பி இருக்கும் நிலையில் இருந்து மீண்டு வருவது, குறைவான கட்டணத்தில் நிதி பரிமாற்றத்தைச் செய்வது, பணப் பரிமாற்றத்தில் ஆபத்தைக் குறைப்பது போன்றவை இந்தியாவில் டிஜிட்டல் கரன்சியை அறிமுகம் செய்ய மிக முக்கியமான காரணங்களாகப் பார்க்கப்படுகிறது.