‘எனக்கான ஒரு அடையாளத்தை உருவாக்குவேன்’ - அண்ணா கொள்ளுப் பேத்தி!
தமிழக முன்னாள் முதல்வர் அண்ணாவின் கொள்ளுப் பேத்தி, 23 வயதில் முதல் முயற்சியிலேயே யூபிஎஸ்சி தேர்வில் 171 இடத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (யூபிஎஸ்சி) சார்பாக 2019ம் ஆண்டுக்கான சிவில் சர்வீஸ் தேர்வுகளை கடந்தாண்டு செப்டம்பரில் நடத்தியது. ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎப்எஸ் என உயரிய இந்திய ஆட்சிப் பணிகளுக்கான இந்தத் தேர்வு முடிவுகள் பிப்ரவரி மாதத்திலேயே வந்திருக்க வேண்டியது. ஆனால் கொரோனா பிரச்சினையால் மற்றவைகளைப் போலவே இதுவும் தள்ளிப் போய் கடந்த வாரத்தில் வெளியானது. மொத்தம் 26 பணிகளுக்கான முடிவுகள் அறிவிக்கப்பட்டது.
இதில் இந்தியா முழுக்க பல்வேறு பகுதிகளில் இருந்தும் 825 மாணவர்கள் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளனர். தமிழகத்தில் இருந்து 44-க்கும் மேற்பட்டோர் இந்தத் தேர்வில் தேர்ச்சி பெற்றனர். அதில் நாகர்கோவிலைச் சேர்ந்த கணேஷ்குமார் தமிழகத்தில் முதலிடம் பிடித்துள்ளார். வறுமையான சூழ்நிலையில் இருந்து வெற்றி பெற்றவர்கள், மாற்றுத் திறனாளிகள் என இந்தத் தேர்விலும் போராடி வெற்றி பெற்றவர்கள் பலர்.
அந்தவகையில் தேர்வு முடிவுகள் வெளியானதும் தமிழக மக்கள் மத்தியில் அதிகம் ஆச்சர்யம் ஏற்படுத்தியவர்களில் ஒருவர் சென்னையைச் சேர்ந்த பிரித்திகா ராணி. காரணம் அவரது குடும்பப் பின்னணிதான். தமிழகத்தின் முன்னாள் முதல்வர் அண்ணாவின் கொள்ளுப் பேத்தி தான் இந்த 23 வயதேயான பிரித்திகா ராணி.
அறிஞர் அண்ணாவிற்கு குழந்தைகள் இல்லாததால், தன் சகோதரியின் மகனான பரிமளத்தை வளர்ப்பு மகனாகத் தத்தெடுத்துக் கொண்டார். அண்ணாவின் வாரிசான அந்த பரிமளம் அண்ணாத்துரையின் மகள் தான் இளவரசி. தற்போது சிவில் சர்வீஸில் வெற்றி பெற்றுள்ள பிரித்திகா ராணி; இளவரசி - முத்துக்குமார் தம்பதியின் மூத்த மகள் ஆவார்.
பொறியியல் பட்டதாரியான பிரித்திகா ராணி, யூபிஎஸ்சி தேர்வில் ஆர்வம் கொண்டு, சரியாகத் திட்டமிட்டு செய்தால் எந்தவொரு விஷயமும் கடினமானதல்ல, வெற்றிக் கனியை எளிதாக பறித்து விடலாம் என நிரூபித்திருக்கிறார். சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற வேண்டும் என நினைக்கும் பலருக்கும் நிச்சயம் பிரித்திகா ராணியின் வெற்றிச் சூட்சுமம் பயனுள்ளதாக இருக்கும்.
மிகப் பெரிய குடும்பத்தில் இருந்து வந்திருந்த போதும், ஊடக வெளிச்சத்திற்குள் வருவதை விரும்பவில்லை பிரித்திகா ராணி. இதனாலேயே சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற்ற போதும், எந்தவொரு ஊடகத்திற்கும் பேட்டி அளிக்க மறுத்து விட்டார். ஆனபோதும் அவரைப் பற்றி அவருக்கு நெருங்கிய வட்டாரத்தில் விசாரித்து நாம் சில சுவாரஸ்யத் தகவல்களை திரட்டியுள்ளோம்.
ஐஏஎஸ் ஆர்வம் வந்தது எப்படி?
சிறு வயதில் இருந்தே புத்தகம் மற்றும் செய்தித்தாள் வாசிப்பில் அதிக ஆர்வம் உடையவர் பிரித்திகா. இதனாலேயே வாசிப்பு மீது அவருக்கு தீராக் காதல் ஏற்பட்டுள்ளது. இந்தச் சூழ்நிலையில் தான் அவரது தந்தை முத்துக்குமாரின் நண்பர் மகள் சிவில் சர்வீஸ் தேர்வு பயிற்சிக்காக சில காலம் பிரித்திகா வீட்டில் தங்கியுள்ளார். அப்போது அவர் தேர்வுக்காக படிப்பதைப் பார்த்து பிரித்திகாவுக்கும் சிவில் சர்வீஸ் தேர்வுகள் மீது ஆர்வம் ஏற்பட்டுள்ளது.
விளையாட்டு வீராங்கனை
சிறுவயதில் இருந்தே டென்னிஸ் விளையாட்டில் ஆர்வம் கொண்டவராக இருந்து வந்துள்ளார் பிரித்திகா. பள்ளிகளுக்கு இடையேயான போட்டியில் பதக்கங்களைப் பெற்றுள்ளார். விளையாட்டு ஒருபுறம் இருந்தாலும் படிப்பிலும் திறமையான மாணவியாக விளங்கியுள்ளார். ஸ்போர்ட்ஸ் கோட்டா இருந்தபோதும், 92 சதவீத மதிப்பெண்கள் பெற்று பொறியியல் படிப்பில் சேர்ந்துள்ளார்.
விளையாட்டில் ஆர்வம் கொண்டவர்கள் படிப்பில் அவ்வளவாக நாட்டமாக இருக்க மாட்டார்கள் என்ற பிம்பத்தை உடைத்து, படிப்பிலும் சாதித்துக் காட்டியிருக்கிறார். கல்லூரி இறுதியாண்டு படிக்கும் போது தான், குடிமைப்பணியே தனது இலக்கு என முடிவு செய்திருக்கிறார் பிரித்திகா. 2018ம் ஆண்டு கல்லூரி படிப்பு முடிந்த அடுத்த தினமே சங்கர் அகாடமியில் சிவில் சர்வீஸ் பயிற்சிக்காக சேர்ந்து விட்டார்.
வெற்றியை வசப்டுத்திய சூத்திரம்
முதல் முறைத் தேர்விலேயே வெற்றி பெற்றிட வேண்டும் என்ற தெளிவான திட்டமிடலால், பயிற்சிக்கு சேர்ந்த முதல் வருடமே கடுமையாக படித்து தேர்வுக்கு தயாராகி உள்ளார்.
கடந்தாண்டு செப்டம்பரில் முதல் முறையாக தேர்வு எழுதியுள்ளார். அதிலேயே வெற்றிக் கனியைப் பறித்து இந்திய அளவில் 171 இடத்தைப் பிடித்திருக்கிறார்.
ஒரு சில மாணவர்களைப் போல் எந்த பாடப்பிரிவைத் தேர்ந்தெடுப்பது என்பதிலும் தெளிவாக சிந்தித்துள்ளார் பிரித்திகா. ஆந்த்ரபாலஜி எனப்படும் மானிடவியலே பிரித்திகாவின் தேர்வாக இருந்துள்ளது. ஒரு சிலர் முதலில் இந்த பாடத்தை முயற்சித்து பார்ப்போம், சரிப்பட்டு வரவில்லை என்றால் பின்னர் மாற்றிக் கொள்ளலாம் என மாற்றிக் கொண்டே இருப்பார்கள். அது தவறான அணுகுமுறை என்பதே பிரித்திகாவின் எண்ணமாம்.
ஒரு பாடப்பிரிவையே ஆழமாக படிப்பதன் மூலம்வெற்றியை வசப்படுத்தலாம் என்பதே அவரது வெற்றிக்கான சூத்திரமாக இருந்துள்ளது.
தேர்வுக்குத் தயாரான இரண்டு வருடங்களும் செல்போன், சமூகவலைதளங்கள் என எல்லாவற்றையும் ஒதுக்கி வைத்து விட்டு தீவிரமாக படித்துள்ளார் பிரித்திகா. சமயங்களில் தொடர்ச்சியாக 16 மணி நேரங்கள் கூட தேர்வுக்காக படித்திருக்கிறாராம். தன் கவனத்தை சிதற விடாமல் எந்நேரமும் தனது இலக்கு ஒன்றை நோக்கியே சிந்தித்திருக்கிறார் பிரித்திகா.
அறிஞர் அண்ணா இன்றி தமிழக அரசியல் வரலாற்றை எழுத முடியாது. இந்தி எதிர்ப்பில் தொடங்கிய தீ, இன்னும் தமிழகத்தில் அணையாமல் எரிந்து கொண்டு இருக்கிறது. அப்படிப்பட்டவரின் பேத்தி ஆயிற்றே, இந்தி தெரியாவிட்டாலும் தமிழ் மற்றும் ஆங்கிலம் வாயிலாகவே படித்து சிவில் சர்வீஸ் தேர்வை எதிர்கொண்டு வெற்றி பெற்றிருக்கிறார் பிரித்திகா.
பிரித்திகாவிற்கு ‘ராணி’ என்ற பெயரை வைத்ததே மறைந்த திமுக தலைவரும், தமிழக முன்னாள் முதல்வருமான கருணாநிதி தானாம். அண்ணாவின் மனைவி பெயரான ராணியைத் தான் பிரித்திகாவிற்கு அவர் வைத்துள்ளார்.
இந்தியாவின் சர்வதேச உறவுகள் மற்றும் இரு நாடுகளுக்கு இடையிலான உறவுகளில் பிரித்திகாவுக்கு ஆர்வம் அதிகமாம். அதனாலேயே ஐ.நா. அல்லது உலக சுகாதார அமைப்பில் பணியாற்றுவது அவரது விருப்பமாம். அதோடு பெண்களின் உரிமைகள், சுகாதாரம் மற்றும் ஆரம்பக் கல்விக்காக பணியாற்றுவதில் ஆர்வமாக இருக்கிறார்.
தனது பணியின் தாக்கம் அடிமட்ட மட்டத்தில் உள்ளவர்களுகக்கு நேரடியாக இருக்காது என்றாலும், கொள்கைகளில் பெரும்பாலானவை உலகளாவிய கட்டமைப்பை அடிப்படையாகக் கொண்டவையாக இருக்கும் என்கிறார் பிரித்திகா. முழுமையான மற்றும் நன்மை பயக்கும் கொள்கைகளை உருவாக்க சர்வதேச மேடையில் இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்த விரும்புகிறாராம் அவர்.
ஏழைகளுக்காகவும் பிற்படுத்தப் பட்டவர்களுக்காகவும் உழைத்தவர் அறிஞர் அண்ணா. எனினும் அவரது நிழலில் குளிர் காய விரும்பவில்லை, எனக்கான ஒரு அடையாளத்தை உருவாக்கிக்கொள்ள விரும்புகிறேன்,” என்கிறார் பிரித்திகா.
ஸ்டாலின் வாழ்த்து
சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற்றுள்ள அவருக்குப் பல தரப்பிலிருந்தும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன. திமுக தலைவர் மு.க.ஸ்டாலினும் பிரித்திகாவிற்கு தொலைபேசி வாயிலாக வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.
மேலும், ‘தமிழகத்தின் அரசியலுக்கு அடித்தளம் இட்டவர் அண்ணா. அவரின் கொள்ளுப்பேத்தி ஆட்சி பணிக்கு வருவது தமிழகத்திற்கே பெருமையான விஷயம். ஆட்சி பணியை அலங்கரிக்க உங்களுக்கு வாழ்த்துக்கள். அண்ணாவைப் போல் இந்திய ஒன்றியத்துக்கே வழிகாட்டும் வகையில் மென்மேலும் பல உயரங்களை அடைந்திட வேண்டும்’ என வாழ்த்து மடல் ஒன்றினையும் பிரித்திகாவுக்காக ஸ்டாலின் எழுதியுள்ளார்.
பிரித்திகாவின் இந்த வெற்றி தமிழகத்திற்கே நம்பிக்கை ஊட்டும் செய்தியாக, மகிழ்ச்சி அளிக்கும் செய்தியாக வந்துள்ளது. அவரின் எண்ணங்கள் எல்லாம் ஈடேறி, கொள்ளுத்தாத்தா வழியில் அவரும் மக்களுக்கு சேவை செய்யும் களத்தை தேர்வு செய்துள்ளார். அவருக்கு அவர் விரும்பியபடி IFS பணி கிடைத்து, மென்மேலும் வெற்றிகளைக் குவிக்க வாழ்த்துக்கள் பிரித்திகா ராணி.
கட்டுரை தொகுப்பு: ஜெயஸ்ரீத்ரா