ரூ.20 லட்சம் கோடி பேக்கேஜில் சிறு-குறு நிறுவனங்களுக்கு என்ன ஒதுக்கீடு?
5 அம்ச நோக்கங்களுடன் ரூ.20 லட்சம் கோடி மதிப்பிலான ‘சுயசார்பு இந்தியா’ திட்டத்தில் சிறு, குறு மற்றும் மத்திய (MSME) நிறுவனங்களுக்கு 3 லட்சம் கோடி ரூபாய் வரை கடன் உதவி.
கொரோனா தடுப்பில் பிரதமர் மோடி நேற்று அறிவித்த ரூ.20 லட்சம் கோடி பொருளாதார மேம்பாட்டு திட்ட விவரங்களை இன்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கி அறிவித்தார். அதில், ‘சுயசார்பு பாரதம்’ என்ற திட்டப் பெயரில் 5 அம்ச நோக்கங்களுடன் நிதி ஒதுக்கீடு செயல்படுத்தப்படும் என்று தெரிவித்தார் அவர்.
பிரதமர் ‘ஆத்மநிர்பர் பாரத்’ என்பதற்கு தமிழின் அர்த்தத்தை தெரிவித்த நிதி அமைச்சர், ‘சுயசார்பு இந்தியா’ என்பதே அது ஆகும் என்றார். தற்சார்பு நிலையை எட்டுவதற்கான நோக்கத்துடன் திட்டங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார் நிர்மலா சீதாராமன். அவர் உரையில் இருந்து சில முக்கிய அறிவிப்புகள்:
- 5 அம்ச நோக்கங்களுடன் ரூ.20 லட்சம் கோடி மதிப்பிலான ‘சுயசார்பு இந்தியா’ திட்டம் உருவாக்கம்.
- சிறு, குறு மற்றும் மத்திய (MSME) நிறுவனங்களுக்கு 3 லட்சம் கோடி ரூபாய் வரை கடன் உதவி.
- ‘MSME நிறுவனங்களுக்கு பிணையற்ற (collateral free) கடன் உதவித் திட்டத்தின் கீழ் 3 லட்சம் கோடி ரூபாய் அளவு அக்டோபர் 31ம் தேதி வரை அளிக்கப்படும்.
- நிதி நெருக்கடியில் இருக்கும் சிறு-குறு நிறுவனங்களுக்கு ரூ.20 ஆயிரம் கோடி நிதி உதவி.
- 200 கோடி ரூபாய் மதிப்பு வரையான அரசு டென்டர்களில் சர்வதேச நிறுவனங்கள் இனி அனுமதிக்கப்படாது. இந்த டென்டர்களில் இந்திய நிறுவனங்களுக்கு மட்டுமே அனுமதி.
- சுமார் 72 லட்சம் நிறுவன ஊழியர்களுக்கு அளிக்கப்படும் பிஎஃப் தொகையை கடந்த மார்ச், ஏப்ரல் மற்றும் மே மாதம் அரசு வழங்கி இருந்தது. அது தற்போது ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களுக்கும் நீட்டிக்கப்பட்டுள்ளது. அரசு செலுத்தப் போகும் இதன் மதிப்பு 2500 கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது.
- வங்கிசாரா நிதி நிறுவனங்கள், வீட்டுக்கடன் வசதி நிறுவனங்களுக்கு ரூ.30,000 கோடி நிதியுதவி.
- வங்கிச் சேவை இல்லாத நிதி நிறுவனங்களுக்கு சுமார் 30,000 கோடி ரூபாய் நிதி
- மின்சார விநியோக வாரியங்ளுக்கு 90 ஆயிரம் கோடி ரூபாய் நிதி வழங்கப்படும்.
- தேசிய நிதி மேம்பாடு கழகத்திற்கு சுமார் 40 ஆயிரம் கோடி ரூபாய் செலுத்தப்படும்.
- டிடிஎஸ் வரிப்பிடித்தம் அடுத்த ஆண்டு மார்ச் 31 வரை 25% குறைப்பு. இதன் மூலம் மக்கள் கைகளில் சுமார் ரூ.50000 கோடி அளவிற்கு பணப்புழக்கம் இருக்கும்.
- வருமான வரித்தாக்கல் கெடு தேதி 4 மாதங்கள் நீட்டிப்பு.
MSME முதலீடு மற்றும் விற்றுமுதல் அடிப்படையில் சிறு-குறு-மத்திய நிறுவனங்களாக வகுக்கப்படுகிறது. இதன் வரையறையில் இன்று மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி,
- 25 லட்சம் முதலீட்டில் இருந்து தற்போது 1 கோடி முதலீடு கொண்டவை சிறு நிறுவனம் ஆகும்.
- 1 கோடி ரூபாய் முதலீட்டில் இருந்து தற்போது 10 கோடி முதலீட்டுள்ளவை குறு நிறுவனங்கள் ஆகும்.
- 10 கோடி முதலீட்டில் இருந்து 20 கோடி வரை முதலீட்டுள்ள நிறுவனம் மத்திய நிறுவனம் ஆகும்.