கோவையில் கொடி கட்டி பறக்கும் ஐ.டி. நிறுவனங்கள்; ஆண்டுக்கு 20% அசுர வளர்ச்சி!
ஜவுளி நகரமாக விளங்கிய கோவை இப்போது ஐ.டி. நிறுவனமாக அசுர வளர்ச்சி அடைந்து வருகிறது.
ஜவுளி நகரமாக விளங்கிய கோவை இப்போது ஐ.டி. நிறுவனமாக அசுர வளர்ச்சி அடைந்து வருகிறது.
அசுர வளர்ச்சியில் ஐ.டி. துறை:
ஒரு காலத்தில் கோவை என்றாலே ஐவுளி நகரம் என அழைக்கப்பட்டது. அந்த அளவிற்கு ஜவுளி ஆலைகள் மற்றும் ஜவுளி சார்ந்த வர்த்தகம் கொடிக்கட்டி பறந்தது. அதன்பின்னர், மோட்டார், இன்ஜின், போல்ட், நட்டு, மெஷினரி போன்ற சிறு, குறு நிறுவனங்கள் அதிகரிக்க தொடங்கின. அதனையடுத்து, கார் மற்றும் கனரக வாகனங்கள் தயாரிப்பு என ஆட்டோமொபைல்ஸ் நிறுவனங்கள் அதிகரிக்க ஆரம்பித்தது.
இதனால் சென்னைக்கு அடுத்தப்படியாக தொழில் நகரமாக கோவை வளர ஆரம்பித்தது. தற்போது தமிழகத்தின் தலைநகரான சென்னைக்கே டப் கொடுக்கும் அளவிற்கு கோவையில் ஐ.டி. நிறுவனங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
சென்னை, மும்பை, கொல்கத்தா, டெல்லி, பெங்களூரு போன்ற முதன்மை நகரங்களில் மட்டுமே கோலோச்சி வந்த முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், தற்போது தங்களது கிளைகளை கோவையில் தொடங்கி வருகின்றன. குறிப்பாக கொரோனா பெருந்தொற்றுக்கு பின்னதாக சிறியதும், பெரியதுமாக நூற்றுக்கணக்கான ஐ.டி. நிறுவனங்கள் கோவையில் கால் பதிக்க ஆரம்பித்துள்ளன.
இதுகுறித்து இந்திய தொழில்கள் கூட்டமைப்பின் ( சிஐஐ ) கோவை கிளை முன்னாள் தலைவர் பிரஷாந்த் ஊடகம் ஒன்றிற்கு அளித்த பேட்டியில்,
“கோவை நகரத்தில் ஐ.டி. நிறுவனங்கள் சிறப்பான வளர்ச்சி காண காலநிலை, உள்கட்டமைப்பு மற்றும் வாழ்க்கைத்தரம் ஆகியவை முக்கிய பங்காற்றுகிறது. எதிர்காலத்தில் சுமார் 30 லட்சம் சதுர அடி நிலப்பரப்பில் ஐ.டி. தொழிலை விரிவுபடுத்த அதிக வாய்ப்புள்ளது,” என்றார்.
டெக் பார்க் சூழ் கோவை:
அவிநாசி சாலையில் டைடல் பார்க் மற்றும் எல்காட் பார்க், மருதமலை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் TICEL பயோ டெக்னாலஜி பார்க், கீரணத்தம் கே.ஜி.ஐ.எஸ்.எல் டெக் பார்க், ஈச்சனாரியில் ரத்தினம் டெக் ஜோன், சரவணம்பட்டி இந்தியா லேண்ட் டெக் பார்க், கேசிடி டெக்பார்க் என அரசு மற்றும் தனியார் தொழில்நுட்ப பூங்கா கட்டிடங்கள் அனைத்தும் ஐ.டி. நிறுவனங்களால் நிறைந்துள்ளன.
சமீபத்தில் நடந்த உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் 1.60 மில்லியன் சதுர அடியில் ஐ.டி பார்க் கட்ட கே.ஜி.ஐ.எஸ்.எல் நிறுவனம் ஒப்பந்தம் செய்தது. மேலும், மலுமிச்சம்பட்டி பகுதியில் எல் & டி நிறுவனம் 1.85 மில்லியன் சதுரடி பரப்பளவில் ஐ.டி பார்க் கட்டும் பணி நடைபெற்று வருகிறது.
நீலாம்பூர் பகுதியில் கே.பி.ஆர் குழுமத்தின் ஐ.டி பார்க், ஆதித்யா டெக் பார்க் அமைக்கும் பணிகளும் முழுவீச்சில் நடந்து வருகின்றன. காளப்பட்டியில் உள்ள எஸ்.வி.பி ஐ.டி பூங்காவை விரிவாக்கம் செய்யும் பணிகளும் நடந்து வருகின்றன.
சென்னை, பெங்களூரு போன்ற முதன்மை நகரங்களில் நிலவும் போக்குவரத்து நெரிசல் காரணமாகவே முன்னணி ஐ.டி. நிறுவனங்கள் கோவைக்கு மாறி வருவதாக தொழில் நிபுணர்கள் கூறுகின்றனர். மேலும், கோவையில் உள்ள கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் இருந்து உலகத்தரம் வாய்ந்த பட்டதாரி இளைஞர்கள் கிடைப்பதும் ஐ.டி. நிறுவனங்கள் கோவையை குறிவைக்க காரணமாக அமைந்துள்ளன.
இதன் விளைவாக, 2024ம் ஆண்டு நிலவரப்படி, ஐ.டி. நிறுவனங்களின் எண்ணிக்கை 744 ஆக அதிகரித்துள்ளது. அதாவது, ஓராண்டிலேயே ஐ.டி. நிறுவனங்களின் வளர்ச்சி 20 சதவீதம் வரை உயர்ந்துள்ளது.
இதுகுறித்து ஐ.டி.நிறுவனத்தின் தலைமை அதிகாரிகள் கூறுகையில்,
“சென்னை, பெங்களூரு, கொல்கத்தா, டெல்லி, மும்பை போன்ற மெட்ரோ நகரங்களுடன் ஒப்பிடும் போது, கோவையில் காஸ்ட் ஆப் லிவிங் மிகவும் குறைவாக உள்ளது. இது தொழில்முனைவோரை மட்டுமின்றி பணியாளர்களையும் கோவை நோக்கி படையெடுக்க வைத்துள்ளது,” என்கின்றனர்.
தமிழகத்தில் சென்னைக்கு அடுத்தப்படியாக கோவையின் வளர்ச்சி வேகமாக இருக்கும் என தொழில்நுட்பத்துறை வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.