Nykaa ஐபிஓ: முதல் நாளே பங்குவிலையில் 96% லாபம் கண்ட நைகா!
பங்கு சந்தையில் பட்டியலிடப்பட்ட தினத்தன்று நைகா (Nykaa ) நிறுவனத்தின் பங்கு விலை அதன் வெளியீட்டு விலையை விட 96 சதவீதம் உயர்ந்து கவனத்தை ஈர்த்துள்ளது.
நைகா (Nykaa) நிறுவனத்தின் பங்கு விலை பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட புதன் கிழமை கிட்டத்தட்ட 100 சதவீத அதிகரித்து முதலீட்டாளர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றியுள்ளது.
நைகா பங்கு விலை பொது வெளியீட்டின் போது ரூ.1,125 எனும் அளவில் இருந்த நிலையில், அதன் பங்கு விலை முதல் நாளில் 80 சதவீதத்திற்கு மேல் உயர்ந்தது.
வர்த்தகத்தின் போக்கில் நிறுவனப் பங்கு விலை தேசிய பங்குச்சந்தையில் ரூ.2,208 எனும் அளவைத் தொட்டது. இது பொது வெளியீட்டு விலையை விட 96 சதவீத வளர்ச்சியாகும். சந்தை துவக்கத்திற்கு முந்தைய விலையான ரூ.2,018 உடன் ஒப்பிடும் போது இது 9.42 சதவீதம் அதிகம்.
பட்டியலிடப்படுவதற்கு முன் நைகா பங்குகளுக்கு வெளிச் சந்தையில் நல்ல தேவை இருந்தது.
நிறுவனத்தின் சந்தை மூலதன மதிப்பு ரூ.1,04,42, 232.93 லட்சம் கோடியாக இருந்தது. 3,43,24,631 அளவிலான பங்குகள் பரிவர்த்தனை செய்யப்பட்டன.
மிகவும் அரிதான லாபம் ஈட்டும் ஸ்டார்ட் அப் நிறுவனங்களில் ஒன்றான நைகா நிறுவனப் பங்கு வெளியீடு தொடர்பான எதிர்பார்ப்பு அதிகம் இருந்தது.
இந்த நிதியாண்டில், இந்நிறுவனம் ரூ.4,045.98 கோடி மொத்த சரக்கு விற்பனை மதிப்பை கொண்டிருந்தது. இது முந்தைய நிதியாண்டை விட 50.7% அதிகம்.
அழகுக் கலை மற்றும் தனிநபர் நலம் நிறுவனமான நைகாவின் வருவாய் 38 சதவீதம் அதிகரித்து ரூ.2,440.89 கோடியாக இருந்தது. 2020 நிதியாண்டில் ரூ.16.30 கோடி நஷ்டம் ஈட்டியதற்கு மாறாக 2021 நிதியாண்டில் ரூ.61.95 கோடி லாபம் ஈட்டியது முக்கிய செய்தியாகும்.
நிறுவன பங்கு வெளியீட்டு 81.78 மடங்கு அதிக விண்ணப்பங்களை ஈர்த்தது. நிறுவனம் புக் பில்டிங் முறையில் ரூ.5,351.92 கோடி திரட்டியது. இது ரூ.630 கோடிக்கான புதிய வெளியீட்டை கொண்டிருந்தது மற்றும் ரூ. 4,721.92 கோடிக்கான விற்பனை வாய்ப்பை கொண்டிருந்தது. ஐபிஓ விலை ரூ. 1,085-1,125 என இருந்தது.
பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டு பெரும் வரவேற்பை பெற்ற பிரெஷ்வொர்க்ஸ் மற்றும் ஜொமேட்டோ ஆகிய நிறுவனங்கள் வரிசையில் நிறுவனமும் இணைந்துள்ளது.
ஆங்கிலத்தில்: திம்மையா புஜாரி | தமிழில்: சைபர் சிம்மன்