‘கணித பூங்கா’ - கணக்குப் பாடத்தை கற்கண்டாக மாற்றிய பலே ஆசிரியர்!
ஒடிசா மாநிலத்தில் உள்ள அரசு தொடக்கப்பள்ளி ஆசிரியர் ஒருவர் கணக்கை பிள்ளைகளுக்கு பிடித்த சப்ஜெக்ட்டாக மாற்ற புதுமையான வழியை கடைபிடித்துள்ளார்.
‘கணக்கு பிணக்கு ஆமணக்கு’ என்றார் பாரதியார், அவர் சொன்னது போலவே அன்றைய காலந்தொட்டு, இன்று வரை பிள்ளைகளுக்கு கணக்கு பாடம் என்றாலே ஆமணக்கு போல் கசக்கத் தான் செய்கிறது.
பள்ளியில் படிக்கும் பிள்ளைகளில் பெரும்பாலானோருக்கு ஆங்கிலத்திற்கு அடுத்தபடியாக கணக்கு வில்லனாக உள்ளது. அதுவும் மதிய வேளைகளில் சாப்பாட்டிற்கு பிறகு கணக்கு பாடப்பிரிவு இருந்தால் சொல்லவே வேண்டாம், பாதிக்கும் மேற்பட்ட மாணவர்கள் அரை தூக்கத்தில் மிதக்க ஆரம்பித்துவிடுகிறார்கள்.
என்ன தான் ஆசிரியர்கள் ஆடிப்பாடி சொல்லிக்கொடுத்தாலும் கணக்கு ஒரு சுவாரஸ்யமான பாடமாக மாணவர்கள் மத்தியில் இடம் பிடிக்கவில்லை.
ஆனால், ஒடிசா மாநிலத்தில் உள்ள அரசு தொடக்கப்பள்ளி ஆசிரியர் ஒருவர் கணக்கை பிள்ளைகளுக்கு பிடித்த சப்ஜெக்ட்டாக மாற்ற புதுமையான வழியை கடைபிடித்துள்ளார்.
கணக்கை கற்கண்டாக மாற்றிய ஆசிரியர்:
ஒடிசா மாநிலம் பர்கர் மாவட்டத்தில் உள்ள பைக்மால் பிளாக் பகுதியைச் சேர்ந்த அரசு பள்ளி ஆசிரியரான சுபாஷ் சந்திர சாஹு தனது பள்ளி குழந்தைகளின் மனதில் இருந்து கணிதம் குறித்த அச்சத்தை போக்கவும், அவர்களுக்கு தரமான கல்வியை வழங்கவும் ‘கணித பூங்கா’ ஒன்றை உருவாக்கியுள்ளார்.
பூஜாரிபாலியில் உள்ள அரசு தொடக்கப்பள்ளி வளாகத்தில் உள்ள இந்த கணித பூங்காவில் விளையாடிக்கொண்டே மாணவர்கள் எளிமையாக கணிதம் கற்கின்றனர்.
பர்கர் மாவட்டத்தில் உள்ள லக்மாரா பஞ்சாயத்தின் கிளஸ்டர் ரிசோர்ஸ் சென்டர் ஒருங்கிணைப்பாளர் (CRCC) சுபாஷ் சந்திர சாஹு, குழந்தைகளுக்கு வேடிக்கையான ஊடாடும் முறையில் கணிதம் கற்பிக்க 435.6 சதுர அடி பரப்பளவில் ஒரு பூங்காவை உருவாக்கியுள்ளார்.
கணித பூங்கா:
வர்ணம் பூசப்பட்ட பாறைகள் முதல் விதானம் மற்றும் பெஞ்சுகள் வரை பூங்காவில் உள்ள ஒவ்வொரு அம்சமும் வடிவியல் வடிவங்கள், கணித சின்னங்கள் அல்லது எண்களைக் குறிக்கிறது. கணிதத்தின் அடிப்படைகள் மற்றும் கொள்கைகளை மாணவர்கள் நடைமுறையில் புரிந்து கொள்ளக்கூடிய பல விஷயங்களை அவர் கணித பூங்காவில் செய்துள்ளார்.
பல்வேறு கணிதவியலாளர்கள் மற்றும் கோட்பாடுகள் பற்றிய தகவல்களை சித்தரிக்கும் சுவர் ஓவியங்கள் மற்றும் ஸ்டாண்டீகளும் உள்ளன. நான்கு மாதங்களுக்கு முன் செயல்படத் துவங்கிய இந்த பூங்கா, குழந்தைகளை கவரும் மையமாக மாறியுள்ளது. இதற்கான செலவுகளை ஆசிரியர் சுபாஷ் மற்றும் கிராமத்தைச் சேர்ந்த உதவும் குணம் கொண்ட சில நபர்கள் ஏற்றுக்கொண்டுள்ளனர்.
குழந்தைகளை கணிதத்தில் தேர்ச்சி பெறச் செய்வதே இதன் நோக்கம் எனக்கூறும் சுபாஷ்,
“இங்குள்ள எங்கள் மாணவர்களுக்கு ஆங்கிலம் மற்றும் கணிதத்தில் தேர்ச்சி பெறுவதற்கான திறமை இல்லை. குழந்தைகளுக்கு எப்போதுமே கணிதம் மிகவும் பயமுறுத்தும் பாடமாக உள்ளது. கணிதத்தை எளிதாகவும் வேடிக்கையாகவும் மாற்றுவதன் மூலம் அவர்களிடையே பயத்தை நீக்கி ஆர்வத்தைத் தூண்ட விரும்பினோம்,” என்கிறார்.
உண்மையில், சாஹுவின் கற்றலுக்கான இந்த புதிய அணுகுமுறை, புஜாரிபாலி கிராமத்திற்கு ஒரு தனித்துவமான அடையாளத்தை உருவாக்கியுள்ளது.
2020 ஆம் ஆண்டில் கோவிட்-19 பரவியதைத் தொடர்ந்து பள்ளிகள் மூடப்பட்டபோது, சாஹு எழுத்துக்கள், எண்கள், வரைபடங்களில் கற்றல் பொருட்களை வரைந்து மரங்களில் வெவ்வேறு வரைபடங்களைத் தொங்கவிட்டு அவற்றின் கீழ் கிராம குழந்தைகளுக்கு பாடம் கற்பித்துள்ளார்.
புஜாரிபாலி ஆரம்பப் பள்ளியின் குழந்தைகள் மட்டுமின்றி, இந்த பூங்கா அண்டை பகுதிகளில் உள்ள பள்ளிகளிலிருந்தும், சில சமயங்களில் அண்டை மாநிலமான சத்தீஸ்கரில் இருந்தும் மாணவர்களை அழைத்து வந்து காண்பிக்கும் அளவிற்கு பிரபலமடைந்துள்ளது.
"இந்தப் பூங்கா அவர்களை ஈடுபாட்டுடன் வைத்திருக்கவும், அவர்கள் விளையாடும்போது கற்றுக்கொள்ளவும் வடிவமைக்கப்பட்டுள்ளது. நீண்ட நாட்களுக்கு பிறகு பள்ளிகள் திறக்கப்பட்டதால், மாணவர்கள் வகுப்பறையில் கவனம் செலுத்த முடியாமல் சிரமப்படுகின்றனர். ஆனால், பூங்காவில், வகுப்பு நேரத்தைத் தாண்டி நிறுவல்களின் உதவியுடன் தொகைகள் மற்றும் கற்றல் அட்டவணைகள் செய்து நேரத்தை செலவிடுகிறார்கள்.”
பின்னர், அவர் தனது கிராமத்தில் உள்ள ஒவ்வொரு வீட்டிற்கு வெளியேயும் வெவ்வேறு விளக்கப்படங்களை வைக்கத் தொடங்கினார், இதனால் குழந்தைகள் வெளியே வரும்போதெல்லாம் ஏதாவது கற்றுக்கொள்ளலாம்.
கிராமச் சாலைகளில் சுதந்திரப் போராட்ட வீரர்களின் படங்கள் மற்றும் அவர்களைப் பற்றிய தகவல்கள் அடங்கிய சாட்களை வைத்துள்ளார். இதன் மூலம் பிள்ளைகள் வெளியே விளையாட வரும் போது கூட அந்த சிலை யாருடையது, அவர் என்ன செய்துள்ளார் என்பதை அறிந்து கொள்ள உதவுகிறது.
தகவல் உதவி - நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் | தமிழில் - கனிமொழி