‘மின்வாகனப் பிரிவில் போட்டியை வரவேற்கிறோம்’ - ஓலா நிறுவனர் பாவிஷ் அகர்வால்!
தொழில்நுட்பங்களை இறக்குமதி செய்வதற்கு பதிலாக, இந்தியாவிலேயே தொழில்நுட்பத்தை உருவாக்க வேண்டும் என ஓலா நிறுவனர் பவிஷ் அகர்வால் கூறியுள்ளார்.
மின் ஸ்கூட்டர்கள் அறிமுகம் மூலம் தேசத்தையே திரும்பிப் பார்க்க வைத்துள்ள ஓலா நிறுவனர் பாவிஷ் அகர்வால், மின்வாகனச் சந்தையில் போட்டி தேவை என்றும் போட்டியால் எந்த பிரச்சனையும் இல்லை என உற்சாகமாகக் கூறியுள்ளார்.
ஓலா நிறுவனம், ஓலா எஸ்1 மற்றும் ஓலா எஸ்1 புரோ ஆகிய மின்ஸ்கூட்டர்களை அறிமுகம் செய்வதாக இந்திய சுதந்திர தினத்தன்று அறிவித்தது. புதிய மின் ஸ்கூட்டர்களின் விலை மற்றும் சிறப்பசங்கள் தொடர்பான விவரங்களை ஓலா நிறுவனர் பாவிஷ் அகர்வால் வெளியிட்டார்.
தமிழகத்தில் கிருஷ்ணகிரி அருகே அமைந்துள்ள ஓலா பியூச்சர் பேக்டரி-யில் உற்பத்தியாகும் இந்த ஸ்கூட்டர்களின் அனைத்து பாகங்களும் இந்தியாவிலேயே உருவாக்கப்பட்டவை என பாவிஷ் அகர்வால் தெரிவித்தார்.
மின் ஸ்கூட்டர் அறிமுக நிகழ்ச்சியின் போது, செய்தியாளர்களிடம் உரையாடிய போது, சர்வதேச மின்வாகன ஜாம்பவான் நிறுவனமான டெஸ்லா நிறுவனர் எலன் மஸ்க் இந்தியாவில் இறக்குமதி வரி அதிகமாக இருப்பது கருத்து தெரிவித்துள்ளது குறித்து கேட்டனர்.
இந்த கேள்விக்கு பதில் அளித்த பாவிஷ் அகர்வால்,
“இந்திய மின் வாகனத் துறைக்கு போட்டி தேவை. போட்டியால் எந்த பிரச்சனையும் இல்லை, சொல்லப்போனால் போட்டியை நான் வரவேற்கிறேன், எனத் தெரிவித்தார். மேலும் அதிக நிறுவனங்கள் வரும் போது மின்வாகன சந்தை விரிவடையும். மற்ற வாகனங்களுக்கு பதிலாக எல்லோரும் மின்வாகங்களைத் தேர்வு செய்யும் சூழலை நாம் உருவாக்க வேண்டும்,” என்றும் அவர் தெரிவித்தார்.
எனினும் போட்டி நிறுவனங்கள் அறிவுசார் சொத்துரிமையை இறக்குமதி செய்யாமல், இந்தியாவிலேயே தொழில்நுட்பத்தை உருவாக்க வேண்டும் என்று அவர் கூறினார்.
இந்தியச் சூழலில் முதலீடு செய்வது அவசியம், ஆனால் இறக்குமதி செய்வதன் மூலம் இது சாத்தியம் இல்லை என்றார். வலுவான இந்தியாவை உருவாக்குவதே நோக்கம் என்றும் ஓலா அதைத் தான் செய்வதாகவும் தெரிவித்தார்.
500 ஏக்கர் பரப்பில் அமைந்துள்ள ஓலா ஆலை, முழுவதும் தானியங்கிமயமானது என்றும், ஆண்டுக்கு 10 மில்லியன் மின்வாகனங்களை உற்பத்தி செய்யும் திறன் கொண்டது என்றும் அவர் தெரிவித்தார். இந்த ஆலையின் கட்டமைப்பு, தொழில்நுட்பம் எல்லாம் இந்தியாவில் உருவாக்கப்பட்டது என்றும் தெரிவித்தார்.
"நாங்கள் உருவாக்கியுள்ள சில தொழில்நுட்பங்களுக்கு அறிவுசார் சொத்துரிமைக்கு விண்ணப்பித்துள்ளோம். இவற்றில் சில காப்புரிமைகளுக்கு நான் இணை உரிமையாளர். இந்தியாவை உலகிற்காக உருவாக்க வேண்டும் என்பது தான் எங்கள் எண்ணம். உலகில் உள்ள நிறுவனங்களும் இந்தியாவுக்கு வந்து இந்தியாவில் உற்பத்தி செய்ய வேண்டும் என்பதே முக்கியம். தொழில்நுட்பத்தை இறக்குமதி செய்வது மட்டும் போதாது,” என்று அவர் கூறினார்.
ஆலையின் முதல் கட்டத்தை பூர்த்தி செய்துள்ளோம். ஓராண்டில் 2 மில்லியன் வாகனங்களை உற்பத்தி செய்வோம்.
இந்தியாவில் முற்றிலும் வடிவமைப்பக்கப்பட்டு, உருவாக்கப்பட்ட வாகனம் என்பதில் பெருமிதம் கொள்கிறோம் என்றும் அவர் தெரிவித்தார்.
இந்தியாவில் இருந்து உலகிற்காக சர்வதேசத் தரத்திலான சேவைகளை உருவாக்கும் தகுதியும், திறனும் இந்தியாவுக்கு இருப்பதாக எப்போதும் நம்புவதாகவும், ஓலா எஸ்1 மூலம் இதை நிறைவேற்றியிருப்பதாகவும், பாவிஷ் அகர்வால் தெரிவித்தார்.
கொரியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட செல்கள் தவிர பெரும்பாலான பாகங்கள் அனைத்தும் இந்தியாவில் உருவாக்கப்பட்டுள்ளன. இந்தியாவின் சிறந்த பொறியாளர்காள் இந்த வாகனத்தை உருவாக்கியுள்ளதாக அவர் தெரிவித்தார்.
ஓலா நிறுவனம் சில வாரங்களுக்கு முன் வாகன முன்பதிவை இணையம் மூலம் துவக்கியது.
"நாடு முழுவதும் 1,000 நகரங்களில் இருந்து பதிவுகள் வந்துள்ளன. செப்டம்பர் 8 முதல் விற்பனை மற்றும் அக்டோபரில் இந்த பதிவுகளுக்கு முதலில் டெலிவரி துவங்கும் என்றும் அவர் தெரிவித்தார்.