செப் 8 முதல் விற்பனை; அக்டோபரில் டெலிவரி: ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விவரங்கள்!
இரண்டு மாடல்களில் வெளியான ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்!
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகமாகி இருக்கிறது. ஆண்டுக்கு 10 மில்லியன் வாகனங்கள் தயாரிக்கும் வகையில் ஓலா நிறுவனம் தமிழ்நாட்டில் தனது எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் உற்பத்தி ஆலையை நிறுவி இருக்கிறது.
கடந்த சில நாட்களாக அதன் உற்பத்தித் தொடங்கி நடைபெற்று வருகிறது. உற்பத்தி தொடங்கியதை அடுத்து, சமீபத்தில் தனது எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கான முன்பதிவை ஆரம்பித்தது ஓலா.
499 ரூபாய் செலுத்தி வாடிக்கையாளர்கள் முன்பதிவு செய்துகொள்ளலாம் என்று அறிவித்த நிறுவனம், சுதந்திர தினத்தன்று தனது ஸ்கூட்டரை அறிமுகப்படுத்த போவதாக அறிவித்தது.
அதன்படி, நேற்று மின்சார வாகன சந்தையில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகம் நடந்தது.
S1 மற்றும் S1 pro என இரண்டு மாடல்களில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை வெளியிட்டுள்ளது. S1 ரக ஸ்கூட்டர் 121 கிலோமீட்டர் வேகம் கொண்டது என்றும், இதன் விலையானது 99,999 ரூபாய் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதே மாடலில் 181 கிலோமீட்டர் வேகம் கொண்ட வண்டியும் அறிமுகப்படுத்தப்பட்டு வருகிறது. இதன் விலை 1,29,999 ரூபாயாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டர் எஸ் 1 விலை மாநிலத்துக்கு மாநிலம் மாறுபடும். டெல்லியில், ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டர் எஸ் 1 ரூ.85,099 விலையிலும், குஜராத்தில் ரூ.79,999 க்கும் மலிவான விலையில் வருகிறது. மகாராஷ்டிரா, ராஜஸ்தான், மற்றும் மற்ற அனைத்து மாநிலங்களிலும், ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டர் எஸ் 1 மாடல் முறையே ரூ.94,999, ரூ.89,968 மற்றும் ரூ.99,999 விலையில் வருகிறது. தமிழ்நாட்டில் இதன் விலை ரூ.99,999 ஆக இருக்கும்.
ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டர் எஸ் 1 ப்ரோ பெரும்பாலான சந்தைகளில் ரூ.1,29,999 விலையில் கிடைக்கிறது. டெல்லி, குஜராத், மகாராஷ்டிரா மற்றும் ராஜஸ்தானில், ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டர் எஸ் 1 ப்ரோ விலை முறையே ரூ.1,10149, 1,09,999, 1,24,999 மற்றும் 1,19,138 விலையில் வருகிறது. இந்த கட்டணங்களுடன் பதிவு கட்டணம் மற்றும் இன்சூரன்ஸ் கட்டணங்கள் சேர்க்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
எஸ் 1 மாடல் ஐந்து வண்ணங்களிலும் எஸ் 1 ப்ரோ சிவப்பு, ஸ்கை ப்ளூ, மஞ்சள், சில்வர், தங்கம், பிங்க், கருப்பு, நேவி ப்ளூ, சாம்பல் மற்றும் வெள்ளை உள்ளிட்ட 10 வண்ணங்களிலும் இருக்கும். எஸ் 1 மாடல் 2.9 கிலோவாட் பேட்டரியுடன் வருகிறது, இது 8.5 கிலோவாட் பீக் பவர் சக்தியை வழங்கும். 750W போர்ட்டபிள் சார்ஜர் மூலம் 6 மணிநேரத்தில் சார்ஜ் செய்யலாம் அல்லது ஓலா சூப்பர்சார்ஜரைப் பயன்படுத்தி வெறும் 18 நிமிடங்களில் 50 சதவீதம் வரை சார்ஜ் செய்யலாம்.
எஸ் புரோ மாடல் வண்டி, 8.5kW மோட்டார் மற்றும் பெரிய 3.9kW பேட்டரியுடன் இருக்கும். எஸ் 1 ப்ரோ ஹைப்பர் சவாரி முறை போன்ற கூடுதல் அம்சங்களை வழங்குகிறது. இரண்டு எலக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல்களிலும் ரிவர்ஸ் மோட், இன்-பில்ட் ஸ்பீக்கர்கள், ப்ராக்ஸிமிட்டி சென்சார்கள், ஆப் இணக்கத்தன்மை, ஹில் ஹோல்ட் அம்சம் மற்றும் பல அம்சங்கள் உள்ளன.
செப்டம்பர் 8ல் விற்பனை தொடங்கும் என்று தெரிவித்துள்ள ஓலா நிறுவனம், நாட்டின் 1000 நகரங்களில் டெலிவரி செய்ய ஏற்பாடு செய்துள்ளது என்று அறிவித்துள்ளது. அக்டோபர் மாதத்தில் இருந்து முழுமையாக டெலிவரி தொடங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.
இந்தியாவிலேயே முழுமையாக விற்பனையில் கவனம் செலுத்த முடிவு செய்துள்ள ஓலா தற்போதைக்கு இந்தியாவுக்கு வெளியில் விற்பனை செய்யும் திட்டம் இல்லை என தெரிவித்திருக்கிறது.
வாடிக்கையாளர்களின் வசதிக்கு ஏற்ப விற்பனை செய்யும் வகையில் 2,999 ரூபாய் மாதத் தவணையில் வாங்க முடியும் என்றும் ஓலா நிறுவனம் அறிவித்துள்ளது. இதேபோல், முதல் கட்டமாக 100 நகரங்களில் 5000 சார்ஜிங் பாயிண்டுகள் இருக்கும் என்பது போன்ற அறிவிப்புகளும் வெளியாகியுள்ளன.