400 நகரங்களில்; 75 கி.மி.க்கு ஒரு ஸ்டேஷன்: ஓலா அமைக்கும் 1 லட்சம் ‘ஹைப்பர்சார்ஜர் நெட்வொர்க்’

18 நிமிடத்தில் 50 சதவிகிதம் பேட்டரி சார்ஜ் செய்யும் திறன்!
3 CLAPS
0

இந்தியாவில், உலகின் மிகப்பெரிய மின்சார இரு சக்கர வாகன சார்ஜிங் நெட்வொர்க்கான ஹைப்பர்சார்ஜர் நெட்வொர்க்கை (Ola Hypercharger Network) அமைக்க இருப்பதாக பிரபல ஓலா நிறுவனம் அறிவித்துள்ளது.

400க்கும் மேற்பட்ட நகரங்களில் 1,00,000 க்கும் மேற்பட்ட சார்ஜிங் பாயிண்ட் ஸ்டேஷன்களுடன் இந்தியாவின் மிகப்பெரிய நெட்வொர்க்காக இது இருக்கும்.

தற்போது, அதாவது தனது முதல் ஆண்டில் மட்டும், ஓலா இந்தியாவில் 100 நகரங்களில் 5,000 சார்ஜிங் பாயிண்ட் ஸ்டேஷன்களை அமைத்து வருவது குறிப்பிடத்தக்கது. இது நாட்டில் தற்போதுள்ள சார்ஜிங் உள்கட்டமைப்பை விட இரண்டு மடங்கு அதிகம்.

ஓலா ஹைப்பர்சார்ஜர் வேகமான இரு சக்கர வாகன சார்ஜிங் நெட்வொர்க்காகவும் இருக்கும். 18 நிமிடத்தில் ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் 50 சதவிகிதம் பேட்டரியை சார்ஜ் செய்யும் திறன் இந்த ஸ்டேஷன்களில் அமைக்கப்படும் என்றும், அதோடு 75 கிலோ மீட்டர் தூரத்திற்கு ஒரு சார்ஜிங் ஸ்டேஷன் அமைக்கப்படும் ஓலா நேற்று வெளியிட்ட அறிவிப்பில் வெளிப்படுத்தியுள்ளது.

உலகின் மிகப்பெரிய மின்சார இரு சக்கர வாகன சார்ஜிங் நெட்வொர்க்கை இந்தியாவில் அமைக்க உள்ளது ஓலா நிறுவனம். சுற்றுச்சூழல் மாசுபாட்டை குறைக்கும் நோக்கில் உலகெங்கும் மின் வாகனங்கள் புரோமோட் செய்யப்பட்டு வருகின்றன. இந்தியாவிலும் அதற்கான முயற்சிகள் நடந்து வருகின்றன. இந்நிலையில் தான் இதனை ஓலா தெரிவித்துள்ளது.

ஓலா ஹைப்பர்சார்ஜர் என்ற பெயரில் இந்த நெட்வொர்க் அமைய உள்ளது. சுமார் 400 நகரங்களில் 1 லட்சம் சார்ஜிங் ஸ்டேஷனை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளதாம். தற்போதைக்கு, ஓலா ஹைப்பர்சார்ஜர்கள் நகரங்கள் முழுவதும் பரவலாக அமைக்கப்பட்டு வருகின்றன.

நகரத்தின் முக்கியமான இடங்கள் மற்றும் வணிக மாவட்டங்களில் தனியாக கோபுரங்கள் மற்றும் பிரபலமான இடங்களான மால்கள், ஐடி பூங்காக்கள், அலுவலக வளாகங்கள், கஃபேக்கள் மற்றும் பலவற்றில் இது அமைக்கப்படும் என்றும் ஓலா தெரிவித்துள்ளது. ஓலா சார்பில் அமைக்கப்படும் இந்த மையங்கள், தானியங்கு முறையில் இயங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஓலா ஹைப்பர்சார்ஜர் நெட்வொர்க் ஓலா வாடிக்கையாளர்களுக்கு சிரமமின்றி மற்றும் தடையற்ற சார்ஜிங் அனுபவத்தை வழங்கும் வகையில் தானியங்கி முறையில் அமைக்கப்பட்டு வருகிறது. வாடிக்கையாளர்கள் வெறுமனே சார்ஜிங் பாயிண்டிற்கு வந்து தங்கள் ஸ்கூட்டரை சார்ஜிங் புள்ளியில் செருக வேண்டும். மேலும் ஓலா எலக்ட்ரிக் ஆப்-இல் வாடிக்கையாளர்கள் சார்ஜிங் முன்னேற்றத்தை எளிதாக கண்காணிக்க முடியும், அதே ஆப்-பில் சார்ஜிங்கிற்கும் தடையின்றி பணம் செலுத்தவும் முடியும்.

ஓலா ஸ்கூட்டருடன் ஹோம் சார்ஜர் கொடுக்கப்படும். இந்த ஹோம் சார்ஜருக்கு என்று தனியாக எந்த நிறுவலும் தேவையில்லை. இதைக்கொண்டு ஒரே இரவில் சார்ஜ் செய்வதற்கு வழக்கமான சுவர் சாக்கெட்டில் பிளக்கை செருகினால் போதும்.

இந்தத் திட்டங்களை அறிவித்த ஓலாவின் தலைவரும் குழு தலைமை நிர்வாக அதிகாரியுமான பாவிஷ் அகர்வால்,

“மின்சாரமானது இயக்கத்தின் எதிர்காலம், மின்சார வாகனம் வைத்திருப்பதற்கான முழு பயனர் அனுபவத்தையும் நாங்கள் மறுபரிசீலனை செய்கிறோம். ஒரு விரிவான சார்ஜிங் நெட்வொர்க்கை உருவாக்குவதற்கான எங்கள் திட்டங்கள் இதன் முக்கியப் பகுதியாகும். உலகின் மிகப்பெரிய மற்றும் அடர்த்தியான இரு சக்கர சார்ஜிங் நெட்வொர்க்கை உருவாக்குவதன் மூலம், மின்சார வாகனங்களை வாடிக்கையாளர்கள் ஏற்றுக்கொள்வதை வியத்தகு முறையில் துரிதப்படுத்துவோம், மேலும் தொழில்துறையை விரைவாக மின்சாரத்திற்கு நகர்த்துவோம்," என்று கூறியிருக்கிறார்.

சமீபத்தில், உலகின் மிகப்பெரிய இரு சக்கர வாகன உற்பத்தி நிலையத்தை 'ஓலா ஃபியூச்சர்ஃபாக்டரி’ 'Ola Future Factory' என்ற பெயரில் உருவாக்க இருப்பதாக ஓலா நிறுவனம் அறிவித்து தற்போது அதனை உருவாக்கி வருகிறது. இது ஆண்டுக்கு ஒரு கோடி வாகனங்களை உற்பத்தி செய்யும் எனவும், 2022ம் ஆண்டுக்குள் இது செயல்படும் எனவும் தெரிவித்திருந்தனர்.

தமிழ்நாட்டின் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 500 ஏக்கரில் இந்த பேக்டரி கட்டப்பட்டு வருகிறது. ஒவ்வொரு இரண்டு வினாடிக்கும் ஒரு ஸ்கூட்டர் உற்பத்தி செய்யப்படும் வகையில் அமைக்கப்பட்டு வருகிறது.

Latest

Updates from around the world