தமிழகத்தில் உலகின் மிகப்பெரிய ஸ்கூட்டர் ஆலை: அரசுடன் ஓலா ஒப்பந்தம்!
கால் டாக்சி நிறுவனமான ஓலாவின் மிக் வாகன பிரிவான ஓலா எலெக்ட்ரிக், தமிழகத்தில் உலகின் மிகப்பெரிய ஸ்கூட்டர் ஆலையை அமைக்க மாநில அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது.
மாநிலத்தில், ரூ.2400 கோடி முதலீட்டில் மிகப்பெரிய ஸ்கூட்டர் ஆலை அமைக்க, தமிழக அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளதாக, பெங்களூருவை தலைமையகமாக கொண்டு இயங்கி வரும் ஓலா எலெக்ட்ரிக் அறிவித்துள்ளது. இது தமிழகத்தில் நிறுவனம் அமைக்கும் முதல் ஆலையாகும்.
இந்த ஆலை ஆண்டுக்கு இரண்டு மில்லியன் வாகனங்கள் உற்பத்தி செய்யும் திறன் கொண்டிருக்கும் என்றும், 10,000 வேலை வாய்ப்புகளை உருவாக்கும் என்றும் ஓலா எலெக்ட்ரிக் செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.
பிரதமர் நரேந்திரம் மோடியின் தற்சார்பு இந்தியா திட்டத்திற்கு ஏற்ப இந்த ஆலை அமைக்க இருப்பதகாவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் அமைக்கப்பட இருக்கும் ஆலை, இந்திய சந்தைக்கு மட்டும் அல்லாது, ஐரோப்பா, ஆசியா மற்றும் லத்தீன் அமெரிக்க நாடுகளில் உள்ள சந்தைத் தேவையையும் நிறைவேற்றும்.
ஓலா நிறுவனம் வரும் மாதங்களில் தனது எலெக்ட்ரிக் வாகனங்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது.
‘‘உலகின் மிகப்பெரிய ஸ்கூட்டர் ஆலையை அமைக்கும் திட்டத்தை அறிவிப்பதில் உற்சாகம் கொள்கிறோம். இது ஓலாவுக்கு முக்கிய மைல்கல்லாகும். பகிர்வு மற்றும் சொந்த வாகன போக்குவரத்துத் துறையில் நீடித்த வளர்ச்சித் தீர்வை அடைவதற்கான முயற்சியில் இது தேசத்திற்கு பெருமிதமான தருணமாக அமைகிறது,” என்று ஓலா குழுமத் தலைவர் மற்றும் சி.இ.ஓ பாவிஷ் அகர்வால் தெரிவித்துள்ளார்.
”உலகின் நவீன ஆலைகளில் ஒன்றாக அமையும். சர்வதேச சந்தைக்கு ஏற்ற உலகத்தரமான வாகனங்களைத் தயாரிப்பதில் இந்தியாவின் திறனை உலகிற்கு உணர்த்தும் வகையில் இந்த ஆலை அமையும்,” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மின் வாகனங்கள் போன்ற எதிர்காலத் தேவை உள்ள துறைகளில் இறக்குமதியின் சார்பை குறைக்கவும் இந்த ஆலை உதவும் என்று ஓலா செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது. உள்ளூரில் வேலைவாய்ப்பை அதிகரிப்பதோடு, தொழில்நுட்பத் திறனையும் ஊக்குவிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆலை, ஓலாவின் புதிய வகை வாகனங்களை உற்பத்தி செய்யும். முதல் கட்டமாக மின் ஸ்கூட்டர்களை உற்பத்தி செய்யும். இந்த ஸ்கூட்டர் ஏற்கனவே, ஜெர்மனின் வடிவமைப்பு விருதி உள்ளிட்ட விருதுகளை வென்றுள்ளது.
இந்த ஸ்கூட்டர், அகற்றக்கூடிய பனானா பேட்டரியை கொண்டுள்ளது. இதை எங்கு வேண்டுமானாலும் சார்ஜ் செய்து கொள்ளலாம். இதன் காரணமாக மின் ஸ்கூட்டரை சொந்தமாக வைத்திருப்பது வாடிக்கையாளருக்கு இனிமையான அனுபவமாக அமையும்.
தனது வாகனங்கள் அனைத்திற்கும் இத்தகைய வடிவமைப்பு புதுமை மற்றும் மென்பொருள் புதுமைகளை அறிமுகம் செய்யத் திட்டமிட்டிருப்பதாகவும் ஓலா தெரிவித்துள்ளது.