அசாமில் ஏழை புற்றுநோயாளிகளின் உயிர்க் காவலர் - மகசேசே விருது பெறும் தமிழக மருத்துவர் ரவி கண்ணன்!
அசாமில் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட ஏழை மக்களின் உயிர்க் காவலனாக இருந்து வரும் தமிழகத்தைச் சேர்ந்த மருத்துவர் ரவி கண்ணன் மகசேசே விருது பெறுகிறார்.
ஆசிய கண்டத்தில் பல்வேறு துறைகளிலும் சமூகத்திற்காக சிறப்பாக செயல்படுபவர்களுக்கு பிலிபைன்ஸ் நாட்டின் ‘ரமோன் மகசேசே’ விருது வழங்கப்படுகிறது. ஆசியாவின் நோபல் என அழைக்கப்படும் மகசேசே விருது அமைப்பின் 65-வது ஆண்டு நிறைவையொட்டி மருத்துவர் ரவி கண்ணனுக்கு ‘முழுமையான சுகாதாரத்தின் ஹீரோ’ என்ற புகழாரத்துடன் மகசேசே விருது வழங்கி கவுரவிக்கப்பட்டுள்ளது. 59 வயதான இவர் மகசேசே விருதுக்கு தேர்வான 4 பேரில் ஒரே ஒரு இந்தியர் ஆவார்.
சென்னை டூ அசாம்
சென்னையைச் சேர்ந்த ரவி கண்ணன் இந்திய விமானப் படை வீரரின் மகன் ஆவார். மருத்துவம் படித்துவிட்டு சென்னை அடையாறு புற்றுநோய் மையத்தில் 15 ஆண்டுகள் அறுவை சிகிச்சை நிபுணராக பணியாற்றியும் இருக்கிறார். இயற்கைப் பேரழிவுகள், குண்டுவெடிப்புகள், பதற்ற நிலை போன்ற அசாதாரண சூழல் அசாமில் நிலவிய 2007-ம் ஆண்டில் அவர் தனது பிறந்த ஊரான சென்னையில் இருந்து சில்சார் புற்றுநோய் மருத்துவமனையில் இயக்குநராக பணியாற்ற இடம்பெயர்ந்தார்.
முதலில் அவரது இந்த முடிவை கண்ணனின் குடும்பத்தார் ஏற்கவில்லை. யுனைடெட் ஸ்டேட்ஸ் இந்தியா எஜுகேஷனல் ஃபவுண்டேஷனின் பிராந்திய அதிகாரியாக இருந்த கண்ணனின் மனைவி சீதா தனது வேலையை ராஜினாமா செய்துவிட்டு குடும்பத்தினரையும் சமாதானப்படுத்தி சில்சாருக்கு சென்றுள்ளார்.
எதற்காக இப்படி ஒரு முடிவை எடுத்தார்?
பல ஆண்டுகளாக அசாம் மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சைக்கான சிறப்பு மருத்துவராக சென்று பார்வையிட்டு வந்திருக்கிறார் ரவி கண்ணன். ஏழை மக்கள் என்ன நோய் வந்திருக்கிறது, உடலுக்குள் என்ன நடக்கிறது என்ற தெரியாமலேயே புற்றுநோயால் உயிரிழந்து கொண்டிருப்பதை அவர் உணர்ந்துள்ளார். புற்றுநோய்க்கு சிகிச்சை இருக்கிறது, சரியான நேரத்தில் கண்டறிந்து சிகிச்சை தந்தால் உயிரிழப்பை தவிர்க்கலாம் என்பதை அந்த மக்களுக்கு புரிய வைக்க வேண்டும் என்று முடிவெடுத்து கண்ணன் - சீதா தம்பதி அசாம் சென்றுள்ளனர்.
சவாலான சூழல்
பழக்கப்படாத மக்கள், புதிய சூழ்நிலை, சென்னைக்கு எதிர்மாறான வெப்பநிலை என்ன எல்லாமே புதிதாக இருந்தாலும் கொண்ட இலக்கில் உறுதியாக இருந்தார் மருத்துவர் ரவி கண்ணன். சச்சார் புற்றுநோய் மருத்துவமனையில் பாதிக்கப்பட்டவர்களை சிகிச்சைக்காக அழைத்து வருவதும் கூட ஒரு பெரிய சவாலாக அவர்களுக்கு இருந்தது.
“பல நோயாளிகள் தீவிர புற்றுநோய் பாதிப்பில் இருந்தனர். அவர்கள் புகையிலை, மதுவுக்கு அடிமையானவர்களாக இருந்தனர். அவர்களில் பெரும்பாலானோருக்கு ஊட்டச்சத்து குறைபாடுகளும் இருந்தது. இன்னும் மோசமான விஷயம் என்னவென்றால், நிதி அல்லது உபகரணங்கள் என மருத்துவமனையில் போதுமான வசதிகள் எதுவுமே இல்லை. வெறும் 23 பணியாளர்களுடன் 20 படுக்கைகள் மட்டுமே அந்த மருத்துவமனையில் இருந்தது. அதனால் மக்கள் தாழ்வாரத்தில் கூட்டமாக சிகிச்சைக்காக காத்திருப்பார்கள்.”
மருத்துவமனையிலேயே வேலை
2007 வரை இருந்த இத்தகைய சூழலை மாற்றியமைத்தார் மருத்துவர் ரவி கண்ணன். சில்சாரில் இருந்த புற்றுநோய் மருத்துவமனையில் தங்குமிடம், உணவு மற்றும் குறைந்த செலவில் சிகிச்சை அளித்த போதிலும் 30 சதவிகித மக்கள் கூட புற்றுநோய் சிகிச்சைக்காக வராமல் இருந்தனர். இதற்கான காரணம் என்ன என்று மருத்துவர் ரவி தலைமையிலான குழுவினர் ஆராய்ந்தனர்.
புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் தினக்கூலி வேலை செய்பவர்கள்; குடும்பத்தில் அவர்களே வருமானம் ஈட்டுபவர்களாக இருந்துள்ளனர். இதனால் தொடர்ந்து சிகிச்சைக்கு வருவது என்பது முடியாத காரியம் என்பதை உணர்ந்த அவரின் மருத்துவக் குழு மருத்துவமனை வளாகத்திலேயே தற்காலிக வேலைவாய்ப்பை வழங்கும் முறையை கொண்டு வந்துள்ளது.
மருத்துவர்களின் சம்பளம், மருத்துவமனை நிர்வாகத்திற்கு கிடைக்கும் நன்கொடைகளில் இருந்து அவர்களுக்கு ஊதியமானது வழங்கப்பட்டுள்ளது. அது மட்டுமின்றி நோய் பாதிக்கப்பட்டவர்களின் வீடுகளுக்கே சென்று விழிப்புணர்வு ஏற்படுத்துதல், நோய் பாதித்தவர்களின் வீடுகளுக்கே சென்று தொடர் மருத்துவ சிகிச்சை அளித்தல் போன்ற செயல்களால் புற்றுநோய் பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனை சிகிச்சையை தொடர்ச்சியாக எடுத்துக் கொள்ள முன்வந்துள்ளனர்.
சில ஆண்டுகளுக்குப் பிறகு, பொதுத்துறை நிறுவனங்கள், வங்கிகள் மற்றும் தொண்டு நிறுவனங்கள் மற்றும் மாநில அரசு தற்காலிகப் பணியாளர்களாக வேலை செய்யும் நோயாளிகளுக்கு நிதியளிக்கும் மகத்தான ஆதரவை வழங்கியுள்ளன.
யாரும் எடுக்கத் தயங்கும் முடிவு
கச்சார் புற்றுநோய் மருத்துவமனையானது 16 ஆண்டுகளாக இயங்கி வருகிறது. 1994-ல் இதற்கான அடிக்கல் நாட்டப்பட்டது. 2004-ம் ஆண்டு முதல் 2007 வரை மருத்துவர் ரவி கண்ணன் பல முறை மருத்துவமனைக்கு அவ்வபோது வந்து சிகிச்சை அளித்துச் சென்றுள்ளார். நிரந்தரமாக ஒரு சிறந்த மருத்துவர் இங்கேயே பணியில் இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டபோது அவர் சற்றும் தயங்காமல் சென்னையில் இருந்து அசாமிற்கு இடம்பெயர்ந்தார். யாரும் அவ்வளவு எளிதில் அத்தகைய முடிவை எடுத்து விட மாட்டார்கள் என்கிறார் கச்சார் மருத்துவமனையின் நிர்வாகத் தலைவர் கல்யாண் சக்கரவர்த்தி.
விழிப்புணர்வு இல்லை
“அசாமிற்கு முதன்முறையாக வந்து கச்சார் புற்றுநோய் மருத்துமனையின் இயக்குநராக பணியில் சேர்ந்தபோது, இந்த நோய் குறித்து மக்களிடம் இருந்த பரவலான கருத்து என்னை வியப்பில் ஆழ்த்தியது. இங்குள்ள தண்ணீர் மற்றும் காற்றில் உள்ள மாசுபாடு காரணமாகவே புற்றுநோய் ஏற்படுவதாக அந்த மக்கள் கருதினர். ஆனால், அவர்களின் வாழ்க்கை முறையில் உள்ள குறைபாடு தான் காரணம் என்பதை அவர்களுக்கு புரிய வைத்தோம்.
இங்குள்ள மக்கள் அதிக உடலுழைப்பை செலுத்துவதில்லை. மாறாக மது, பாக்கு, புகையிலை கொட்டைகளை அதிகம் உட்கொள்கின்றனர். இதில் கொடுமையான விஷயம் என்னவென்றால் புற்றுநோயின் தீவிரம் என்ன என்பதே அவர்களுக்குத் தெரியவில்லை. 15 ஆண்டுகளாக மக்களின் இந்த மனநிலையை மாற்றி அவர்களை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக பயமின்றி வரும் பழக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறோம்” என்று பேட்டியில் கூறியுள்ளார் ரவி கண்ணன்.
வட இந்தியாவிலேயே முதல்முறையாக 2012-ல் கச்சார் மருத்துவமனை முதல் மைக்ரோவாஸ்குலர் அறுவை சிகிச்சையை புற்றுநோயாளிக்கு செய்துள்ளது. அனைவரும் சிகிச்சை பெறும் வசதியை ஏற்படுத்தும் விதத்தில் மருத்துவர் கண்ணன் மற்றும் அவரது குழுவினர் கரிம்ஹஞ்சி, ஹைலாகண்டி மற்றும் திமா ஹசோ மாவட்டங்களில் சேடிலைட் கிளினிக்குகளை அமைத்துள்ளனர்.
புற்றுநோயாளிகளுக்கு எல்லா இடங்களிலும் சிகிச்சை கிடைக்கிறது, சிகிச்சை பெற முடியாதவர்களுக்கு நாங்களே மருத்துமனையை கொண்டு சென்றோம். இதனால் தொடர் சிகிச்சை எடுத்துக் கொள்பவர்களின் விகிதமானது 90 சதமாக அதிகரித்துள்ளது என்று மகிழ்கிறார் கண்ணன்.
உயரிய விருதுகள்
மருத்துவத் துறையில் சிறந்த பங்காற்றியதற்காக இந்தியாவின் உயரிய விருதான பத்மஸ்ரீ விருதை 2020-ம் ஆண்டில் மருத்துவர் ரவி கண்ணன் பெற்றுள்ளார். தற்போது மகசேசே விருது பெற்றுள்ளது தன்னுடைய ஒருவரின் சேவைக்கானது அல்ல; தன்னுடன் சேர்ந்து பணியாற்றிய அனைத்து சுகாதாரப் பணியாளர்களுக்குமான விருது என்று கூறியுள்ளார் மருத்துவர் ரவி கண்ணன்.