ஆன்லைன் ஆடை பிராண்ட் தொடங்கிய ஜோடி– 3 வருடங்களில் 15 கோடி ரூபாய் வருவாய்!
அனுஷா, அலோக் தம்பதி நொய்டாவில் 4 இயந்திரங்களுடன் சிறியளவில் தொடங்கிய ஆன்லைன் ஆடை பிராண்ட் சிறப்பாக வளர்ச்சியடைந்து மூன்றாண்டுகளில் 15 கோடி ரூபாய் வருவாய் ஈட்டியுள்ளது.
திருமணத்திற்கு பத்து பொருத்தம் இருக்கவேண்டும் என்று சொல்வதுண்டு. எல்லாவற்றையும்விட மனப் பொருத்தம் மிகவும் முக்கியம். தம்பதிகள் இருவருக்குமிடையே மனப் பொருத்தம் இருந்தால் இல்லறம் மட்டுமல்ல தொழில் முயற்சியும் சிறப்பிக்கும் என்பதற்கு அனுஷா-அலோக் தம்பதி ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.
இவர்கள் உருவாக்கியுள்ள பெண்களுக்கான வெஸ்டர்ன் ஆடை பிராண்ட் மூன்றாண்டுகளில் 15 கோடி ரூபாய் வருவாய் ஈட்டியுள்ளது.
அறிமுகம்
அனுஷா சந்திரசேகர் ஐஐஎம் ராய்பூர் பட்டதாரி. இவருக்கு ஃபேஷன் துறையில் ஆர்வம் அதிகம். பெண்களுக்கான வெஸ்டர்ன் ஆடைகள் பிராண்டை சொந்தமாக உருவாக்கவேண்டும் என்பது இவரது கனவு. அனுஷாவுடன் ஒரே பேட்சில் படித்தவர் அலோக் பால். இவருக்கு மின்வணிகத்தில் ஈடுபாடு அதிகம்.
இருவரும் தங்களது கனவு நனவாகும் வகையில் 2018ம் ஆண்டு நொய்டாவில் Berrylush என்கிற பெண்களுக்கான மேற்கத்திய ஆடை பிராண்டை அறிமுகம் செய்தார்கள். இந்த ஆன்லைன் பிராண்ட் டி2சி வணிகத்தில் ஈடுபட்டுள்ளது.
இவர்கள் சிறிய தொழிற்சாலை அமைத்து நான்கு இயந்திரங்களுடன் செயல்பட ஆரம்பித்தார்கள். பெண்களுக்கான ஆடைகள், டாப்ஸ், ஜம்ப்சூட், ஸ்கர்ட்ஸ் போன்றவற்றை மிந்த்ரா, ஃப்ளிப்கார்ட், அமேசான் போன்ற தளங்களின் மூலம் மட்டுமல்லாமல் சொந்த வலைதளம் மூலமாகவும் விற்பனை செய்து வருகிறார்கள்.
இரண்டாண்டுகளில் இந்த பிராண்ட் மூன்று லட்சத்திற்கும் அதிகமான யூனிட்டுகளை விற்பனை செய்துள்ளது. இதன் ஆண்டு வருவாய் 15 கோடி ரூபாயை எட்டியுள்ளது.
வணிக மாதிரி
அலோக். அனுஷா இருவரும் வழக்கமான பணியில் ஈடுபட்டிருந்தபோதே சோதனை கட்டத்தைத் தொடங்கியுள்ளார்கள். உள்ளூர் சந்தையில் இருந்து துணிகளை வாங்கி ஆன்லைனில் விற்பனை செய்தார்கள். சந்தையில் இதற்கான வரவேற்பு எப்படியிருக்கிறது என்பதை முதலில் கூர்ந்து கவனித்தார்கள்.
சந்தையில் வரவேற்பு கிடைத்ததை அடுத்து அனுஷாவின் அப்பா Berrylush செயல்பாடுகளுக்கு 10 லட்ச ரூபாய் சீட் முதலீடு செய்தார்.
“Berrylush தொடங்குவதற்கு முன்பு Deloitte நிறுவனத்தில் நல்ல சம்பளத்துடன்கூடிய வேலையில் இருந்தேன். பெண்களுக்கான வெஸ்டர்ன் ஆடைகள் பிராண்டை உருவாக்க விரும்பினேன். பிரபல பிராண்டுகள் தரமாக இருப்பினும் விலை அதிகம். மலிவு விலையில் கிடைக்கக்கூடியவை தரமாக இல்லை. சந்தையில் நிலவிய இடைவெளியை நிரப்பி வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள முடிவெடுத்தேன்,” என்று எஸ்எம்பிஸ்டோரி இடம் தெரிவித்தார் அனுஷா.
மிகப்பெரிய பிராண்டுகள் 5,000 ரூபாய்க்கு பார்ட்டி வேர் ஆடைகளை விற்பனை செய்த நிலையில் அழகான வடிவமைப்புகளுடன்கூடிய பார்ட்டி ஆடைகளை அதே தரத்துடன் 1,000 ரூபாய்க்கும் குறைவாக விற்பனை செய்ய விரும்பியுள்ளார்.
இந்த பிராண்ட் டி2சி ரீடெயில் ஸ்ட்ராடெஜியுடன் குறைவான மூலதன சொத்துக்கள் மாதிரியை (Asset-light Model) பின்பற்றுகிறது. அனுஷா, அலோக் இருவரும் பார்ட்டி வேர் ஆடைகளை 999 ரூபாய்க்கு விற்பனை செய்கிறார்கள். இந்த ஆடை வகைகளே அதிகம் விற்பனையாகிறது.
“நொய்டாவில் இரண்டு இடங்களில் இயங்கி வருகிறோம். ஒரு அலுவலகமும் ஒரு தொழிற்சாலையும் செயல்படுகிறது. தொழிற்சாலையில் 120 இயந்திரங்கள் இருக்கின்றன. Myntra தளத்தில் 55 சதவீதம், எங்கள் வலைதளம் மூலம் 20 சதவீதம், Ajio மூலம் 10 சதவீதம், மற்ற தளங்கள் மூலம் 15 சதவீதமும் விற்பனையாகிறது. எங்கள் ஆடை வகைகள் நேரடியாக வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்யப்படுகிறது,” என்றார் அலோக்.
சவால்கள்
சிறியளவில் செயல்படுவதில் சந்தித்த சவால்களை அலோக் பகிர்ந்துகொண்டார்.
“எங்களுடையது சிறு நிறுவனம். ஃபேப்ரிகேட்டர்களிடம் 3 லட்சம் வரை ஆர்டர் கொடுப்போம். எங்களிடம் காட்டப்பட்ட சாம்பிள் ஆர்டரும் வந்து சேர்ந்த பொருட்களும் வெவ்வேறாக இருக்கும்,” என்கிறார்.
இதுதவிர சொன்ன நேரத்தில் அவர்களிடமிருந்து பொருட்கள் வந்து சேராது. இதனால் பல பிரச்சனைகளை இந்த பிராண்ட் சந்தித்துள்ளது.
இந்த ஃபேப்ரிகேட்டர்கள் மற்ற பிராண்டுகளுக்கும் சப்ளை செய்கிறார்கள். எனவே இதுபோன்ற சிக்கல்களுக்கு தீர்வுகாண வணிகம் வளர்ச்சியடைந்து வந்த காலகட்டத்தில் பிரத்யேக ஃபேப்ரிகேட்டர்களுடன் இணைந்து செயல்படுவதே சிறந்தது என திட்டமிட்டுள்ளனர். மேலும் துணிகளை சொந்தமாக தயாரிக்கவும் தீர்மானித்தார்கள்.
மிந்த்ரா தளத்தைச் சேர்ந்தவரை அனுஷா ஒருமுறை அணுகியுள்ளார். இதுவே இவர்கள் வணிகத்தில் திருப்புமுனையாக அமைந்தது.
”மிந்த்ரா நபரை சந்திக்கும் வரை எங்கள் தளத்தில் மட்டுமே விற்பனை செய்து வந்தோம். அவருக்கு எங்கள் டிசைன்கள் பிடித்திருந்தன. இதனால் சிறிய பிராண்டாக இருந்தாலும் எங்களால் மிந்த்ரா தளத்தில் இணைய முடிந்தது,” என்கிறார்.
இதன்மூலம் இந்த பிராண்ட் பலரை சென்றடைந்தது. Berrylush விற்பனையும் வருவாயும் அதிகரித்தது. 100 இயந்திரங்களுடன் உற்பத்தி திறனும் அதிகரித்தது.
சொத்து பிணையம் இல்லாத கடனாக 2 கோடி ரூபாயும் சொத்து பிணையத்துடன்கூடிய 2 கோடி ரூபாய் வங்கிக் கடனும் Berrylush பெற்றுக்கொண்டது. அனுஷாவின் அப்பா மேலும் 20 லட்ச ரூபாய் முதலீடு செய்தார்.
”இந்த முதலீடு நாங்கள் லாபகரமாக செயல்பட உதவியது. எங்கள் தயாரிப்புகளை நல்ல லாபத்துடன் விற்பனை செய்கிறோம். வருவாயை மீண்டும் வணிகத்தில் முத்லீடு செய்கிறோம்,” என்கிறார் அலோக்.
சந்தை நிலவரம் மற்றும் வருங்காலத் திட்டங்கள்
2018-ம் ஆண்டு ஸ்டாடிஸ்டா தரவுகளின்படி பெண்களுக்கான வெஸ்டர்ன் ஆடைகள் சந்தை 23,500 கோடி ரூபாய். 2023-ம் ஆண்டில் இந்த மதிப்பு 62,500 கோடி ரூபாயை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த பிராண்டின் போட்டியாளர்கள் குறிப்பிட்ட சந்தைப்பகுதிகளில் பிரத்யேகமாக செயல்படும் நிலையில் Berrylush பிராண்ட் ஆன்லைனில் பல்வேறு சானல்களில் விற்பனை செய்து சந்தைப்படுத்தி வருகிறது.
ஊரடங்கு சமயத்தில் தயாரிப்புப் பணிகள் முடங்கினாலும் வருங்காலத்தில் வளர்ச்சியை எதிர்நோக்கி உள்ளனர்.
”பார்ட்டி ஆடைகளைப் போட்டுக்கொண்டு வீட்டிலிருந்தபடியே புகைப்படம் எடுத்து வாடிக்கையாளர்கள் பதிவிட்டார்கள். மின்வணிகம் மேலும் சிறப்பாக வளர்ச்சியடையும் என்கிற நம்பிக்கை பிறக்கிறது,” என்கிறார் அனுஷா.
இந்தியாவில் வளர்ச்சியடைவதுடன் மத்திய கிழக்கு, ஆப்பிரிக்கா, ஐரோப்பா உள்ளிட்ட நாடுகளிலும் செயல்பட இந்தத் தம்பதி திட்டமிட்டுள்ளார்கள்.
ஆங்கில கட்டுரையாளர்: ரிஷப் மன்சூர் | தமிழில்: ஸ்ரீவித்யா