உங்க வீட்டு அருகே உள்ள இயற்கைக் காய், கனிகளை வாங்க வேண்டுமா? இதோ வழிகாட்டும் ஆப்!
விவசாயிகளுக்கும், நுகர்வோருக்கும் இடையே ஓர் நேரடித் தொடர்பை ஏற்படுகிறது சரியான இயற்கை விவசாயியை வழிகாட்டி, சரியான விலையில், தரமான, இயற்கையான காய்கனிகள் வாங்க நுகர்வோர்களுக்கு உதவுகிறது இந்த ஆப்.
வானுயர நிமிர்ந்து நிற்கும் மால்களிலும், ஜவுளி, நகைக் கடைகளிலும் கேட்கும் விலையை பேரம் பேசாமல் வாய் மூடிக் கொண்டு கொடுக்கும் மக்களுக்கு, சந்தைகளிலும், சாலையோரங்களிலும் காய்கனி விற்பனை செய்பவர்களிடம் 1 ரூபாயாவது குறைத்து பேரம் பேசி வாங்கினால்தான் திருப்தி.
விவசாயிகளுக்கோ பாடுபட்டு விவசாயம் செய்தாலும், மழை பொய்த்து போதல், பூச்சிகள் தாக்குதல், விலைச்சல் குறைவு, விலை குறைவு என தங்களின் உற்பத்திப் பொருளை விற்பனை செய்வதற்குள் போதும்போதும் என்றாகி விடுகிறது.
பொதுவாக ஓர் பொருளை உற்பத்தி செய்பவர்தான் அப்பொருளுக்கான விலையை நிர்ணயம் செய்வார். ஆனால் விவசாயத்தை பொறுத்தவரை விவசாயியால் தான் உற்பத்தி செய்த பொருளுக்கு விலையை நிர்ணயம் செய்ய இயலுவதில்லை. விவசாயத்தில் லாபம் பார்க்கும் விவசாயிகளைவிட, நஷ்டத்தில் மூழ்குபவர்களே அதிகம்.
விவசாயிக்கும், நுகர்வோருக்கும் இடையே இருக்கும் இடைத்தரகர்கள், வணிகர்கள்தான் கொள்ளை லாபம் அடைகின்றனர். இதனைத் தடுக்க என்ன செய்யலாம் என சிந்தித்தார் செங்கல்பட்டு மாவட்டம், செய்யூரைச் சேர்ந்த பாலாஜி. கணிப்பொறி அறிவியலில் பொறியியல் பட்டம் பெற்ற இவர் கடந்த நாண்கான்டுகளாக இயற்கை முறையில் விவசாயம் செய்து வருகிறார்.
இவர் தனது நண்பர்களான பிரேம்நாத், சுரேஷ், இந்து ஆகியோருடன் இணைந்து ’கரிம வேளாண்மை’ ‘Karima Velanmai' என்ற Appஐ உருவாக்கி இருக்கிறார்கள். இதன் மூலம் விவசாயிக்கும், நுகர்வோருக்கும் இடையே ஓர் நேரடித் தொடர்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து அவர் நம்மிடம் கூறியதாவது,
“இயற்கை விவசாயிகளுக்கு உதவும் வகையிலும், இயற்கை விவசாயம் என்றால் என்ன, யார் இயற்கை விவசாயி என நுகர்வோர் தெரிந்து கொள்ளும் வகையிலும் ஏதாவது செய்யவேண்டும் எனத் திட்டமிட்டேன். என் நண்பர்களுடன் இணைந்து கரிம வேளாண்மை எனும் ஓர் Appஐ உருவாக்கினோம்.
இதன் மூலம் விவசாயிகளுக்கும், நுகர்வோருக்கும் இடையே ஓர் நேரடித் தொடர்பு ஏற்படுகிறது. விவசாயி தன்னுடைய பொருளுக்கு தானே விலையை நிர்ணயம் செய்யும் வாய்ப்பு ஏற்படுகிறது. நுகர்வோருக்கும் தனக்கு ஏற்ற விலையில் தரமான, இயற்கையான காய்கனிகள் கிடைக்கிறது என்பதே இந்த ஆப் சிறப்பம்சம் ஆகும் எனகிறார்.
இந்த கரிம வேளாண்மை செயலியில் இயற்கை விவசாயத்தில் ஈடுபட்டு வரும் அனைத்து விவசாயிகளின் பெயர்களும் அவர்கள் விளைவிக்கும் பொருள்களுடன் முழு விவரங்களுடன் வரும். இந்த ஆப் பயன்படுத்தி, நுகர்வோர் தனது பகுதியில் உள்ள இயற்கை விவசாயியை அடையாளம் கண்டு தனக்குத் தேவையான காய்கனிகளை அந்த விவசாயி நிர்ணயிக்கும் விலையிலேயே பெற்றுக் கொள்ள முடியும்.
இதன் மூலம் விவசாயி தன் உற்பத்திப் பொருள்களுக்கு தானே விலையை நிர்ணயிக்கிறார். நுகர்வோரும் தான் விரும்பிய பொருளை, தனக்கு திருப்தியான விலையில் அப்பகுதியிலேயே உள்ள இயற்கை விவசாயியிடம் பெற்றுக் கொள்கிறார்.
இதுகுறித்து பாலாஜி கூறுகையில்,
“அனைவரும் இயற்கை விவசாயி எனக் கூறிக் கொள்கிறார்கள். இயற்கை உரங்களை மட்டுமே பயன்படுத்துவதாக கூறுகின்றனர். ஆனால் இதில் யார் உண்மையிலேயே இயற்கை விவசாயி, எப்பொருள் எப்பகுதியில் சரியான விலையில் கிடைக்கிறது போன்ற விவரங்கள் நுகர்வோரைச் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்திலேயே இந்த Appஐ உருவாக்கினோம்.
இதன் மூலம் அனைத்து மாவட்டத்திலும் உள்ள அனைத்து அங்கீகாரம் பெற்ற இயற்கை விவசாயிகளையும் இந்த ஆப்-ன் மூலம் இணைத்துள்ளோம். இதன் மூலம் தமிழகத்தில் உள்ள எவரும், எப்பகுதியிலும் உள்ள விவசாயியைத் தொடர்பு கொண்டு, இயற்கையான முறையில் விளைவிக்கப்பட்ட காய்கனிகளை உண்மையான நியாயமான முறையில் பெற்றுக் கொள்ளமுடியும்.
இதனால் லாபம் முழுமையாக விவசாயிகளுக்கே கிடைக்கிறது. இதில் இடைத்தரகர்களோ அல்லது வணிகர்களோ குறுக்கீடு செய்து லாபம் ஈட்ட முடியாது என்பதே இதன் சிறப்பம்சமாகும் என்கிறார்.
மேலும், இந்த கரிம வேளாண்மை Appஇல் காய்கனிகள், பழங்கள், இறைச்சி, கீரை வகைகள், நாத்து குறித்து தகவல்கள், பாரம்பரிய விதைகள் மற்றும் விவசாயம் தொடர்பான வாகனங்கள் வாடகைக்கு கிடைக்கும் விவரங்கள் என கூடுதல் தகவல்களும் இடம் பெற்றுள்ளன. ஆர்கானிக் சான்றிதழ் பெற்ற விவசாயிகளை இவர்கள் Appஇல் வரிசைப்படுத்தியுள்ளனர். எனவே யாரும் போலியாக பொதுமக்களை ஏமாற்ற முடியாது. ஆர்கானிக் ஸ்டோர்ஸும் இந்த ஆப்’ல் தங்களைச் சேர்த்துக் கொள்ளலாம்.
உணவு விஷமாகக் கூடாது. மக்களுக்கு இயற்கையான காய்கனிகள் உண்மையான விலையில் கிடைக்கவேண்டும். விவசாயிகளுக்கும் தங்கள் உற்பத்தி பொருள்களுக்கான லாபம் கிடைக்கவேண்டும் என்பதே எங்களின் முக்கிய நோக்கம் எனக் கூறும் பாலாஜி மற்றும் அவரது குழுவின் எதிர்காலத் திட்டங்களாக, விவசாயம் தொடர்பான பிரச்னைகள் மற்றும் அது குறித்த தீர்வுகள் Live chatting முறையில் தீர்வு காணவும், விவசாயத்தில் புதிய பொருள்களின் கண்டுபிடிப்புகள் மற்றும் அது தொடர்பான தகவல்களை என இந்த Appஐ மேம்படுத்த திட்டமிட்டுள்ளார்.
இந்த Appஇல் இணைய விரும்பும் விவசாயி, தாமாகவே இந்த செயலியை Google play storeல் பதிவிறக்கம் செய்து, அதில் தன்னைப் பற்றிய விவரங்களைச் சேர்த்து உறுப்பினராகலாம். கடந்த அக்டோபர் 6ஆம் தேதி வெளியுலகுக்கு இந்த ஆப் அறிமுகப்படுத்தியவர்கள், தொடர்ந்து இன்றைய நாள் முதல் பல்வேறு மேம்பாடு மற்றும் வசதிகளை அவ்வப்போது ஏற்படுத்திக் கொண்டே இருக்கின்றனர். தமிழ் மற்றும் ஆங்கிலம் என இரு மொழிகளிலும் விவசாயிகள் இதை பயன்படுத்திக் கொள்ளலாம்.
எவ்வித லாப நோக்கமும் இன்றி முழுக்க முழுக்க விவசாயிகளின் நலனுக்காகவே உருவாக்கப்பட்டுள்ள இந்த ’கரிம வேளாண்மை’ செயலியை விவசாயிகள் பயன்படுத்தி தங்களின் விவசாயத்தை மேம்படுத்திக் கொள்ளவேண்டும் என்பதே அனைவரின் அவா ஆகும்.
ஆப் டவுன்லோட் செய்ய: Karima Velanmai என்ற லிங்கை பயன்படுத்தி இந்த Appஐ பயன்படுத்தலாம்.
கட்டுரை தொகுப்பு: இந்துஜா ரகுனாதன்