இயற்கை மண பர்ஃப்யூம் தயாரிக்கும் 9ம் வகுப்பு மாணவி: ஒரே மாதத்தில் 60ஆயிரம் ஈட்டியது எப்படி?

ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மும்பை மாணவி அர்யாகி அகர்வால் 100 சதவீத ஆர்கானிக் பர்ஃப்யூம் பிராண்ட் உருவாக்கி ஒரே மாதத்தில் 60 ஆயிரம் ரூபாய் வருவாய் ஈட்டியுள்ளார்.
1 CLAP
0

அர்யாஹி அகர்வால் மும்பை திருபாய் அம்பானி சர்வதேசப் பள்ளி மாணவி. இவருக்கு பதின்ம வயதிருக்கையில் பர்ஃப்யூம் வாங்குவதற்கு சிரமப்பட்டார். இவர் எதிர்பார்த்த மாதிரியான பர்ஃப்யூம் சந்தையில் கிடைக்கவில்லை. சுற்றுச்சூழலுக்கு உகந்ததாகவும் ஆர்கானிக்காவும் இருக்கும் அதேசமயம் குறைந்த விலையில் இருந்தால் பதின்ம வயதினர் விரும்பி வாங்குவார்கள் என நினைத்தார்.

இவர் Thapar Entrepreneurs Academy-யில் சேர்ந்திருந்தார். அங்கு சென்று தன்னுடைய யோசனையைப் பற்றி விவாதித்தார். இப்படி உருவானதுதான் Bella Fragrances. இது இவரது சொந்த பர்ஃப்யூம் பிராண்ட்.

அர்யாஹி அகர்வால் - நிறுவனர், Bella Fragrances

வால்ட் டிஸ்னி, வாரன் பஃபெட், ஸ்டீவ் ஜாப்ஸ், திருபாய் அம்பானி போன்ற பிரபல வணிகத் தலைவர்களக் கண்டு இவருக்கு ஊக்கம் பிறந்துள்ளது. குறிப்பாக ஃபேஷன் உலகை தனது புரட்சிகரமான யோசனைகளால் கட்டிப்போட்டிருந்த Coco Chanel அர்யாகியின் ஆர்வம் தூண்டப்படுவதில் பெரும் பங்கு வகித்துள்ளார்.

“பதின்ம வயதினர் பயன்படுத்தக்கூடிய வகையில் 100 சதவீதம் ஆர்கானிக் பர்ஃபூமைத் தேடினேன். ஆனால் அப்படி ஒன்று கிடைக்கவில்லை,” என்கிறார்.

சுமார் ஆறு மாத கால ஆய்வுக்குப் பின்னர் சரியான ஃபார்முலேஷன் தயாரானது.

“முழுமையான ஆர்கானிக் பர்ஃப்யூம் தயாரிப்பது சாத்தியமே இல்லை என்பதே துறைசார்ந்தவர்களின் கருத்தாக இருந்தது. ஆனால் நான் என்னுடைய சமையலறையிலேயே பர்ஃபூம் ஃபார்முலாவை உருவாக்கினேன். ஆய்வக பரிசோதனையில் என்னுடைய தயாரிப்பின் பாதுகாப்பும் உறுதிசெய்யப்பட்டது,” என்கிறார்.

TEA ஆலோசகர்கள் அர்யாகியின் முயற்சிக்கு முழுமையான ஆதரவளித்தார்கள்.

தற்போது Bella Fragrances இன்ஸ்டா மூலமாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஒரு பாட்டிலின் விலை 599 ரூபாய்.

மும்பையில் உள்ள தொழிற்சாலை ஒரு நாளைக்கு 500 பாட்டில்கள் உற்பத்தி செய்யும் திறன் கொண்டது. இங்கிருந்துதான் பர்ஃப்யூம் தயாரிக்கப்படுகின்றன. தற்சமயம் Bella Naturals, Bella Organics என இருவேறு நறுமணங்களில் கிடைக்கின்றன.

“நான் தயாரிப்பது முற்றிலும் ஆர்கானிக் தயாரிப்பு. சுற்றுச்சூழலுக்கு உகந்தது. கைகளால் தயாரிக்கப்படுகிறது. நறுமண எண்ணெய், denatured alcohol ஆகியவற்றைக் கொண்டு தயாரிக்கப்படுகிறது. பூக்களின் நறுமணம் கிடைப்பதற்காக ரோஜாக்கள் பயன்படுத்தப்படுகின்றன,” என்று தயாரிப்பு பற்றி விவரிக்கிறார் அர்யாகி.

சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்ட ஒரே மாதத்தில் 60,000 ரூபாய் வருவாய் ஈட்டியுள்ளது Bella Fragrances. 65 சதவீத லாபத்துடன் 45,000 ரூபாய் லாபம் கிடைத்துள்ளது.

குறைந்த விலையில் ஆர்கானிக் தயாரிப்பு

Bella Fragrances முழுமையான ஆர்கானிக் தயாரிப்பு. எந்தவிதமான ரசாயனங்களும் இதில் சேர்க்கப்படுவதில்லை. இளைஞர்களுக்காகவே பிரத்யேகமாக தயாரிக்கப்படுகிறது. குறைந்த விலையில் கிடைக்கிறது. இதுபோன்ற அம்சங்களே போட்டியாளர்களிடமிருந்து Bella Fragrances தயாரிப்பை வேறுபடுத்திக் காட்டுவதாக அர்யாகி சுட்டிக்காட்டுகிறார்.

இந்த வெற்றி பல்வேறு சவால்களைத் தாண்டியே சாத்தியமாகியுள்ளது.

“பர்ஃப்யூம் ஃபார்முலா உருவாக்குவது மிகவும் கடினமாக இருந்தது. கிட்டத்தட்ட முயற்சியைக் கைவிடும் நிலைக்கு சென்றுவிட்டேன். எத்தனையோ சவால்களைக் கடந்து இறுதியாக ஃபார்முலா தயாரானது,” என்கிறார்.

தயாரிப்பை சமூக வலைதளங்கள் மூலம் மார்க்கெட் செய்ய அர்யாஹியின் அம்மா உதவியுள்ளார். அர்யாஹியின் அப்பா நிதி மேலாளர். இவர் Bella Fragrances தொடங்குவதற்காக ஆரம்ப முதலீட்டுத் தொகையாக 20,000 ரூபாய் கொடுத்துள்ளார். நிதி தொடர்பான முடிவுகளை எடுக்கவும் மூலப்பொருட்களை வழங்கும் விற்பனையாளார்களைக் கையாளவும் உதவி வருகிறார்.

பேக்கிங் செய்வதற்கான வடிவமைப்பை அர்யாஹி உருவாக்கியிருக்கிறார். டிசைனர் ஒருவர் அதை சரிபார்த்துத் தேவையான மாற்றங்களை புகுத்தியிருக்கிறார்.

சமூக வலைதளங்கள் மூலம் Bella Fragrances தயாரிப்புகளை மேலும் சிறப்பாக விளம்பரப்படுத்த அர்யாஹி திட்டமிட்டிருக்கிறார். நைகா போன்ற மின்வணிக தளங்களில் பட்டியலிடவும் திட்டமிட்டிருக்கிறார். எல்லோர் வீட்டிலும் விரும்பி வாங்கப்படும் பிராண்டாக Bella Fragrances மாறவேண்டும் என்பதே அர்யாஹியின் கனவு.

ஒன்பதாம் வகுப்பு படிக்கும் அர்யாஹி, படிப்பில் கவனம் செலுத்துவதுடன் பிராண்டை சந்தைப்படுத்துவதிலும் புதிய தயாரிப்புகளிலும் கவனம் செலுத்தி வருகிறார்.

”சமூக வலைதளங்கள் மூலம் பிராண்டை பிரபலப்படுத்தி நிறுவனத்தை வளர்ச்சியடையச் செய்ய விரும்புகிறேன். படிப்பிற்கு முன்னுரிமை அளித்து வருகிறேன். அதேசமயம் வணிக நடவடிக்கைகளுக்கும் நேரம் ஒதுக்குகிறேன்,” என்கிறார் அர்யாகி.

ஆங்கில கட்டுரையாளர்: ரேகா பாலகிருஷ்ணன் | தமிழில்: ஸ்ரீவித்யா

Latest

Updates from around the world