பத்மஸ்ரீ சாந்தி தெரசா - அந்தமான் தீவு பழங்குடியின மக்களுக்கு உதவிடும் தன்னலமற்ற செவிலியர்!
சுனாமி பாதித்த சமயத்தில் அந்தமானில் உள்ள ஓங்கே பழங்குடியினருக்கு சரியான நேரத்தில் மருத்துவ உதவி செய்துள்ளார் சாந்தி தெரசா லக்ரா.
சுனாமி ஏற்படுத்திய பாதிப்பை நம்மில் யாரும் அத்தனை எளிதில் மறந்துவிடமுடியாது. அந்த சமயத்தில் அந்தமானின் ஒரு தொலைதூரப் பகுதியில் இருந்த சாந்தி தெரசா லக்ரா பலருக்கு உதவிக்கரம் நீட்டியிருக்கிறார்.
சாந்தி தெரசா லக்ரா, லிட்டில் அந்தமானில் இருக்கும் துகாங் கிரீக் என்கிற பகுதியில் உள்ள மையத்தில் மூன்றாண்டுகள் வரை நர்ஸ் வேலையில் இருந்திருக்கிறார். இந்தப் பகுதியில் இந்தியாவின் மிகவும் பழமையான பழங்குடி சமூகமான ஓங்கே பழங்குடியினர் வசித்து வருகிறார்கள்.
அந்தமான் தீவைச் சேர்ந்த இந்தப் பழங்குடியினருக்கு வெளியிலிருந்து எந்த ஒரு ஆதரவும் கிடைக்காமல் இருந்தது. மருத்துவ உதவியும் கிடைக்கவில்லை. மற்றவர்களுடன் தொடர்புகொள்ள முடியாமல் மொழி மிகப்பெரிய தடையாக இருந்தது. இத்தனை சிக்கல்களையும் கடந்து இவர்களுடன் நட்பு பாராட்டி இவர்களுக்கு உதவியிருக்கிறார் சாந்தி தெரசா.
”சுனாமி இங்கிருந்த ஒட்டுமொத்த குடியிருப்புகளையும் அழிச்சுடுச்சு. காட்டுக்குள்ள தற்காலிக முகாம் மாதிரி போட்டுதான் ஒதுங்கியிருந்தோம். வெளி உலக தொடர்பே இல்லை. மருத்துவ உதவிகூட கிடைக்கலை,” என்று அந்த நாட்களை கண்முன்னே கொண்டு வந்து சேர்க்கிறார்.
பலருக்கு நோய் பாதிப்பு ஏற்பட்டது. எமர்ஜென்சி மருந்துகளை வாங்க 12-15 கி.மீட்டர் வரை செல்லவேண்டியிருந்தது. இதற்கிடையில் சில பெண்களுக்கு குழந்தை பிறந்திருக்கிறது. கர்ப்பிணிப் பெண்களின் பிரசவத்திற்கான ஏற்பாடுகளையும் சாந்தி தெரசா செய்திருக்கிறார்.
”ஓங்கே பழங்குடி பெண் ஒருத்தருக்கு 900 கிராம் எடை மட்டுமே இருக்கற குழந்தை பிறந்துது. அவ்ளோ எடை குறைவான குழந்தையை பத்திரமா பாதுகாக்கவேண்டியிருந்துது. குழந்தையை அம்மா அவங்க உடம்போட அணைச்சு வெச்சு கங்காரு முறையில பார்த்துக்க சொன்னேன். அதுக்கப்புறம் ஓரளவுக்கு வெளியுலக தொடர்பு கிடைச்சதும் அவங்களை ஹாஸ்பிடல் கூட்டிட்டு போக ஏற்பாடு பண்ணேன்,” என்கிறார்.
மக்கள் சேவையில் மனநிறைவு
சாந்தி தெரசாவின் கணவர் வேறொரு தீவில் சொந்தமாக தொழில் செய்து வந்தார். சாந்தியின் புகுந்த வீட்டினர் அவர்களது குழந்தையைப் பார்த்துகொண்டனர். இப்படிப்பட்ட சூழலில்தான் இவரால் மற்றவர்களுக்கு உதவி முடிந்திருக்கிறது.
”என் குடும்பத்தை சேர்ந்தவங்க ஆதரவாலதான் என்னால பொது நலன்ல கவனம் செலுத்த முடிஞ்சுது. ஓங்கே பழங்குடி மக்கள் கொஞ்சம் கொஞ்சமா அடர்ந்த காட்டுக்குள்ள ஊடுருவி போய் வசிக்க ஆரம்பிச்சாங்க. அவங்களுக்கு மருத்துவ உதவி செய்யணும்னா அந்த மாதிரி இடத்துக்கு கடல், மலை எல்லாத்தையும் தாண்டி போகவேண்டியிருந்துது. குடும்பத்தை பார்க்க வர்றது கஷ்டமா இருக்கும். இதையெல்லாம் அவங்க சமாளிச்சதாலதான் என்னால உதவ முடிஞ்சுது,” என்கிறார்.
போர்ட் பிளாயரில் உள்ள GB Pant Hospital மருத்துவமனைக்கு 2006ம் ஆண்டு சாந்தி தெரசா மாற்றலானார். அதிகம் பாதிக்கப்படக்கூடிய பழங்குடி குழுக்களுக்கான (Particularly Vulnerable Tribal Groups-PVTGs) சிறப்பு பிரிவில் பணியாற்றினார்.
”நோயாளிகளுக்கு சாப்பாடு, துணி, படுக்கை வசதி எல்லாம் செஞ்சி கொடுப்பேன். மத்த டாக்டர்களை பார்க்க பரிந்துரை செஞ்சா அங்க கூட்டிட்டுப் போகறதுக்கும் ஈசிஜி, ஸ்கேன், எம்ஆர்ஐ மாதிரி பரிசோதனைகள் செய்ய கூட்டிட்டுப் போறதுக்கும் ஏற்பாடு பண்னேன்,” என்கிறார்.
கொரோனா பெருந்தொற்று சமயத்தில் உயிரைப் பணயம் வைத்து வெவ்வேறு பழங்குடி மக்களின் குடியிருப்புகளுக்கு சென்று உதவியிருக்கிறார்.
“அவங்களை தனிமைப்படுத்திக்க ஏற்பாடு பண்ணேன். நோய் பரவல் அதிகமாகாம இருக்க எல்லாருக்கும் தடுப்பூசி போடறதுதான் எங்க நோக்கமா இருந்துது,” என்கிறார்.
பழங்குடி மக்கள் அவர்களது கலாச்சாரத்தை மதிக்கும் அதேநேரம் மருத்துவ ஆலோசனைகளையும் முறையாக பின்பற்றுவது மகிழ்ச்சியளிப்பதாக தெரிவிக்கிறார். கர்ப்பிணிப் பெண்கள் தவறாமல் மருத்துவ உதவியும் ஆலோசனைகளும் பெறுவதால் குழந்தைகள் ஆரோக்கியமான எடையுடன் பிறப்பதாக உற்சாகமாக தெரிவிக்கிறார்.
அங்கீகாரம்
சாந்தி தெரசா ஃப்ளாரன்ஸ் நைட்டிங்கேல் விருது, பத்மஸ்ரீ விருது போன்ற உயரிய விருதுகள் பெற்றுள்ளார்.
Aster Guardians Global Nursing Award 2023 விருதுக்கு தேர்வான இறுதி 10 போட்டியாளர்களில் சாந்தி தெரசாவும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.
அனைத்திற்கும் மேலாக மக்களுக்கு உதவி செய்வதில் கிடைக்கும் மனநிறைவு எதிலும் கிடைப்பதிலும் என்பதை அழுத்தமாக பதிவு செய்கிறார் சாந்தி தெரசா லக்ரா.
ஆங்கில கட்டுரையாளர்: ரேகா பாலகிருஷ்ணன்
47 பச்சிளம் குழந்தைகள்; 10 தாய்மார்கள் உயிர்களைக் காப்பாற்றிய நிஜ ஹீரோ; ‘அண்ணா பதக்கம்’ பெற்ற ஆண் செவிலியர்!